Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளின் பலப்பிரயோகம்—நியாயமானதா?

கடவுளின் பலப்பிரயோகம்—நியாயமானதா?

பைபிளின் கருத்து

கடவுளின் பலப்பிரயோகம்​—⁠நியாயமானதா?

கொடூரமாக பலப்பிரயோகம் செய்வது மனித சரித்திரத்தின் பிரிக்க முடியாத பாகமாக இருந்திருக்கிறது. 20-⁠ம் நூற்றாண்டில் மட்டுமே ஏறக்குறைய 17 கோடி மக்கள் தங்களுடைய அரசியல் ஆட்சிமுறையாலேயே கொல்லப்பட்டுள்ளனர் என ஒரு மதிப்பீடு கூறுகிறது. பைபிள் மிக துல்லியமாக சுட்டிக்காட்டுகிறபடி, மனிதன் மற்றொரு மனிதனை ஆள்வது எப்போதும் கேட்டிற்கே வழிநடத்தியுள்ளது.​—பிரசங்கி 8:9.

மனிதன் கொடூர பலத்தை தவறாக உபயோகித்திருப்பதால், எதிரிகளை அழிக்க கடவுள் தம் பலத்தை உபயோகிப்பது சரியா என சிலர் கேள்வி எழுப்பலாம். யூதர்கள், கடவுள் கொடுத்த கட்டளையினால்தானே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் வாழ்ந்த கானானியர்களை தாக்கி, கொன்றுபோட்டனர்? (உபாகமம் 20:16, 17) எதிர்க்கும் அரசாங்கங்கள் அனைத்தையும் நொறுக்கி நிர்மூலமாக்க போவதாக கடவுளே கூறவில்லையா? (தானியேல் 2:44) ஆகவே, கடவுள் பலப்பிரயோகம் செய்வது எப்போதுமே நியாயமானதா என உண்மை மனதுள்ள சிலர் யோசித்திருக்கின்றனர்.

பலத்தை தவறாக உபயோகிப்பது

பலத்தை உபயோகிக்கும் திறன் ஓர் அரசாங்கத்தின் இன்றியமையாத பண்பு என்பதை புரிந்துகொள்வது அத்தியாவசியமானது. தனது சட்டங்களை செயல்படுத்த இயலாத ஒரு நிர்வாகம் வலுவிழந்தது என்றே சொல்லலாம். உதாரணமாக, துர்ப்பிரயோகம் நடப்பதாக அறிக்கைகளை வாசித்த போதிலும்கூட, போலீஸ் துறையின் பாதுகாப்பு வேண்டாமென யாராவது மனதார கூறுவார்களா? அதிகாரம் படைத்த நீதித்துறை தேவை என்பதை புத்திசுவாதீனம் உள்ள எவராவது மறுப்பாரா?

வன்முறையை வெறுப்பதற்கு பெயர்பெற்றிருந்த மோகன்தாஸ் காந்தி ஒருமுறை இவ்வாறு கூறினார்: “வெறிபிடித்த ஒருவன் கையில் கத்தியோடு திரிகிறான் என வைத்துக்கொள்வோம். வழியில் பார்க்கும் அனைவரையும் அவன் கொன்று போடுகிறான்; ஆனால் அவனை உயிரோடு பிடிக்க ஒருவருமே துணியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் அந்தப் பைத்தியக்காரனை எவராவது கொன்றுபோட்டால் சமூகத்தினர் அவருக்கு மிகுந்த நன்றி தெரிவிப்பர், அவரை தயாள குணமுள்ளவராக கருதுவர்.” ஆம், சில சந்தர்ப்பங்களில் பலத்தை உபயோகிக்க வேண்டும் என்பதை காந்தியும் ஒப்புக்கொண்டார்.

பலத்தை உபயோகிக்கும் திறன் ஸ்திரமான எந்தவொரு சமூகத்திற்கும் அவசியம் என்பது தெளிவாக உள்ளது. பலப்பிரயோகத்தை எதிர்த்து மக்கள் கூக்குரலிடுகையில் பொதுவாக பலத்தை துர்ப்பிரயோகம் செய்வதையே எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள்.​—பிரசங்கி 4:1-3.

“அவர் வழிகளெல்லாம் நியாயம்”

கடவுள் தமது வல்லமையை துர்ப்பிரயோகம் செய்ததாக கடந்தகால நிகழ்ச்சிகளில் ஒரு சான்றுகூட இல்லை. அவர் ஆளுகையிலும் கண்மூடித்தனமாக பலத்தை உபயோகிப்பது கிடையாது. அன்பினால் தூண்டப்பட்டு நாம் அவரை வணங்கும்படியே அவர் விரும்புகிறார். (1 யோவான் 4:18, 19) உண்மையில், பலப்பிரயோகத்தை தவிர்ப்பதற்கு நியாயமான வழி இருந்தால் கடவுள் அதை தவிர்க்கிறார். (எரேமியா 18:7, 8; 26:3, 13; எசேக்கியேல் 18:32; 33:11) பலத்தை உபயோகிக்க அவர் தீர்மானிக்கையில், திருந்த விரும்புகிறவர்களுக்கு உதவியாக எப்போதுமே ஏராளமான எச்சரிக்கைகளை கொடுக்கிறார். (ஆமோஸ் 3:7; மத்தேயு 24:14) இப்படியெல்லாம் செய்கிறவரை குருட்டுத்தனமான, கொடூரமான கடவுள் என்று சொல்ல முடியுமா?

கடவுளின் பலப்பிரயோகத்திற்கும் மனிதர்கள் அநியாயமாக வல்லமையை துர்ப்பிரயோகம் செய்வதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. யெகோவாவை பற்றி, “அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்” என மோசே கூறுகிறார். (உபாகமம் 32:4) கடவுளுடைய அரசாங்கம், யாருக்கு அதிக அதிகாரமுள்ளது என்பதன் அடிப்படையில் அமைந்த மனித கொடுங்கோல் ஆட்சியாளர்களின் அரசாங்கங்களை போலல்ல. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவருடைய பரிபூரண அன்பு, ஞானம், நீதி ஆகியவற்றிற்கு இசைவாகவே அவர் பலத்தை உபயோகித்திருக்கிறார்.​—சங்கீதம் 111:2, 3, 7; மத்தேயு 23:37.

உதாரணமாக, பல வருடங்கள் எச்சரிக்கை கொடுத்த பிறகே ஜலப்பிரளயத்தின்போது கடவுள் துன்மார்க்கரை அளித்தார். யார் வேண்டுமானாலும் பேழையின் பாதுகாப்பை ஏற்றுக்கொண்டு தப்பிப்பிழைத்திருக்கலாம். ஆனால் எட்டு பேர் மட்டுமே அவ்வாறு செய்தார்கள். (1 பேதுரு 3:19, 20; 2 பேதுரு 2:5) சீர்கெட்ட கானானியர்கள் மீதான கடவுளுடைய நியாயத்தீர்ப்பை யோசுவாவின் நாட்களில் இஸ்ரவேலர்கள் நிறைவேற்றினார்கள்; அந்த நியாயத்தீர்ப்போ 400-⁠க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது! (ஆதியாகமம் 15:13-21) அந்த காலம் முழுவதும், இஸ்ரவேலர்களே கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் என்பதற்கான சக்திவாய்ந்த அத்தாட்சிகளை கானானியர்கள் கவனியாமல் இருந்திருக்க முடியாது. (யோசுவா 2:9-21; 9:24-27) இருந்தாலும், கிபியோனியர்கள் தவிர வேறு எந்த கானானிய தேசமுமே இரக்கத்தை நாடவும் இல்லை சமாதானம் பண்ணிக்கொள்வதற்கான வாய்ப்பை உபயோகித்துக் கொள்ளவும் இல்லை. மாறாக, கடவுளுக்கு எதிராக தங்கள் இருதயங்களை கடினப்படுத்தவே அவர்கள் தெரிவு செய்தனர்.​—யோசுவா 11:19, 20.

கடவுளுக்கு அதிகாரம் உள்ளது

கடவுளின் பலப்பிரயோகத்தை புரிந்துகொள்ள முயலுகையில், அவருக்கு முன்பாக நமது நிலையை குறித்த அடிப்படை சத்தியத்தை நாம் மறந்துவிடக் கூடாது. “நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்” என ஏசாயா தீர்க்கதரிசி மனத்தாழ்மையோடு ஒப்புக்கொண்டார். (ஏசாயா 64:8) கடவுளே சர்வலோகத்தின் சிருஷ்டிகராக இருப்பதால் அவர் தம் விருப்பப்படி பலத்தை உபயோகிக்கலாம் என்பது தெளிவாக உள்ளது. கடவுளுடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்பவர்களாக நாமும் சாலொமோனைப் போல இவ்வாறு கூறலாம்: “ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?”​—பிரசங்கி 8:4; ரோமர் 9:20, 21.

கடவுளே சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகராக இருப்பதால் பூமியிலுள்ள ஜீவராசிகளுக்கு உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் அவருக்கு அதிகாரம் உள்ளது. சட்டப்பூர்வமாகவும் சரி அறிவுப்பூர்வமாகவும் சரி கடவுளின் பலப்பிரயோகத்தை கேள்வி கேட்கும் தகுதி மனிதர்களுக்கு இல்லை. மனிதன் தனது எண்ணத்தை கடவுளுடைய எண்ணத்திற்கு இசைவாக கொண்டுவர கற்றுக்கொள்ள வேண்டும். “உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது” என்று யெகோவா கேட்டார்.​—எசேக்கியேல் 18:29; ஏசாயா 45:9.

யெகோவாவின் நீதியுணர்வும் மக்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்புமே, வல்லமையை துர்ப்பிரயோகம் செய்பவர்களையும் மற்றவர்களின் உரிமைகளை இரக்கமின்றி மிதிப்பவர்களையும் பூமியிலிருந்து அழித்துப்போட அவரை தூண்டும். இந்த பலப்பிரயோகம் காரணமாக சமாதான பிரியர்களுக்கு முழு நிறைவை தரும் சூழ்நிலைகள் இந்த பூமியில் நிறுவப்படும். (சங்கீதம் 37:10, 11; நாகூம் 1:9) இவ்வாறு கடவுளுடைய அரசாங்கமே நியாயமானது என என்றென்றுமாக நிரூபிக்கப்படும்.​—வெளிப்படுத்துதல் 22:12-15.(g01 11/8)