Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சாந்தமாக இருப்பது ஞானமானது!

சாந்தமாக இருப்பது ஞானமானது!

வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும் வேலையை டோனி என்ற சகோதரி செய்துவருகிறார். ஒரு நாள், அவர் வேலை செய்கிற வீட்டுக்குப் போய் ‘பெல்’ அடித்தார். அப்போது, நடுத்தர வயதுள்ள ஒரு பெண் கதவைத் திறந்தார். வேலைக்கு நேரத்தோடு வரவில்லை என்று சொல்லி டோனியைத் திட்டினார், அவமானப்படுத்தும் விதத்தில் பேசினார். ஆனால், டோனி சரியான நேரத்துக்குத்தான் வந்திருந்தார். இருந்தாலும், தான்தான் தாமதமாக வந்துவிட்டதாகச் சொல்லி அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டார்.

அடுத்த தடவை போனபோதும், அந்தப் பெண் டோனியைத் திட்டினார். அப்போது, டோனி என்ன செய்தார்? மறுபடியும் அவரிடம் மன்னிப்புக் கேட்டார். அந்தப் பெண் அனுபவிக்கிற கஷ்டத்தைப் புரிந்துகொண்டதாகவும் சொன்னார். இருந்தாலும், “அவங்க அப்படி திட்டுனது எந்த விதத்திலயும் நியாயம் இல்ல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு” என்று டோனி சொல்கிறார்.

நீங்கள் டோனியின் இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? சாந்தமாக இருப்பதற்கு முயற்சி செய்திருப்பீர்களா? கோபத்தை அடக்குவது உங்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்குமா? இந்த மாதிரியான சூழ்நிலைகளில், கோபத்தை அடக்குவது அவ்வளவு சுலபம் இல்லை என்பது உண்மைதான்! மன அழுத்தத்திலோ, கோபத்திலோ இருக்கும்போது சாந்தமாக இருப்பது உண்மையிலேயே ஒரு சவால்தான்!

இருந்தாலும், சாந்தமாக இருக்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. சொல்லப்போனால், சாந்த குணத்தை ஞானத்தோடு சம்பந்தப்படுத்தி பைபிள் பேசுகிறது. “உங்களிடையே ஞானமும் புரிந்துகொள்ளுதலும் உள்ளவன் யார்? இவற்றை நல்ல நடத்தையின் மூலமும், ஞானத்தால் வருகிற சாந்தத்தின் மூலமும் அவன் காண்பிக்கட்டும்” என்று யாக்கோபு சொல்கிறார். (யாக். 3:13) எந்த விதத்தில், சாந்த குணம் பரலோகத்திலிருந்து வருகிற ஞானத்திற்கு அத்தாட்சியாக இருக்கிறது? இந்தத் தெய்வீக குணத்தை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

சாந்த குணத்தில் இருக்கிற ஞானம்

சாந்தமாக இருந்தால் கோபத்தைக் குறைக்கலாம். “மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.”நீதி. 15:1.

கோபமாகப் பதில் சொன்னால், நிலைமை இன்னும் மோசமாகத்தான் ஆகும். ஏனென்றால், அது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமம். (நீதி. 26:21) ஆனால், சாந்தமாகப் பதில் சொன்னால், பெரும்பாலும் சூழ்நிலை அமைதியாகிவிடும். கோபமாக இருப்பவருடைய மனப்பான்மை மாறுவதற்கும் அது உதவியாக இருக்கும்.

இது எவ்வளவு உண்மை என்பதை டோனி தன்னுடைய அனுபவத்தில் உணர்ந்தார். அவர் சாந்தமாகப் பேசியதைப் பார்த்து, அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீரே வந்துவிட்டது. சொந்தப் பிரச்சினைகளும், குடும்பப் பிரச்சினைகளும் தன்னை நெருக்கிக்கொண்டிருப்பதாக அந்தப் பெண் சொன்னார். டோனி அமைதியாகவும், சமாதானமாகவும் இருந்ததால்தான், அந்தப் பெண்ணுக்கு அவரால் சாட்சி கொடுக்க முடிந்தது. அதோடு, பைபிள் படிப்பையும் ஆரம்பிக்க முடிந்தது.

சாந்தமாக இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம். “சாந்தகுணமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.”மத். 5:5.

சாந்தமாக இருப்பவர்கள் ஏன் சந்தோஷமாக இருக்கிறார்கள்? ஒரு காலத்தில் முரட்டுத்தனமாக நடந்துகொண்டவர்கள், சாந்த குணத்தை வளர்த்துக்கொண்டதால் இப்போது சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை நல்ல விதமாக மாறியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், அருமையான ஓர் எதிர்காலம் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. (கொலோ. 3:12) சத்தியம் கிடைப்பதற்கு முன்பு தன்னுடைய வாழ்க்கை எப்படி இருந்தது என்று ஸ்பெயினில் வட்டாரக் கண்காணியாகச் சேவை செய்கிற அடோல்ஃப் சொல்கிறார்.

“என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாம இருந்துச்சு. எனக்கு கோபம் வந்தா, அதை கட்டுப்படுத்தவே முடியாது. நான் கோபப்படுறதயும் முரட்டுத்தனமா நடந்துக்கிறதயும் பார்த்து, என்னோட ஃப்ரெண்ட்ஸ்கூட பயப்பட்டாங்க. கடைசியில இதுக்கெல்லாம் ஒரு முடிவு வந்துச்சு. ஒரு தடவை நடந்த சண்டையில, என்னை ஆறு இடத்துல குத்திட்டாங்க. எக்கச்சக்கமா ரத்தம் போனதால நான் சாகுற நிலைமைக்கே போயிட்டேன்.”

ஆனால், இப்போது அடோல்ஃப் சாந்தமாகப் பேசுகிறார், சாந்தமாக நடந்துகொள்கிறார்; மற்றவர்களையும் சாந்தமாக இருக்கும்படி சொல்கிறார். இந்தக் குணத்தைப் பார்த்து நிறைய பேர் அவரிடம் கவரப்படுகிறார்கள். நல்ல மாற்றங்களைச் செய்ய முடிந்ததற்காக தான் ரொம்ப சந்தோஷப்படுவதாக அடோல்ஃப் சொல்கிறார். சாந்த குணத்தை வளர்த்துக்கொள்ள யெகோவா அவருக்கு உதவி செய்திருக்கிறார். அதற்காக அவர் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருக்கிறார்.

சாந்தமாக இருந்தால் யெகோவாவைச் சந்தோஷப்படுத்தலாம். “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.”நீதி. 27:11.

யெகோவாவின் முக்கிய எதிரியான பிசாசு, அவரைப் பழித்துப் பேசுகிறான். இதுபோன்ற அவமானங்கள் தனக்கு ஏற்படும்போது, கோபப்படுவதற்கு நியாயமான காரணம் இருந்தும் யெகோவா கோபப்படுவதில்லை. “சீக்கிரத்தில் கோபப்படாதவர்” என்று அவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. (யாத். 34:6, NW) நாமும் அவரைப் போலவே சீக்கிரத்தில் கோபப்படாமல் இருக்கும்போதும், சாந்த குணத்தைக் காட்டும்போதும் நாம் ஞானமாக நடக்கிறோம் என்று சொல்ல முடியும். இப்படி நடந்துகொள்ளும்போது யெகோவா சந்தோஷப்படுகிறார்.—எபே. 5:1.

இந்த உலகத்தில் எங்கு பார்த்தாலும் பகையும் வெறுப்பும்தான் இருக்கிறது. “ஆணவமுள்ள, கர்வமுள்ள, கடவுளை நிந்திக்கிற . . . அவதூறு பேசுகிற, சுயக்கட்டுப்பாடு இல்லாத, கொடூரமான” ஆட்களை நாம் ஒருவேளை சந்திக்கலாம். (2 தீ. 3:2, 3) இருந்தாலும், சாந்த குணத்தைக் காட்ட தவறக் கூடாது. “பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ . . . சமாதானம் பண்ணுவதாக, நியாயமானதாக” இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. (யாக். 3:17) சமாதானமாகவும் நியாயமாகவும் நடந்துகொள்வதன் மூலம், தெய்வீக ஞானத்தை நாம் பெற்றிருக்கிறோம் என்பதைக் காட்ட முடியும். இப்படிப்பட்ட ஞானம் இருந்தால், நாம் சீக்கிரத்தில் கோபப்பட மாட்டோம், சாந்தமாக நடந்துகொள்வோம். அளவில்லாத ஞானமுள்ள கடவுளாகிய யெகோவாவிடமும் நெருங்கிப் போவோம்.