உங்களுக்குத் தெரியுமா?
மொர்தெகாய் உண்மையிலேயே வாழ்ந்தாரா?
பைபிளில் இருக்கிற எஸ்தர் என்ற புத்தகத்தில், மொர்தெகாய் என்பவர் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். அவர் சிறைபிடிக்கப்பட்ட யூதராக இருந்தார். கி.மு. 5-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில், ‘அகாஸ்வேரு ராஜா ஆட்சி செய்த’ காலத்தில் இவர் பெர்சிய அரண்மனையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அகாஸ்வேரு ராஜாதான் முதலாம் சஷ்டா ராஜா என்று இன்றைக்குப் பொதுவாக நம்பப்படுகிறது. அகாஸ்வேரு ராஜாவைக் கொலை செய்வதற்கு வாயிற்காவலர்கள் இரண்டு பேர் திட்டம் போட்டார்கள். ஆனால், மொர்தெகாய் அதைத் தடுத்து நிறுத்தினார். அதற்கு நன்றி காட்டுவதற்காக, மொர்தெகாயை எல்லார் முன்பும் கௌரவப்படுத்த வேண்டும் என்று ராஜா சொன்னார். அதற்குப் பிறகு, ஆமான் என்ற ஒருவன் பெர்சிய சாம்ராஜ்யத்தில் இருந்த எல்லா யூதர்களையும் தீர்த்துக்கட்ட திட்டம் போட்டான். ஆனால், அவனுடைய சதித்திட்டம் அம்பலமானது. அவனுக்கு மரண தண்டனை கிடைத்தது. அதற்கு பிறகு ராஜா, மொர்தெகாயைப் பிரதம மந்திரி ஆக்கினார். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி யூதர்கள் எல்லாரையும் காப்பாற்றுவதற்காக மொர்தெகாய் ஒரு ஆணையைப் போட்டார்.—எஸ்தர் 1:1; 2:5, 21-23; 8:1, 2; 9:16.
20-வது நூற்றாண்டின் ஆரம்பத்தில், எஸ்தர் புத்தகம் வெறும் கட்டுக்கதை என்றும், மொர்தெகாய் என்பவர் வெறும் கற்பனைக் கதாபாத்திரம் என்றும் சில சரித்திர வல்லுநர்கள் சொன்னார்கள். ஆனால் 1941-ல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சில புதைப்பொருள்களைக் கண்டுபிடித்தார்கள். பைபிளில் சொல்லியிருக்கிற மொர்தெகாய் உண்மையிலேயே வாழ்ந்தார் என்பதற்கு அவையெல்லாம் ஆதாரமாக இருக்கலாம். அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்?
ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெர்சிய களிமண் பலகையைக் கண்டுபிடித்தார்கள். அதில் மார்டுக்கா என்ற ஒருவருடைய பெயர் இருக்கிறது (தமிழில், மொர்தெகாய்). அவர் சூசான் நகரத்தில் நிர்வாகியாக வேலை பார்த்தார். அநேகமாக, அவர் கணக்கராக இருந்திருக்கலாம். அந்தக் களிமண் பலகை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில், மொர்தெகாயின் பெயர் “பைபிளைத் தவிர இந்தப் பலகையில் மட்டும்தான் வந்திருக்கிறது” என்று கிழக்கு ஆசிய சரித்திர வல்லுநர் ஆர்த்தர் உங்குநாட் சொன்னார்.
உங்குநாட் கொடுத்த அறிக்கைக்குப் பிறகு, வல்லுநர்கள் இன்னும் ஆயிரக்கணக்கான பெர்சிய களிமண் பலகைகளை மொழிபெயர்த்தார்கள். அவற்றில் சில, பெர்ஸிபாலிஸ் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் பலகைகள். அவை நகரத்தின் மதில்களுக்குப் பக்கத்தில் இருந்த கஜானாவின் இடிபாடுகளுக்குள்ளே இருந்தன. முதலாம் சஷ்டா ராஜாவின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த இந்தப் பலகைகளெல்லாம் ஏலாமியர்களுடைய மொழியில் இருந்தன. எஸ்தர் புத்தகத்தில் வரும் நிறையப் பெயர்கள் இந்தப் பலகைகளிலும் இருந்தன. a
நிறைய பெர்ஸிபாலிஸ் பலகைகளில் மார்டுக்கா என்ற பெயர் இருக்கிறது. முதலாம் சஷ்டா ராஜாவின் ஆட்சிக் காலத்தில், சூசான் அரண்மனையில் ராஜாவின் செயலாளராக இவர் வேலை பார்த்ததாக அவை சொல்கின்றன. மார்டுக்கா மொழிபெயர்ப்பாளராக இருந்ததாக ஒரு பலகை சொல்கிறது. மொர்தெகாயைப் பற்றி பைபிள் சொல்கிற விஷயத்தோடு இவை ஒத்துப்போகின்றன. மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவுடைய அரண்மனையில் அதிகாரியாக வேலை பார்த்ததாகவும், குறைந்தது இரண்டு மொழிகளை பேசியதாகவும் பைபிள் சொல்கிறது. மொர்தெகாய் சூசான் அரண்மனை வாசலில்தான் பொதுவாக உட்கார்ந்துக்கொண்டிருந்தார் என்றும் பைபிள் சொல்கிறது. (எஸ்தர் 2:19, 21; 3:3) அரண்மனை வாசல் என்பது ஒரு பெரிய கட்டிடம். அங்குதான் அரண்மனை அதிகாரிகள் எல்லாரும் வேலை பார்த்தார்கள்.
களிமண் பலகைகளில் சொல்லப்பட்டிருக்கிற மார்டுக்காக்கும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற மொர்தெகாய்க்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்கள் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் வாழ்ந்தார்கள். அதேபோல், ஒரே இடத்தில் அவர்கள் அதிகாரிகளாக வேலை பார்த்தார்கள். இந்த எல்லா ஒற்றுமைகளையும் வைத்துப் பார்க்கும்போது, மார்டுக்காவும் மொர்தெகாயும் ஒரே ஆளாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பது புரிகிறது.
a 1992-ல் பேராசிரியர் எட்வின். எம். யமாவுச்சி, பெர்ஸிபாலிஸ் பலகைகளில் இருந்த பத்துப் பெயர்களை வைத்து ஒரு கட்டுரையை எழுதினார். அந்தப் பெயர்கள் எஸ்தர் புத்தகத்திலும் இருக்கின்றன.