Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய சக்திதான் உறுதிப்படுத்துகிறது

கடவுளுடைய சக்திதான் உறுதிப்படுத்துகிறது

“நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்பதை அந்தச் சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது.”—ரோ. 8:16.

பாடல்கள்: 109, 108

1-3 பெந்தெகொஸ்தே நாள் எப்படி ஒரு விசேஷ நாளாக ஆனது, அன்று நடந்த சம்பவங்கள் பைபிள் தீர்க்கதரிசனத்தை எப்படி நிறைவேற்றியது? (ஆரம்பப் படம்)

அது கி.பி. 33-வது வருஷம், பெந்தெகொஸ்தே நாள். ஞாயிற்றுக்கிழமை காலையில், எருசலேமே விழாக் கோலமாக இருக்கிறது. பெந்தெகொஸ்தே பண்டிகையை மக்கள் எல்லாரும் ரொம்ப சந்தோஷமாகக் கொண்டாடுகிறார்கள். இது கோதுமை அறுவடையின் ஆரம்பத்தில் வரும் ஒரு விசேஷ பண்டிகை. அன்று காலை தலைமைக் குரு எப்போதும் போல பலிகளைச் செலுத்தி முடிக்கிறார். அதன்பின் சுமார் 9 மணிக்கு, இரண்டு புளித்த ரொட்டிகளைக் காணிக்கையாகச் செலுத்துகிறார். அந்த ரொட்டிகள், முதல் முதலில் விளைந்த தானியத்திலிருந்து செய்யப்பட்டது. அதை தலைமைக் குரு வலதுபக்கமாகவும் இடதுபக்கமாகவும் அசைத்து யெகோவாவுக்கு பலியாகச் செலுத்துகிறார்.—லேவி. 23:15-20.

2 இதெல்லாம் ஆலயத்தில் நடந்துகொண்டிருந்தாலும் இதைவிட ஒரு முக்கியமான சம்பவம் அப்போது நடக்கவிருந்தது. அது ஆலயத்தில் அல்ல, ஒரு வீட்டின் மாடி அறையில் நடக்கவிருந்தது. கிட்டத்தட்ட 120 சீடர்கள் அந்த மாடி அறையில் “ஒருமனதாக ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள்.” (அப். 1:13-15) அங்கு நடந்த சம்பவங்கள், தலைமைக் குரு செலுத்திய காணிக்கையோடு சம்பந்தப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல, கிட்டத்தட்ட 800 வருஷங்களுக்கு முன்பு யோவேல் தீர்க்கதரிசி சொன்னது அப்போது நிறைவேறியது. (யோவே. 2:28-32; அப். 2:16-21) அந்த மாடி அறையில் என்ன நடந்தது? அது ஏன் அவ்வளவு முக்கியமானதாக இருந்தது?

3 அப்போஸ்தலர் 2:2-4-ஐ வாசியுங்கள். கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று அந்த மாடி அறையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு கடவுள் தம்முடைய சக்தியைக் கொடுத்தார். (அப். 1:8) அந்தச் சமயத்தில் அவர்கள் பார்த்த விஷயங்களையும் கேட்ட விஷயங்களையும் பற்றி எல்லாருக்கும் சொல்ல ஆரம்பித்தார்கள். உடனே அவர்களைச் சுற்றி மக்கள் கூட்டமாகக் கூடினார்கள். அப்போது பேதுரு, அங்கு நடந்த மிகப் பெரிய அற்புதத்தைப் பற்றியும் அது ஏன் ரொம்ப முக்கியம் என்பதைப் பற்றியும் அவர்களுக்கு விளக்கினார். பிறகு “மனந்திரும்புங்கள், உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறுங்கள், அப்போது கடவுளுடைய சக்தியை அன்பளிப்பாகப் பெறுவீர்கள்” என்று அவர்களிடம் சொன்னார். அன்றே சுமார் 3,000 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அவர்களுக்கும் கடவுளுடைய சக்தி கிடைத்தது.—அப். 2:37, 38, 41.

4. (அ) பெந்தெகொஸ்தே நாளில் நடந்த சம்பவங்கள் நமக்கு ஏன் முக்கியமாக இருக்கிறது? (ஆ) பல வருடங்களுக்கு முன்பு அதேநாளில் என்ன முக்கியமான சம்பவம் நடந்திருக்கலாம்? (பின்குறிப்பைப் பாருங்கள்.)

4 தலைமைக் குருவும் அவர் செலுத்திய ரொட்டிகளும் எதற்கு அடையாளமாக இருக்கிறது? தலைமைக் குரு இயேசுவை அடையாளப்படுத்துகிறார். அவர் செலுத்திய இரண்டு ரொட்டிகள், பரலோக நம்பிக்கையுள்ள சீடர்களை அடையாளப்படுத்துகிறது. அவர்களையும் அதற்குபின் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களையும் பாவமுள்ள மனிதர்களிலிருந்துதான் யெகோவா தேர்ந்தெடுத்தார். அவர்களை ‘முதற்கனிகள்’ என்று பைபிள் சொல்கிறது. (யாக். 1:18, அடிக்குறிப்பு) யெகோவா அவர்களை மகன்களாக ஏற்றுக்கொண்டார். அவருடைய அரசாங்கத்தில் இயேசுவோடு சேர்ந்து அவர்கள் ஆட்சி செய்வார்கள். (1 பே. 2:9) அவருக்குக் கீழ்ப்படியும் எல்லா மக்களையும் அந்த அரசாங்கத்தில் சந்தோஷமாக வாழ வைப்பார். நமக்கு பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, நம் எல்லாருக்குமே கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாள் ஒரு முக்கிய நாளாக இருக்கிறது. [1]—பின்குறிப்பு.

ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும்போது என்ன நடக்கிறது?

5. எல்லா கிறிஸ்தவர்களையும் கடவுளுடைய சக்தி ஒரே விதத்தில் தேர்ந்தெடுக்கவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?

5 மாடி அறையில் நடந்த சம்பவத்தை அந்தச் சீடர்களால் மறக்கவே முடியாது. அவர்கள் தலையில் நெருப்புப் போன்ற நாவுகள் தெரிந்தன. யெகோவா அவர்களுக்குச் சக்தியைக் கொடுத்ததால் அவர்கள் வேறு மொழிகளில் பேசினார்கள். கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதில் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. (அப். 2:6-12) இதேபோன்ற அற்புதம் பரலோக நம்பிக்கையுள்ள எல்லா கிறிஸ்தவர்களுக்கும் நடக்கவில்லை. உதாரணத்துக்கு, அதேநாளில் சுமார் 3,000 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அப்போது அவர்களுடைய தலையில் நெருப்புப் போன்ற நாவுகள் எதுவும் தெரிந்ததாக பைபிள் சொல்லவில்லை. ஆனால் அவர்கள் ஞானஸ்நானம் எடுத்த சமயத்திலேயே அவர்களுக்குக் கடவுளுடைய சக்தி கிடைத்தது. (அப். 2:38) சமாரியர்களுக்கு, ஞானஸ்நானம் எடுத்த பிறகுதான் கடவுளுடைய சக்தி கிடைத்தது. (அப். 8:14-17) ஆனால் கொர்நேலியுவுக்கும் அவருடைய வீட்டாருக்கும், ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே கடவுளுடைய சக்தி கிடைத்தது.—அப். 10:44-48.

6. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன கிடைக்கிறது என்று பவுல் சொன்னார், அதனால் அவர்களுக்கு என்ன நம்பிக்கை கிடைக்கிறது?

6 எல்லாரையும் கடவுளுடைய சக்தி ஒரே விதத்தில் தேர்ந்தெடுக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டதை சிலர் உடனடியாக தெரிந்துகொண்டார்கள், சிலர் படிப்படியாகத்தான் தெரிந்துகொண்டார்கள். அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது என்ன கிடைக்கிறது என்பதைப் பற்றி பவுல் இப்படி விளக்கினார்: “வாக்குறுதி அளிக்கப்பட்ட கடவுளுடைய சக்தியினால் அவர் மூலம் நீங்கள் முத்திரையிடப்பட்டீர்கள். . . . தங்களுடைய ஆஸ்தியைப் பெறுவார்கள் என்பதற்கு அவருடைய சக்தியே உத்தரவாதமாக இருக்கிறது.” (எபே. 1:13, 14) யெகோவா ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர் பரலோகத்துக்குப் போவார் என்ற ‘உத்திரவாதத்தை’ கடவுளுடைய சக்தி அவருக்குக் கொடுக்கிறது. இதனால், பரலோகத்தில் சாவில்லாமல் வாழும் உறுதியான நம்பிக்கை அவருக்குக் கிடைக்கிறது.2 கொரிந்தியர் 1:21, 22; 5:5-ஐ வாசியுங்கள்.

7. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் தங்கள் பரிசைப் பெற என்ன செய்ய வேண்டும்?

7 ஒரு கிறிஸ்தவர் கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நிச்சயம் பரலோகத்துக்குப் போவார் என்று அர்த்தமில்லை. அவர் கடைசிவரை உண்மையாக இருந்தால்தான் அந்தப் பரிசைப் பெறுவார். இதை பேதுரு இப்படி விளக்கினார்: “சகோதரர்களே, நீங்கள் அழைக்கப்பட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டும் இருப்பதால், கடைசிவரை அதற்குத் தகுதியுள்ளவர்களாக இருப்பதற்கு உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்; நீங்கள் இவற்றைச் செய்து வந்தால் ஒருபோதும் தகுதியற்றவர்களாகிவிட மாட்டீர்கள். சொல்லப்போனால், நம்முடைய எஜமானரும் மீட்பருமான இயேசு கிறிஸ்துவின் முடிவில்லா அரசாங்கத்திற்குள் போவதற்குத் தாராளமாக அனுமதிக்கப்படுவீர்கள்.” (2 பே. 1:10, 11) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் கடைசிவரை உண்மையாக இருப்பதற்கு கடினமாக முயற்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், அவர்களுக்கு அந்தப் பரிசு கிடைக்காது.—எபி. 3:1; வெளி. 2:10.

ஒருவருக்கு எப்படித் தெரியும்?

8, 9. (அ) ஒருவர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்வது நிறையப் பேருக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்? (ஆ) ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பது அவருக்கு எப்படித் தெரியும்?

8 பரலோகத்தில் வாழ கடவுள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த நபர் எப்படி உணர்வார் என்பதைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கலாம். ஏனென்றால், நம்மில் நிறையப் பேருக்கு அந்த அனுபவம் இல்லை. அதுமட்டுமல்ல, கடவுள் மனிதர்களை பரலோகத்தில் வாழ்வதற்காக அல்ல பூமியில் வாழ்வதற்காகவே படைத்திருக்கிறார். (ஆதி. 1:28; சங். 37:29) பரலோகத்தில் ராஜாவாகவும் குருமாராகவும் இருக்க சிலரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். யெகோவா அவர்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்களுடைய யோசனைகள், ஆசைகள் எல்லாமே மாறிவிடும். அவர்கள் பரலோகத்தில் வாழவே விரும்புவார்கள்.எபேசியர் 1:18-ஐ வாசியுங்கள்.

9 ஆனால், ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்துகொள்வார்? ரோமில் இருந்த ‘பரிசுத்தவான்களிடம்,’ அதாவது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிடம், பவுல் சொன்னதைக் கவனியுங்கள்: “கடவுளுடைய சக்தி நம்மை அடிமைத்தனத்திற்கு உட்படுத்தி நம்மைப் பயப்படச் செய்வதில்லை; மாறாக, கடவுளுடைய மகன்களாகத் தத்தெடுக்கப்படுவதற்கு வழிநடத்தி, அவரை ‘அபா,’ அதாவது ‘அப்பா!’ என்று அழைக்க வைக்கிறது. நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்பதை அந்தச் சக்தி நம் மனதில் ஊர்ஜிதப்படுத்துகிறது.” (ரோ. 1:1, 2; 8:15, 16) ஒருவர் இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்வார் என்பதை யெகோவா தம்முடைய சக்தியின் மூலம் அவருக்கு உறுதிப்படுத்துகிறார்.—1 தெ. 2:12.

10. தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு வேறொருவர் வந்து அதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை 1 யோவான் 2:27-லிருந்து எப்படிச் சொல்லலாம்?

10 யெகோவா ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை வேறொருவர் வந்து அந்த நபருக்குச் சொல்ல வேண்டியதில்லை. அதை யெகோவாவே அவருக்கு புரியவைப்பார். பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களிடம் அப்போஸ்தலன் யோவான் இப்படிச் சொன்னார்: “பரிசுத்தமானவரால் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் எல்லாரும் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள். . . . அவர் தமது சக்தியால் உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்; அந்தச் சக்தி உங்களில் நிலைத்திருக்கிறது; அதனால், யாருமே உங்களுக்குக் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை; அவரிடமிருந்து வருகிற அந்தச் சக்தி உண்மையானது, பொய்யல்ல, அது உங்களுக்கு எல்லா விஷயங்களைக் குறித்தும் கற்பிக்கிறது; ஆகையால், கற்பிக்கப்பட்டபடியே அவரோடு நிலைத்திருங்கள்.” (1 யோ. 2:20, 27) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களும் மற்றவர்களைப் போல பைபிள் போதனைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை வேறொருவர் மூலம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் வலிமைவாய்ந்த தம்முடைய சக்தி மூலமாக யெகோவாவே அந்த நபருக்கு தெளிவாகப் புரியவைப்பார்.

ஒருவர் எப்படி ‘மறுபடியும் பிறக்கிறார்’?

11, 12. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எப்படி யோசிக்கலாம், ஆனால் எதைப் பற்றி அவருக்கு சந்தேகம் இருக்காது?

11 கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்படும்போது அவர்களிடம் நிறைய மாற்றங்கள் நடக்கின்றன. அதனால்தான், அவர்கள் ‘மறுபடியும் பிறக்கிறார்கள்’ என்று இயேசு சொன்னார். (யோவா. 3:3, 5) அதை இப்படி விளக்கினார்: “ஒருவன் மறுபடியும் பிறக்க வேண்டுமென நான் உங்களிடம் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டாம். காற்று தனக்கு விருப்பமான இடத்தில் வீசுகிறது, அதன் ஓசையை நீங்கள் கேட்கிறீர்கள்; ஆனால் அது எங்கிருந்து வருகிறது, எங்கு போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. கடவுளுடைய சக்தியினால் பிறந்திருக்கிற எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள்.” (யோவா. 3:7, 8) யெகோவா ஒருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அந்த நபர் எப்படி உணர்வார் என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. [2]—பின்குறிப்பு.

12 கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், ‘யெகோவா என்னை ஏன் தேர்ந்தெடுத்தார், எனக்கு பதிலா வேற யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாமே’ என்று யோசிக்கலாம். ‘எனக்கு என்ன தகுதி இருக்கு?’ என்றும்கூட யோசிக்கலாம். ஆனால், யெகோவா தன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் மட்டும் அவருக்கு இருக்காது. அதற்கு பதிலாக யெகோவா தன்னை தேர்ந்தெடுத்ததற்காக ரொம்ப சந்தோஷப்படுவார், அவருக்கு ரொம்ப நன்றியோடு இருப்பார். பேதுருவைப் போலவே அவரும் சந்தோஷத்தில் இப்படிச் சொல்வார்: “நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தகப்பனுமானவர் போற்றப்படுவாராக; அவர் இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழுப்பியதன் மூலம் தமது மகா இரக்கத்தின்படி எங்களுக்குப் புதிய பிறப்பை அளித்தார்; இதனால் அசைக்க முடியாத நம்பிக்கையை, அழியாத, மாசில்லாத, மறையாத ஆஸ்தியை, நாங்கள் பெற்றோம். அந்த ஆஸ்தி உங்களுக்காகவும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது.” (1 பே. 1:3, 4) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் இந்த வசனத்தை வாசிக்கும்போது யெகோவாவே அவர்களிடம் நேரடியாக பேசுவது போல் உணர்வார்கள்.

13. ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும்போது அவர் யோசிக்கும் விதம் எப்படி மாறுகிறது, அப்படி மாறுவதற்கு என்ன காரணம்?

13 இந்தக் கிறிஸ்தவர்களை யெகோவா தேர்ந்தெடுப்பதற்கு முன்பு அவர்களுக்கு பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தது. பூமியில் இருக்கும் கெட்ட விஷயங்களுக்கு எல்லாம் யெகோவா முடிவு கொண்டுவர போவதையும், இந்தப் பூமியை அழகிய தோட்டமாக மாற்றப் போவதையும் பார்க்க அவர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். ஒருவேளை அவர்களுடைய குடும்பத்தாரோ நெருங்கிய நண்பரோ திரும்பவும் உயிரோடு வருவதைப் பார்க்க ஆர்வமாக இருந்திருப்பார்கள். சொந்தமாக வீடு கட்டவும், செடிகொடிகளை நடவும், அதில் வரும் பழங்களைச் சாப்பிடவும் ஆசையாக இருந்திருப்பார்கள். (ஏசா. 65:21-23) ஆனால், யெகோவா அவர்களைத் தேர்ந்தெடுத்த பிறகு அவர்கள் யோசிக்கும் விதமே மாறுகிறது. ஏன்? பூமியில் நிறைய பிரச்சினைகளை அனுபவித்ததால் மனவேதனையில் அப்படி யோசிக்கிறார்களா? ஒருவேளை, இந்த பூமியிலேயே நிரந்தரமாக வாழ்வது சலிப்பாக இருக்கும் என்பதால் திடீரென்று அப்படி நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்களா? அல்லது, பரலோகத்தில் வாழ வேண்டும் என்ற ஆசையில் அப்படி யோசிக்கிறார்களா? இல்லவே இல்லை. யெகோவாதான் அவர்களைப் பரலோகத்தில் வாழ தேர்ந்தெடுத்திருக்கிறார். அவருடைய சக்தியைப் பயன்படுத்தி அவர்களுடைய யோசனைகளையும் ஆசைகளையும் அவர்தான் மாற்றியிருக்கிறார்.

14. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் பூமியில் வாழ்வதைப் பற்றி எப்படி உணர்கிறார்கள்?

14 பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள், சீக்கிரமாகச் சாகவேண்டும் என்று நினைக்கிறார்களா? அவர்கள் எப்படி யோசிக்கிறார்கள் என்று பவுல் விளக்கினார். மனித உடலை கூடாரத்துக்கு ஒப்பிட்டு அவர் இப்படி சொன்னார்: “இந்தக் கூடாரத்திலுள்ள நாம் மனபாரத்தின் காரணமாகக் குமுறுகிறோம்; ஏனென்றால், இதைக் களைந்துபோட நாம் விரும்புவதில்லை, மற்றொன்றை அணிந்துகொள்ளவே விரும்புகிறோம்; சாவுக்குரிய ஒன்றுக்குப் பதிலாக வாழ்வுக்குரிய ஒன்றையே பெற விரும்புகிறோம்.” (2 கொ. 5:4) அப்படியென்றால், சீக்கிரமாகச் சாகவேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும், குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் சேர்ந்து வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறார்கள். இதையெல்லாம் அவர்கள் செய்தாலும், எதிர்காலத்தில் கடவுள் கொடுக்கப்போகும் பரிசை மட்டும் அவர்கள் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கிறார்கள்.—1 கொ. 15:53; 2 பே. 1:4; 1 யோ. 3:2, 3; வெளி. 20:6.

உங்களை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறாரா?

15. ஒருவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று எதை வைத்து சொல்ல முடியாது?

15 பரலோகத்தில் வாழ யெகோவா உங்களைத் தேர்ந்தெடுத்திருப்பதாக நினைக்கிறீர்களா? அப்படியென்றால், இந்த முக்கியமான கேள்விகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: ‘நீங்க ரொம்ப மும்முரமாக ஊழியம் செய்றீங்களா? பைபிளையும் “கடவுளுடைய ஆழமான காரியங்களையும்” பத்தி படிக்கிறது உங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கா? (1 கொ. 2:10) ஊழியத்துல யெகோவா உங்களுக்கு நிறைய பலன்களை கொடுத்திருக்கிறாரா? யெகோவாவுக்கு பிடிச்சதை செய்யணுங்கிற ஆசை உங்களுக்குள்ள கொழுந்துவிட்டு எரியுதா? ஜனங்களை நீங்க அதிகமா நேசிக்கிறதுனால அவங்களும் யெகோவாவுக்கு சேவை செய்ய உதவி செய்றீங்களா? யெகோவா உங்க வாழ்க்கையில பல அற்புதமான விஷயங்களை செஞ்சதை பார்த்திருக்கீங்களா?’ இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் நீங்கள் ‘ஆம்’ என்று பதில் சொல்லிவிட்டால், யெகோவா உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று அர்த்தமில்லை. ஏனென்றால், பரலோகத்தில் வாழ போகிறவர்களும் சரி, பூமியில் வாழ போகிறவர்களும் சரி, எல்லாருமே இப்படி யோசிக்கலாம். யெகோவா தம் சக்தியை எல்லாருக்குமே ஒரே மாதிரிதான் கொடுக்கிறார். ‘யெகோவா என்னை தேர்ந்தெடுத்திருப்பாரா’ என்று நீங்கள் யோசித்தாலே உங்களுக்கு பரலோக நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம். ஏனென்றால், பரலோக நம்பிக்கை இருப்பவர்களுக்கு அதைப் பற்றி துளியும் சந்தேகம் இருக்காது.

16. யெகோவாவுடைய சக்தி கிடைத்த எல்லாருமே பரலோகத்துக்குப் போகவில்லை என்று எப்படிச் சொல்லலாம்?

16 நிறையப் பேருக்கு யெகோவாவுடைய சக்தி கிடைத்தாலும் அவர்கள் எல்லாருமே பரலோகத்துக்குப் போகவில்லை என்று பைபிள் சொல்கிறது. அவர்களில் ஒருவர்தான் யோவான் ஸ்நானகன். மனிதராகப் பிறந்தவர்களில் அவரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை என்று இயேசு சொன்னார். இருந்தாலும், அவர் பரலோகத்தில் ராஜாவாக இருப்பார் என்று அவர் சொல்லவில்லை. (மத். 11:10, 11) தாவீதுக்கும் யெகோவா தம்முடைய சக்தியை கொடுத்தார். (1 சா. 16:13) தம்மைப் பற்றிய ஆழமான விஷயங்களைப் புரிந்துகொள்ளவும் பைபிளில் சில பகுதிகளை எழுதவும் அந்தச் சக்தி தாவீதுக்கு உதவியது. (மாற். 12:36) இருந்தாலும் ‘தாவீது பரலோகத்திற்கு போகவில்லை’ என்று பேதுரு சொன்னார். (அப். 2:34) பல அற்புதமான காரியங்களைச் செய்ய யெகோவா அவர்களுக்குச் சக்தி கொடுத்தாலும் அவர்களைப் பரலோகத்தில் வாழ தேர்ந்தெடுக்கவில்லை. அதற்காக அவர்களுக்குப் பரலோகத்தில் வாழ தகுதியில்லை என்று அர்த்தமா? இல்லவே இல்லை. யெகோவா அவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்பி, பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ வைக்கப்போகிறார்.—யோவா. 5:28, 29; அப். 24:15.

17, 18. (அ) இன்று கடவுளுடைய ஊழியர்களில் நிறையப் பேருக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது? (ஆ) அடுத்த கட்டுரையில் எதை தெரிந்துகொள்ள போகிறோம்?

17 இன்று கடவுளுடைய ஊழியர்களில் நிறைய பேர் பரலோகத்துக்குப் போக மாட்டார்கள். ஆபிரகாம், தாவீது, யோவான் ஸ்நானகன் போன்ற நிறையப் பேர் பூமியில் கடவுளுடைய ஆட்சியில் வாழத்தான் ஆசையாக காத்துக்கொண்டிருந்தார்கள். (எபி. 11:10) நாம் வாழும் இந்தக் கடைசி காலத்தில் 1,44,000 பேரில் கொஞ்சம் பேர்தான் பூமியில் இருக்கிறார்கள். (வெளி. 12:17) மற்ற எல்லாரும் ஏற்கெனவே பரலோகத்துக்குப் போய்விட்டார்கள்.

18 ஆனால் ஒருவர் தனக்கு பரலோக நம்பிக்கை இருக்கிறது என்று சொன்னால், அவரைப் பற்றி நாம் என்ன நினைக்க வேண்டும்? சபையில் இருக்கிற ஒருவர் நினைவுநாள் சமயத்தில் ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிட ஆரம்பித்தால் அவரிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனால் அதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டுமா? இந்தக் கேள்விகளுக்கு அடுத்த கட்டுரையில் பதில் தெரிந்துகொள்வோம்.

^ [1] (பாரா 4) பெந்தெகொஸ்தே பண்டிகை கொண்டாடப்பட்ட நாளும் கி.மு. 1513-ல் மோசேக்கு யெகோவா திருச்சட்டத்தைக் கொடுத்த நாளும் ஒன்றாக இருக்கலாம். (யாத். 19:1) பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை இயேசு புதிய ஒப்பந்தத்திற்குள் கொண்டுவந்த அதேநாளில் இஸ்ரவேல் மக்களை மோசே திருச்சட்ட ஒப்பந்தத்திற்குள் கொண்டுவந்திருக்கலாம்.

^ [2] (பாரா 11) மறுபடியும் பிறப்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள ஏப்ரல் 1, 2009 ஆங்கில காவற்கோபுரத்தை பாருங்கள்.