வாழ்க்கை சரிதை
‘எல்லாருக்கும் எல்லாமானேன்’
“நீ ஞானஸ்நானம் எடுத்தா, நான் உன்ன விட்டுட்டு போயிடுவேன்” என்று என்னுடைய அப்பா என் அம்மாவை பயமுறுத்தினார். இது 1941-ல் நடந்தது. அவர் அப்படிப் பயமுறுத்தினாலும், என்னுடைய அம்மா ஞானஸ்நானம் எடுக்க முடிவு செய்தார். அதனால், சொன்னபடியே என்னுடைய அப்பா எங்களை விட்டு போய்விட்டார். அப்போது எனக்கு வெறும் 8 வயதுதான்.
இது நடப்பதற்கு முன்பே, பைபிள் சத்தியங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. அந்தச் சமயத்தில், என் அம்மாவுக்கு பைபிள் பிரசுரங்கள் கிடைத்திருந்தன. அந்தப் பிரசுரங்களில் இருந்த விஷயங்கள், குறிப்பாக, அதிலிருந்த உதாரணங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். முக்கியமாக, அதிலிருந்த படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். தான் படித்த பைபிள் விஷயங்களை என் அம்மா என்னிடம் பேசக் கூடாது என்று என்னுடைய அப்பா நினைத்தார். ஆனால், நான் ரொம்ப ஆர்வமாக இருந்ததால், என் அம்மாவிடம் நிறைய கேள்விகள் கேட்பேன். அப்பா வீட்டில் இல்லாதபோது, அம்மா எனக்கு பைபிள் படிப்பு எடுத்தார். அதனால், நானும் என்னுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தேன். 1943-ல் இங்கிலாந்தில் இருந்த பிளாக்பூல் என்ற இடத்தில் ஞானஸ்நானம் எடுத்தேன். அப்போது எனக்கு 10 வயது.
யெகோவாவுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தேன்
அந்தச் சமயத்திலிருந்தே, நானும் என் அம்மாவும் ஒன்றாக சேர்ந்து தவறாமல் ஊழியம் செய்வோம். அந்தக் காலத்தில், ஃபோனோகிராஃபுகளைப் பயன்படுத்தி ஊழியம் செய்தோம். அவை பெரியதாகவும், கனமாகவும் இருந்தன. அவை ஒவ்வொன்றும் 4 1/2 கிலோ எடையுள்ளது. சின்ன பையனாக இருந்த நான், அந்த
ஃபோனோகிராஃபைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு போவதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்!எனக்கு 14 வயதிருக்கும்போது, பயனியர் ஊழியம் செய்ய ஆசைப்பட்டேன். என்னுடைய ஆசையை அம்மாவிடம் சொன்னபோது, அதைப் பற்றி முதலில் வட்டாரக் கண்காணியிடம் பேச சொன்னார். அவரிடம் பேசியபோது, ஊழியம் செய்வதற்கு உதவியாக இருக்கிற ஏதாவது ஒரு திறமையை வளர்த்துக்கொள்ளும்படி அவர் என்னிடம் சொன்னார். நானும் அவர் சொன்னபடி செய்தேன். இரண்டு வருடங்களுக்குப் பிறகு, வேறொரு வட்டாரக் கண்காணியிடம், பயனியர் ஊழியத்தைப் பற்றி பேசினேன். “சரி, செய்ய ஆரம்பி” என்று அவர் சொன்னார்.
அதனால், ஏப்ரல் 1949-ல் நானும் என் அம்மாவும் எங்களுடைய பொருள்களை கொடுத்துவிட்டு, மான்செஸ்டர் பக்கத்தில் இருந்த மிடில்டன் என்ற இடத்துக்குக் குடிமாறி போனோம். அங்குதான், நாங்கள் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். 4 மாதங்களுக்குப் பிறகு, என்னோடு சேர்ந்து பயனியர் ஊழியம் செய்ய ஒரு சகோதரரைத் தேர்ந்தெடுத்தேன். இர்லம் என்ற இடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சபைக்குப் போகும்படி கிளை அலுவலகம் எங்களைக் கேட்டுக்கொண்டது. வேறொரு சபையிலிருந்த ஒரு பயனியர் சகோதரியோடு சேர்ந்து என் அம்மா ஊழியம் செய்தார்.
நானும் என்னோடு சேர்ந்து பயனியர் ஊழியம் செய்த சகோதரரும் சபைக் கூட்டங்களை நடத்தினோம். ஏனென்றால், அந்தப் புதிய சபையில் தகுதியுள்ள சகோதரர்கள் சிலர்தான் இருந்தார்கள். அப்போது, எனக்கு வெறும் 17 வயதுதான். அதற்குப் பிறகு, குறைவான பிரஸ்தாபிகள் இருந்த பக்ஸ்டன் சபைக்கு உதவி செய்வதற்காக அங்கே போனேன். எதிர்காலத்தில் கிடைத்த பொறுப்புகளை நன்றாகச் செய்வதற்கு, இந்த அனுபவங்கள் எனக்கு உதவியாக இருந்தன.
கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்கான விண்ணப்பத்தை 1951-ல் பூர்த்தி செய்தேன். பிறகு, டிசம்பர்
1952-ல், ராணுவத்தில் சேரும்படி என்னைக் கூப்பிட்டார்கள். நான் முழுநேர ஊழியம் செய்துகொண்டிருந்ததால், ராணுவ சேவையிலிருந்து என்னை விலக்கும்படி கேட்டேன். ஆனால், நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளாமல் எனக்கு 6 மாத சிறை தண்டனை கொடுத்தது. சிறையில் இருக்கும்போது, 22-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு வந்தது. ஜூலை 1953-ல் நான் விடுதலையான உடனே, ஜார்ஜிக் என்ற கப்பலில் நியு யார்க்குக்குப் போனேன்.நான் அங்கே போன உடனே, புதிய உலகச் சமுதாயம் (1953-ல் நடந்த) என்ற மாநாட்டில் கலந்துகொண்டேன். பிறகு, ரயில் ஏறி நியு யார்க்கில் இருக்கிற சௌத் லான்சிங் என்ற இடத்துக்குப் போனேன். அங்கேதான் கிலியட் பள்ளி நடந்தது. சிறையிலிருந்து வந்திருந்ததால், என்னிடம் கொஞ்சம் பணம்தான் இருந்தது. ரயிலில் இருந்து இறங்கிய உடனே, பஸ் ஏறி சௌத் லான்சிங்குக்குப் போனேன். டிக்கெட் எடுக்கிற அளவுக்கு என்னிடம் பணம் இல்லாததால், பஸ்சில் இருந்த இன்னொருவரிடம் கடன் வாங்கினேன்.
வெளிநாட்டில் சேவை செய்தேன்
கிலியட் பள்ளியில் எங்களுக்கு அருமையான பயிற்சி கிடைத்தது. ‘எல்லாருக்கும் எல்லாமும் ஆவதற்கு’ அந்தப் பயிற்சி எனக்கு உதவியது. (1 கொ. 9:22) பிலிப்பைன்ஸ் நாட்டில் சேவை செய்ய, என்னையும், பவுல் ப்ரூனையும், ரேமண்ட் லீச்சையும் நியமித்தார்கள். விசா கிடைக்காததால், அங்கே போவதற்கு நாங்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பிறகு, கப்பல் ஏறி நெதர்லாந்தில் இருக்கிற ரோட்டர்டாம் என்ற இடத்துக்குப் போனோம். பின்பு, மத்தியதரைக் கடல், சூயஸ் கால்வாய், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றைக் கடந்து மலேஷியாவுக்குப் போனோம். அங்கிருந்து, ஹாங்காங் என்ற இடத்துக்குப் போனோம். 47 நாட்கள் கடலில் பயணம் செய்த பிறகு, கடைசியில், நவம்பர் 19, 1954-ல் பிலிப்பைன்சில் இருக்கிற மணிலாவுக்குப் போய் சேர்ந்தோம்.
அந்த நாடும், கலாச்சாரமும், மொழியும் எங்களுக்குப் புதிதாக இருந்தது. அதனால், அதற்கு ஏற்றபடி எங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ஆரம்பத்தில், கியூஸன் நகரத்தில் இருந்த சபையில் சேவை செய்வதற்காக எங்கள் மூன்று பேரையும் நியமித்தார்கள். அந்த நகரத்தில் இருந்த நிறைய பேர் ஆங்கிலம் பேசியதால், 6 மாதங்களுக்குப் பிறகும்கூட, டாகலாக் மொழியில் சில வார்த்தைகள் மட்டும்தான் எங்களுக்குத் தெரிந்திருந்தது. அதற்குப் பிறகு எங்களுக்குக் கிடைத்த நியமிப்பு, டாகலாக் மொழியைக் கற்றுக்கொள்ள உதவியது.
அது 1955, மே மாதம்! ஒரு நாள், நாங்கள் ஊழியத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, எனக்கும், சகோதரர் லீச்சுக்கும் சில கடிதங்கள் வந்திருந்தன. நாங்கள் இருவரும் வட்டாரக் கண்காணிகளாக நியமிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கடிதங்களில் சொல்லப்பட்டிருந்தது. அப்போது, எனக்கு வெறும் 22 வயதுதான். ஆனால், ‘எல்லாருக்கும் எல்லாமும் ஆவதற்கு’ புது புது வழிகளைக் கற்றுக்கொள்ள அந்த நியமிப்பு எனக்கு உதவியது.
உதாரணத்துக்கு, வட்டாரக் கண்காணியாக ஆனதற்குப் பிறகு ஒரு கிராமத்திலிருந்த கடைக்கு முன்னால் என்னுடைய முதல் பொதுப்பேச்சைக் கொடுத்தேன். அந்தக் காலத்தில், பிலிப்பைன்சில், பொதுப்பேச்சுகள் பொது இடங்களில்தான் கொடுக்கப்பட்டன. அந்த வட்டாரத்தில் இருந்த சபைகளைச் சந்திக்க போகும்போது, அங்கிருந்த பொதுக் கூடாரங்களிலும், சந்தைவெளிகளிலும், கூடைப்பந்து மைதானங்களிலும், பூங்காக்களிலும் பொது மக்கள் கூடும் மன்றங்களுக்கு முன்னாலும் பேச்சுகளைக் கொடுத்தேன். நிறைய சமயங்களில், தெரு முனைகளில் நின்று பேச்சுகள் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு தடவை, சான் பாப்லோ நகரத்தில் பயங்கர மழை பெய்ததால், அங்கிருந்த சந்தைவெளியில் என்னால் பொதுப்பேச்சு கொடுக்க முடியாமல் போனது. அதனால், ராஜ்ய மன்றத்திலேயே பேச்சு கொடுப்பதாக பொறுப்பிலிருந்த சகோதரர்களிடம் சொன்னேன். கூட்டம் முடிந்த பிறகு, ‘இந்தக் கூட்டம் பொது இடத்துல நடக்கலயே, இருந்தாலும், இதை பொதுக்கூட்டம்னு சொல்ல முடியுமா’ என்று அவர்கள் கேட்டார்கள்.
நான் எப்போதும் சகோதரர்கள் வீட்டில்தான் தங்குவேன். அவர்களுடைய வீடு எளிமையாக இருந்தாலும் சுத்தமாக இருக்கும். நிறைய சமயங்களில், மரத்தால் செய்யப்பட்ட தரையில், ஒரு மெல்லிய பாயில்தான் தூங்குவேன். அங்கே, வீட்டுக்கு வெளியேதான் குளிக்க வேண்டும். அப்படிக் குளிக்கும்போது எல்லாராலும் அதைப் பார்க்க முடியும். அதனால், மற்றவர்களுக்குத் தர்மசங்கடமாகிவிடாதபடி குளிக்க நான் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு இடத்துக்கும் ஜீப்பிலும் பஸ்சிலும் போவேன்; மற்ற தீவுகளுக்குப் போகும்போது, கப்பலில் போவேன். என்னுடைய இத்தனை வருட சேவையில், எனக்காக நான் ஒரு கார்கூட வாங்கவில்லை!
ஊழியத்திலும் சபைக் கூட்டங்களிலும் சகோதரர்கள் டாகலாக் மொழியில் பேசுவதைக் கவனமாகக் கேட்பேன். அதனால், எந்த வகுப்புக்கும் போகாமலேயே என்னால் அந்த மொழியைக் கற்றுக்கொள்ள முடிந்தது. நான் டாகலாக் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சகோதரர்கள் விரும்பினார்கள்; அதற்காக, அவர்கள் எனக்கு நிறைய உதவிகளைச் செய்தார்கள். அவர்கள் என்னிடம் பொறுமையாக இருந்ததற்கும், நான் டாகலாக் மொழியில் தவறாகப் பேசியபோது, அதை எடுத்துச் சொன்னதற்கும் நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.
காலங்கள் போகப் போக, புதிய நியமிப்புகள் கிடைத்ததால் நான் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. 1956-ல் நடந்த தேசிய மாநாட்டுக்கு சகோதரர் நேதன் நார் வந்தார். மீடியாவை தொடர்புகொள்ளும் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. இந்த வேலையில் எனக்கு அனுபவம் இல்லாததால், மற்றவர்கள் எனக்கு உதவி செய்தார்கள். அதற்குப் பிறகு, ஒரு வருடத்திற்குள்ளேயே இன்னொரு தேசிய மாநாடும் நடந்தது. அந்த மாநாட்டுக்கு, தலைமை அலுவலகத்திலிருந்து சகோதரர் ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸ் வந்திருந்தார். அப்போது, நான் மாநாட்டு கண்காணியாகச் சேவை செய்தேன். சகோதரர் ஃப்ரான்ஸ் பொதுப்பேச்சு கொடுத்தபோது, ‘பரோங் டாகலாக்’ என்ற பிலிப்பைன்ஸ் நாட்டின் கலாச்சார உடையைப் போட்டிருந்தார். அதைப் பார்த்த உள்ளூர் சகோதர சகோதரிகளுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மக்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள தயங்கக் கூடாது என்ற விஷயத்தைச் சகோதரர் ஃப்ரான்சிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
நான் மாவட்ட கண்காணியாக ஆனபோது, இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில், புதிய உலக சமுதாயத்தின் மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை நாங்கள் எல்லாருக்கும் போட்டுக்காட்டுவோம். அதைப் பொது இடங்களில் போட்டுக்காட்டியதால், ப்ரொஜெக்டரின் வெளிச்சத்துக்கு நிறைய பூச்சிகள் வந்து அதில் ஒட்டிக்கொள்ளும். பிறகு, ப்ரொஜெக்டரைச் சுத்தம் செய்வது எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும்! அந்த மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்துவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இருந்தாலும், யெகோவாவுடைய உலகளாவிய அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்ள மக்கள் வருவதைப் பார்க்கும்போது எங்களுக்குத் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
மாநாடுகளை நடத்துவதற்கு எங்களுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று கத்தோலிக்க பாதிரிகள் அங்கிருந்த சில அதிகாரிகளிடம் கண்டிப்புடன் சொன்னார்கள். அவர்களுடைய சர்ச்சுக்குப் பக்கத்தில் பேச்சுகள் கொடுக்கப்படும்போது, யாரும் அந்தப் பேச்சை கேட்கக் கூடாது என்பதற்காக சர்ச் பெல்லை அடிப்பார்கள்.
ஆனாலும், பைபிள் சத்தியங்களை மக்கள் தொடர்ந்து ஆர்வமாகக் கற்றுக்கொண்டார்கள். அந்த இடங்களில் இருக்கும் நிறைய பேர் இன்று யெகோவாவை வணங்குகிறார்கள்.புதிய நியமிப்புகளும், நிறைய மாற்றங்களும்
1959-ல் கிளை அலுவலகத்தில் சேவை செய்ய நியமிக்கப்பட்டேன். அந்தச் சமயத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். கொஞ்ச காலத்துக்குப் பிறகு, மண்டல கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அதனால், நிறைய நாடுகளுக்குப் போகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படி ஒரு நாட்டுக்குப் போனபோது, ஜானட் டுமான்ட் என்ற சகோதரியைப் பார்த்தேன். அவர் தாய்லாந்தில் ஒரு மிஷனரியாக சேவை செய்துகொண்டிருந்தார். நாங்கள் இருவரும் கொஞ்ச காலத்துக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டோம். பிறகு, கல்யாணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் சேர்ந்து 51 வருடங்கள், யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்தோம்.
33 நாடுகளில் இருக்கிற யெகோவாவின் மக்களைச் சந்தித்ததை நினைத்து, எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எல்லா தேசத்து மக்களையும் யெகோவா நேசிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தச் சந்திப்புகள் எனக்கு உதவியிருக்கின்றன. (அப். 10:34, 35) வித்தியாசமான கலாச்சாரத்தையும் பின்னணியையும் சேர்ந்த மக்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பதை என்னுடைய ஆரம்ப கால நியமிப்புகள் எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கின்றன. இதற்கெல்லாம் நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன்.
இன்னும் மாற்றங்கள் செய்கிறோம்
பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள சகோதர சகோதரிகளோடு சேவை செய்தது எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இன்றும், கியூஸன் நகரத்தில் இருக்கிற கிளை அலுவலகத்தில் தொடர்ந்து சேவை செய்துவருகிறோம். நான் இங்கே வந்து 60 வருடங்கள் ஆகிவிட்டன. அப்போது இருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை இன்று 10 மடங்காக உயர்ந்திருக்கிறது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், யெகோவா சொல்கிறபடி நடக்க நான் இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, சமீப காலமாக நம்முடைய அமைப்பில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. அதனால், அதற்கு ஏற்றபடி மாற்றங்களைச் செய்ய நாங்கள் மனமுள்ளவர்களாக இருந்திருக்கிறோம்.
யெகோவாவுடைய விருப்பப்படி நடப்பதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருக்கிறோம். இதைவிட திருப்தியான வாழ்க்கை வேறு எதுவும் இருக்க முடியாது! சகோதர சகோதரிகளுக்குச் சேவை செய்வதற்குத் தேவையான மாற்றங்களையும் செய்திருக்கிறோம். யெகோவா விரும்புகிறபடி ‘எல்லாருக்கும் எல்லாமும் ஆவதற்கு’ நாங்கள் உறுதியாக இருக்கிறோம்!