Skip to content

உண்மையான நம்பிக்கை எங்கிருந்து கிடைக்கும்?

உண்மையான நம்பிக்கை எங்கிருந்து கிடைக்கும்?

பைபிள் தரும் பதில்

 கடவுள் நமக்கு ஒரு “நல்ல எதிர்காலத்தையும் நம்பிக்கையையும் a கொடுக்க” ஆசைப்படுகிறார் என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 29:11) சொல்லப்போனால் அவர் நமக்கு பைபிளைக் கொடுத்திருப்பதற்கு ஒரு முக்கியமான காரணமே வேதவசனங்கள் மூலமாக நமக்கு ‘நம்பிக்கையும் ஆறுதலும்’ கிடைக்க வேண்டும் என்பதுதான். (ரோமர் 15:4) பைபிளில் இருக்கிற ஆலோசனைகள் தினம் தினம் வருகிற பிரச்சனைகளைச் சமாளித்து இப்போதே நம்பிக்கையான மனநிலையோடு வாழ்வதற்கு உதவி செய்யும். அதுமட்டுமல்ல, ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்ற நம்பிக்கையையும் பைபிள் கொடுக்கிறது.

இந்தக் கட்டுரையில்

 இன்றைக்கே நம்பிக்கையான மனநிலையோடு வாழ்வதற்கு பைபிள் எப்படி உதவுகிறது?

 நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு தேவையான நல்ல ஆலோசனைகளை பைபிள் கொடுக்கிறது. இப்படி, ஒரு நம்பிக்கையான மனநிலையோடு இருப்பதற்கு அது உதவி செய்கிறது. சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

  •   பைபிள் தருகிற நல்ல ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள். “உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது” என்று சங்கீதம் 119:105 சொல்கிறது. ஒரு பிரகாசமான வெளிச்சத்தால் இரண்டு விஷயங்களைச் செய்ய முடியும். முதலில், பக்கத்தில் இருப்பதைப் பார்ப்பதற்கு அது உதவும். அதோடு, தூரமாக இருப்பதைப் பார்ப்பதற்கும் அது உதவும். அதேமாதிரி பைபிளில் இருக்கிற நல்ல நல்ல ஆலோசனைகள் ஒவ்வொரு நாளும் நமக்கு வரும் பிரச்சினைகளைச் சமாளிப்பதன் மூலம் நம்பிக்கையான மனநிலையோடு இருப்பதற்கு உதவி செய்யும். பைபிள் சொல்லித்தரும் விஷயங்கள் நமக்கு பலம் கொடுக்கும், நம் “இதயத்துக்குச் சந்தோஷத்தை” தரும். (சங்கீதம் 19:7, 8) அதேசமயத்தில், மனிதர்களுக்கும் இந்த பூமிக்கும் கடவுள் வைத்திருக்கிற அருமையான எதிர்காலத்தைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. நாம் இப்போதே சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருப்பதற்கு அந்த எதிர்கால நம்பிக்கை உதவி செய்கிறது.

  •   மற்றவர்களுடைய உதவியை எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த மாதிரி சூழ்நிலைகள் வரும்போது நம்முடைய குடும்பத்தில் இருப்பவர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கியிருக்க தோன்றலாம். ஆனால், அப்படிச் செய்வது ஞானமான ஒரு விஷயம் இல்லை என்று பைபிள் சொல்கிறது. அப்படி ஒதுங்கியிருந்தால் நாம் முட்டாள்தனமாக ஏதாவது செய்துவிடலாம், அல்லது முடிவுகள் எடுத்துவிடலாம். (நீதிமொழிகள் 18:1) அதேசமயத்தில் நம்மை நேசிக்கிறவர்கள் நம்மோடு இருந்தால் நாம் நியாயமாக, நிதானமாக யோசிப்பதற்கு அவர்களால் உதவ முடியும். ஒரு கஷ்டமான சூழ்நிலையை எப்படிச் சமாளிக்கலாம் என்பதற்கு சில டிப்ஸ்கூட அவர்களால் சொல்ல முடியும். (நீதிமொழிகள் 11:14) அவர்கள் நம்மைத் தட்டிக்கொடுத்து ஆறுதல்படுத்துவார்கள். நம் நிலைமை சரியாகும் வரை தொடர்ந்து போராடுவதற்கும் அவர்கள் உதவி செய்வார்கள்.—நீதிமொழிகள் 12:25.

  •   கடவுளிடம் ஜெபம் பண்ணுங்கள். “யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்” என்று பைபிள் சொல்கிறது. b (சங்கீதம் 55:22) அவர் “நம்பிக்கை தருகிற கடவுள்.” (ரோமர் 15:13) அவர் உங்கள்மேல் ரொம்ப அக்கறையாக இருக்கிறார். அதனால் நீங்கள் அவரிடம் நம்பிக்கையோடு ஜெபம் செய்யலாம். “உங்கள் கவலைகளையெல்லாம்” அவரிடம் சொல்லலாம். (1 பேதுரு 5:7) அவர் “உங்களை உறுதிப்படுத்துவார், உங்களைப் பலப்படுத்துவார், உங்களை உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நிற்க வைப்பார்.”—1 பேதுரு 5:10.

  •   சோதனைகள் வருகிறபோது உங்களுடைய நம்பிக்கையைப் பலப்படுத்துங்கள். “நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் பாதுகாப்பாக வாழ்வான். ஆபத்தை நினைத்துப் பயப்படாமல் நிம்மதியாக இருப்பான்” என்று கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். (நீதிமொழிகள் 1:33) ஆஸ்திரேலியாவில் இருக்கிற மார்கரெட் என்ற சகோதரியுடைய அனுபவம் இதற்கு ஒரு உதாரணம். ஒரு சூறாவளி அவருடைய வீட்டைத் தாக்கியபோது, நிறைய பணம் பொருளை அவர் இழந்துவிட்டார். அந்த சமயத்தில் அவர் அப்படியே முடங்கிப் போய்விடவில்லை. அதற்கு பதிலாக ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார்: பணம் பொருள் தற்காலிகமானதுதான் என்பதைப் புரிந்துகொண்டார். உண்மையிலேயே எது முக்கியமோ அதன்மேல் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவருடைய குடும்பம், நண்பர்கள், கடவுளிடம் இருக்கிற நட்பு, பைபிளில் தருகிற நம்பிக்கைமேல் அவர் கவனம் செலுத்தினார்.—சங்கீதம் 37:34; யாக்கோபு 4:8.

 எல்லா மனிதர்களுக்கும் என்ன எதிர்கால நம்பிக்கையை பைபிள் கொடுக்கிறது?

 மனிதர்களுக்கும் பூமிக்கும் ஒரு அற்புதமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருப்பதாக பைபிள் சொல்கிறது. அந்த எதிர்காலம் ரொம்ப தூரத்தில் இல்லை. சொல்லப்போனால், இன்றைக்கு மனிதர்களுக்கு வருகிற பிரச்சினைகளைப் பார்க்கும்போது இந்த உலகத்தின் “கடைசி நாட்களில்” நாம் இருக்கிறோம் என்று தெரிகிறது. (2 தீமோத்தேயு 3:1-5) சீக்கிரத்தில் கடவுள் இந்த பூமியில் பெரிய மாற்றங்களை செய்யப்போகிறார். அநியாயத்தையும் கஷ்டத்தையும் ஒழித்துக்கட்டப்போகிறார். இவை எல்லாவற்றையும் கடவுளுடைய அரசாங்கத்தின் மூலமாக அவர் செய்யப்போகிறார். (தானியேல் 2:44; வெளிப்படுத்துதல் 11:15) இயேசு அவருடைய சீஷர்களுக்கு மாதிரி ஜெபத்தை சொல்லிக்கொடுத்தபோது, இந்த அரசாங்கத்தை மனதில் வைத்துதான் “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் . . . பூமியிலும் நிறைவேற வேண்டும்” என்று ஜெபம் செய்யச் சொன்னார்.—மத்தேயு 6:9, 10.

 மனிதர்களுக்காக கடவுள் என்ன செய்ய ஆசைப்படுகிறார் என்று பைபிள் தெளிவாக சொல்கிறது. கடவுளுடைய அரசாங்கத்தில் இதெல்லாம் இருக்காது:

  •   பசி பட்டினி இருக்காது. “பூமி விளைச்சல் தரும்.”—சங்கீதம் 67:6.

  •   வியாதி இருக்காது. “ ‘எனக்கு உடம்பு சரியில்லை’ என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.”—ஏசாயா 33:24.

  •   மரணம் இருக்காது. மனிதர்களுடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது. முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.

a ஏதோ ஒரு விஷயம் நடப்பதற்காக ஆசைப்படுவதும், அதற்காக ஆவலாக காத்திருப்பதும், அது கண்டிப்பாக நடக்கும் என்பதில் உறுதியாக இருப்பதும்தான் நம்பிக்கை.

b பைபிளில் கடவுளுடைய பெயர் யெகோவா என்று சொல்லப்பட்டிருக்கிறது.—சங்கீதம் 83:18.