Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம் வரலாற்றுச் சுவடுகள்

போர்ச்சுகலில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ஆரம்பக் கால விதைகள் எப்படி விதைக்கப்பட்டன?

போர்ச்சுகலில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ஆரம்பக் கால விதைகள் எப்படி விதைக்கப்பட்டன?

அட்லாண்டிக் பெருங்கடலின் அலைகள் மோத மோத, ஒரு கப்பல் ஐரோப்பாவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஜார்ஜ் யங் அதில் பயணித்துக்கொண்டிருக்கிறார். பிரேசிலில் கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்ததில் தனக்குக் கிடைத்த திருப்தியான அனுபவங்களை அவர் தன் மனதில் அசைபோடுகிறார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இப்போது, தன்னுடைய புதிய நியமிப்பின் மீது, அதாவது ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் பரந்து விரிந்து கிடக்கும் நியமிக்கப்படாத பகுதிகளில் செய்யப்போகும் சேவையின் மீது, கவனத்தை ஊன்ற வைக்கிறார். அங்கே போய்ச் சேர்ந்ததும், சகோதரர் ஜே. எஃப். ரதர்ஃபர்டின் பைபிள் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யலாம்... 3,00,000 துண்டுப்பிரதிகளை விநியோகம் செய்யலாம்... என்ற நம்பிக்கையோடு பயணித்துக்கொண்டிருக்கிறார்.

கடல் கடந்து போய் ஊழியம் செய்வதற்காக, சகோதரர் யங் பல பயணங்கள் செய்தார்

1925-ல் லிஸ்பனுக்குப் போய்ச் சேர்ந்ததும், அங்கே நிலவிய கொந்தளிப்பான சூழலைக் கவனிக்கிறார். 1910-ல் நடந்த புரட்சி, மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவந்திருந்தது; கத்தோலிக்க சர்ச்சின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. மக்களுக்கு அதிக சுதந்திரம் கிடைத்திருந்தது; ஆனாலும் நாடு முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவியது.

சகோதரர் ரதர்ஃபர்ட் கொடுக்கப்போகும் பேச்சுக்கான ஏற்பாடுகளை சகோதரர் யங் செய்துகொண்டிருந்தார். புரட்சிகரமான ஒரு கூட்டம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருந்ததால், ராணுவ சட்டத்தை அப்போது அரசாங்கம் அமல்படுத்தியிருந்தது. சகோதரர் யங் கடும் எதிர்ப்பைச் சந்திப்பார் என்று பிரிட்டிஷ் மற்றும் அயல்நாட்டு பைபிள் சங்கத்தின் செயலாளர் அவரை எச்சரித்தார். ஆனால், சகோதரர் யங் தைரியமாக ஏற்பாடுகளைச் செய்தார்; கெமொஷ் உயர்நிலைப் பள்ளியில் இருந்த உடற்பயிற்சி கூடத்தில் கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டார். அனுமதியும் கிடைத்தது!

கடைசியாக மே 13 வந்தது! அதுதான் சகோதரர் ரதர்ஃபர்ட் பேச்சுக் கொடுக்க வேண்டிய நாள். எங்கு பார்த்தாலும் பயங்கர எதிர்பார்ப்பு நிலவியது. “பூமியில் என்றென்றும் வாழ்வது எப்படி?” என்பதுதான் அவருடைய பேச்சின் தலைப்பு. அந்த தலைப்பைச் சுமந்துகொண்டிருந்த சுவரொட்டிகள் அங்கிருந்த கட்டிடங்களை அலங்கரித்தன; செய்தித்தாள்களும் அந்தப் பேச்சை விளம்பரப்படுத்தின. மத எதிரிகள் உடனடியாக களத்தில் குதித்தார்கள். தங்கள் செய்தித்தாளைப் படிக்கும் வாசகர்களை எச்சரிப்பதற்காக, எச்சரிப்பு அடங்கிய ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தார்கள். புதிதாக வந்து சேர்ந்திருக்கும் “பொய்த் தீர்க்கதரிசிகள்” சொல்வதைக் கேட்க வேண்டாம் என்று அதில் சொல்லப்பட்டிருந்தது. எதிரிகள் அந்த உடற்பயிற்சி கூடத்தின் வாசலில் நின்றுகொண்டு, ஆயிரக்கணக்கான சிற்றேடுகளை விநியோகித்தார்கள். சகோதரர் ரதர்ஃபர்டின் போதனைகளுக்கு எதிரான போதனைகள் அவற்றில் இருந்தன.

இவ்வளவு நடந்தும் அந்தப் பேச்சைக் கேட்க கிட்டத்தட்ட 2,000 பேர் வந்து குவிந்தார்கள்! இடம் போதாததால், கிட்டத்தட்ட அதேயளவு ஆட்கள் அந்த உடற்பயிற்சி கூடத்துக்குள் வர முடியாமல் போனது. பயங்கர ஆர்வத்தோடு இருந்த சிலர், அந்தக் கூடத்தின் பக்கவாட்டில் இருந்த கயிறுகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு, அந்தப் பேச்சைக் கவனித்தார்கள். வேறுசிலர், உடற்பயிற்சி சாதனங்கள்மேல் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள்.

இருந்தாலும், நிலைமை சுமூகமாகப் போகவில்லை. எதிரிகள் கத்தினார்கள், இருக்கைகளை அடித்து நொறுக்கினார்கள். ஆனால், சகோதரர் ரதர்ஃபர்ட் எந்தச் சலனமும் இல்லாமல், தன் பேச்சு எல்லாருக்கும் கேட்க வேண்டும் என்பதற்காக, ஒரு மேஜையின் மேல் ஏறி நின்றார். கிட்டத்தட்ட நடுராத்திரியில் தன் பேச்சை அவர் முடித்தார். அப்போது, ஆர்வம் காட்டிய 1,200 க்கும் அதிகமானவர்கள், பைபிள் பிரசுரங்களைப் பெற்றுக்கொள்வதற்காக, தங்களுடைய பெயர்களையும் விலாசங்களையும் கொடுத்துவிட்டுப் போனார்கள். அடுத்த நாளே, சகோதரர் ரதர்ஃபர்ட் கொடுத்த பேச்சைப் பற்றி ஊ செக்யூல்யூ என்ற செய்தித்தாள் ஒரு கட்டுரை வெளியிட்டது.

செப்டம்பர் 1925-க்குள், போர்ச்சுகல் நாட்டில், காவற்கோபுர பத்திரிகையின் போர்ச்சுகீஸ் மொழி இதழ் பிரசுரிக்கப்பட்டது. (இதற்கு முன்பு, காவற்கோபுர பத்திரிகையின் போர்ச்சுகீஸ் மொழி இதழ் பிரேசில் நாட்டில் பிரசுரிக்கப்பட்டு வந்தது.) பிரேசிலில் இருந்த வெரிசீலியோ ஃபெர்கீசென் என்ற பைபிள் மாணாக்கர், கிட்டத்தட்ட அதேசமயத்தில், போர்ச்சுகல் நாட்டுக்கு குடிமாறுவதற்கான திட்டங்களைப் போட்டுக்கொண்டிருந்தார். கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை அதிகமாகச் செய்வதற்காகத்தான் அவர் இந்த முடிவை எடுத்திருந்தார். பிரேசிலிலிருந்த சிறிய கிளை அலுவலகத்தில் சகோதரர் யங்கோடு சேர்ந்து இவர் வேலை செய்திருக்கிறார். இப்போது, சகோதரர் யங்கோடு சேர்ந்து போர்ச்சுகல் நாட்டில் சேவை செய்வதற்காக, அவரும் அவருடைய மனைவி லிஸியும் பிரேசிலிலிருந்து கிளம்பினார்கள். அவர்கள் சரியான நேரத்தில்தான் போர்ச்சுகல் நாட்டுக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்! ஏனென்றால், சோவியத் யூனியன் உட்பட பல நாடுகளில் ஊழியம் செய்வதற்காக, சகோதரர் யங் போர்ச்சுகலை விட்டுப் போவதற்கான சமயமாக அது இருந்தது.

சகோதரி லிஸிக்கும் சகோதரர் வெரிசீலியோ ஃபெர்கீசென்னுக்கும் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதி சான்றிதழ், 1928

போர்ச்சுகல் நாட்டிலிருந்த ராணுவம், சர்வாதிகார ஆட்சியை அமல்படுத்தியது. அதனால், நம்முடைய வேலைக்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இருந்தாலும், சகோதரர் ஃபெர்கீசென் தைரியமாக போர்ச்சுகலிலேயே தங்கியிருந்தார். பைபிள் மாணாக்கர்களின் சிறிய தொகுதியை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தார்; பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்வதற்குத் தேவையான உற்சாகத்தைத் தந்தார். தன்னுடைய வீட்டில் கூட்டங்களை நடத்துவதற்காக அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அக்டோபர் 1927-ல், அனுமதி கிடைத்தது.

சர்வாதிகார ஆட்சி நடந்த முதல் வருஷத்திலேயே கிட்டத்தட்ட 450 பேர் காவற்கோபுர பத்திரிகைக்குச் சந்தா செய்திருந்தார்கள். அதோடு, துண்டுப்பிரதிகள் மற்றும் சிறுபுத்தகங்கள் மூலம், போர்ச்சுகல் சாம்ராஜ்யத்தின் மூலை முடுக்கெல்லாம் சத்தியம் பரவியது. அதாவது, அங்கோலா, அஸோர்ஸ், கிழக்கு தைமூர், கோவா, மெடீரா, மொசாம்பிக், வெர்ட் முனை ஆகிய ஊர்களில் சத்தியம் பரவியது.

1920-களின் கடைசியில் மான்வெல் டி சில்வா ஸார்டௌன் என்ற சகோதரர் லிஸ்பனுக்கு வந்தார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர் தோட்ட வேலை செய்துவந்தார். பிரேசிலில் இருந்தபோது, சகோதரர் யங்கின் பேச்சைக் கேட்டு, இதுதான் சத்தியம் என்று புரிந்துகொண்டார். பிரசங்க வேலையை அதிகரிக்க சகோதரர் ஃபெர்கீசென்னுக்கு உதவ வேண்டுமென்று ஆசைப்பட்டார். அதனால், கால்பார்ட்டராக (இப்போது பயனியர்) சேவை செய்ய ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில், பைபிள் பிரசுரங்களின் அச்சடிப்பும் வினியோகிப்பும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அதனால், லிஸ்பனில் புதிதாக உருவான சபை நன்றாக வளர்ந்தது.

1934-ல் சகோதரர் மற்றும் சகோதரி ஃபெர்கீசென் பிரேசிலுக்குத் திரும்ப வேண்டியிருந்தது. அந்தச் சமயத்துக்குள், சத்தியத்தின் விதைகள் போர்ச்சுகலில் நன்றாக விதைக்கப்பட்டிருந்தன. ஸ்பானிய உள்நாட்டுப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரால் ஐரோப்பா முழுவதிலும் அமைதியற்ற சூழல் நிலவியபோதிலும், போர்ச்சுகலிலிருந்த கடவுளுடைய மக்கள் ஆன்மீக ரீதியில் உயிரோடுதான் இருந்தார்கள். வேறு வார்த்தைகளில் சொன்னால், நெருப்பு அணைந்த பிறகு திரியில் இருக்கும் கங்குபோல் அவர்கள் இருந்தார்கள். ஆனால் 1947-ல், கிலியட் பள்ளியில் பயிற்சி பெற்ற, முதல் மிஷனரியான ஜான் கூக்கின் வருகைக்குப் பின், அந்தக் கங்கு மறுபடியும் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. எப்படி? ராஜ்ய பிரசங்கிப்பாளர்களின் எண்ணிக்கை மடமடவென அதிகரித்தது. 1962-ல் யெகோவாவின் சாட்சிகளின் வேலைகளுக்கு அரசாங்கம் தடைவிதித்த போதிலும், வளர்ச்சி அதிகமாகிக்கொண்டேதான் போனது. டிசம்பர் 1947-ல் யெகோவாவின் சாட்சிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. அந்தச் சமயத்தில், பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 13,000-த்தைத் தொட்டிருந்தது.

இன்று, போர்ச்சுகலிலும் போர்ச்சுகீஸ் மொழி பேசப்படும் பல தீவுகளிலும், 50,000-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். அஸோர்ஸ் மற்றும் மெடீராவிலும் பிரசங்க வேலை நடக்கிறது. இன்றிருக்கும் பிரஸ்தாபிகளில் சிலர், 1925-ல் சகோதரர் ரதர்ஃபர்ட் கொடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பேச்சைக் கேட்ட சிலருடைய வழியில் வந்த மூன்றாம் சந்ததியைச் சேர்ந்தவர்கள்!

யெகோவாவுக்கும் அன்றிருந்த உண்மையுள்ள சகோதர சகோதரிகளுக்கும் நாம் நன்றியோடு இருக்கிறோம். அவர்கள், ‘கிறிஸ்து இயேசுவின் தொண்டர்களாக கடவுளுடைய நல்ல செய்தியை’ மற்ற தேசத்து மக்களுக்கு தைரியமாக அறிவிப்பதில் முன்னின்று செயல்பட்டார்கள்.—ரோ. 15:15, 16.—போர்ச்சுகலின் வரலாற்றுச் சுவடுகளிலிருந்து.

^ பாரா. 3 மே 15, 2014 காவற்கோபுரம், பக்கம் 31-32-ல் வெளிவந்த ‘அறுவடை வேலை அதிகம் இருக்கிறது’ என்ற கட்டுரையைப் பாருங்கள்.