Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தொலைபேசிகள் இணைக்கப்பட்டிருப்பது எவ்வாறு?

தொலைபேசிகள் இணைக்கப்பட்டிருப்பது எவ்வாறு?

தொலைபேசிகள் இணைக்கப்பட்டிருப்பது—எவ்வாறு?

ஜப்பானிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

ஜப்பானிலுள்ள மக்கள் தொகையும் தொலைபேசிகளின் எண்ணிக்கையும் ஏறக்குறைய சமமாகும். அங்கே ஒவ்வொரு நாளும் 30 கோடிக்கும் அதிகமான தொலைபேசி அழைப்புகள் செய்யப்படுகின்றன. ஜப்பானுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் பத்து லட்சம் அழைப்புகள் வெளிநாடுகளில் இருந்து வருகின்றன, ஏறக்குறைய அதே எண்ணிக்கையான அழைப்புகள் வெளி நாடுகளுக்கும் செய்யப்படுகின்றன.

நீங்களும் சாதாரண (நிலையான கேபிள்) அல்லது செல்லுலர் தொலைபேசியை ஒருவேளை தினமும் உபயோகிக்கலாம். இந்த உலகம் அதிநவீனமாகி வருவதால் மற்றொரு கண்டத்தில் இருப்பவருடன் பேசுவது அநேகருக்கு சர்வசாதாரணம் ஆகிவிட்டது. ஆனால், நீங்கள் உரையாடும் நபரின் தொலைபேசியும் உங்கள் தொலைபேசியும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

தொலைபேசி பின்னலமைப்பால் இணைப்பு

முதலாவதாக உங்கள் தொலைபேசி ஒரு பின்னலமைப்போடு (network) இணைக்கப்பட வேண்டும். ஒரு சாதாரண தொலைபேசியின் ஒயர் போகும் பாதையிலேயே சென்றால் ஒரு சந்திப்பு பெட்டியைக் (junction box) காண்பீர்கள். அது உங்கள் வீட்டிலுள்ள ஒயரிங்கோடு சேர்க்கப்பட்டிருக்கும். a அதற்குப் பின்னர் அந்த ஒயர் எங்கு செல்கிறது என்று பார்த்தால் மின்சார கம்பத்தில் அல்லது நிலத்திற்கு அடியிலுள்ள ஒரு கேபிளோடு சேர்க்கப்பட்டிருக்கும். அந்த கேபிள், உள்ளூர் தொலைபேசி நிலையத்திலுள்ள இணைப்பகத்தோடு (exchange) சேர்க்கப்பட்டிருக்கும். இந்த இணைப்பகம் மற்றொரு பெரிய இணைப்பகத்தோடு இணைந்து உருவாவதுதான் தொலைபேசி பின்னலமைப்பு. ஆகவே, உள்ளூரிலுள்ள நண்பருடன் பேசுகையில் இந்த பின்னலமைப்பின் மூலமாக உங்கள் இருவரின் தொலைபேசிகளுக்கும் இடையே பேச்சொலி இணைப்பு (voice circuit) ஒன்று உருவாகிறது.

செல்லுலர் தொலைபேசிகள் எப்படி செயல்படுகின்றன? அவை எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? பொதுவாக சாதாரண தொலைபேசியைப் போலவேதான் இவையும் இணைக்கப்பட்டுள்ளன. கண்ணுக்கு புலப்படாத “ஒயர்” அதாவது ரேடியோ அலை ஒன்று உங்களுடைய செல்லுலர் தொலைபேசியை அருகிலுள்ள நடமாடும் தொலைபேசி இணைப்பகத்தோடு சேர்க்கிறது. அந்த இணைப்பகம் ஒரு தொலைபேசி பின்னலமைப்போடு சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு கண்டத்திலுள்ள ஒருவரோடு பேசுகையில் என்ன நிகழ்கிறது?

கடலுக்கடியில் கேபிள்கள்

சமுத்திரத்தால் பிரிக்கப்பட்ட இரண்டு கண்டங்களை கேபிள்களால் இணைப்பது மாபெரும் வேலையாகும். இதற்கு கடலுக்கு அடியிலுள்ள பள்ளத்தாக்குகளையும் மலைகளையும் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள கேபிளை அமைப்பது அவசியம். என்றாலும், கண்டம் விட்டுக் கண்டம் செய்யும் தொலைத்தொடர்பு இப்படித்தான் ஆரம்பித்தது. அட்லாண்டிக் கடலைக் கடந்த முதல் கடலடி தொலைபேசி கேபிள் 1956-⁠ல் போடப்பட்டது. b 36 தொலைபேசி இணைப்புகளுடன் இந்த கேபிள் ஸ்காட்லாந்தையும் நியூபௌண்ட்லாந்தையும் சேர்த்து வைத்தது. பசிபிக் கடலைக் கடந்த முதல் கேபிள் 1964-⁠ல் ஜப்பானுக்கும் ஹவாய்க்கும் இடையே போடப்பட்டது. அதில் 128 பேச்சொலி இணைப்புகள் இருந்தன. அதற்கு பிறகு கண்டங்களையும் தீவுகளையும் இணைக்கும் அநேக கடலடி கேபிள்கள் அமைக்கப்பட்டன.

தொலைபேசி இணைப்புகளுக்காக கடலுக்கடியில் என்ன விதமான கேபிள்களை போடுகின்றனர்? ஆரம்பத்தில், மின்கடத்தி ஒயராக செம்பும், மின்கடத்தி உறையாக செம்பு அல்லது அலுமினிய தகடும் கொண்ட பொது இருசுற்று தந்தி கேபிள்களே (coaxial cables) பொதுவாக உபயோகிக்கப்பட்டன. இவ்வகை கேபிள்களில் கடைசியானது 1976-⁠ல் போடப்பட்டது, அது 4,200 பேச்சொலி இணைப்புகளை சுமந்து செல்லும் திறனுடையது. ஆனால் 1980-களில் கண்ணாடி இழைக் கேபிள்கள் (fiber-optic cables) உபயோகத்திற்கு வந்தன. இந்த வகை கேபிள்களில் கண்டம் விட்டுக் கண்டம் சென்ற முதல் கேபிள் 1988-⁠ல் போடப்பட்டது; அது டிஜிடல் தொழில்நுட்பத்தின் உதவியால் 40,000 தொலைபேசி உரையாடல்களை ஒரே சமயத்தில் சுமந்து செல்லும் திறன் படைத்தது. அப்போது முதல் அந்த கேபிள்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. அட்லாண்டிக் கடலின் ஒரு முனை முதல் மறு முனை வரை செல்லும் சில கேபிள்கள் 20 கோடி தொலைபேசி இணைப்புகளை கொண்டு செல்லலாம்!

தொலைத்தொடர்பு கேபிள்களை கடலுக்கடியில் எவ்வாறு அமைக்கின்றனர்? அவை கடல் தரையில் போடப்பட்டு அதன் ஏற்ற இறக்கங்களோடு சேர்ந்து செல்கின்றன. கரைக்கு அருகே, வலுவான ஓர் உறைக்குள் (casing) அந்த கேபிள்கள் வைக்கப்படுகின்றன. அந்த உறை, ரிமோட் கண்ட்ரோல் இயந்திரத்தை உபயோகித்து வெட்டப்பட்ட பள்ளத்திற்குள் வைக்கப்படுகிறது. நங்கூரங்கள் அல்லது மீன்பிடிக்கும் வலைகள் கேபிள்களை நாசப்படுத்திவிடாதபடி அந்த உறை பாதுகாக்கிறது. ஆகவே, மற்றொரு கண்டத்திலுள்ள நண்பனிடம் பேசுகையில் இந்த கேபிள்களில் ஒன்றுதான் உங்கள் குரலை கடலுக்கடியில் எடுத்துச் செல்கிறது.

தொலைதூர இடங்களை இணைக்கும் கண்ணுக்கு புலப்படா கேபிள்கள்

ஆனால் கண்டங்களையும் தீவுகளையும் இணைக்கும் ஒரே வழி கடலுக்கடியில் செல்லும் கேபிள்கள் மட்டுமே அல்ல. கண்ணுக்கு புலப்படாத “ஒயர்” அதாவது ரேடியோ அலையும்கூட பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. நுண்ணலை என்றும் அழைக்கப்படும் இந்த அலை, சர்வதேச தொலைத்தொடர்பிற்காக தொலைதூர இடங்களையும் இணைக்கிறது. ஒரு மெல்லிய ஒளிக் கீற்றைப்போல நுண்ணலையும் நேர் கோட்டில் மட்டுமே பிரயாணம் செய்வதால் அதன் பாதையிலுள்ள இடங்களை மட்டுமே அது இணைக்கும். பூமியின் மேற்பரப்பு வளைந்திருப்பதால் பூமியின் மறுபக்கத்திலுள்ள இடங்களை இந்த நுண்ணலையால் நேரடியாக இணைக்க முடியாது. இப்படி தூரத்திலுள்ள இடங்களை இணைப்பதற்கு செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு தேவை.

பூமத்திய ரேகைக்கு மேலே சுமார் 35,800 கிலோமீட்டர் உயரத்தில் ஒரு செயற்கைக்கோளை வைத்தால் அது பூமியின் சுழற்சிக்கு ஏற்றவாறு ஏறக்குறைய 24 மணிநேரத்தில் பூமியை சுற்றி வரும்; இது ஜியோஸ்டேஷனரி கோளப்பாதை என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, அது பூமிக்கு மேல் நிலையாக ஏறக்குறைய ஒரே இடத்தில் இருக்கும். இந்த செயற்கைக்கோள் பூமியில் மூன்றில் ஒரு பங்கை காண முடியும் என்பதால் நுண்ணலைகளை உபயோகிக்கும் பூமியிலுள்ள தரை நிலையங்கள் (earth stations) அந்த செயற்கைக்கோளோடு தொடர்புகொள்ள முடியும். அப்படியென்றால், வெகு தொலைவிலுள்ள இரண்டு இடங்கள் செயற்கைக்கோள் மூலமாக எவ்வாறு இணைக்கப்படுகின்றன?

அந்த செயற்கைக்கோளின் பரப்பெல்லைக்கு உட்பட்ட ஒரு தரை நிலையம் நுண்ணலைகளை அனுப்புகிறது; இது அப்லிங்க் என அழைக்கப்படுகிறது. செயற்கைக்கோளிலுள்ள ரேடியோ ரிப்பீட்டர் அல்லது டிரான்ஸ்பான்டர், இந்த நுண்ணலையை பெற்று அதன் அலைவெண்ணை குறைத்து பூமியிலுள்ள மற்றொரு நிலையத்திற்கு மீண்டும் அனுப்பி வைக்கிறது. இது டௌன்லிங்க் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு, நேராக தொடர்புகொள்ள முடியாத பூமியிலுள்ள இரண்டு நிலையங்கள் கண்ணுக்கு புலப்படாத ஒயர் வழியாக செயற்கைக்கோள் மூலம் தொடர்பு கொள்கின்றன.

முதல் வாணிப தொலைத்தொடர்பு செயற்கைக்கோளின் பெயர் இன்டெல்சாட் 1. 1965-⁠ல் அனுப்பப்பட்ட இது எர்லி பேர்டு என்றும் அழைக்கப்பட்டது. தற்போது, பூமியிலுள்ள அனைத்து இடங்களையும் இணைக்கும் சுமார் 200 தொலைத்தொடர்பு செயற்கைக்கோள்கள் உள்ளன; அவற்றுள் பெரும்பாலானவை ஜியோஸ்டேஷனரி ஆகும். இந்த செயற்கைக்கோள்கள் சர்வதேச தொலைத்தொடர்புக்கு மட்டுமல்ல தொலைக்காட்சி ஒளிபரப்பு, வானிலை கணிப்பு, இன்னும் பிற வேலைகளுக்காகவும் உபயோகிக்கப்படுகின்றன. இந்த செயற்கைக்கோள்களில் பல டிரான்ஸ்பான்டர்கள் இருப்பதால் அவற்றால் பல்வழி இணைப்புகளை (multichannel circuits) அளிக்க முடியும். உதாரணமாக எர்லி பேர்டு, ஒரு தொலைக்காட்சி இணைப்பை அல்லது 240 தொலைபேசி இணைப்புகளை ஒரே சமயத்தில் அளிக்க முடிந்தது. 1997 முதல் செயல்படும் இன்டெல்சாட் VIII வரிசை, மூன்று தொலைக்காட்சி ஒளிபரப்புகளையும் அதிகபட்சமாக 1,12,500 தொலைபேசி இணைப்புகளையும் ஒரே சமயத்தில் அளிக்க முடியும்.

வித்தியாசம் காண முடியுமா?

இந்த மாபெரும் மாற்றங்கள் காரணமாக சர்வதேச தொலைபேசி தொடர்பிற்கு ஆகும் செலவு பெருமளவு குறைந்துவிட்டது. மற்றொரு கண்டத்திலுள்ள நண்பர்களுடன் அல்லது குடும்பத்தாருடன் இப்போது உங்களால் அடிக்கடி பேச முடியலாம். ஆனால், நீங்கள் இணைக்கப்பட்டிருப்பது கடலடி கேபிள் மூலமா செயற்கைக்கோள் மூலமா என எப்படி வித்தியாசம் காண்பது?

செயற்கைக்கோள் இணைப்பில், கண்ணுக்கு புலப்படாத ஒயரின் நீளம் (அப்லிங்க், டௌன்லிங்க் உட்பட) சுமார் 70,000 கிலோமீட்டர் வரை செல்கிறது. இது ஏறக்குறைய இந்த பூமியை இரண்டு முறை சுற்றி வருவதற்கு சமமாகும். நுண்ணலைகள் ஒளியின் வேகத்தில் பிரயாணம் செய்தாலும்கூட, செயற்கைக்கோள் வழியாக பூமியிலுள்ள ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு பிரயாணம் செய்ய ஒரு விநாடியில் நாலில் ஒரு பங்கு நேரம் எடுக்கும். அதாவது, உங்கள் குரல் அடுத்தவருக்கு கேட்க ஒரு விநாடியில் நாலில் ஒரு பங்கு நேரமெடுக்கும், அதைப் போலவே அவர் குரல் உங்களுக்கு கேட்கவும் அதே நேரம் எடுக்கும். ஆக மொத்தம், அரை விநாடி நேர தாமதம் ஏற்படுகிறது. அன்றாட உரையாடலில் இந்த தாமதத்தை எதிர்ப்பட்டிராத காரணத்தால் இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பேசுவதாக உணருவீர்கள். இப்பிரச்சினையை நீங்கள் எதிர்ப்பட்டால் செயற்கைக்கோள் இணைப்பு மூலம் பேசுகிறீர்கள் என புரிந்துகொள்ளலாம். ஆனால், அவருடன் இன்னொரு முறை பேசுகையில் நேர தாமதம் ஏற்படவில்லை என்றால், கடலடி கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம். உலகின் மறு முனைக்கு உங்களை எவ்வாறு இணைப்பது என்பதை திரை மறைவில், சிக்கல்வாய்ந்த தொலைபேசி பின்னலமைப்பே தீர்மானிக்கிறது.

கடலடி கேபிள்கள், தரை நிலையங்கள், செயற்கைக்கோள்கள் ஆகியவை உட்பட்ட சிக்கலான தொலைபேசி பின்னலமைப்பை பராமரிக்க பலரின் திறமைகளும் உழைப்பும் தேவை. இவையே நமக்கு சௌகரியமான தகவல் தொடர்பை ஏற்படுத்தி தருகின்றன. ஆகவே, அடுத்த முறை நண்பருடன் தொலைபேசியில் உரையாடுகையில், உங்களுக்கு இணைப்பை ஏற்படுத்திக் கொடுக்க செய்யப்பட்டுள்ள அனைத்தைப் பற்றியும் ஏன் சற்று சிந்தித்து பார்க்கக்கூடாது? (g01 5/22)

[அடிக்குறிப்புகள்]

a தொலைபேசி ஒயரில் கொஞ்சம் மின்னோட்டம் எப்போதுமே இருக்கும், தொலைபேசி மணி ஒலிக்கையில் அதன் அளவு அதிகரிக்கும். ஆதலால் சந்திப்பு பெட்டியின் உட்புறத்தையோ அதோடு இணைக்கப்பட்டுள்ள உலோக பாகங்களையோ தொடுவது ஆபத்தானது.

b 1866-⁠ல், தந்தி கேபிள் ஒன்று அட்லாண்டிக் கடலுக்கடியில் சென்று அயர்லாந்தையும் நியூபௌண்ட்லாந்தையும் வெற்றிகரமாக இணைத்தது.

[பக்கம் 20, 21-ன் படங்கள்]

(For fully formatted text, see publication)

ரேடியோ அலைகள்

அப்லிங்க்

டௌன்லிங்க்

[பக்கம் 20, 21-ன் படங்கள்]

(For fully formatted text, see publication)

கடலடி கேபிள்கள்

செல்லுலர் தொலைபேசி

[பக்கம் 20-ன் படம்]

நவீன கண்ணாடி இழை கேபிள்கள் 20 கோடி தொலைபேசி இணைப்புகளை தாங்கிச் செல்ல முடியும்

[பக்கம் 21-ன் படம்]

விண்வெளி ஓடத்தின் பயணிகள் இன்டெல்சாட் VI-ஐ பழுது பார்க்கின்றனர்

[படத்திற்கான நன்றி]

NASA photo

[பக்கம் 21-ன் படம்]

கப்பல்களே கேபிள்களை போட்டு அவற்றை பாதுகாக்கின்றன

[படத்திற்கான நன்றி]

Courtesy TyCom Ltd.