Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

உண்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்

பிரச்சினைக்கு ஆணிவேர்

பெரும்பாலும் பாகுபாடுக்குக் காரணமே தவறான தகவல்கள்தான். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.

  • அறிவியல் அல்லது தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்ய பெண்களுக்குத் தகுதியில்லை என்று முதலாளிகள் சிலர் தப்புக்கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

  • தாழ்ந்த ஜாதி என்று சொல்லப்படுகிற ஆட்களில் ஒருவரைக் கல்யாணம் செய்வது குடும்பத்துக்கு அவமானம் என்று நிறைய பேர் தவறாக நினைக்கிறார்கள்.

  • உடல் குறைபாடு உள்ளவர்கள் எப்போதுமே சோகமாக இருப்பார்கள், கடுகடுப்பாக நடந்துகொள்வார்கள் என்று நிறைய பேர் தவறாக முடிவு செய்கிறார்கள்.

இதுபோன்ற தவறான கருத்துகளை நம்புகிறவர்கள், தாங்கள் ஏன் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்களை அல்லது தாங்கள் கேள்விப்பட்ட சில விஷயங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். தாங்கள் சொல்வதை யாராவது ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவர்களுக்குப் புத்தியே இல்லை என்று நினைக்கிறார்கள்.

பைபிள் ஆலோசனை

“ஒருவன் அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல.”—நீதிமொழிகள் 19:2.

இதன் அர்த்தம் என்ன? உண்மைகளைத் தெரிந்துகொள்ளவில்லை என்றால் நாம் தவறான முடிவுகளைத்தான் எடுப்போம். உண்மைகளை நம்பாமல் கட்டுக்கதைகளை நம்பினால் மற்றவர்களை நாம் தவறாக எடைபோட்டு விடுவோம்.

உண்மைகளை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

உண்மையான தகவல்களைத் தெரிந்துகொண்டால், சிலரைப் பற்றி மற்றவர்கள் சொல்கிற பொய்யான கருத்துகளை நம்ப மாட்டோம். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பற்றி மற்றவர்கள் சொன்னது பொய் என்று தெரியவந்தால், வேறு ஏதாவது ஒரு பிரிவினரைப் பற்றி அவர்களாகவே ஊகித்துச் சொல்கிற விஷயங்களை நாம் நம்பிவிட மாட்டோம்.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களை மோசமானவர்கள் என்று மக்கள் சொன்னாலும், அந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லாருமே அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.

  • மற்றவர்களைப் பற்றிய எல்லா விஷயங்களுமே நமக்குத் தெரியாது என்பதை மனதில் வையுங்கள்.

  • நம்பகமான இடத்திலிருந்தோ நபர்களிடமிருந்தோ உண்மைகளைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.