Skip to content

குடும்ப ஸ்பெஷல் | பிள்ளை வளர்ப்பு

இனவெறியைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுவது

இனவெறியைப் பற்றி பிள்ளைகளிடம் பேசுவது

 சிலருடைய நிறம், நாடு, இனம் போன்றவற்றை வைத்து, மக்கள் அவர்களை வித்தியாசமாக நடத்துவதை பிள்ளைகள் சின்ன வயதிலேயே கவனிக்கலாம். அவர்களை போலவே உங்கள் பிள்ளையும் இனப் பாகுபாடு காட்டாமல் இருக்க நீங்கள் எப்படி உதவலாம்? ஒருவேளை, இப்படிப்பட்ட விஷயத்தால் உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டிருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

இந்த கட்டுரையில்...

 இன வித்தியாசத்தை பற்றி பிள்ளைகளிடம் எப்படி பேசுவது?

 எப்படி புரியவைக்கலாம்? உலகம் முழுவதும் வாழ்கிற மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்! அவர்களுக்கு இடையே இருக்கிற கலாச்சாரமும் வித்தியாச வித்தியாசமானது. இது ரொம்ப அழகான ஒரு விஷயம்! இந்த வித்தியாசத்தை ஒருசிலர் வேறுவிதமாக பார்க்கிறார்கள். அவர்களுடைய தோற்றம்... நடந்துகொள்ளும் விதம்... இதையெல்லாம் வைத்து அவர்களை தவறாக நடத்துகிறார்கள்.

 ஒரே அப்பா-அம்மாவிடம் இருந்துதான் மனிதர்கள் எல்லாரும் வந்ததாக பைபிள் சொல்கிறது. அப்படி பார்த்தால், நாம் எல்லாருமே சொந்தபந்தம்தான்!

‘[கடவுள்] ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணினார்.’அப்போஸ்தலர் 17:26.

 “வித்தியாசமான இனத்தை சேர்ந்த மக்களோடு எங்கள் பிள்ளைகள் பழகும்போது, ஒவ்வொருவரிடமும் நிறைய நல்ல விஷயங்கள் இருப்பதை பார்க்கிறார்கள். அதனால், அவர்கள்மேல் அன்பையும் மரியாதையும் காட்ட வேண்டும் என்பதை அவர்களே புரிந்துகொள்கிறார்கள்.”—கேரன்.

 இனவெறியை பற்றி எப்படி விளக்குவது?

 வெறுப்பாலோ இனவெறியாலோ செய்யப்படுகிற குற்றங்களை பற்றி உங்கள் பிள்ளைகள் நியூஸில் கேட்கலாம். அந்தமாதிரி சமயங்களில், நீங்கள் எப்படி அவர்களுக்கு விஷயங்களை புரிய வைக்கலாம்? பிள்ளைகளின் வயதை பொருத்து அவர்களிடம் பேசுங்கள்.

  •   ஐந்து வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளிடம் பேசுவது... “இப்போதெல்லாம் சின்ன பிள்ளைகளுக்கே எது சரி, எது தவறு என்று தெரிகிறது. அதனால், வாய்ப்பு கிடைக்கும்போது எதெல்லாம் நியாயம், எதெல்லாம் அநியாயம் என்று அவர்களுக்கு புரிய வையுங்கள்” என்று டாக்டர் அலிசன் பிரிஸ்கோ ஸ்மித் சொன்னார். அவர் சொன்ன இந்த தகவல் பேரண்ட்ஸ் பத்திரிகையில் வெளிவந்தது.

“கடவுள் பாரபட்சம் காட்டாதவர், . . . அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்.”அப்போஸ்தலர் 10:34, 35.

  •   ஆறு முதல் பன்னிரண்டு வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளிடம் பேசுவது... பொதுவாக, இந்த வயது பிள்ளைகள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள நினைப்பார்கள்; கஷ்டமான கேள்விகளையும் கேட்பார்கள். உங்களால் முடிந்தளவு, அவற்றுக்கெல்லாம் நல்ல பதிலை கொடுங்கள். பள்ளியிலும் மீடியாவிலும் அவர்கள் பார்க்கும் விஷயங்களை பற்றி அவர்களிடம் பேசுங்கள். இனவெறி ரொம்ப ரொம்ப தவறானது என்பதை புரிய வைக்க இந்த மாதிரி சந்தர்ப்பங்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

“நீங்கள் எல்லாரும் ஒரே சிந்தையோடு இருங்கள், அனுதாபத்தையும் சகோதரப் பாசத்தையும் கரிசனையையும் மனத்தாழ்மையையும் காட்டுங்கள்.”1 பேதுரு 3:8.

  •   டீனேஜ் பிள்ளைகளிடம் பேசுவது... பொதுவாக இந்த வயதில் இருக்கிற பிள்ளைகளால், வாழ்க்கையில் வருகிற சிக்கலான விஷயங்களைக்கூட புரிந்துகொள்ள முடியும். அதனால், இனவெறி பற்றிய செய்தி அறிக்கைகள் வரும்போது, அவற்றை பற்றி பேசுவதற்கு இது சரியான பருவம்.

‘முதிர்ச்சியுள்ளவர்கள் . . . சரி எது, தவறு எது என்பதைப் பிரித்துப் பார்க்க தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்த பயிற்றுவித்திருக்கிறார்கள்.’—எபிரெயர் 5:14.

 “இனவெறி எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதை பற்றி நாங்கள் பிள்ளைகளிடம் பேசுகிறோம். ஏனென்றால், நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, அவர்கள் ஏதோவொரு கட்டத்தில் அதை கண்டிப்பாக சந்திப்பார்கள். ஒருவேளை, வீட்டில் நாம் அதை பற்றி சொல்லி கொடுக்கவில்லை என்றால், மற்றவர்கள் தங்களுடைய கருத்தை திணித்துவிடுவார்கள். பிள்ளைகளும் அதை ஏற்றுக்கொள்வார்கள். நிறைய தவறான தகவல்கள் உண்மைபோல் பிள்ளைகளுக்கு சொல்லப்படலாம்.”—டான்யா

 முன்மாதிரி வைப்பது எப்படி?

 பொதுவாக, பிள்ளைகள் நிறைய விஷயங்களை பார்த்துதான் கற்றுக்கொள்கிறார்கள். அதனால், ஒரு அப்பா-அம்மாவாக நீங்கள் என்ன பேசுகிறீர்கள்... எப்படி நடந்துகொள்கிறீர்கள்... என்பது ரொம்ப முக்கியம். இதை யோசித்துப்பாருங்கள்:

  •   மற்ற இனத்தை சேர்ந்தவர்களை நீங்கள் கிண்டல் செய்கிறீர்களா? அவர்களை தரக்குறைவாக பேசுகிறீர்களா? ”நீங்கள் என்ன செய்கிறீர்கள்... என்ன பேசுகிறீர்கள்... என்பதை உங்கள் பிள்ளைகள் கவனிக்கிறார்கள். அதற்கு ஏற்ற மாதிரிதான் அவர்களும் நடந்துகொள்கிறார்கள்” என்று அமெரிக்கன் அகாடமி ஆஃப் சைல்ட் அண்ட் அடலசென்ட் சைக்கியாட்ரி சொல்கிறது.

  •   வெவ்வேறு நாட்டை சேர்ந்த மக்களோடு நீங்கள் சந்தோஷமாக பழகுகிறீர்களா? இதை பற்றி அலான்னா நஜோமா என்ற குழந்தைகள் நல மருத்துவர் இப்படி சொல்கிறார்: “வித்தியாசமான பின்னணியை சேர்ந்த மக்களோடு உங்கள் பிள்ளைகள் [நன்றாக] பழக வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், . . . நீங்கள் முதலில் அப்படி செய்வதை அவர்கள் பார்க்க வேண்டும்.”

“எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.”1 பேதுரு 2:17.

 ”வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த நண்பர்களை வீட்டுக்கு கூப்பிடுகிற பழக்கம் எங்களுக்கு இருக்கிறது. அவர்களிடமிருந்து அவர்களுடைய உணவு பழக்கத்தை பற்றியும், இசையை பற்றியும் நிறைய கேட்டு தெரிந்துகொள்வோம். அவர்களுடைய பாரம்பரிய உடைகளை நாங்களும்கூட போட்டு பார்ப்போம். பொதுவாக நாங்கள் பிள்ளைகளிடம் மக்களை பற்றி பேசுவோம், இனத்தை பற்றி அல்ல. எங்களுடைய சொந்த கலாச்சாரத்தை ரொம்ப ‘ஒசத்தியாக’ நாங்கள் பிள்ளைகளிடம் சொல்வதில்லை.“—கேத்திரினா.

 இனப் பாகுபாட்டால் உங்கள் பிள்ளை பாதிக்கப்பட்டிருந்தால்

 இன்று உலகத்தில் நிறைய பேர் சம உரிமை... ஒற்றுமை... என்று பேசினாலும், இன வேறுபாடு மூலைமுடுக்கெல்லாம் இருக்கிறது. அப்படியென்றால், உங்கள் குழந்தை வளர வளர ஏதோவொரு சமயத்தில் அநியாயமாக நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. அதுவும், நீங்கள் சிறுபான்மை தொகுதியை சேர்ந்தவர்களாக இருந்தால் அதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. ஒருவேளை, அப்படி ஏதாவது நடந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

 உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். இந்த கேள்விகளை யோசித்துப்பாருங்கள்: ‘உங்கள் பிள்ளையை காயப்படுத்தியவர்கள் வேண்டுமென்றே அப்படி செய்தார்களா அல்லது யோசிக்காமல் அப்படி நடந்துகொண்டார்களா?’ (யாக்கோபு 3:2) ‘தவறு செய்தவர்களிடம் போய் பேசி, அவர்கள் செய்த தவறை புரிய வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா? அல்லது, அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாமா?’

 இந்த விஷயத்தில் நாம் ரொம்ப ஞானமாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ள வேண்டும். “சட்டென்று கோபப்படாதே” என்று பைபிளும்கூட சொல்கிறது. (பிரசங்கி 7:9) இனப் பாகுபாடு பார்ப்பது ஒரு சாதாரண விஷயம் கிடையாதுதான்! அதற்காக, ஒருவர் நம்மை அவமானப்படுத்தினால் அதற்கு காரணம் இனவெறிதான் என்ற முடிவுக்கு உடனே வந்துவிட முடியாது.

 எல்லா சூழ்நிலைகளும் ஒரேமாதிரி இருக்காது. அதனால், உண்மையிலேயே என்ன நடந்தது என்று தீர விசாரியுங்கள். அதற்கு பிறகு, நடவடிக்கை எடுக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள்.

“ஒரு விஷயத்தை முழுமையாகக் கேட்பதற்குமுன் பதில் சொல்வது முட்டாள்தனம். அது அவமானத்தைத்தான் தேடித்தரும்.”—நீதிமொழிகள் 18:13.

 தீர விசாரித்த பிறகு, உங்களை இப்படி கேட்டுக்கொள்ளுங்கள்:

  •   ‘எல்லாருமே தப்பெண்ணத்தோடு இருக்கிறார்கள் என்ற எண்ணம் என் பிள்ளைக்கு வந்துவிட்டால் அது அவனை/அவளை எப்படி பாதிக்கும்? ஒவ்வொரு தடவை அவமானப்படுத்தப்படும்போதும், அதற்கு காரணம் தன்னுடைய இனம்தான் என்ற எண்ணம் அவனுக்கு/அவளுக்கு வந்துவிட்டால் அது சரியாக இருக்குமா?’

  •   ‘“மற்றவர்கள் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே” என்ற பைபிள் ஆலோசனையை என்னுடைய பிள்ளை கடைப்பிடித்தால் நன்றாக இருக்குமா?’—பிரசங்கி 7:21.

“நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்திருக்கட்டும்.”பிலிப்பியர் 4:5.

 யாராவது உங்கள் பிள்ளையை வேண்டுமென்றே அவமானப்படுத்தியிருந்தால் என்ன செய்யலாம்? யாராவது ஒருவர் நம்மை அவமானப்படுத்தினால் பதிலுக்கு நாம் என்ன சொல்கிறோம் அல்லது செய்கிறோம் என்பதை பொறுத்துதான், அந்த சூழ்நிலைமை பெரிதாகவோ அல்லது ஒன்றுமே இல்லாமலோ ஆகும். இந்த உண்மையை புரிந்துகொள்ள உங்கள் பிள்ளைக்கு உதவி செய்யுங்கள். பொதுவாக, நாம் பதிலுக்கு ஏதாவது செய்வோம் அல்லது சொல்வோம் என்று நம்மை வம்புக்கு இழுப்பவர்கள் நினைப்பார்கள். இதுபோன்ற சமயங்களில், பதிலுக்கு எதுவும் செய்யாமல் அல்லது சொல்லாமல் இருப்பதுதான் நாம் அவர்களுக்கு கொடுக்கும் சரியான பதிலடி.

“விறகு இல்லையென்றால் நெருப்பு அணைந்துவிடும்.”நீதிமொழிகள் 26:20.

 அதேசமயத்தில், அவமானப்படுத்திய நபரிடம் போய் பேசுவது உங்கள் பிள்ளைக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், பிள்ளையை போய் பேச சொல்லுங்கள். ஒருவேளை, “நீங்கள் செய்வது சரி என்று உங்களுக்கு தோன்றுகிறதா?“ என்று உங்கள் பிள்ளை அவரிடம் பொறுமையாக கேட்கலாம்.

 இந்த சம்பவத்தை பற்றி புகார் கொடுக்க நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைக்கு பாதுகாப்பு இல்லை என்று நீங்கள் நினைத்தால் அல்லது வேற சில காரணத்துக்காக இந்த விஷயத்தை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தோன்றினால், பள்ளியில் இருக்கும் அதிகாரிகளிடமோ போலீஸிடமோ பேசுவதற்கு தயங்காதீர்கள்.