உதவிக்கரம் நீட்டுபவர்களுக்கு ஆசீர்வாதம்!
இன்று நிறைய பேருக்கு சாப்பாடு இல்லை, குடியிருப்பதற்கு வீடு இல்லை. இன்னும் சிலருக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு உதவ நாம் முயற்சி செய்யும்போது இறைவனுடைய ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும். எப்படிச் சொல்கிறோம்?
இறைவேதம் என்ன சொல்கிறது?
“ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.”—நீதிமொழிகள் 19:17.
கஷ்டப்படுகிறவர்களுக்கு எப்படி உதவலாம்?
இயேசு சொன்ன ஒரு கதையில், கொள்ளைக்காரர்கள் ஒரு மனுஷனை அடித்துப் போட்டார்கள். அவன் சாகிற நிலையில் கிடந்தான். (லூக்கா 10:29-37) அப்போது, அந்த வழியாகப் போன ஒருவர் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவனை நன்றாகக் கவனித்துக்கொண்டார். இத்தனைக்கும் அவர் வேறொரு இனத்தைச் சேர்ந்தவர்.
இரக்கமுள்ள அந்த நபர், அடிபட்ட நபருக்கு வெறுமனே முதலுதவியோ பண உதவியோ மட்டும் செய்யவில்லை. அவனுக்கு ஆறுதலாக இருந்து அந்த கஷ்டத்திலிருந்து வெளிவர உதவி செய்தார்.
இந்தக் கதையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்ய முடியுமோ அப்படியெல்லாம் நாம் உதவி செய்ய வேண்டும். (நீதிமொழிகள் 14:31) சீக்கிரத்தில் வறுமைக்கும் வேதனைக்கும் இறைவன் முடிவு கொண்டுவரப் போவதாக இறைவேதம் சொல்கிறது. ஆனால், இதையெல்லாம் இறைவன் எப்போது செய்வார், எப்படிச் செய்வார் என்ற கேள்வி நம் மனதில் வரலாம். உங்களுடைய அன்பான படைப்பாளர் உங்களுக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கொடுக்கப் போகிறார் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.