Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திடீரென்று உங்களுக்கு உடம்பு முடியாமல்போனால்...

திடீரென்று உங்களுக்கு உடம்பு முடியாமல்போனால்...

 உங்கள் உடல்நிலை திடீரென்று ரொம்ப மோசமாகிவிட்டதா? அப்படியென்றால் நீங்கள் மனதளவில் உடைந்து போயிருப்பீர்கள், ரொம்ப விரக்தி அடைந்திருப்பீர்கள், உங்களுடைய மருத்துவ செலவுகள் தலைக்குமேல் போயிருக்கும். இதனால் உங்களுடைய சக்தி எல்லாம் சக்கையாக பிழிந்த மாதிரி நீங்கள் உணரலாம். இந்த சூழ்நிலைமையை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்? உடம்பு முடியாமல் இருக்கிற உங்கள் குடும்பத்தாருக்கோ, உங்கள் நண்பருக்கோ நீங்கள் எப்படி உதவி செய்யலாம்? பைபிள் ஒரு மருத்துவ புத்தகம் கிடையாதுதான். ஆனால் இந்த சவாலான சூழ்நிலையை சிறப்பான விதத்தில் சமாளிப்பதற்கு நல்ல நல்ல ஆலோசனைகள் அதில் இருக்கிறது.

உடல்நலப் பிரச்சினையை சமாளிக்க டிப்ஸ்

  •   மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள்

     பைபிள் என்ன சொல்கிறது: “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.”—மத்தேயு 9:12.

     என்ன செய்யலாம்: தேவைப்படும்போது மருத்துவ உதவியை எடுத்துக்கொள்ளுங்கள்.

     எப்படி செய்யலாம்: சிறந்த மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ளுங்கள். சிலசமயம் இரண்டு அல்லது மூன்று டாக்டர்களிடம் ஆலோசனை கேட்பது நல்லது. (நீதிமொழிகள் 14:15) டாக்டரிடம் பேசும்போது தெளிவாக பேசுங்கள். டாக்டர் சொல்வது உங்களுக்கு புரிகிறதா, உங்கள் உடம்பில் இருக்கிற எல்லா பிரச்சினைகளையும் அவர் நன்றாகப் புரிந்துகொண்டாரா என்பதையெல்லாம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 15:22) உங்களுடைய நோயைப் பற்றியும் அதற்கு இருக்கிற எல்லா சிகிச்சைமுறைகளைப் பற்றியும் நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த வியாதியால் வரும் பின்விளைவுகளைப் பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டால் இதை சமாளிக்க மனதளவில் தயாராக இருப்பீர்கள், நல்ல முடிவுகளும் எடுப்பீர்கள்.

  •   ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுங்கள்

     பைபிள் என்ன சொல்கிறது: ‘உடற்பயிற்சி நன்மை தரும்.’—1 தீமோத்தேயு 4:8.

     என்ன செய்யலாம்: ஒழுங்காக உடற்பயிற்சி செய்வது போன்ற ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுவது உங்களுக்குத்தான் நல்லது.

     எப்படி செய்யலாம்: தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். நன்றாகத் தூங்குங்கள். நோய்க்கு ஏற்ற மாதிரி வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்துக்கொள்வதற்காக நீங்கள் எடுக்கிற முயற்சியும் கொடுக்கிற நேரமும் கண்டிப்பாக வீண்போகாது என்பதை நிபுணர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். அதே சமயத்தில், நீங்கள் எதை செய்தாலும் அது உங்கள் உடம்பை இன்னும் மோசமாக்குகிறதா... உங்களுடைய சிகிச்சையை பாதிக்கிறதா... என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்.

  •   மற்றவர்களுடைய உதவியை எடுத்துக்கொள்ளுங்கள்

     பைபிள் என்ன சொல்கிறது: “உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

     என்ன செய்யலாம்: கஷ்ட காலத்தில் உங்கள் நண்பர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள்.

     எப்படி செய்யலாம்: நீங்கள் மனசுவிட்டு பேச முடிந்த ஒரு நண்பரிடம் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டுங்கள். இப்படி உங்கள் மனதில் இருக்கிற பாரத்தை இறக்கி வைத்தால் உங்கள் மனசு லேசாகும், சந்தோஷமாகவும் இருப்பீர்கள். ஒருவேளை வேறு ஏதாவது வழிகளில் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று உங்களுடைய நண்பர்களும் குடும்பத்தாரும் ஆசைப்படலாம். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்றுதான் தெரியாமல் இருக்கலாம். அதனால் உங்களுக்கு என்ன உதவி தேவை என்பதை அவர்களிடம் தெளிவாக சொல்லுங்கள். அதே சமயத்தில், அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் செய்கிற உதவிக்கு நன்றியோடு இருங்கள். நல்ல எண்ணத்தோடு உங்கள் நண்பர்கள் செய்கிற விஷயங்கள் சில சமயம் உங்களை திணறடித்து விடலாம். அதனால் எவ்வளவு தடவை உங்களை வந்து பார்க்கலாம்... உங்களோடு எவ்வளவு நேரம் செலவு செய்யலாம்... என்பதில் சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளுங்கள்.

  •   நம்பிக்கையோடு இருங்கள்

     பைபிள் என்ன சொல்கிறது: “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து. ஆனால், உடைந்த உள்ளம் ஒருவருடைய பலத்தை உறிஞ்சிவிடும்.”—நீதிமொழிகள் 17:22.

     என்ன செய்யலாம்: நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் மனமுடைந்து போக மாட்டீர்கள். இந்த மோசமான உடல்நல பிரச்சினையை சமாளிப்பதற்கான தெம்பு உங்களுக்கு இருக்கும்.

     எப்படி செய்யலாம்: இந்த சூழ்நிலைமையில் உங்களால் என்ன செய்ய முடியுமோ அதைப் பற்றியே யோசித்துப் பாருங்கள். செய்ய முடியாத விஷயத்தை பற்றி யோசிக்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள், அல்லது இந்த நோய் வருவதற்கு முன்பு நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்றும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். (கலாத்தியர் 6:4) உங்களால் எட்ட முடிந்த நியாயமான குறிக்கோள்களை வையுங்கள். அப்படி வைத்தால்தான் உங்களால் நம்பிக்கையோடு இருக்க முடியும். (நீதிமொழிகள் 24:10) உங்கள் சூழ்நிலைமையில் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவி செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வருகிற சந்தோஷம் பிரச்சினையைப் பற்றியே யோசிக்காமல் இருக்க உங்களுக்கு உதவும்.—அப்போஸ்தலர் 20:35.

நோயை சமாளிக்க கடவுள் உங்களுக்கு உதவுவாரா?

 கடவுள் உங்களை அற்புதமாக சுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்காதீர்கள். ஆனால் அதற்காக அவர் ஒன்றுமே செய்ய மாட்டார் என்று அர்த்தமா? இல்லை. இந்த நோயை சமாளிப்பதற்கு கடவுளாகிய யெகோவா a நிச்சயமாக உதவி செய்வார் என்று பைபிள் சொல்கிறது. தன்னை வணங்குகிறவர்களுக்கு அவர் எப்படியெல்லாம் உதவி செய்கிறார் என்பதை நாம் கீழே பார்க்கப்போகிறோம்.

 சமாதானம். ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவ சமாதானத்தை’ யெகோவா உங்களுக்கு கொடுப்பார். (பிலிப்பியர் 4:6, 7) இந்த சமாதானம், அதாவது மன அமைதி, பிரச்சினையில் ஒரேயடியாக மூழ்கிவிடாமல் இருப்பதற்கு உதவி செய்யும். தன்னிடம் ஜெபம் செய்கிறவர்களுக்கு, கவலைகளை கொட்டுகிறவர்களுக்கு, இந்த தேவ சமாதானத்தை கடவுள் கண்டிப்பாக கொடுப்பார்.—1 பேதுரு 5:7.

 ஞானம். நல்ல முடிவுகளை எடுப்பதற்கு யெகோவா ஞானத்தை கொடுக்கிறார். (யாக்கோபு 1:5) எல்லா காலத்துக்கும் உதவி செய்கிற நல்ல நல்ல ஆலோசனைகள் பைபிளில் கொட்டிக் கிடக்கின்றன. அதை படித்து அதன்படி நடக்கும்போது யெகோவா கொடுக்கிற ஞானம் ஒருவருக்கு கிடைக்கும்.

 நல்ல எதிர்கால நம்பிக்கை. ‘“எனக்கு உடம்பு சரியில்லை” என்று யாரும் சொல்லாத’ ஒரு எதிர்காலத்தை யெகோவா கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 33:24) நம்முடைய உடல்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் நம்பிக்கையோடு இருப்பதற்கு கடவுள் கொடுத்த இந்த வாக்குறுதி உதவி செய்யும்.—எரேமியா 29:11, 12.

a யெகோவா என்பது கடவுளுடைய பெயர் என்று பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 83:18.