இயேசுவைப் பற்றிய பதிவுகள் எப்போது எழுதப்பட்டன?
பைபிள் தரும் பதில்
இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களைப் பற்றிய தன்னுடைய பதிவில் அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “இதை நேரில் பார்த்த ஒருவர் சாட்சி கொடுத்திருக்கிறார், அவருடைய சாட்சி உண்மையானது. அவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காக அவற்றைச் சொல்லியிருக்கிறார்.”—யோவான் 19:35.
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் பதிவுசெய்த சுவிசேஷ புத்தகங்களை நம்புவதற்கு ஒரு காரணம், அவற்றில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்களை நேரில் பார்த்த நிறைய பேர் உயிரோடு இருந்த சமயத்தில்தான் அவை எழுதப்பட்டன என்பதே. மத்தேயு சுவிசேஷம் கிறிஸ்து இறந்து எட்டே ஆண்டுகளில், அதாவது கி.பி. சுமார் 41-ல், எழுதப்பட்டது என்று சில புத்தகங்கள் சொல்கின்றன. அதற்கும் பல வருடங்களுக்குப் பிறகே அது எழுதப்பட்டிருக்க வேண்டுமென நிறைய அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள் என்றாலும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்திலுள்ள எல்லா புத்தகங்களுமே கி.பி. முதல் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டன என்ற விஷயம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இயேசு பூமியில் வாழ்ந்ததையும், இறந்ததையும், உயிர்த்தெழுந்ததையும் நேரில் பார்த்தவர்கள், சுவிசேஷ புத்தகங்களில் உள்ள விஷயங்களைப் படித்துப் பார்த்திருப்பார்கள். ஒருவேளை, தவறான தகவல்கள் இருந்திருந்தால் அவற்றை அப்போதே அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பார்கள். பேராசிரியர் எஃப். எஃப். புரூஸ் இப்படிச் சொல்கிறார்: “ஆரம்பகால அப்போஸ்தலர்கள் மக்களிடம் பிரசங்கித்தபோது, ‘இதற்கு நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம்’ என்று மட்டும் சொல்லாமல், ‘இது உங்களுக்கே தெரியும்’ என்றுகூட சொன்னார்கள்; அந்த மக்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயங்களை அவர்கள் குறிப்பிட்டுப் பேசியது அவர்களுடைய செய்தி உண்மை என்பதற்குப் பலத்த ஆதாரமாக இருந்தது. (அப்போஸ்தலர் 2:22).”