Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் வரலாற்றுச் சுவடுகள்

“நம்முடைய அடுத்த மாநாடு எப்போது வரும்?”

“நம்முடைய அடுத்த மாநாடு எப்போது வரும்?”

1932, நவம்பர் மாதத்தின் பிற்பகுதி! 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குடியிருக்கும் மெக்சிகோ நகரம்! ஒரு வாரத்துக்கு முன்புதான், அங்கே முதல் தடவையாக டிராஃபிக் சிக்னல்கள் பொருத்தப்பட்டன. ஆனால், இப்போது அது பழைய செய்தியாகிவிட்டது. இன்னொரு முக்கியமான நிகழ்ச்சிக்காக நகரத்தின் பத்திரிகை நிருபர்கள் தயாராகிவிட்டார்கள். ஒரு சிறப்பு விருந்தினரின் வருகைக்காக அவர்கள் ரயில் நிலையத்தில் கேமராக்களோடு தயாராக நிற்கிறார்கள். உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசிடென்ட்டாக இருக்கும் ஜோஸஃப் எஃப். ரதர்ஃபோர்ட்தான் அந்த விருந்தினர்! மூன்று நாட்களுக்கு நடக்கிற தேசிய மாநாட்டுக்கு வரும் அவரை வரவேற்பதற்காக, அங்குள்ள சாட்சிகளும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

மெக்சிகோவில் சத்தியத்தைத் தொடர்ந்து பரப்புவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளில் இந்த மாநாடும் ஒன்று என்பதாகவும், “இந்த மாநாடு சரித்திரத்தில் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பெறும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை” என்பதாகவும் த கோல்டன் ஏஜ் சொன்னது. வெறும் 150 பேர் மட்டுமே கலந்துகொண்ட இந்த மாநாடு மிக முக்கியமானதாக ஆனதற்கு என்ன காரணம்?

இந்த மாநாடு நடப்பதற்கு முன்பு, மெக்சிகோவில் சத்தியம் அவ்வளவாகப் பரவவில்லை. 1919-லிருந்து அங்கே சின்ன சின்ன மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆனால், அந்த வருஷத்திலிருந்து அங்கிருந்த சபைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தது. 1929-ல் மெக்சிகோ நகரத்தில் கிளை அலுவலகம் திறக்கப்பட்ட பிறகு, நம்பிக்கை ஒளி வீசுவதுபோல் தெரிந்தது. ஆனாலும், சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. உதாரணத்துக்கு, பிரசங்க வேலையில் வியாபாரத்தை நுழைக்கக் கூடாது என்று அமைப்பு கால்பார்ட்டர்களுக்கு (அதாவது, பயனியர்களுக்கு) அறிவுரை கொடுத்தபோது, ஒரு கால்பார்ட்டர் கோபமடைந்தார்; தன் சேவையை விட்டுவிட்டுத் தனக்கென்று ஒரு பைபிள் படிப்பு தொகுதியை ஆரம்பித்தார். அந்தச் சமயத்திலிருந்த கிளை அலுவலகக் கண்காணியும் வேதப்பூர்வமற்ற நடத்தையில் ஈடுபட்டதால், அவரை நீக்க வேண்டியிருந்தது. அதனால், மெக்சிகோவில் இருந்த உண்மையுள்ள சாட்சிகளுக்கு ஆன்மீக ரீதியில் உற்சாகம் தேவைப்பட்டது.

அந்த மாநாட்டில், தூண்டியெழுப்பும் இரண்டு பேச்சுகளைச் சகோதரர் ரதர்ஃபோர்ட் கொடுத்தார். அதோடு, வலிமைமிக்க ஐந்து பேச்சுகளை ரேடியோவிலும் கொடுத்தார். அதைக் கேட்ட உண்மையுள்ள சாட்சிகள் ரொம்பவே உற்சாகமடைந்தார்கள். முதல் முறையாக, மெக்சிகோவிலிருந்த ரேடியோ நிலையங்கள் நல்ல செய்தியை நாடு முழுவதும் ஒலிபரப்பின. மாநாட்டுக்குப் பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட கிளை அலுவலகக் கண்காணி பிரசங்க வேலையை ஒழுங்கமைத்தார். வைராக்கியமுள்ள சாட்சிகள், புதுத் தெம்போடும் யெகோவாவின் ஆசீர்வாதத்தோடும் பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்தார்கள்.

1941-ல் மெக்சிகோ நகரத்தில் நடந்த மாநாடு

அதற்கு அடுத்த வருஷம், அந்த நாட்டில் இரண்டு மாநாடுகள் நடந்தன. துறைமுக நகரமான வேராக்ரூஸில் ஒரு மாநாடும், மெக்சிகோ நகரத்தில் இன்னொரு மாநாடும் நடந்தன. சகோதரர்கள் ஊழியத்தில் கடினமாக உழைத்தது, அருமையான பலன்களைத் தர ஆரம்பித்தது. 1931-ல், 82 பிரஸ்தாபிகள் இருந்தார்கள். ஆனால், 10 வருஷங்களுக்குப் பிறகு, அந்த எண்ணிக்கை பத்து மடங்காக உயர்ந்தது. 1941-ல், மெக்சிகோ நகரத்தில் நடந்த தேவராஜ்ய மாநாட்டுக்குக் கிட்டத்தட்ட 1000 பேர் வந்திருந்தார்கள்.

“தெருக்களில் படையெடுப்பு”

1943-ல், “சுயாதீன தேசம்” என்ற தேவராஜ்ய மாநாடு மெக்சிகோவின் 12 நகரங்களில் நடந்தது. * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதை விளம்பரப்படுத்துவதற்காக, சாட்சிகள் விளம்பர அட்டைகளைப் பயன்படுத்தினார்கள். இரண்டு அட்டைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, ஒரு அட்டை முன்னாலும், இன்னொரு அட்டை பின்னாலும் இருக்கும்படி அவற்றைத் தங்களுடைய தோள்களில் அணிந்திருந்தார்கள். விளம்பர அட்டைகளை வைத்து விளம்பரப்படுத்தும் முறையை, 1936-லிருந்து சாட்சிகள் பயன்படுத்திவந்தார்கள்.

மெக்சிகோவில் நடந்த விளம்பர அட்டை அணிவகுப்பு (1944-ஆம் வருஷ பத்திரிகையில் வெளியானது)

விளம்பர அட்டைகளை அணிந்துகொண்டு மெக்சிகோ நகரத்தில் நடத்தப்பட்ட அந்த அணிவகுப்பின் வெற்றியைப் பற்றி, லா நாசியான் என்ற பத்திரிகை இப்படிச் சொன்னது: “[மாநாட்டின்] முதல் நாள் அன்று, நிறைய பேரை அழைக்கும்படி [சாட்சிகளுக்கு] சொல்லப்பட்டது. அடுத்த நாள், அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ஆட்கள் வந்தார்கள்.” அந்த அணிவகுப்புக்குக் கிடைத்த ஆதரவை கத்தோலிக்க சர்ச்சால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால், சாட்சிகளுக்கு எதிராக அது பிரச்சாரம் செய்தது. இருந்தாலும், தைரியமான சகோதர சகோதரிகள் தொடர்ந்து தெருக்களில் சாட்சி கொடுத்தார்கள். “விளம்பர அட்டைகளை வைத்து விளம்பரப்படுத்திக்கொண்டிருந்த ஆண்களையும் பெண்களையும் முழு நகரமே பார்த்தது” என்று லா நாசியான் சொன்னது. மெக்சிகோ நகரத்தின் தெருக்களில் இருந்த சகோதரர்களின் ஒரு ஃபோட்டோ அந்தப் பத்திரிகையில் வெளியானது; அந்த ஃபோட்டோவுக்குக் கீழே, “தெருக்களில் படையெடுப்பு” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

“கொஞ்சம் மெத்தென்று, கதகதப்பாக” இருந்த படுக்கைகள்

அந்த நாட்களில், மெக்சிகோவில் நடந்த மாநாடுகளில் கலந்துகொள்வதற்காகப் பெரும்பாலான சாட்சிகள் பெரிய பெரிய தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ஒதுக்குப்புறமான கிராமங்களிலிருந்து நிறைய பேர் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். அந்தக் கிராமங்களில், ரயில் வசதியோ சாலை வசதியோகூட இல்லை. மாநாடு நடக்கும் நகரத்துக்குப் போகும் ரயிலில் ஏறுவதற்கே, அவர்கள் கோவேறு கழுதைகள்மீது சவாரி செய்து வர வேண்டியிருந்தது. அல்லது பல நாட்கள் நடந்து வர வேண்டியிருந்தது.

நிறைய சாட்சிகள் ஏழைகளாக இருந்தார்கள். அதனால், மாநாட்டுக்குப் போவதற்கான செலவைச் சமாளிப்பதே அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அவர்களில் நிறைய பேர், உள்ளூர் சாட்சிகளின் வீடுகளில்தான் தங்கினார்கள்; அந்தச் சாட்சிகள் அவர்களை அன்போடு உபசரித்தார்கள். மற்றவர்கள், ராஜ்ய மன்றங்களில் தூங்கினார்கள். ஒரு தடவை, கிளை அலுவலகத்தில் கிட்டத்தட்ட 90 பேர் தங்கினார்கள். அங்கே, புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகள்மேல் படுத்துத் தூங்கினார்கள். அந்த அட்டைப்பெட்டிகள் “சிமெண்ட் தரை அளவுக்குக் கடினமாக இல்லாமல் கொஞ்சம் மெத்தென்று, கதகதப்பாக” இருந்ததற்காக அந்த விருந்தினர்கள் சந்தோஷப்பட்டார்கள் என்று இயர்புக் குறிப்பிட்டது.

சகோதர சகோதரிகளோடு ஒன்றுகூடி வருவதற்காக எப்படிப்பட்ட தியாகம் செய்தாலும் அது வீண் போகாது என்பதை அந்தச் சாட்சிகள் உணர்ந்தார்கள். இன்று மெக்சிகோவில் இருக்கிற 8,50,000-க்கும் அதிகமான சாட்சிகள், அவர்களைப் போலவே நன்றியோடு இருக்கிறார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அந்தக் காலத்தில் இருந்த சாட்சிகள், நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருந்ததை நினைத்து சோர்ந்துபோகாமல் தொடர்ந்து பக்திவைராக்கியத்தைக் காட்டியதாக மெக்சிகோ கிளை அலுவலகத்தின் 1949-ஆம் வருஷ அறிக்கை சொன்னது. ஒவ்வொரு மாநாடு முடிந்த பிறகும், “அதைப் பற்றியே அவர்கள் ரொம்ப நாட்களுக்குப் பேசிக்கொண்டிருப்பார்கள். ‘நம்முடைய அடுத்த மாநாடு எப்போது வரும்?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள்” என்றும் அந்த அறிக்கை சொன்னது.—மத்திய அமெரிக்காவின் வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.

^ பாரா. 9 இந்த மாநாட்டினால் யெகோவாவின் சாட்சிகள் மெக்சிகோவில் பிரபலமானார்கள் என்று 1944 இயர்புக் சொன்னது.

^ பாரா. 14 2016-ல், 22,62,646 பேர் நினைவுநாள் ஆசரிப்பில் கலந்துகொண்டார்கள்.