ஒட்டகச்சிவிங்கிகள் கம்பீரமானவை, நெட்டையானவை, நேர்த்தியானவை
ஒட்டகச்சிவிங்கிகள் கம்பீரமானவை, நெட்டையானவை, நேர்த்தியானவை
கென்யாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஆதவன்கண்விழிக்கும் அதிகாலை வேளை! சாம்பல்நிற கிரானைட் பாறைகளை பனித் திவலைகள் குளிப்பாட்டியிருந்ததால் அவை ஜில்லென்று இருந்தன. கையில் சூடான தேநீர் கோப்பையுடன் இந்த இராட்சச பாறையிடுக்குகளில் நாங்கள் பவ்வியமாக பதுங்கியிருந்தோம். a எங்களுடைய விழிகளோ பசுமையான ஆப்பிரிக்க புல்வெளி காட்சிகளை பருகிக்கொண்டிருந்தன. கதிரவன் மென்மையாக ஒளிக் கிரணங்களை உமிழ்ந்து கொண்டிருந்த நேரம் அது. இப்பொழுது எங்களுடைய பொறுமைக்கு பலன்கிட்டியது. அதோ, மந்தையாக ஒட்டகச்சிவிங்கிகள்! என்னே கம்பீரம்! என்னே உயரம்!! என்னே அழகு!!! அவை தங்களுடைய உற்றார் உறவினருடன் அந்தச் சமவெளியில் உலா வந்துகொண்டிருந்தன. அவை ஸ்லோ மோஷனில் வருவது போலவே காட்சியளித்தன! பந்தல்கால்கள் போன்ற உயரமான கால்களிலும் நளினம் தெரிந்தது. வளைந்த நீண்ட கழுத்துகளோ காற்றில் அசைந்தாடும் பாய்மரத்தைப் போல அசைந்தாடின. நாங்கள் ஆச்சரியத்தால் அப்படியே அசந்துவிட்டோம்! அந்தக் காட்சி கண்கொள்ளா காட்சி!
எங்களுடைய வரவைக் கண்டு சிறிதும் பதட்டப்படாமல், பச்சைப் பசேலென்று செழித்தோங்கும் கருவேல மர (acacia) காட்டுக்குள் ஏகமனதாக நுழைந்து ஐக்கியமாகிவிட்டன! இப்பொழுது அங்கே உச்சாணி கிளைகளோடு உறவாடிக் கொண்டிருந்தன. அந்தச் சின்னஞ்சிறு இலைகளை பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் மென்மையாக—அதேசமயத்தில் கவனமாக—நீளமான நாக்கை சுழற்றி சுவைத்துக்கொண்டிருந்தன அந்தச் சிவிங்கிகள். அங்கே உயரத்தில், தூக்கணாங்குருவிகளின் குடியிருப்புக்குள் அத்துமீறி தலைகளை நுழைத்து ஆசையோடு இலைதழைகளை ருசித்துக் கொண்டிருந்தன. உடனே, இந்த நெட்டை கழுத்து அழையா விருந்தாளிகளை அந்தப் பறவைகள் கோரஸாக திட்டித்தீர்க்க ஆரம்பித்தன. அவற்றின் ஏகவசனங்களை தாங்க முடியாததைப் போல், அந்த சிவிங்கி கூட்டம் அமைதலுடனும் கண்ணியத்துடனும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றது.
வேகமானவை, நளினமானவை
மிருகக்காட்சி சாலையில் வேலிகளுக்கு வெளியே கழுத்தை நீட்டிக்கொண்டிருக்கும் இந்த உயிரினங்களை யாராவது பார்த்திருந்தால், ஆப்பிரிக்க காடுகளின் எழில் கொஞ்சும் இயற்கை சூழலில் எவ்வித பயமுமின்றி ஒயிலாக ஓடிச் செல்லும் ஒட்டகச்சிவிங்கிகளின் உண்மையான அழகையும் நளினத்தையும் கற்பனை செய்வது
கடினமாயிருக்கலாம். ஒட்டகச்சிவிங்கிகள் நளினமாகவும் மென்மையாகவும் நடை பயில்கின்றன. வெரிச்சோடிய புல்வெளிகளில் துள்ளி ஓடுகையில் அவற்றின் மிக மிக மென்மையான தோற்றம் புல்தடுக்கினாலும் பல்டியடித்து விழுந்துவிடுவது போல தோன்றுகிறது. ஆனால், 1,300 கிலோகிராம் எடையுடைய ஒரு பெரிய ஆண் சிவிங்கியின் கால்களோ ஸ்திரமானவை, அவை மணிக்கு சுமார் 60 கிலோமீட்டர் வேகத்தில் விரைவாக ஓடமுடியும்.மனதைக் கொள்ளை கொள்ளும் இந்த உயிரினம் ஏகபோக உரிமை கொண்டாடும் இடம் ஆப்பிரிக்கா. அதன் சாதுவான குணமும் சாந்தமான இயல்பும் பார்ப்பதற்கு பரவசமூட்டுகிறது. சிவிங்கியின் முகத்தோற்றம் தன்னிகரற்றது, கவர்ச்சிமிக்கதும்கூட. தலையில் நீண்ட காதுகளும் இரண்டு சிறிய கொம்புகளும் அவற்றின் மீது வெல்வெட் போன்ற கருமை நிற மயிரும் உள்ளன. கண்கள் மிகவும் பெரியவை, கருமையானவை. அவற்றை காக்கும் நீண்ட இமை முடிகளோ மேல் நோக்கி வளைந்திருக்கும். தூரத்தில் மேயும் சிவிங்கிகள் ஏறெடுத்துப் பார்க்கையில் அவற்றின் முகத்தில் ஏதோ அறியத்துடிக்கும் ஆர்வமும் அப்பாவித்தனமும் பளிச்சிடும்.
பூர்வ காலங்களில் சிவிங்கிகள் அழகிய தோற்றத்திற்காகவும் நாணம், அமைதி, மூர்க்கமற்ற இயல்புக்காகவும் மதிக்கப்பட்டன. இளமை ததும்பும் சிவிங்கிகள் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சன்மானமாக வழங்கப்பட்டன. இந்தப் பரிசுகள் இரு நாடுகளுக்கிடையே சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் சின்னமாக விளங்கின. பழங்கால ஆப்பிரிக்க பாறை ஓவியங்களில் சிவிங்கிகளின் மங்கலான சித்திரங்களை இன்றும் காணலாம்.
நெடுநெடுவென நிமிர்ந்து நிற்பவை
விலங்கினங்களில் ஒட்டகச்சிவிங்கிகளே மிக உயரமானவை. குளம்பு முதல் கொம்புகள் வரை முழு வளர்ச்சியடைந்த ஆண் சிவிங்கிகளின் உயரம் 5.5 மீட்டருக்கும் மேல். பூர்வ எகிப்திய சித்திர எழுத்துக்களில் சிவிங்கிகள், “வருவதுரைப்பது” அல்லது “முன்னுரைப்பது” என்ற வினைச்சொல்லை குறித்தன. மலைக்கவைக்கும் அதன் உயரத்தையும் தூரத்தில் இருப்பதை பார்க்கும் அபார திறமையையும் இது சுட்டிக்காட்டியது.
வரிக்குதிரைகள், தீக்கோழிகள், மறிமான்கள், ஆப்பிரிக்க விலங்கினங்கள் அனைத்தும் கதம்பமாக சேர்ந்திருக்கும் கூட்டத்தில் நிற்கையில், ஒட்டகச்சிவிங்கிகள் காவல் கோபுரத்தைப் போல செயல்படுகின்றன. அதன் உயரமும் கூர்மையான பார்வை திறனும் தூரத்தில் உள்ளதை பார்க்கவும் வரக்கூடிய ஆபத்தை முன்கூட்டியே அறியவும் உதவுகின்றன. அதனால், அது ஒய்யாரமாக நின்று மற்ற விலங்குகளுக்கு பாதுகாவலனாக விளங்குகிறது என்பதில் சந்தேகமில்லை.
அதிசய வடிவமைப்பு
யானையைத் தவிர, மற்றெல்லா விலங்குகளைவிட உயரமான மரக்கிளைகளில்
உள்ள இலைதழைகளை மேய்வதற்கான மிக அற்புத வடிவத்தைப் பெற்றவை ஒட்டகச்சிவிங்கிகளே. கெட்டியாக பிடித்துக்கொள்ளும் மேல் உதட்டின் விசேஷித்த வடிவமைப்பும், கூர்முனைகளும் ஊசிபோன்ற முட்களும் நிறைந்த கிளைகளிலிருந்து இலைகளை லாவகமாக பறித்து தின்பதற்கு வளைந்துகொடுக்கும் நாக்கும் அதற்கு உதவுகிறது.ஒட்டகச்சிவிங்கிகள் ஒரு நாளைக்கு 34 கிலோகிராம் இலைதழைகளை கபளீகரம் செய்துவிடலாம். பற்பல பசுந்தழைகளை தின்கிறபோதிலும், ஆப்பிரிக்க சமவெளிகளில் அங்குமிங்கும் நிற்கும் கருவேல மரத்தின் இலைகளையே பெரிதும் விரும்புகின்றன. ஆண் ஒட்டகச்சிவிங்கி உணவை தேடி அதன் நாக்கை 42 சென்டிமீட்டர் நீளத்திற்கு நீட்ட முடியும். சிவிங்கியின் வளைந்துகொடுக்கும் கழுத்தும் அசாதாரணமானது. இதனால் மரத்தின் மேல் கொப்புகளுக்கிடையே கழுத்தை எளிதாக நுழைப்பதற்கும் வியக்கவைக்கும் கோணங்களில் நீண்ட தலையை சாய்ப்பதற்கும் முடிகிறது.
உயரத்தில் உள்ளதை எட்டிப் பறிப்பது ஒட்டகச்சிவிங்கிக்கு எளிது, ஆனால் தண்ணீர் குடிப்பதுதான் பெரும் அவஸ்தை. தண்ணீர் குடிப்பதற்காக நீர்நிலைகளுக்கு வருகையில், ஒட்டகச்சிவிங்கி மெதுவாக தன்னுடைய முன்னங்கால்களை பரப்பி அதன் இரண்டு முழங்கால்களையும் மடக்குகிறது. அவலட்சணமான இந்தக் கோலத்தில் நின்றுகொண்டு, அதன் நீண்ட கழுத்தை முடிந்தவரை நீட்டி தண்ணீர் குடிக்கிறது. நல்லவேளை, ஒட்டகச்சிவிங்கி அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டியதில்லை. ஏன்? சாப்பிடும் இலைதழைகளிலேயே அதற்கு தேவையான நீர் கிடைத்துவிடுகிறதே.
கழுத்திலிருந்து கால்கள் வரை ஆங்காங்கே இலை போன்ற வடிவத்தில் வெள்ளை கோடுகள் தீட்டப்பட்ட அழகிய தோலாடை அணிந்திருக்கிறது ஒட்டகச்சிவிங்கி. தோலின் நிறம் பொன்னிறம் முதல் காப்பிக்கலர் வரை பல வண்ணங்களில்—சிலசமயத்தில் கறுப்பு நிறத்திலும்—இருக்கும். ஒட்டகச்சிவிங்கிகள் வயதாகையில், அதன் தோலின் நிறம் அடர்ந்த நிறமாகிறது.
குடும்ப வாழ்க்கை
ஒட்டகச்சிவிங்கிகள் அதன் இனத்தோடு கூடிவாழ்பவை, ஒரு மந்தையில் 2 முதல் 50 சிவிங்கிகள் வரை இருக்கும். அவை மந்தை மந்தையாக மேய்கின்றன. கர்ப்பம் தரித்த சிவிங்கி இரண்டு மீட்டர் உயரமுள்ள குட்டியை பெற்றெடுக்கிறது. குட்டி போடுவதற்கு முன்பு, 420 நாட்கள் முதல் 468 நாட்கள் வரை அதை வயிற்றில் சுமக்கிறது. பிறக்கும்போது அந்தக் குட்டி தலைகீழாக இரண்டு மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது! ஆனால் 15 நிமிடங்களில், எந்தக் காயமுமின்றி, தத்தித் தத்தி நடக்க ஆரம்பித்து பால் குடிக்க தயாராகிவிடுகிறது அந்தக் குட்டி சிவிங்கி. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப்பின், இதுவும் கருவேல மரத்தின் கொழுந்துகளை கொறிக்க ஆரம்பித்துவிடுகிறது. சீக்கிரத்திலேயே தன்னுடைய தாயுடன் வீறுநடை போட பெலத்தைப் பெற்றுவிடுகிறது.
சிவிங்கி குட்டி அதன் பெற்றோரைப் போலவே மிக அழகாக, ஆனால் சிறிதாக இருக்கிறது. சிவிங்கியின் உயரத்தோடு ஒப்பிட அது குட்டையாக இருந்தாலும், பொதுவாக மனிதரைவிட நெட்டையாகவே இருக்கிறது. கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் தாயின் கவனிப்பில், பயமில்லாமல் துருதுருவென திரிகிறது. குட்டி சிவிங்கி பார்ப்பதற்கு கொள்ளை அழகு.
ஒட்டகச்சிவிங்கிகள் ஈனும் காலத்தில், குட்டி சிவிங்கிகள் தொகுதிகளாக “காப்பகத்தில்” கூட்டப்படுகின்றன, அங்கே ஓய்வெடுத்து, துள்ளிக்குதித்து விளையாடி, சுற்றிலும் நடப்பதை நோட்டமிட்டு அந்த நாளை கழிக்கின்றன. புதிதாக பிறந்த குட்டி சிவிங்கி கிடுகிடுவென வளருகிறது. ஆறே மாதங்களில் ஒரு மீட்டர் உயரத்திற்கு வளர்ந்துவிடுகிறது. ஒரு வருடத்திற்குள் அதன் உயரம் இரண்டு மடங்காகிவிடுகிறது. ஒரே வாரத்தில் ஒரு குட்டி 23 சென்டிமீட்டர் வரை வளருகிறது! கண்ணே மணியே என குட்டியை தாய் சிவிங்கி பாதுகாக்கிறது, கொஞ்ச தூரத்திற்கு ஓடியாடி விளையாட அனுமதித்தாலும் எப்போதும் அதன் “பைனாகுலர்” பார்வை குட்டிமீதே பதிந்திருக்கும்.
உருவத்திலும் துடிப்பிலும் வேகத்திலும் சிறந்த பார்வை திறனிலும் அது நிகரற்று விளங்குவதால், சிங்கங்களை தவிர அதற்கு வேறெந்த விரோதிகளும் இல்லை. என்றபோதிலும், மனிதனே இந்த அழகிய ஜீவராசியை பெருமளவில் வேட்டையாடி கொன்று குவித்திருக்கிறான். அதன் அழகிய தோலுக்காகவும்
ருசியான கறிக்காகவும் நீளமான கருநிற குஞ்சத்திற்காகவும்—சிலர் இதற்கு மர்ம சக்தி இருப்பதாக நம்புகின்றனர்—அவை ஈவிரக்கமின்றி வேட்டையாடப்படுகின்றன. எனவே, இப்பொழுது இந்த சாதுவான விலங்கிற்கு எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஒருகாலத்தில் ஆப்பிரிக்காவின் பெரும் பகுதிகளை சொந்தம் கொண்டாடின, இன்றோ பூங்காக்களிலும் சரணாலயங்களிலும் மட்டுமே ஓரளவு பாதுகாப்பாக வலம் வருகின்றன.இன்று, ஆப்பிரிக்க காடுகளில் நீண்ட கழுத்துடைய சிவிங்கிகள் பரந்த புல்வெளியில் பயமின்றி அங்குமிங்கும் உலாவும் காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது. அங்கே முட்கள் நிறைந்த கருவேல மரங்களின் உச்சாணியில் இலைகளை பறித்துண்பதை அல்லது ஒட்டகச்சிவிங்கிகள் தங்கள் பாணியில் தூரத்திலிருக்கும் பொருட்களை நோட்டம் விடுவதை பார்க்கலாம். வினோத உருவம் படைத்த சாதுவான இந்த அழகிய ஜீவராசி உண்மையில் படைப்பின் அதிசயமே—சர்வவல்ல யெகோவாவின் படைப்பு திறனுக்கும் அவருடைய தனித்தன்மைமிக்க குணத்திற்கும் மற்றொரு அத்தாட்சி.—சங்கீதம் 104:24.
[அடிக்குறிப்பு]
a ஆப்பிரிக்க சமவெளிகளில் பரந்து காணப்படும் பாறைகள் நிறைந்த குன்றுகள் ஆங்கிலத்தில் kopje என அழைக்கப்படுகின்றன.
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
அற்புத நீண்ட கழுத்து
சிவிங்கியின் வினோதமான உடலமைப்பும் பெரிய தோற்றமும் பிரச்சினையாக இருக்க வேண்டும் என ஒருவர் நினைக்கலாம். நெடுநெடு உயரமும் நீண்ட கழுத்தும் கொண்ட ஒட்டகச்சிவிங்கியின் உடலின் எல்லா பாகங்களுக்கும் இரத்தம் சீராக பாய்வது சாத்தியமற்றதாக தோன்றலாம். உதாரணமாக, ஒட்டகச்சிவிங்கி அதன் கழுத்தை கீழே சாய்க்கும்போது, ஈர்ப்பு சக்தியால் இரத்த ஓட்டம் அதன் தலைக்கு வேகமாக பாய்ந்து மூளையில் இரத்த வெள்ளத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அது தலையை மேலே தூக்கும்போது, இரத்தம் வேகமாக இதயத்திற்கு ஓடி சுயநினைவை இழக்கச் செய்யலாம். ஆனால் இவை இரண்டுமே நிகழ்வதில்லை. ஏன்?
ஒட்டகச்சிவிங்கியின் இரத்த ஓட்ட மண்டலம் உண்மையில் அற்புத படைப்பே. இது, அந்த விலங்கின் ஒப்பற்ற வடிவத்திற்கும் உடலமைப்புக்கும் ஏற்றாற்போல விசேஷமாக வடிவமைக்கப்பட்டது. இதயமே மிகவும் பெரிதாக இருக்கிறது. மூன்றரை மீட்டர் உயரத்தில் இருக்கும் மூளைக்கு இரத்தத்தை அனுப்புவதற்கு கடினமாக ‘பம்ப்’ செய்ய வேண்டும். இதயம் நிமிடத்திற்கு 170 தடவை துடிப்பதால், ஏழு சென்டிமீட்டர் தடிமானமுள்ள இதயத்தின் தசைநார் சுவர்கள் சிஸ்டாலிக் அழுத்தத்தை உண்டுபண்ணுகின்றன. இது மனிதனுக்கு ஏற்படும் அழுத்தத்தைவிட ஏறக்குறைய மூன்று மடங்கு அதிகம். இப்பேர்ப்பட்ட சக்தியை பாதிப்பில்லாமல் பயன்படுத்துவதற்கு, மூளைக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் கரோடிட் தமனியும், மீண்டும் இரத்தத்தை இதயத்திற்கு கொண்டு வரும் குரல்வளை சிரையும் பெரிதாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், இந்த இரத்த நாளங்கள் 2.5 சென்டிமீட்டர் விட்டமுடையவை. மேலும், நெகிழ்ச்சி தன்மையுடைய உறுதியான திசுவால் பலமூட்டப்பட்டிருக்கின்றன. இதனால் அவை வளைந்துகொடுப்பவையாகவும் உறுதியானவையாகவும் இருக்கின்றன.
ஒட்டகச்சிவிங்கி அதன் தலையை கீழே சாய்க்கும்போது, குரல்வளைச் சிரையிலுள்ள வால்வுகள் இரத்தம் வேகமாக மூளைக்குப் பாய்வதை கட்டுப்படுத்துகின்றன. மூளையின் அடிபாகத்தில், அந்தப் பெரிய கரோடிட் தமனி அற்புதமாக வடிவமைக்கப்பட்ட வலைப் பின்னலுக்குள் செல்கிறது, இது அசாதாரணமான வலை என அழைக்கப்படுகிறது. ஒட்டகச்சிவிங்கி தலையை கீழே சாய்க்கும்போது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிற இந்த மிகச் சிறிய இரத்த நாளங்களின் விசேஷ வலைப் பின்னலுக்குள் இரத்தம் மெதுவாக செலுத்தப்படுகிறது. எனவே மூளைக்கு வரும் இரத்தத்தின் வேகம் குறைக்கப்படுகிறது. இவ்வாறு, இரத்தம் வேகமாக பாய்வது தடுக்கப்பட்டு மூளை பாதுகாக்கப்படுகிறது. அந்த ஒட்டகச்சிவிங்கி அதன் தலையை கீழே சாய்க்கும்போது இந்த அசாதாரணமான வலை விரிவடைகிறது, கழுத்தை மேலே உயர்த்தும்போதோ சுருங்குகிறது. இவ்வாறு, இரத்த அழுத்தம் குறைவதை சமாளித்து, மயக்கமடையும் ஆபத்து தடுக்கப்படுகிறது.
ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தும்கூட படைப்பின் அற்புதமே. ஒரு எலியையோ எந்தவொரு பாலூட்டியையோ போல சிவிங்கியின் நீண்ட கழுத்திலும் அதே எண்ணிக்கை எலும்புகள் இருப்பதை கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியப்பட்டனர்! ஆனால், பெரும்பாலான மற்ற பாலூட்டிகளைப் போலல்லாமல், ஒட்டகச்சிவிங்கிக்கு நீண்ட முதுகெலும்பு இருக்கிறது; இவை பந்துக்கிண்ண மூட்டில் உள்ள விசேஷ வடிவைப் பெற்றுள்ளதால், வியக்கத்தக்க விதத்தில் நெகிழ்ச்சியை தருகின்றன. இதனால், ஒட்டகச்சிவிங்கியால் குனியவும் உடலின் எல்லா பாகங்களுக்கு கழுத்தை நீட்டவும் முடிகிறது, அல்லது உணவுக்காக உயரமான மரக் கொப்புகளுக்குள் லாவகமாக கழுத்தை நுழைக்கவும் முடிகிறது.