கடவுளுடைய வார்த்தை—என்ன அது? யார் அது?
பைபிள் தரும் பதில்
“கடவுளுடைய வார்த்தை” என்பது பொதுவாக கடவுளிடமிருந்து வருகிற செய்தியை அல்லது செய்திகளைக் குறிக்கிறது. (லூக்கா 11:28) சில வசனங்களில், “கடவுளுடைய வார்த்தை” அல்லது “அந்த வார்த்தை” என்ற சொற்கள் பட்டப்பெயராகப் பயன்படுத்தப்படுகின்றன.—வெளிப்படுத்துதல் 19:13; யோவான் 1:14.
கடவுளிடமிருந்து வருகிற செய்தி. தாங்கள் அறிவிப்பது கடவுளுடைய வார்த்தை என்பதாக தீர்க்கதரிசிகள் பலர் பலமுறை குறிப்பிட்டார்கள். உதாரணத்துக்கு, அகியா, எலிகூ, எரேமியா போன்றவர்கள் ‘யெகோவா சொன்ன வார்த்தையைத்தான்’ அறிவித்தார்கள். (1 ராஜாக்கள் 14:18; 16:12; எரேமியா 30:4) கெட்ட ஆட்கள் சிலரைப் பார்த்து ஏசாயா தீர்க்கதரிசி இப்படிச் சொன்னார்: “சோதோமின் ஆட்சியாளர்களே, யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.”—ஏசாயா 1:10.
பட்டப்பெயர். பரலோகத்தில் ஆவி நபராகவும், பூமியில் மனிதராகவும் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவைக் குறிப்பிடுவதற்கு “வார்த்தை” என்ற பட்டப்பெயரை பைபிள் பயன்படுத்துகிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம் என்பதற்குச் சில காரணங்களைக் கவனியுங்கள்:
“வார்த்தை” என்று அழைக்கப்படுகிறவர் மற்ற எல்லா படைப்புகளுக்கும் முன்பே வாழ்ந்துவருகிறார். “ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார், . . . அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார்.” (யோவான் 1:1, 2) “படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும் இருக்கிறார். . . . அவர் எல்லா படைப்புகளுக்கும் முன்பே இருக்கிறார்.”—கொலோசெயர் 1:13-15, 17.
வார்த்தை என்பவர் மனிதராகப் பூமிக்கு வந்தார். “அந்த வார்த்தை ஒரு மனிதராகி நம் மத்தியில் குடியிருந்தார்.” (யோவான் 1:14) கிறிஸ்து இயேசு “தன்னிடமிருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓர் அடிமையைப் போல் ஆனார், ஒரு மனிதராக ஆனார்.”—பிலிப்பியர் 2:5-7.
வார்த்தை என்பவர் கடவுளுடைய மகன். மேலே குறிப்பிட்டபடி “அந்த வார்த்தை ஒரு மனிதராகி நம் மத்தியில் குடியிருந்தார்” என்று அப்போஸ்தலன் யோவான் குறிப்பிட்டுவிட்டு, “அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு கிடைக்கும் மகிமையாக இருந்தது” என்று எழுதினார். (யோவான் 1:14) அதோடு, “இயேசுதான் கடவுளுடைய மகன்” என்றும் எழுதினார்.—1 யோவான் 4:15.
வார்த்தை என்பவருக்குத் தெய்வீகக் குணங்கள் இருக்கின்றன. “அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்.” (யோவான் 1:1) இயேசு “கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்கிறார், அவருடைய குணங்களை அப்படியே காட்டுகிறார்.”—எபிரெயர் 1:2, 3.
வார்த்தை என்பவர் ஒரு ராஜாவாக ஆட்சி செய்கிறார். அவருடைய “தலையில் நிறைய மகுடங்கள் இருந்தன” என்று பைபிள் விவரிக்கிறது. (வெளிப்படுத்துதல் 19:12, 13) “ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்” என்ற பட்டப்பெயராலும் அவர் அழைக்கப்படுகிறார். (வெளிப்படுத்துதல் 19:16) இயேசுவும் அதே பட்டப்பெயரால் அழைக்கப்படுகிறார்.—1 தீமோத்தேயு 6:14, 15.
வார்த்தை என்பவர் கடவுளுடைய சார்பில் பேசுபவராக இருக்கிறார். சில விஷயங்களையும் அறிவுரைகளையும் மற்றவர்களிடம் தெரிவிப்பதற்குக் கடவுளால் பயன்படுத்தப்படுகிற நபரைத்தான் “வார்த்தை” என்ற பட்டப்பெயர் அடையாளம் காட்டுகிறது. தான் அந்த வேலையைச் செய்ததாக இயேசுவே ஒருமுறை இப்படிச் சொன்னார்: “நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். . . அதனால், நான் எதைப் பேசினாலும் என் தகப்பன் எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.”—யோவான் 12:49, 50.