Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஃபங் ஷ்வே—கிறிஸ்தவர்களுக்கு உரியதா?

ஃபங் ஷ்வே—கிறிஸ்தவர்களுக்கு உரியதா?

பைபிளின் கருத்து

ஃபங் ஷ்வே—கிறிஸ்தவர்களுக்கு உரியதா?

ஆசியாவில் அதன் அடிப்படையிலேயே கல்லறைக்கு இடங்களை தெரிவு செய்கிறார்கள். அதன்படியே கட்டடங்களை வடிவமைத்து, அலங்கரிக்கிறார்கள். அதை வைத்தே சொத்து வாங்குகிறார்கள், விற்கிறார்கள். சீன மொழியில் அதற்கு ஃபங் ஷ்வே என்று பெயர்; அது ஒருவித ஜியோமான்சி அல்லது குறி சொல்லுதல் ஆகும். ஃபங் ஷ்வே ஆசியாவில் பல நூற்றாண்டுகள் பிரபலமாக இருந்தபோதிலும் சமீபத்தில் மேலை நாடுகளில் அதன் செல்வாக்கு அதிகரித்துள்ளது. வானளாவிய கட்டடங்கள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றை வடிவமைக்க சில கட்டடக்கலைஞர்கள் அதையே உபயோகிக்கின்றனர். தங்கள் வீடுகளை அலங்கரிக்க சில இல்லத்தரசிகள் அதை பயன்படுத்துகின்றனர். ஏராளமான புத்தகங்களும் இன்டர்நெட் வெப் சைட்டுகளும் அதை ஆகா ஓகோ என பாராட்டி பேசுகின்றன, அதை செய்யவும் கற்பிக்கின்றன.

இது இவ்வளவு பிரபலமாவதற்கு காரணம் என்ன? ஃபங் ஷ்வே, “மேம்பட்ட வாழ்க்கை, அருமையான ஆரோக்கியம், மனம் பொருந்திய மணவாழ்க்கை அல்லது கூட்டணிகள், கொழிக்கும் செல்வம், மன அமைதி” போன்றவற்றை தரும் என அதன் ஆதரவாளர் ஒருவர் கூறுகிறார். அவையெல்லாம் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் இந்த பழக்கம் உண்மையில் எப்படிப்பட்டது, கிறிஸ்தவர்கள் அதை எவ்வாறு கருத வேண்டும்?

அது என்ன?

ஃபங் ஷ்வே என்ற சீன வார்த்தைகள் “காற்று-நீர்” என்றே அர்த்தப்படுகின்றன. ஃபங் ஷ்வேயின் வேர்கள், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் முன்பு அநேக கிழக்கத்திய தத்துவங்கள் உருவான சமயத்திற்கு பின்னோக்கி செல்கின்றன. அதில் ஒன்று இன், யாங் (இருளும் வெளிச்சமும், குளிரும் சூடும், எதிர்மறையும் நேர்மறையும்) சமநிலையில் நம்பிக்கையாகும். இன், யாங் கோட்பாடு, “காற்று” அல்லது “சுவாசம்” என அர்த்தப்படும் ச்சீ என்ற கருத்தோடு இணைக்கப்பட்டது. இன், யாங், ச்சீ, இவற்றோடு மரம், நிலம், நீர், நெருப்பு, உலோகம் ஆகிய பஞ்ச பூதங்களும் ஃபங் ஷ்வே கோட்பாட்டின் பிரிக்க முடியாத பாகங்களாகும். ஒவ்வொரு நிலப்பரப்பிலும் வல்லமையுள்ள ஆற்றல் கோடுகள் செல்வதாக ஃபங் ஷ்வே பக்தர்கள் நம்புகின்றனர். நிலத்திலும் ஆகாயத்திலும் உள்ள இந்த ஆற்றல்கள் அல்லது ச்சீ, எந்த இடத்தில் சமநிலையை அடைகின்றன என்பதை துல்லியமாக கணிப்பதே இதன் குறிக்கோளாகும். நிலப்பரப்பையே மாற்றுவதன் அல்லது ஓரிடத்திலுள்ள கட்டடத்திற்குள் மாற்றங்களை செய்வதன் மூலம் இந்த சமநிலை ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு சமநிலை ஏற்படுத்துவது அங்கு வேலை செய்பவர்களுக்கு அல்லது வசிப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும் என நம்பப்படுகிறது.

பொதுவாக, ஃபங் ஷ்வே சாஸ்திரிகள் ஜியோமான்டிக் திசைக் கருவி ஒன்றை பயன்படுத்துகின்றனர். a இது, சோதிட வரைபடத்தின் மத்தியில் வைக்கப்பட்ட ஒரு சிறிய காந்த திசைக்காட்டியாகும். இந்த திசைக்காட்டியில் ஒரே மையமுள்ள பல வட்டங்கள் உள்ளன, அவை கோடுகளால் பிரிக்கப்படுகின்றன. இந்த திசைக் கருவியில், நட்சத்திர கூட்டங்கள், பருவ காலங்கள், சூரியனின் சுழற்சி காலங்கள் போன்ற தகவல்கள் அடங்கியிருக்கும். ஒரு நிலத்தை அல்லது கட்டடத்தை ஆராய்கையில் இந்தக் கருவியால் பல அளவீடுகள் கணக்கிடப்படுகின்றன. அந்த கருவியிலுள்ள முள் வெளிப்புறத்திலுள்ள கோடுகளிலும் வட்டங்களிலும் எங்கே குறுக்கிடுகிறது என்பதை பார்த்து, அதற்கு ஏற்றவாறு அந்த இடத்தை “குணப்படுத்த” என்ன தேவை என்பதை ஃபங் ஷ்வே சாஸ்திரி தீர்மானிக்கிறார்.

ஒரு இடத்தை சமநிலைப்படுத்த, அருகிலுள்ள நிலத்தின் அமைப்பு, நீர்நிலைகள், வடிகால் குழாய்கள், கட்டடத்தில் ஜன்னல்களும் கதவுகளும் அமைந்துள்ள இடம் ஆகிய அனைத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். உதாரணமாக, கனடாவிலுள்ள ஒரு கடைக்காரர், தன் கடையின் கதவுகள் அமைந்துள்ள இடத்தை “சரிசெய்ய” பின்பக்க கதவிற்கு மேலே ஒரு கண்ணாடியை தொங்கவிட்டார். அதைப் போலவே, ஒரு கட்டடத்தை அல்லது அறையை சமநிலைப்படுத்த, அதிலுள்ள செடிகளை அல்லது சாமான்களை நகர்த்த, ஒரு படத்தை மாற்ற, அசைந்தால் ஒலியெழுப்பும் மணியை தொங்கவிட அல்லது மீன் தொட்டியை வைக்க குறிசொல்லும் சாஸ்திரி ஆலோசனை கூறலாம்.

கிறிஸ்தவ நோக்குநிலை

அநேக நூலகங்கள், ஃபங் ஷ்வே பற்றிய புத்தகங்களை சோதிடம் மற்றும் குறிசொல்லுதல் சம்பந்தப்பட்ட புத்தகங்களோடு வரிசைப்படுத்துவது குறிப்பிடத்தக்கது. உண்மையில், ஜியோமான்சி என்பதை படங்கள் அல்லது கோடுகள் அல்லது நில அமைப்புகளை வைத்து குறி சொல்லுதல் என்றே சில புத்தகங்கள் கூறுகின்றன. ஆகவே, ஃபங் ஷ்வேயும் ஜியோமான்சியின் மற்ற வகைகளும் குறி சொல்லுதலின் பல்வேறு முகங்களே என்பது பரவலாக ஒப்புக்கொள்ளப்படுகிறது. இவை குறி சொல்வதையும் ஆவியுலக பழக்கங்களையும் உட்படுத்துகின்றன, இவை மனிதவர்க்கத்திற்கு புதிதல்லவே.

பொ.ச.மு. 15-⁠ம் நூற்றாண்டில் இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு கடைசியில் கானான் தேசத்திற்கு வந்தபோது அந்த இரண்டு தேசங்களிலும் அனைத்து விதமான குறி சொல்லுதலும் பிரபலமாயிருந்தன. ஆகவே, உபாகமம் 18:14-⁠ல் பதிவு செய்யப்பட்டபடி மோசே மூலம் கடவுள் இவ்வாறு கூறினார்: “நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள் பார்க்கிறவர்களுக்கும் குறி சொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவு கொடார்.” எகிப்திலும் கானானிலும் நிலவிய பல விதமான குறி சொல்லுதல் பூர்வ பாபிலோனில் ஆரம்பித்தன. பாபிலோனியர்களின் மொழிகளை யெகோவா குழப்பிவிட்டபோது அவர்கள் மற்ற இடங்களுக்கு சிதறிப்போனார்கள், பாபிலோனிய குறி சொல்லுதலோடும் ஆவியுலக தொடர்போடும் சம்பந்தப்பட்ட பழக்கங்களையும் தங்களோடு எடுத்து சென்றார்கள்.​—ஆதியாகமம் 11:1-9.

பின்வருமாறு கூறுவதன் மூலம், மற்ற தேசங்களின் குறி சொல்லும் பழக்கத்தை இஸ்ரவேல் பின்பற்றக்கூடாது என யெகோவா திட்டவட்டமாகவும் திரும்பத் திரும்பவும் எச்சரித்தார்: “குறி சொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், . . . உங்களுக்குள்ளே இருக்க வேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.” (உபாகமம் 18:9-12; லேவியராகமம் 19:26, 31) குறி சொல்பவர்கள் நிச்சயமாக கொல்லப்பட வேண்டும்.​—யாத்திராகமம் 22:18; லேவியராகமம் 20:27.

குறி சொல்வதை கடவுள் ஏன் அவ்வளவு வன்மையாக கண்டித்தார்? ‘குறிசொல்ல ஏவுகிற பேய்’ பிடித்த ஒரு பெண்ணை பற்றி அப்போஸ்தலர் 16:16-19 (NW) கூறுகிறது. ஆம், குறி சொல்லுதல் பேய் வணக்கத்தோடு பிரிக்க முடியாத தொடர்புடையது. ஆகவே, ஒருவர் எந்த விதமான குறி சொல்லுதலை நாடினாலும் அவர் சாத்தானோடும் அவனுடைய பேய்களோடும் தொடர்புகொள்கிறார்! அது ஆவிக்குரிய அழிவுக்கே வழிநடத்தும்.​—2 கொரிந்தியர் 4:4.

கிழக்கத்திய அல்லது மேற்கத்திய அலங்கரிப்பிலும் இயற்கை நிலக்காட்சிகளிலும் பின்பற்றப்பட்ட சில பிரபலமான ஸ்டைல்களில் ஃபங் ஷ்வே போன்ற பொய் மத பழக்கங்களின் செல்வாக்கு ஆரம்பத்தில் இருந்திருக்கலாம். ஆனால், காலப்போக்கில் அந்த ஸ்டைல்கள் அவற்றின் மதப் பின்னணியை முற்றிலும் இழந்து போயிருக்கலாம். இருந்தாலும், எதிர்காலத்தை பற்றி குறி சொல்ல, அல்லது அதிர்ஷ்டத்தை அள்ளித் தர அல்லது நல் ஆரோக்கியத்தை அனுபவிக்க ஃபங் ஷ்வேயை உபயோகிப்பது கடவுளுடைய சட்டத்தை நேரடியாக மீறுவதாகும். அவ்வாறு செய்வது, “அசுத்தமான” எதையும் தொட வேண்டாம் என்ற பைபிளின் தெளிவான கட்டளையை மீறுவதாகும்.​—2 கொரிந்தியர் 6:14-18. (g01 12/08)

[அடிக்குறிப்பு]

a நிலப்பகுதிகளை ஆராய உதவுவதில் சிலர் கம்ப்யூட்டர்களை உபயோகிப்பதன் மூலம் மேற்கத்திய நாடுகளில் ஃபங் ஷ்வேக்கு விஞ்ஞானப்பூர்வ தோற்றத்தை கொடுக்கவும் முயன்றிருக்கின்றனர்.

[பக்கம் 29-ன் படம்]

ஜியோமான்டிக் திசைக் கருவி

[படத்திற்கான நன்றி]

பக்கங்கள் 2-⁠ம், 29-⁠ம்: Hong Kong Tourism Board