Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

எமது வாசகரிடமிருந்து

சூரியன் சூரியன், சந்திரன், நம்முடைய அழகிய பூமி ஆகியவற்றிற்காக நான் எப்போதும் யெகோவாவுக்கு நன்றி சொல்வேன், ஆனால் பொதுவாக அந்தப் படைப்புகளுக்கு அந்தளவு கவனம் செலுத்தியதில்லை. “சூரியன் அதன் விநோதமான இயல்புகள்” (ஏப்ரல் 8, 2001) என்ற கட்டுரையை வாசித்த பின்பு கடவுளுடைய தாராளமான, மதிப்புமிக்க பரிசுகளுக்காக இருதயப்பூர்வமாக அவருக்கு நன்றி சொன்னேன்.

பி. பி., ஐக்கிய மாகாணங்கள் (g01 12/08)

எனக்கு ஒன்பது வயது. சூரியனைப் பற்றிய கட்டுரையைப் போல ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகளை எழுதுவதற்காக நன்றி. விழித்தெழு! பத்திரிகையை வாசிக்கையில் உண்மையிலேயே நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன்.

ஏ. பி., ஐக்கிய மாகாணங்கள் (g01 12/08)

தலைமுடி நான் சிகை அலங்கார வேலை செய்கிறேன். “உங்கள் தலைமுடியை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்” (மே 8, 2001) என்ற கட்டுரையை வாசித்த போது அதிக சந்தோஷமடைந்தேன். நான் வேலை பார்ப்பவரிடத்தில் ஒரு பிரதியைக் கொடுத்தேன். அந்தக் கட்டுரை அவர்களுக்கும் பிடித்துப் போனது. அங்கு வேலை செய்யும் மற்ற பெண்களிடமும் அவர்கள் அதை காட்டினார்கள். நடைமுறையான தகவல் அளித்ததற்கு உங்களுக்கு நன்றி.

டி. எல்., ருமேனியா (g01 12/08)

ஆங்கிலத்தில் முன்பு வெளிவந்த “அலபீஷியா​—⁠முடி உதிர்வதால் ஏற்படும் அவலம்” (ஏப்ரல் 22, 1991) என்ற கட்டுரையைப் பற்றி அடிக்குறிப்பில் குறிப்பிட்டிருந்ததற்கு நன்றி. கடந்த 17 வருடங்களாக இந்தப் பிரச்சினையை சகித்து வந்திருக்கிறேன். இந்த உலகம் தோற்றத்திற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது; கொஞ்சம் வேறுபட்டிருப்பவர்களை அது ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அப்படியிருக்கையில் யெகோவாவும் அவருடைய அமைப்பும் என்னை ஆதரிப்பதை அறிவது ஆறுதல் அளிக்கிறது.

எம். ஜி., இத்தாலி (g01 12/08)

தாத்தா பாட்டி “இளைஞர் கேட்கின்றனர் . . . ஏன் தாத்தா பாட்டியோடு பழக வேண்டும்?” (மே 8, 2001) என்ற கட்டுரைக்கு என் நன்றி. பாட்டியம்மா என்றால் எனக்கு உயிர், அவர்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். என் அப்பாவும் அம்மாவும் விவாகரத்து செய்தபோது, நான் கேள்வி மேல் கேள்வி கேட்டேன், எப்போதும் அழுதுகொண்டே இருந்தேன். எனக்கு உதவ என் பாட்டியம்மா எப்போதும் என்னருகே இருந்தார்கள். பிரசங்க ஊழியத்திற்கு என்னை அழைத்து செல்வார்கள், ஊழியத்திடம் பிரத்தியேக அன்பை எனக்குள் ஊட்டி வளர்த்தார்கள். அவர்களைப் போலவே நானும் நான்கு வருடத்திற்கு முன்பு முழுநேர ஊழியத்தில் காலடியெடுத்து வைத்திருக்கிறேன். அவர்களுக்கு அல்ஸைமர் நோய் வந்து என்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாத நிலையில் இருக்கையிலும் பரதீஸைப் பற்றிய பைபிள் வசனங்களை நான் படித்துக் காட்டுகையில் அவர்களுடைய கண்கள் பிரகாசித்தன. 2000, செப்டம்பரில் அவர்கள் உயிர்நீத்தார்கள். தாத்தா பாட்டியின் அருமை பெருமைகளை இளைஞர்களாகிய எங்களுக்குக் கற்பிப்பதற்காக உங்களுக்கு இதயங்கனிந்த நன்றி.

சி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g01 12/22)

என் பெற்றோர் விவாகரத்து செய்து பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. என் அம்மாவுக்கு காட்டும் உண்மைத் தன்மை என நானே வகுத்துக்கொண்ட கொள்கையால் என் அப்பாவின் குடும்பத்தாருடன் எந்த ஒட்டுறவும் வைத்துக் கொள்ளவில்லை. இந்தக் கட்டுரைகளைப் படித்த பின்பு, அப்பா வழி தாத்தா பாட்டியுடன் நல்லுறவை அனுபவித்து மகிழ்வதன் முக்கியத்துவத்தையும் பயன்களையும் புரிந்துகொண்டேன். அந்தக் கட்டுரைகளினால் அந்த உறவை வளர்த்துக்கொள்ள உதவும் பைபிள் சார்ந்த ஆலோசனைகள் இப்போது என் கைவசம் உள்ளன.

ஜி. வி., ஐக்கிய மாகாணங்கள் (g01 12/22)

என்னுடைய தாத்தா பாட்டிமார் நால்வரும் கிறிஸ்தவர்கள் அல்ல; ஆனாலும் அவர்களுடன் சுமுகமான உறவை அனுபவிக்கிறேன். எனக்கு சபையில் ஒரு “பாட்டியம்மா”வும் இருக்கிறார்கள்; அவர்கள் 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ சகோதரி. எனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் பைபிளை வாசித்து காட்டி, என்னை உற்சாகப்படுத்துவார்கள். அவ்வப்போது என் கையைப் பிடித்துக்கொள்வார்கள் அல்லது என் கழுத்தில் கைபோட்டுக்கொள்வார்கள். சிலசமயங்களில் எங்களுக்கு மத்தியில் வயது வித்தியாசம் இருப்பதே மறந்துபோகும்.

எம். கே., ஜப்பான் (g01 12/22)