Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மயன்மார் “தங்க நாடு”

மயன்மார் “தங்க நாடு”

மயன்மார்—“தங்க நாடு”

மயன்மாரிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

ஆசிய அண்டை நாடுகளுடன் இயற்கை அரண்களாக திகழும் மலைத்தொடர்களுக்கு இடையே அழகாக கொலுவீற்றிருக்கிறது இந்த “தங்க நாடு.” தென்மேற்கில் வங்காள விரிகுடாவும் அந்தமான் கடலும் 2,000 கிலோமீட்டருக்கும் அதிக நீளமான அதன் கடற்கரையில் வந்து மோதுகின்றன. அதன் மேற்கே வங்காள தேசமும் இந்தியாவும், வடக்கே சீனாவும், கிழக்கே லாவோஸும் தாய்லாந்தும் உள்ளன. அது மடகாஸ்கரைவிட சற்று பெரிதாகவும் வட அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாகாணத்தைவிட சிறிதாகவும் உள்ளது. அது எந்த நாடு? அதுதான் இன்றைய மயன்மார், அன்றைய பர்மா.

ஆரம்பத்தில் அதில் குடியேறியவர்கள் அதை தங்க நாடு என அழைத்தார்கள். மயன்மாரில் செல்வத்தை அள்ளித் தரும் அநேக இயற்கை வளங்களின் பட்டியல் இதோ: பெட்ரோலியமும் இயற்கை வாயுவும், தாமிரம், தகரம், வெள்ளி, டங்ஸ்டன், இன்னும் மற்ற கனிமப் பொருட்கள் மற்றும் நீலக்கற்கள், மரகதக்கற்கள், செந்நிறக் கற்கள், பச்சை மணிக்கல் போன்ற விலையுயர்ந்த கற்கள். இன்னுமுள்ள பொக்கிஷங்களுள், தேக்கு, ரோஸ்வுட், படெளக் போன்ற அரிய மரங்கள் உள்ள வெப்பமண்டல மழைக் காடுகளும் அடங்கும். இந்தக் காடுகள் குரங்குகள், புலிகள், கரடிகள், நீர் எருமைகள், யானைகள் போன்ற அநேக காட்டு விலங்குகளின் குடியிருப்பும்கூட. ஆனால் தங்க நாட்டின் தலைசிறந்த செல்வம் மணி மணியான அதன் மக்களே.

மயன்மார் மக்கள்

பொதுவாகவே சாந்தமும் அமைதியுமிக்க மயன்மார் மக்கள் நன்னடத்தை மிக்கவர்களும், உபசரிக்கும் குணம் படைத்தவர்களும் ஆவர். வரும் விருந்தாளிகளை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துபவர்கள். பொதுவாக பிள்ளைகள் பெரியவர்களில் ஆண்களை ‘அங்கிள்’ என்றும் பெண்களை ‘ஆண்டி’ என்றும் அழைக்கின்றனர்.

மயன்மாருக்கு விஜயம் செய்பவர்கள் பெரும்பாலும் வயதானவர்களின் வழவழப்பான முகத்தைக் குறித்து பாராட்டிப் பேசாமல் இருப்பதில்லை. இந்த தோலின் இளமைக்குக் காரணம் தனகா மரத்திலிருந்து பெற்ற பிரபலமான, வெளிர் பொன்னிறமுள்ள முக ஒப்பனைப் பொருளான தனகாதான் என்கிறார்கள் பெண்கள். உறுதியான, தட்டையான கல்லில் துளி தண்ணீர் சேர்த்து இந்த மரத்துண்டை அரைத்து, மென்மையான பசையை பெண்கள் தயாரிக்கிறார்கள்; அதை கலாரசனையோடு முகம் முழுவதும் அவர்கள் தீட்டிக்கொள்வார்கள். எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி, குளிர்ச்சி ஊட்டுவதுடன் இந்த தனகா கடுமையான, வெப்பமண்டல சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாக்கும் பாதுகாவலனாகவும் விளங்குகிறது.

மயன்மாரிலுள்ள ஆண்கள், பெண்கள் இருவருமே பொதுவாக அணியும் உடை லோஞ்சி; இது, சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள துணியின் இரண்டு ஓரங்களையும் இணைத்து எளிதில் தைக்கப்படுகிறது. ஒரு பெண், அதில் கால்களை நுழைத்து பாவாடை போல் மார்புக்குக் கீழே சுற்றிக்கொண்டு அதன் ஒரு நுனியை இடுப்பில் செருகிக்கொள்கிறாள். ஓர் ஆணோ, இரு முனைகளையும் சேர்த்து லூசாக இடுப்பின் முன்பக்கம் முடிந்துகொள்கிறார். அடக்கமான, இறுக்கமற்ற இந்த லோஞ்சி வெப்பமண்டலத்திற்கு வெகு பொருத்தமான உடை.

மயன்மாரிலுள்ளவர்கள் படுதிறமைசாலிகள்: பட்டு நெய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள், அணிகலன்களை செய்வதில் கைத்திறன்மிக்கவர்கள், மரசெதுக்கு வேலைப்பாடுகளில் வல்லவர்கள் என்பது மார்க்கெட்டுகளுக்குப் போனால் சொல்லாமலே புரியும். தேக்கு, படெளக், அத்தோடு மற்ற மரங்கள், மனதைக் கொள்ளைகொள்ளும் விதத்தில் மனிதர்களாக, புலிகளாக, குதிரைகளாக, நீர் எருமைகளாக, யானைகளாக அழகாக உருவெடுக்கின்றன. மேஜை அலங்கார பொருட்கள், அறை பிரிக்கும் தடுப்புகள், நாற்காலிகள் போன்ற சாதாரணமான பொருட்களும் சிக்கலான கலை நயமிக்க செதுக்கு வேலைப்பாடுகளுடன் மிளிர்கின்றன. ஆனால் பொருட்களை உண்மையிலேயே வாங்க விரும்பினால் பேரம்பேச தயாராக இருங்கள்!

மயன்மார் மக்கள், மெருகெண்ணெய் பூசப்பட்ட கிண்ணங்கள், பாத்திரங்கள், மூடிபோட்ட டப்பாக்கள் ஆகிய அழகான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதிலும் படுகில்லாடிகள். ஆனால் குறிப்பிட்ட வகையைச் சாராத புதுபுது டிசைன்களும் செதுக்கும் பாங்குகளுமே அவர்கள் தயாரிக்கும் பொருட்களை சிறப்புமிக்கதாக்குகின்றன. முதலாவதாக மூங்கிலிலிருந்து உரிக்கப்பட்ட மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி தேவையான வடிவம் பின்னப்படுகிறது. (உயர்ந்த ரக சாமான்கள் மூங்கிலும் குதிரைமுடியும் சேர்த்து பின்னப்படுகின்றன.) இந்த சட்ட அமைப்பில் கைவினைஞர் ஏழு முறை மெருகெண்ணெய்யை பூசுகிறார்; இந்த மெருகெண்ணெய், திட்சே (thisei) அல்லது லேக்வர் மரத்திலிருந்து பெற்ற எண்ணெய்யுடன் தூளாக பொடித்து, கருக்கிய விலங்கு எலும்பு சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

இந்த மெருகெண்ணெய் காய்ந்ததும் எஃகு எழுத்தாணியைப் பயன்படுத்தி அந்தப் பொருளின்மீது கைவினைஞர் வடிவத்தை செதுக்குகிறார். கொஞ்சம் சாயத்தை பூசி, பளபளவென மெருகேற்றிய பின்பு, ஒப்பற்ற கைவேலைப்பாடுமிக்க பொருளாக மட்டுமல்ல ஏதோவொரு விதத்தில் வீட்டிற்கு பயன்படும் பொருளாகவும் அது உருவாகிறது.

பெரும் மத செல்வாக்கு

மயன்மாரில் உள்ளவர்களில் கிட்டத்தட்ட 85 சதவீதத்தினர் புத்த மதத்தினர்; மீதமுள்ளவர்களில் பெரும்பாலோர் தங்களை முஸ்லீம்களென்றோ கிறிஸ்தவர்களென்றோ சொல்லிக் கொள்பவர்கள். தென்கிழக்கு ஆசியாவின் பெரும்பாலான பகுதியில் உள்ளதைப் போலவே மயன்மாரிலும் அநேகரின் வாழ்க்கையில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனினும், கண்டுகளிக்க வரும் பார்வையாளர்களுக்கு இங்குள்ள சில மத பழக்கவழக்கங்கள் புதுமையானவையாக இருக்கும்.

உதாரணமாக புத்த பிக்குகள் எந்த பெண்ணையும் தொடாதிருக்கும் நோன்பு இருப்பவர்கள். எனவே, மதிப்பு மரியாதை காரணமாக அந்தப் பிக்குகளுக்கு வெகு அருகில் செல்லாதபடி பெண்கள் பார்த்துக்கொள்கிறார்கள். மத பழக்கவழக்கங்கள் பஸ் பயணத்தையும் கட்டுப்படுத்துகின்றன. மேற்கத்திய நாட்டவர் ஒருவர் பஸ்ஸில் காணப்படும் பின்வரும் வாசகத்தைப் பார்த்து குழம்பிப் போவார்: “கிட்டத்தட்ட எத்தனை மணிக்குப் போய் சேருவோம் என டிரைவரிடம் தயவுசெய்து கேட்காதீர்கள்.” பொறுமையற்ற பயணிகளினால் டிரைவர்கள் பொறுமை இழந்துவிடுகிறார்களா? இல்லை. இப்படிப்பட்ட கேள்விகள் நாட்டுகளை (ஆவிகளை) அமைதியிழக்க செய்து பஸ் பயணத்தை தாமதப்படுத்தலாம் என்பது அங்குள்ள புத்த மதத்தினரின் நம்பிக்கை!

மயன்மாரின் வரலாறு

மயன்மாரின் ஆரம்ப கால வரலாறு தெளிவற்றிருக்கிறது. ஆனால் அண்டை அயல் நாடுகளிலிருந்து ஏராளமான இனப் பிரிவினர்கள் இங்கு வந்து குடியேறியதாக தோன்றுகிறது. பூர்வீக குடியினரான மான் இந்த நாட்டுக்கு “தங்க நாடு” என அர்த்தம் தரும் தூவூண்ணபூமி என்ற பெயரை சூட்டினர். இமயத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து திபெத்திய-பர்மிய மக்கள் வந்து இங்கு குடியேறினார்கள், தற்போதைய சீனாவின் தென்மேற்குப் பகுதியிலிருந்து தாய் இன மக்கள் இங்கு வந்திறங்கினார்கள். மேடுபள்ளங்கள் நிறைந்த மயன்மார் நாடு வெவ்வேறு இனப் பிரிவினர்களை பிரித்து வைத்தது; இதுவே எண்ணற்ற இன, மொழி பிரிவுகள் பிறக்க வழிசெய்தது.

19-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், புதிய குடியேற்ற நாடாக திகழ்ந்த இந்தியாவிலிருந்து வந்த ஆங்கிலேயர்கள் இங்கு தங்கள் கால்தடம் பதித்தார்கள். முதலில் தெற்குப் பகுதியில் குடியேறினார்கள், பின்னர் முழு நாட்டையும் ஆக்கிரமித்தார்கள். 1886-⁠ல் அப்போது பர்மா என்றழைக்கப்பட்ட மயன்மார் ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்த இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது கடுமையான போரின் மையமாக இது விளங்கியது, 1942-⁠ல் ஒருசில மாதங்களில் ஜப்பானிய படையினர் ஆங்கிலேயரை அங்கிருந்து விரட்டியடித்தார்கள். பிறகு இகழத்தக்க “மரண இரயில் பாதை” கட்டப்பட்டது. 400 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த இருப்புப் பாதை, பயணிக்க தகுதியற்ற காட்டுப் பாதை, மலைப்பிரதேசங்கள் வழியாக போடப்பட்டது; இது பர்மாவிலுள்ள தான்பையூஸயாட் நகரை தாய்லாந்திலுள்ள நாங் பிலடூக்குடன் இணைத்தது. உலோகப் பற்றாக்குறையின் காரணமாக மத்திய மலேயாவிலிருந்து (தற்போதைய மலேசியாவிலிருந்து) பெயர்த்தெடுக்கப்பட்ட பெரும்பாலான தண்டவாளங்கள் இங்கு கொண்டு வரப்பட்டன. கட்டுமானத்தின் ஒரு பகுதியான குவை ஆற்றின்மீது கட்டப்பட்ட பாலம், பின்னர் ஒரு பிரபல திரைப்படத்திற்கு அடிப்படையாய் அமைந்தது.

400 யானைகளையும் பயன்படுத்தி, 3,00,000-⁠க்கும் அதிகமான போர் கைதிகளும், இந்திய, பர்மீய படைசாரா மக்களும் இந்த இருப்புப் பாதையை கட்டி முடித்தனர். இந்தப் பணியில் லட்சக்கணக்கானோர் மாண்டார்கள். அடிக்கடி நேச நாடுகள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து படுபயங்கர தாக்குதல் நடத்தியதால் இந்த இரயில் பாதையை அந்தளவு பயன்படுத்த முடியவில்லை, இறுதியில் அது பயன்படுத்தப்படாமலே கைவிடப்பட்டது. பின்னர், இந்த இருப்புப்பாதையின் பெரும்பகுதி பெயர்த்தெடுக்கப்பட்டு வேறு இடங்களில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டது.

முடிவாக, ஆங்கிலேயர் போரிட்டு ஜப்பானியரிடமிருந்து மீண்டும் நாட்டை 1945-⁠ல் வெற்றிகரமாக கைப்பற்றினார்கள். ஆனால் அந்த ஆங்கிலேயரின் ஆட்சியும் நீடிக்கவில்லை. 1948, ஜனவரி 4-⁠ம் தேதி ஆங்கிலேய ஆட்சியிலிருந்து பர்மா சுதந்திரம் பெற்றது. 1989, ஜூன் 22-⁠ல் ஐக்கிய நாடுகள் சபை மயன்மார் என்ற இந்நாட்டின் புதிய பெயரை ஏற்றுக்கொண்டது.

தங்க தலைநகரங்களின் நாடு

நூற்றாண்டுகள் கடந்து செல்கையில் பற்பல தலைநகரங்கள் மயன்மாரின் ஆட்சிபீடமாக இருந்திருக்கின்றன. உதாரணமாக, மயன்மாரின் மையத்தில் மாண்டலே நகரம் உள்ளது, மக்கள் இதை தங்க நகரம் என அழைத்தார்கள். ஒவ்வொரு காலப்பகுதிக்கும் உரிய நூற்றுக்கணக்கான பகோடாக்கள் என்றழைக்கப்படும் கோபுரங்கள் ஆங்காங்கே அமைந்துள்ள, 5,00,000 பேர் குடியிருக்கும் இந்த நகரம் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பதற்கு முன்னிருந்த கடைசி தலைநகரமாகும். தனக்கும் தன் அரசிகளுக்கும் மீன்டான் அரசன் மாபெரும் அரண்மனையைக் கட்டிய போது 1857-⁠ல் மாண்டலே நகரம் ராஜ கௌரவிப்பை பெற்றது. 4 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள அந்த பழம்பெரும் நகரம், 8 மீட்டர் உயரமும் அடிப்பகுதியில் 3 மீட்டர் பருமனுமுள்ள கோட்டைச்சுவருக்கு உட்புறத்தில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி 70 மீட்டர் அகலத்தில் அகழி உள்ளது.

1885-⁠ல் மீன்டானின் வாரிசான டீபாவ் அரசனை ஆங்கிலேயர் இந்தியாவிற்கு நாடுகடத்தினார்கள்; ஆனால் அவர்கள் அரண்மனையை நாசப்படுத்தவில்லை. எனினும் இரண்டாம் உலக யுத்தம் அந்த அரண்மனையை விட்டுவைக்கவில்லை; அது முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டது. மனந்தளராத மயன்மார் மக்கள், அந்த அரண்மனையின் அற்புதமான மறுவுருவையும் செந்நிறத்திலும் பொன்னிலும் வேலைப்பாடுகள் மிக்க மர கட்டடங்களையும் அதே இடத்தில் மீண்டும் நிர்மாணித்தார்கள். பார்வையாளர்கள் இதைப் பார்வையிட தாராளமாக செல்லலாம்.

மாண்டலேயிலிருந்து 200 கிலோமீட்டர் கீழே பகான் உள்ளது. இதுவும் ஒரு முன்னாள் தலைநகரம். பொது சகாப்தத்தின் முதல் ஆயிரமாண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இது 11-⁠ம் நூற்றாண்டில் புகழ் ஏணியின் உச்சிக்கு உயர்ந்தது; 200 ஆண்டுகளே அந்த நிலையில் அதனால் நிலைத்திருக்க முடிந்தது. எனினும், சில குக்கிராமங்களிலும் அவற்றைச் சுற்றி நாலாபுறமும் நூற்றுக்கணக்கான பாழடைந்த கோவில்களும் பகோடாக்களும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. இவை பூர்வ புகழை நினைவுபடுத்தும் சின்னங்களாய் திகழ்கின்றன.

30 லட்சத்திற்கும் அதிகமானோர் வாழும் (1989 வரை அதிகாரப்பூர்வமாக ரங்கூன் என அறியப்பட்ட) இன்றைய தலைநகரான யாங்கூன், ‘பாம் பாம்’ என இரைந்து செல்லும் கார்களும் பஸ்களும் இரு பக்கமும் சன்னல்கள் இல்லாமல் திறந்தே இருக்கும் டாக்ஸிகளும் உள்ள உயிர்த்துடிப்புமிக்க நகரம். யாங்கூனின் அகலமான, வரிசையாக மரங்களுள்ள வீதிகளில் ஆங்கிலேயரின் குடியேற்ற நாட்களை நினைவுபடுத்தும் அநேக புராதன கட்டடங்கள் இருந்தாலும், இந்த நகரத்தின் வானளாவிய கட்டடங்களில் நவீன நாளைய உயர்ந்தோங்கிய ஹோட்டல்களும் அலுவலக கட்டடங்களும் தற்போது இருக்கின்றன.

இந்த வானளாவிய கட்டடங்களில், பொற்தகடு அடிக்கப்பட்ட 98 மீட்டர் உயரமுள்ள 2,500 வருட புராதன ஷ்வேதகோன் பகோடா உள்ளது; இது பூர்வத்தின் செல்வ செழிப்பையும் கட்டுமான கலைநுட்பத்தையும் பறைசாற்றுகிறது. அந்தக் கோபுரத்தை சுற்றிலும், சுமார் 7,000 வைரக்கற்களும் மற்ற விலைமதிப்புமிக்க கற்களும் பதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. அதன் உச்சியில் மகுடம் வைத்தாற்போல் 76 காரட் வைரம் பதிக்கப்பட்டுள்ளது. மயன்மாரிலுள்ள அநேக புராதன கட்டடங்களைப் போலவே ஷ்வேதகோனும், பூமியதிர்ச்சிகளாலும் போர்களாலும் ஆங்காங்கே இடிபட்டு, பல முறை குண்டுகளால் தாக்கப்பட்டதால் அதன் பெரும்பகுதி மீண்டும் கட்டப்பட்டுள்ளது.

எனினும், தங்கத்தால் ஆன சூலே பகோடாவே யாங்கூனில் உண்மையிலேயே மிகப் பிரபலமானது என சிலர் சொல்லுகின்றனர். 46 மீட்டர் உயரமுள்ள 2,000 வருடம் பழமையான சூலே பகோடா, நான்கு முக்கிய நகர வீதிகள் சந்திக்குமிடத்தில் பெரிய, தங்கத்தாலான போக்குவரத்து தீவாக அமைந்துள்ளது. இந்த பகோடாவை அணிகலனால் அலங்கரித்ததுபோல் சுற்றிலும் கடைகள் அமைந்துள்ளன.

ஆவிக்குரிய தங்கம்

1914-⁠ல் சர்வதேச பைபிள் மாணாக்கர்கள் (யெகோவாவின் சாட்சிகள் அப்போது அவ்வாறுதான் அழைக்கப்பட்டார்கள்) இருவர் அதிக மதிப்புமிக்க தங்கத்தை, அதாவது ஆவிக்குரிய தங்கத்தை மதித்தவர்களைத் தேடிக்கொண்டு இந்தியாவிலிருந்து ரங்கூனில் வந்து இறங்கினார்கள். 1928-லும் 1930-லும் அதிகமதிகமான மிஷனரிகள் இங்கு காலடி பதித்தனர். 1939-⁠க்குள் மூன்று சபைகளில் மொத்தம் 28 சாட்சிகள் இருந்தனர். 1938 வரை பம்பாயிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய இந்திய கிளை அலுவலகம் அங்கு நடந்த ஊழியத்தை மேற்பார்வை செய்தது. அப்போதிருந்து 1940 வரை ஊழியத்தை ஆஸ்திரேலிய கிளை அலுவலகம் கவனித்துக் கொண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, 1947-⁠ல் ரங்கூனில் மயன்மாருக்கான கிளை அலுவலகம் செயல்பட ஆரம்பித்தது.

1978, ஜனவரியில் கிளை அலுவலகம் இன்யா ரோடிற்கு மாற்றப்பட்டது. தலைமை அலுவலகமான இந்த மூன்று மாடி கட்டடம் மயன்மார் பெத்தேல் இல்லம் என அழைக்கப்படுகிறது. அதிலுள்ள 52 பெத்தேல் குடும்பத்தார் அந்த நாட்டில் சுறுசுறுப்பாக செயல்பட்டுவரும் சுமார் 3,000 சாட்சிகளின் தேவைகளை கவனித்துக்கொள்வதற்கு கடினமாக உழைக்கிறார்கள். மயன்மாரிலுள்ள பல்வேறு பழங்குடியினரின் மொழிகள் கிளை அலுவலகத்தில் செய்யப்படும் மொழிபெயர்ப்பு வேலையை முக்கியமானதாக ஆக்கியுள்ளன. யெகோவாவின் சாட்சிகளுடைய கடுமையான உழைப்பு, தங்க நாடு அனுபவிக்கும் அநேக செல்வங்களுடன் மற்றுமொரு ‘தங்கக் கட்டியை’ சேர்க்கிறது. (g01 12/08)

[பக்கம் 17-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

வங்காள தேசம்

இந்தியா

சீனா

லாவோஸ்

தாய்லாந்து

மயன்மார்

மாண்டலே

பகான்

யாங்கூன்

வங்காள விரிகுடா

[படத்திற்கான நன்றி]

Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.

[பக்கம் 17-ன் படங்கள்]

மேலிருந்து: லோஞ்சி அணியும் ஆண்களும் பெண்களும்; இளம் புத்த பிக்கு; “தனகா” பூசியிருக்கும் பெண்கள்

[பக்கம் 18-ன் படம்]

நிலக்கடலை தோட்டத்தில் சாட்சிகொடுத்தல்

[பக்கம் 18-ன் படம்]

உள்ளூர் மார்க்கெட்டுகளில் மர வேலைப்பாடுமிக்க பொருட்கள் விற்கப்படுகின்றன

[படத்திற்கான நன்றி]

chaang.com

[பக்கம் 18-ன் படம்]

மெருகெண்ணெய் பூசப்பட்ட மேசை அலங்காரப் பொருளில் செதுக்கு வேலைப்பாடு செய்தல்

[பக்கம் 18-ன் படம்]

அழகு மிளிரும் மெருகெண்ணெய் பூசப்பட்ட கிண்ணம்

[படத்திற்கான நன்றி]

chaang.com

[பக்கம் 20-ன் படம்]

யெகோவாவின் சாட்சிகளுடைய மயன்மார் கிளை அலுவலகம்

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

© Jean Leo Dugast/Panos