மரியாள் கடவுளுடைய தாயா?
பைபிள் தரும் பதில்
இல்லை. மரியாளைக் கடவுளுடைய தாய் என்று பைபிள் சொல்வதில்லை. கிறிஸ்தவர்கள் மரியாளை வணங்க வேண்டும் என்றோ மரியாளுக்கு விசேஷ மதிப்பு தர வேண்டும் என்றோ பைபிள் சொல்வதில்லை. a இதை யோசித்துப் பாருங்கள்:
மரியாள் ஒருபோதும் தன்னை கடவுளுடைய தாய் என்று சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, பைபிளும், ‘கடவுளுடைய மகனை’ அவர் பெற்றெடுத்ததாக சொல்கிறதே தவிர, கடவுளைப் பெற்றெடுத்ததாக சொல்வதில்லை.—மாற்கு 1:1; லூக்கா 1:32.
இயேசு கிறிஸ்துவும், மரியாளைக் கடவுளுடைய தாய் என்றோ அவருக்கு விசேஷ பக்தி காட்ட வேண்டும் என்றோ ஒருபோதும் சொல்லவில்லை. ஒருசமயம், ஒரு பெண் இயேசுவின் தாயாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்ற மரியாளை ‘சந்தோஷமானவர்’ என்று சொல்லி அவருக்கு விசேஷ மதிப்புக் கொடுத்தார். அப்போது இயேசு அந்தப் பெண்ணிடம், “இல்லை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!” என்று சொல்லி அவளைத் திருத்தினார்.—லூக்கா 11:27, 28.
“கடவுளுடைய தாய்,” “தியோடோகோஸ்” (கடவுளைப் பெற்றெடுத்தவள்) ஆகிய வார்த்தைகள் பைபிளில் இல்லை.
பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற “விண்ணரசி” என்ற வார்த்தை மரியாளைக் குறிப்பதில்லை; விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் வணங்கிய ஒரு பொய் தெய்வத்தைத்தான் குறிக்கிறது. (எரேமியா 44:15-19) அது ஒருவேளை இஷ்டார் (அஸ்டார்ட்), என்ற பாபிலோனியப் பெண் தெய்வமாக இருந்திருக்கலாம்.
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மரியாளை வணங்கவுமில்லை, அவருக்கு விசேஷ மரியாதை கொடுக்கவுமில்லை. ஆரம்பகால கிறிஸ்தவர்கள், “மற்ற மதப் பிரிவுகளிலிருந்து விலகியிருந்திருப்பார்கள். மரியாளுக்கு அளவுக்கு அதிகமான மரியாதை கொடுத்தால், பெண் தெய்வத்தை வணங்குவதாக மற்றவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று பயந்திருக்கலாம்” என்பதாக ஒரு சரித்திராசிரியர் சொல்கிறார்.—இன் குவெஸ்ட் ஆப் த ஜூயிஷ் மேரி.
கடவுள் என்றென்றும் இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 90:1, 2; ஏசாயா 40:28) கடவுளுக்கு ஆரம்பம் இல்லாததால் அவருக்கு ஒரு தாய் இருக்க முடியாது. அதுமட்டுமல்ல, கடவுள் குடியிருப்பதற்கு வானாதி வானங்கள்கூட போதாது என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், மரியாள் தன்னுடைய வயிற்றில் கடவுளைச் சுமந்திருக்கவே முடியாது.—1 ராஜாக்கள் 8:27.
மரியாள்—இயேசுவின் தாய், “கடவுளுடைய தாய்” அல்ல
தாவீது ராஜாவின் வம்சத்தில் பிறந்த யூதப் பெண்தான் மரியாள். (லூக்கா 3:23-31) மரியாளுக்கு கடவுள்மேல் விசுவாசமும் பக்தியும் இருந்தது. அதனால், கடவுளுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். (லூக்கா 1:28) இயேசுவின் தாயாக இருப்பதற்கு மரியாளைக் கடவுள் தேர்ந்தெடுத்தார். (லூ 1:31, 35) மரியாளுக்கு யோசேப்பு மூலம் பிறந்த மற்ற பிள்ளைகளும் இருந்தார்கள்.—மாற்கு 6:3.
மரியாள், இயேசுவின் சீஷராக ஆனதைப் பற்றி பைபிள் சொல்கிறது. ஆனால், அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.—அப்போஸ்தலர் 1:14.
a மரியாளை கடவுளுடைய தாய் என்று பல மதப் பிரிவுகள் சொல்லிக்கொடுக்கின்றன. மரியாளை “விண்ணரசி” என்றும் தியோடோகோஸ் என்றும் சொல்கின்றன. தியோடோகோஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “கடவுளைப் பெற்றெடுத்தவள்” என்று அர்த்தம்.