மதுவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அதைக் குடிப்பது பாவமா?
பைபிள் தரும் பதில்
மிதமாக மது அருந்துவது பாவமல்ல. திராட்சமது கடவுள் கொடுத்திருக்கிற பரிசு என்றும், வாழ்க்கையை அதிக சந்தோஷமாக்க அது உதவுகிறது என்றும் பைபிள் விவரிக்கிறது. (சங்கீதம் 104:14, 15; பிரசங்கி 3:13; 9:7) அதுமட்டுமல்ல, திராட்சமதுவுக்கு மருத்துவக் குணங்கள் இருக்கிறதென்றும் பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 5:23.
இயேசு பூமியில் வாழ்ந்தபோது திராட்சமது குடித்தார். (மத்தேயு 26:29; லூக்கா 7:34) ஒரு திருமண விருந்தில் ஏகப்பட்ட தண்ணீரை திராட்சமதுவாக மாற்றினார்; இந்தப் பெரிய அற்புதத்தைச் செய்து, தன்னுடைய தாராள குணத்தைக் காட்டினார்.—யோவான் 2:1-10.
அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் வரும் ஆபத்துகள்
திராட்சமது பற்றிய சில நல்ல விஷயங்களை பைபிள் குறிப்பிடுகிறது என்றாலும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும் குடிவெறியையும் அது கண்டனம் செய்கிறது. எனவே, மது அருந்த முடிவு செய்யும் ஒரு கிறிஸ்தவர், மிதமாகத்தான் அதை எடுத்துக்கொள்வார். (1 தீமோத்தேயு 3:8; தீத்து 2:2, 3) அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை ஏன் தவிர்க்க வேண்டும் என்பதற்கு பைபிள் நிறைய காரணங்களைத் தருகிறது.
சிந்திக்கும் திறனையும், சரியாக முடிவெடுக்கும் திறனையும் அது மழுங்கடிக்கிறது. (நீதிமொழிகள் 23:29-35) ஆனால், “உங்களுடைய உடலை உயிருள்ளதும் பரிசுத்தமுள்ளதும் கடவுளுக்குப் பிரியமுள்ளதுமான பலியாக அர்ப்பணியுங்கள். சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி அவருக்குப் பரிசுத்த சேவை செய்யுங்கள்” என்று பைபிள் கட்டளையிடுகிறது; குடிபோதையிலுள்ள ஒரு நபரால் இந்தக் கட்டளையைக் கடைப்பிடிக்க முடியாது.—ரோமர் 12:1.
அளவுக்கு அதிகமாகக் குடிப்பது கூச்சமே இல்லாமல் நடந்துகொள்ள வைக்கும்; “சரியானதைச் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தைக் கெடுக்கும்.”—ஓசியா 4:11; எபேசியர் 5:18.
வறுமையும் கொடிய வியாதிகளும் வருவதற்குக் காரணமாகிவிடும்.—நீதிமொழிகள் 23:21, 31, 32.
அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும், குடித்துவெறிப்பதையும் கடவுள் வெறுக்கிறார்.—நீதிமொழிகள் 23:20; கலாத்தியர் 5:19-21.
எந்தளவு குடிப்பது அளவுக்கு அதிகமானது?
ஒரு நபர் குடித்துவிட்டு தன்னுடைய உயிருக்கோ மற்றவர்களுடைய உயிருக்கோ ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால், அவர் அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கிறார் என்று அர்த்தம். குடிவெறி என்பது ஒரு நபர் குடித்து மயங்கிவிடுவதை மட்டுமே அர்த்தப்படுத்துவதில்லை; அந்த நபர் தட்டுத்தடுமாறுவதை, தள்ளாடித் தள்ளாடி நடப்பதை, சண்டை சச்சரவில் ஈடுபடுவதை, அல்லது குழறிக் குழறிப் பேசுவதைக்கூட குடிவெறியோடு பைபிள் சம்பந்தப்படுத்திப் பேசுகிறது. (யோபு 12:25; சங்கீதம் 107:27; நீதிமொழிகள் 23:29, 30, 33) குடிவெறியைத் தவிர்ப்பவர்கள்கூட சிலசமயங்களில் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு அதன் பயங்கரமான பின்விளைவுகளை அனுபவிக்கிறார்கள்.—லூக்கா 21:34, 35.
ஒரேயடியாக ஒதுக்கிவிடுவது
கிறிஸ்தவர்கள் ஒரேயடியாக மதுபானங்களை ஒதுக்கித்தள்ள வேண்டிய சந்தர்ப்பங்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது:
மற்றவர்களுடைய விசுவாசத்தைப் பலவீனமாக்கினால்.—ரோமர் 14:21.
மது அருந்துவது சட்டவிரோதச் செயலாக இருந்தால்.—ரோமர் 13:1.
குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருந்தால். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களும் வேறு விதங்களில் மதுபான துஷ்பிரயோகம் செய்கிறவர்களும் இந்த அதிரடி நடவடிக்கையை எடுக்கத் தீர்மானமாய் இருக்க வேண்டும்.—மத்தேயு 5:29, 30.