Skip to content

சிலைகளை வணங்கலாமா?

சிலைகளை வணங்கலாமா?

பைபிள் தரும் பதில்

 இல்லை, வணங்கக் கூடாது. நியு கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இஸ்ரவேல் தேசத்துக்குக் கடவுள் கொடுத்த சட்டங்களை விவரிக்கும்போது இப்படிச் சொல்கிறது: “பைபிளில் இருக்கிற பல்வேறு பதிவுகளைப் பார்க்கும்போது, உண்மைக் கடவுளின் வணக்கத்தில் சிலைகள் இடம்பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.” பின்வரும் பைபிள் வசனங்களைக் கவனியுங்கள்:

  •   “மேலே வானத்திலோ கீழே பூமியிலோ பூமியின் கீழ் தண்ணீரிலோ இருக்கிற எதனுடைய வடிவத்திலும் நீங்கள் உருவங்களையும் சிலைகளையும் உங்களுக்காக உண்டாக்கக் கூடாது. அவற்றுக்கு முன்னால் தலைவணங்கவோ அவற்றைக் கும்பிடவோ கூடாது. நான் உங்கள் கடவுளாகிய யெகோவா. நீங்கள் என்னை மட்டும்தான் வணங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.” (யாத்திராகமம் 20:4, 5) கடவுள் ‘தன்னை மட்டும்தான் வணங்க வேண்டும்’ என எதிர்பார்ப்பதால், உருவங்களையோ, படங்களையோ, சிலைகளையோ, ஓவியங்களையோ, அடையாளச் சின்னங்களையோ நாம் வணங்கினால் அல்லது புகழ்ந்தால், அவருக்குப் பிடிக்காது.

  •   “என்னுடைய புகழை எந்தச் சிலைக்கும் கொடுக்க மாட்டேன்.” (ஏசாயா 42:8) சிலைகளைப் பயன்படுத்தி தன்னை வணங்குவதைக் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை. சில இஸ்ரவேலர்கள் கன்றுக்குட்டி சிலையைப் பயன்படுத்தி கடவுளை வணங்க முயன்றபோது, அவர்கள் “மிகவும் சீர்கேடான பாவத்தை” செய்திருப்பதாக அவர் சொன்னார்.—யாத்திராகமம் 32:7-9, ஈஸி டு ரீட் வர்ஷன்.

  •   “நாம் கடவுளுடைய பிள்ளைகளாக இருப்பதால், மனுஷர்களுடைய சிற்ப வேலைப்பாட்டாலும் கற்பனையாலும் வடிவமைக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப் போலக் கடவுள் இருப்பார் என்று நாம் நினைக்கக் கூடாது.” (அப்போஸ்தலர் 17:29) “மனுஷர்களுடைய சிற்ப வேலைப்பாட்டாலும் கற்பனையாலும் வடிவமைக்கப்பட்ட” சிலைகளைப் பயன்படுத்துகிற புறமத வணக்கத்திற்கு நேர்மாறாக, கிறிஸ்தவர்கள் பைபிள் சொல்கிறபடி செய்ய வேண்டும்; ஆம், தங்களுடைய ‘கண்ணால் பார்க்கிறபடி நடக்காமல் விசுவாசத்தின்படி நடக்க’ வேண்டும்.—2 கொரிந்தியர் 5:7.

  •   “சிலைகளுக்கு விலகி உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.” (1 யோவான் 5:21) இஸ்ரவேல் தேசத்துக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளும் சரி, கிறிஸ்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளும் சரி, சிலைகளையோ, உருவப்படங்களையோ வழிபடுவதைக் கடவுள் ஏற்றுக்கொள்வதில்லை என்ற உண்மையைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.