Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 43

பாட்டு 90 ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவோம்

சந்தேகங்களை விரட்டியடியுங்கள்!

சந்தேகங்களை விரட்டியடியுங்கள்!

“எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து . . . நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.”1 தெ. 5:21.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவுடைய சேவையில் நம் ஆர்வத்தைக் குறைக்கும் சந்தேகங்களை எப்படி விரட்டியடிக்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1-2. (அ) யெகோவாவுடைய ஊழியர்களுக்கு என்ன சந்தேகங்கள் வரலாம்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

 நம் எல்லாருக்குமே சந்தேகங்கள் a வரலாம். சில சூழ்நிலைகளை யோசித்துப் பாருங்கள். ஒரு இளைஞர், யெகோவாவுக்கு உண்மையிலேயே தன்மேல் அக்கறை இருக்கிறதா என்று சந்தேகப்படலாம். அதனால், ஞானஸ்நானம் எடுக்கத் தயங்கலாம். இன்னொரு சகோதரர், இளம் வயதில் நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை விட்டுவிட்டு யெகோவாவுக்குச் சேவை செய்ய முடிவெடுத்திருக்கலாம். ஆனால், இப்போது குடும்பத் தேவைகளை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடியாததால் அந்தத் தீர்மானம் சரிதானா என்று சந்தேகப்படலாம். வயதான சகோதரி ஒருவர் தெம்பே இல்லாமல் ரொம்பச் சோர்ந்துபோய் இருக்கலாம். முன்புபோல் யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியாததால் அவர் நொந்துபோகலாம். நீங்களும் இந்தச் சூழ்நிலைகளைச் சந்தித்திருக்கிறீர்களா? இந்த மாதிரி கேள்விகள் உங்களுக்கும் வந்திருக்கலாம்: ‘யெகோவா உண்மையிலேயே என்னைக் கவனிக்கிறாரா? அவருக்குச் சேவை செய்வதற்காக நான் செய்த தியாகங்கள் சரிதானா? அவருக்கு நான் இன்னமும் பிரயோஜனமாக இருக்கிறேனா?’

2 இந்த மாதிரி கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்கவில்லை என்றால், நம் விசுவாசம் குறைந்துவிடும். யெகோவாவை வணங்குவதைக்கூட நாம் நிறுத்திவிடலாம். இந்தக் கட்டுரையில், மூன்று சந்தேகங்களைப் பற்றிப் பார்ப்போம். அவை: (1) யெகோவாவுக்கு என்மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா? (2) நான் முன்பு எடுத்த தீர்மானங்கள் சரிதானா? (3) இப்போது நான் யெகோவாவுக்குப் பிரயோஜனமாக இருக்கிறேனா? இந்தச் சந்தேகங்களை விரட்டியடிக்க உதவுகிற பைபிள் நியமங்களைப் பற்றியும் பார்ப்போம்.

சந்தேகங்களைத் தீர்ப்பது எப்படி?

3. சந்தேகங்களைத் தீர்க்க ஒரு வழி என்ன?

3 சந்தேகங்களைத் தீர்க்க ஒரு வழி, கடவுளுடைய வார்த்தையில் பதில்களைக் கண்டுபிடிப்பதுதான். அப்படிச் செய்தால், யெகோவாவோடு இன்னும் நெருக்கமாக முடியும், ‘விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க’ முடியும்.—1 கொ. 16:13.

4. நாம் எப்படி ‘எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து . . . நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்?’ (1 தெசலோனிக்கேயர் 5:21)

4 1 தெசலோனிக்கேயர் 5:21-ஐ வாசியுங்கள். “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து . . . நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. இதை எப்படிச் செய்யலாம்? நாம் நம்புகிற விஷயங்கள் உண்மைதானா என்று பைபிளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் செய்யலாம். கடவுளுக்குத் தன்மேல் அக்கறை இருக்கிறதா என்று யோசித்த அந்த இளைஞரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு அப்படி ஒரு சந்தேகம் வந்துவிட்டதால், அதைத் தீர்த்துக்கொள்ள அவர் முயற்சி எடுக்க வேண்டும். யெகோவா அவரைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள பைபிளைப் படிக்க வேண்டும். இப்படி, ‘எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து . . . நிச்சயப்படுத்திக்கொள்ள’ வேண்டும்.

5. நம்முடைய கேள்விகளுக்கு யெகோவா கொடுக்கிற பதிலை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

5 பைபிளைப் படிக்கும்போது யெகோவா நம்மிடம் பேசுவதை “கேட்க” முடியும். ஆனால், குறிப்பிட்ட சில கேள்விகளுக்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால், நாம் இன்னும் நிறைய முயற்சி எடுக்க வேண்டும். அதைப் பற்றி பைபிளில் தேடிப் படிக்க வேண்டும். அமைப்பு வெளியிட்டிருக்கும் கருவிகளை வைத்து ஆராய்ச்சி செய்யலாம். (நீதி. 2:3-6) அப்படி ஆராய்ச்சி செய்யும்போது, கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க உதவ சொல்லி ஜெபம் செய்யலாம். நம்முடைய சூழ்நிலைக்குப் பொருந்துகிற பைபிள் நியமங்களையும் நமக்கு உதவுகிற மற்ற தகவல்களையும் தேடிக் கண்டுபிடிக்கலாம். நம்மை மாதிரியே பிரச்சினைகளைச் சந்தித்த பைபிள் உதாரணங்களைப் பற்றிப் படிப்பதும் பிரயோஜனமாக இருக்கும்.

6. சந்தேகங்களை விரட்டியடிக்க கூட்டங்கள் எப்படி உதவும்?

6 கூட்டங்களிலும் யெகோவா நம்மிடம் பேசுவதை “கேட்க” முடியும். கூட்டங்களுக்கு நாம் தவறாமல் போகும்போது அங்கே கொடுக்கப்படும் பேச்சோ ஒருவர் சொல்லும் பதிலோ நம்முடைய சந்தேகத்தை விரட்டியடிக்க உதவும். (நீதி. 27:17) இப்போது, குறிப்பிட்ட சில சந்தேகங்களை எப்படி விரட்டியடிக்கலாம் என்று பார்க்கலாம்.

யெகோவாவுக்கு என்மேல் அக்கறை இருக்கிறதா என்ற சந்தேகம்

7. சிலருக்கு என்ன கேள்வி வரலாம்?

7 ‘யெகோவா என்னையெல்லாம் கவனிப்பாரா’ என்று நீங்கள் என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தவரோடு நண்பராக ஆவது நடக்காத ஒரு விஷயம் என்று நீங்கள் யோசிக்கலாம்; நீங்கள் உங்களையே தாழ்வாக நினைத்தால், இப்படிப்பட்ட யோசனைகள் வரலாம். தாவீது ராஜாவுக்கும் இந்த மாதிரி எண்ணம் வந்திருக்கலாம். அதனால்தான், சாதாரண மனிதர்களைக்கூட யெகோவா பார்க்கிறாரே என்று நினைத்து வியந்துபோனார். “யெகோவாவே, அற்ப மனுஷனை நீங்கள் கண்ணெடுத்துப் பார்ப்பதற்கும், அவனைக் கவனிப்பதற்கும் அவன் யார்?” என்று கேட்டார். (சங். 144:3) சரி, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தை நீங்கள் எப்படித் தீர்த்துக்கொள்ளலாம்?

8. ஒன்று சாமுவேல் 16:6, 7, 10-12 காட்டுவதுபோல், யெகோவா மக்களிடம் எதைக் கவனிக்கிறார்?

8 மற்றவர்கள் பார்வையில் முக்கியமாக இல்லாதவர்களைக்கூட யெகோவா கவனிக்கிறார் என்று பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். யெகோவா சாமுவேலை அனுப்பி, ஈசாயின் மகன்களில் ஒருவரை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்யச் சொன்னார். அந்தச் சமயத்தில், ஈசாய் தன்னுடைய எட்டு மகன்களில் ஏழு பேரை மட்டும்தான் சாமுவேல் முன்பு நிறுத்தினார். கடைசி மகன் தாவீதைக் கூப்பிடவில்லை. b ஆனால், யெகோவா தாவீதைத்தான் தேர்ந்தெடுத்தார். (1 சாமுவேல் 16:6, 7, 10-12-ஐ வாசியுங்கள்.) தாவீது உள்ளுக்குள் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை யெகோவா பார்த்தார். அதாவது, தன்னை நேசித்த ஒரு இளைஞராக தாவீதைப் பார்த்தார்.

9. யெகோவாவுக்கு உங்கள்மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்று ஏன் உறுதியாக நம்பலாம்? (படத்தையும் பாருங்கள்.)

9 யெகோவா உங்கள்மேல் அக்கறை வைத்திருப்பதை ஏற்கெனவே எப்படியெல்லாம் காட்டியிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி குறிப்பிட்ட சில ஆலோசனைகளை அவர் கொடுக்கிறார். (சங். 32:8) உங்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பதால்தானே, அவரால் அதையெல்லாம் கொடுக்க முடிகிறது? (சங். 139:1) யெகோவாவுடைய ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கும்போது... அது எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது... யெகோவாவுக்கு உங்கள்மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்பதில் உறுதியாக இருப்பீர்கள். (1 நா. 28:9; அப். 17:26, 27) அவருக்குக் கீழ்ப்படிவதற்காக நீங்கள் எடுக்கிற முயற்சிகளை அவர் பார்க்கிறார். உங்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்ப்பதால் உங்களுக்கு உதவ ஆசைப்படுகிறார். (எரே. 17:10) அவருடைய நட்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார்.—1 யோ. 4:19.

“நீ [யெகோவாவை] தேடினால், அவரைக் கண்டடைய உதவி செய்வார்.”—1 நா. 28:9 (பாரா 9) c


எடுத்த தீர்மானங்கள் சரிதானா என்ற சந்தேகம்

10. முன்பு எடுத்த தீர்மானங்களைப் பற்றி யோசிக்கும்போது நமக்கு என்ன சந்தேகம் வரலாம்?

10 முன்பு எடுத்த தீர்மானங்கள் சரிதானா என்ற சந்தேகம் ஒரு கட்டத்தில் சிலருக்கு வரலாம். ஒருவேளை, யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் ஒரு நல்ல வேலையை அல்லது நல்ல தொழிலை விட்டுவந்திருக்கலாம். அது நடந்து பல வருஷங்கள்கூட ஆகியிருக்கலாம். ஆனால் இப்போது, தங்களுக்குத் தெரிந்தவர்கள் நன்றாகப் பணம் சம்பாதிப்பதையும் வசதியாக வாழ்வதையும் அவர்கள் பார்க்கலாம். அதனால், ‘யெகோவாவுக்காக நான் செய்த தியாகங்கள் சரிதானா? அல்லது, வாழ்க்கையில் நல்ல வாய்ப்புகளை நான் தவறவிட்டுவிட்டேனா?’ என்று அவர்கள் யோசிக்க ஆரம்பிக்கலாம்.

11. சங்கீதம் 73-ஐ எழுதியவர் எதை நினைத்துக் கவலைப்பட்டார்?

11 உங்களுக்கும் இதேமாதிரி கேள்விகள் இருந்தால், சங்கீதம் 73-ஐ எழுதியவரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். மற்றவர்கள் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்பாகவும் கவலையில்லாமல் வாழ்வதுபோலவும் அவருக்குத் தோன்றியது. (சங். 73:3-5, 12) அதையெல்லாம் பார்க்கப் பார்க்க யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக தான் எடுத்த முயற்சிகள் வீண் என்று யோசிக்க ஆரம்பித்தார். அதனால், ‘நாள் முழுவதும் [அவர்] வேதனைப்பட்டார்.’ (சங். 73:13, 14) இந்த உணர்ச்சிகளை அவர் எப்படிச் சமாளித்தார்?

12. சங்கீதம் 73:16-18 சொல்கிற மாதிரி, அந்தச் சங்கீதக்காரர் சந்தேகங்களை எப்படி விரட்டியடித்தார்?

12 சங்கீதம் 73:16-18-ஐ வாசியுங்கள். அந்தச் சங்கீதக்காரர் யெகோவாவின் ஆலயத்துக்குப் போனார். அங்கே இருந்த அமைதியான சூழலில், அவரால் தெளிவாக யோசிக்க முடிந்தது. மற்றவர்களுடைய வாழ்க்கை அப்போதைக்குப் பிரகாசமாக தெரிந்தாலும், அவர்களுடைய எதிர்காலம் இருட்டாகத்தான் இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டார். யெகோவாவுக்கு முதலிடம் கொடுப்பதுதான் சிறந்த தீர்மானம் என்பதையும் புரிந்துகொண்டார். அது அவருக்கு மனநிம்மதியைக் கொடுத்தது. அதனால், தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்தை எடுத்தார்.—சங். 73:23-28.

13. முன்பு எடுத்த தீர்மானங்கள் சரிதானா என்ற சந்தேகம் வந்தால் நீங்கள் என்ன செய்யலாம்? (படத்தையும் பாருங்கள்.)

13 அந்த சங்கீதக்காரருக்குக் கிடைத்த மாதிரியே, உங்களுக்கும் கண்டிப்பாக மனநிம்மதி கிடைக்கும். எப்படி? யெகோவா உங்களை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். ஆனால், இன்று உலகத்தில் இருக்கிறவர்களுக்கு அவருடைய உதவி கிடைப்பதில்லை. அவர்களுக்கு எந்த எதிர்கால நம்பிக்கையும் இல்லை. அதனால்தான், இப்போதே வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்... நிறையச் சம்பாதிக்க வேண்டும்... என்று நினைக்கிறார்கள். ஆனால், நீங்கள் பரலோகத்தில் நிறையப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைத்திருக்கிறீர்கள். கற்பனைக்கூட செய்ய முடியாத அளவுக்கு ஆசீர்வாதங்களைப் பொழியப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்! (சங். 145:16) இதையும் யோசித்துப் பாருங்கள்: ஒருவேளை, நீங்கள் வேறு தீர்மானங்களை எடுத்திருந்தால் உங்கள் வாழ்க்கை இப்போது எப்படி இருந்திருக்கும் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், ஒரு விஷயத்தில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்: யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் இருக்கிற அன்பால் தூண்டப்பட்டு தீர்மானங்கள் எடுக்கிறவர்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்!

யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள் (பாரா 13) d


யெகோவாவுக்கு நான் பிரயோஜனமாக இருக்கிறேனா என்ற சந்தேகம்

14. சிலருக்கு என்ன பிரச்சினை இருக்கலாம், அவர்கள் எப்படி யோசிக்கலாம்?

14 வயதானதால், வியாதிப்பட்டதால் அல்லது உடல் குறைபாடுகளால் யெகோவாவின் ஊழியர்களில் சிலர் கஷ்டப்படலாம். ‘என்னையெல்லாம் யெகோவா முக்கியமாக நினைப்பாரா? என்னால் அவருக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்குமா?’ என்று அவர்கள் யோசிக்கலாம்.

15. சங்கீதம் 71-ஐ எழுதியவர் எதை உறுதியாக நம்பினார்?

15 சங்கீதம் 71-ஐ எழுதியவரும் இதேமாதிரிதான் உணர்ந்தார். “என் உடல் தளர்ந்துபோகும்போது என்னைக் கைவிட்டுவிடாதீர்கள்” என்று ஜெபம் செய்தார். (சங். 71:9, 18) இருந்தாலும், ஒரு விஷயத்தில் அவர் உறுதியாக இருந்தார். யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்யும்வரை தன்னை யெகோவா வழிநடத்துவார் என்றும் தனக்கு ஆதரவாக இருப்பார் என்றும் நம்பினார். அதோடு, பிரச்சினைகள் மத்தியிலும் யெகோவாவுக்குச் சிறந்ததைச் செய்கிறவர்களைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவார் என்பதையும் அந்தச் சங்கீதக்காரர் புரிந்துவைத்திருந்தார்.—சங். 37:23-25.

16. வயதானவர்கள் எப்படி யெகோவாவுக்குப் பிரயோஜனமாக இருக்கிறார்கள்? (சங்கீதம் 92:12-15)

16 வயதான சகோதர சகோதரிகளே, உங்களுடைய சூழ்நிலையை யெகோவா பார்க்கிற மாதிரி பாருங்கள். உடலளவில் உங்களுக்குச் சில கஷ்டங்கள் இருந்தாலும், தனக்கு உண்மையாக சேவை செய்ய யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். (சங்கீதம் 92:12-15-ஐ வாசியுங்கள்.) உங்களால் செய்ய முடியாததை யோசிப்பதற்குப் பதிலாக, செய்ய முடிந்ததைப் பற்றி யோசியுங்கள். உதாரணத்துக்கு, உங்களுடைய முன்மாதிரி மூலமாகவும் நீங்கள் காட்டுகிற அக்கறை மூலமாகவும் மற்றவர்களைப் பலப்படுத்த முடியும். இத்தனை வருஷங்களாக யெகோவா எப்படி உங்களுக்கு உதவி செய்திருக்கிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்ல முடியும். எதிர்கால வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள் என்பதையும் சொல்ல முடியும். மற்றவர்களுக்காக நீங்கள் செய்கிற ஜெபங்களுக்குச் சக்தி இருக்கிறது என்பதையும் மறந்துவிடாதீர்கள். (1 பே. 3:12) நம்முடைய சூழ்நிலை எப்படியிருந்தாலும் சரி, நம் எல்லாராலுமே யெகோவாவுக்கும் மற்றவர்களுக்கும் கண்டிப்பாக ஏதாவது செய்ய முடியும்.

17. நாம் ஏன் நம்மை மற்றவர்களோடு ஒப்பிடக் கூடாது?

17 யெகோவாவுக்கு நிறைய செய்ய முடியவில்லையே என்று நீங்கள் வேதனைப்பட்டால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: இப்போது உங்களால் என்ன செய்ய முடிகிறதோ அதை யெகோவா உயர்வாகப் பார்க்கிறார். நீங்கள் செய்கிற சேவையை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அப்படிச் செய்யாதீர்கள்! ஏனென்றால், யெகோவாவே யாரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. (கலா. 6:4) இயேசுவுக்கு மரியாள் ஒரு விலையுயர்ந்த வாசனை எண்ணெய்யைப் பரிசாகக் கொடுத்தாள். (யோவா. 12:3-5) ஆனால், ஏழை விதவை ரொம்பக் குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுகளைத்தான் ஆலயத்தில் நன்கொடையாகப் போட்டாள். (லூக். 21:1-4) இருந்தாலும், அவர்கள் இரண்டு பேருமே விசுவாசத்தைக் காட்டியதாக இயேசு சொன்னார். அவருடைய அப்பா யெகோவாவும் அப்படித்தான் யோசிக்கிறார். அவர்மேல் இருக்கிற அன்பாலும் பக்தியாலும் தூண்டப்பட்டு நீங்கள் செய்கிற ஒவ்வொரு விஷயத்தையும் அவர் உயர்வாகப் பார்க்கிறார். அது உங்களுக்குச் சிறியதாகத் தெரியலாம்; ஆனால், அவருக்கு அப்படி இல்லை!

18. சந்தேகங்களை விரட்டியடிக்க எது நமக்கு உதவும்? (“ சந்தேகங்களை விரட்டியடிக்க உதவும் வசனங்கள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

18 நம் எல்லாருக்குமே சிலசமயங்களில் சந்தேகங்கள் வரலாம். ஆனால், இந்தக் கட்டுரையில் பார்த்த மாதிரி, பைபிளைப் பயன்படுத்தி அந்தச் சந்தேகங்களை விரட்டியடியுங்கள். உங்கள் சந்தேகத்தைத் தீர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்யுங்கள். அப்போது, சந்தேகம் மறைந்து நம்பிக்கை மலரும். யெகோவா உங்களை ஒரு தனிப்பட்ட நபராகப் பார்க்கிறார். நீங்கள் செய்கிற தியாகங்களை உயர்வாக நினைக்கிறார். உங்களைக் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார். தனக்கு உண்மையாக இருக்கிற எல்லார்மேலும் யெகோவா உயிரையே வைத்திருக்கிறார். அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்வார்.

பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்

a வார்த்தையின் விளக்கம்: ‘யெகோவாவுக்கு நம்மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா? நாம் எடுத்த தீர்மானங்கள் சரிதானா?’ என்று நம் மனதில் வருகிற சந்தேகங்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரை சொல்கிறது. யெகோவாமேலும் அவருடைய வாக்குறுதிகள்மேலும் விசுவாசக் குறைவினால் வருகிற சந்தேகங்களைப் பற்றி அல்ல.

b யெகோவா தேர்ந்தெடுத்தபோது தாவீதுக்கு எவ்வளவு வயது என்று பைபிள் சொல்வதில்லை. ஆனால், அவர் டீனேஜ் வயதில் இருந்திருக்கலாம். செப்டம்பர் 1, 2011 ஆங்கில காவற்கோபுரத்தில் பக்கம் 29 பாரா 2-ஐப் பாருங்கள்.

c பட விளக்கங்கள்: ஒரு இளம் பெண், தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று புரிந்துகொள்ள பைபிளைப் படிக்கிறார்.

d பட விளக்கம்: ஒரு சகோதரர் தன்னுடைய குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதற்காக உழைக்கிறார். ஆனால் அவருடைய மனசெல்லாம் பூஞ்சோலை பூமியில் கிடைக்கப் போகிற ஆசீர்வாதங்கள்மேல் இருக்கிறது.