Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சூதாடுவதில் என்ன தவறு?

சூதாடுவதில் என்ன தவறு?

சூதாடுவதில் என்ன தவறு?

“சுமார் 2,90,000 ஆஸ்திரேலியர்கள் சூதாட்ட அடிமைகளே; அவர்கள் வருடத்தில் 14,400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழக்கிறார்கள். இதனால் ஏற்படும் அவலம் சூதாட்ட அடிமைகளுக்கு மட்டுமல்ல; திவாலாகுதல், விவாகரத்து, தற்கொலை, வேலைக்கு மட்டம் போடுதல் போன்ற அவர்களுடைய செயல்களால் உத்தேசமாக 15 லட்சம் பேர் நேரடியாக பாதிக்கப்படுகிறார்கள்.”​—ஜெ. ஹாவர்ட், ஆஸ்திரேலியா பிரதமர், 1999.

முந்தின கட்டுரையில் சொல்லப்பட்ட ஜான் சூதாட்ட அடிமையானார். a அவர் ஆஸ்திரேலியாவுக்கு மாறிச் சென்றார். அங்கே லின்டா என்ற சூதாடியை மணம் முடித்தார், ஜானின் சூதாட்ட பழக்கமோ மிகவும் மோசமடைந்தது. “முதலில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினேன்; பிறகு குதிரை பந்தயங்களுக்கு பணம் கட்டவும் கிளப்புகளுக்குச் சென்று சூதாடவும் ஆரம்பித்தேன். கடைசியில் சூதாடாத நாளே இல்லை என்றாகி விட்டது. சிலசமயங்களில் சம்பளத்தை அப்படியே சூதாட்டத்தில் செலவிட்டேன்; அதனால், கடன் அடைப்பதற்கும் குடும்பத்திற்கு கஞ்சி ஊற்றுவதற்கும்கூட மிச்சம்மீதி இல்லாமல் போய்விட்டது. அதிக பணத்தை ஜெயிக்கும்போதுகூட அதையும் சூதாட்டத்திற்கே செலவிட்டேன். ஜெயிப்பதிலுள்ள ‘த்ரில்’தான் என்னை அடிமையாக்கியது.”

ஜானை போன்றவர்களைக் காண்பது சகஜமே. முழு சமுதாயமே சூதாட்ட வெறிக்கு ஆளாகியிருப்பதாக தோன்றுகிறது. ஐக்கிய மாகாணங்களில் 1976-⁠க்கும் 1997-⁠க்கும் இடைப்பட்ட வருடங்களில் சட்டப்பூர்வ சூதாட்டங்களில் பந்தயம் கட்டியவர்களின் எண்ணிக்கையில் மலைக்க வைக்கும் அளவுக்கு 3,200 சதவீத அதிகரிப்பு இருந்ததாக யுஎஸ்ஏ டுடே பத்திரிகை குறிப்பிட்டது.

“சூதாட்டம் தார்மீக ரீதியிலும் சமுதாய ரீதியிலும் கெட்ட பழக்கமாக கருதப்பட்டு வந்தது. இன்றோ இது சமுதாயத்தினரால் வரவேற்கப்படும் ஒரு பொழுதுபோக்காகி விட்டது” என குறிப்பிடுகிறது த க்ளோப் அண்டு மெய்ல் என்ற கனடா நாட்டு செய்தித்தாள். பொது மக்களின் மனநிலையில் இந்த மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு காரணத்தைக் குறிப்பிட்டு அந்த செய்தித்தாள் கூறுவதாவது: “சூதாடுவது சம்பந்தமாக மக்களின் மனநிலை மாறுவதற்கு நேரடி காரணமாய் இருப்பது, கனடா நாட்டு சரித்திரத்திலேயே பெருஞ்செலவு பிடித்த, நீண்டகால அரசாங்க விளம்பரப் பிரச்சாரமே.” சூதாட்டத்தை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் சில சமுதாயங்களில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன?

அடிமைப்படுத்தும் சூதாட்டம்—⁠ஒரு கொள்ளை நோய்

இந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது சம்பந்தமாக ஆய்வுகளை நடத்தும் ஹார்வர்ட் மருத்துவ பள்ளி பிரிவு கணக்கிட்டபடி, 1996-⁠ல் “அமெரிக்காவிலுள்ள வயது வந்தவர்களில் சூதாட்ட அடிமைகள் மற்றும் சூதாட்ட வெறியர்கள் 75 லட்சம் பேர்” இருந்தனர்; அதோடு “இளைஞரில் சூதாட்ட அடிமைகள் மற்றும் சூதாட்ட வெறியர்கள் (problem and pathological gamblers) 79 லட்சம் பேர்” இருந்தனர். நேஷனல் கேம்ப்ளிங் இம்பேக்ட் ஸ்டடி கமிஷன் (NGISC) சேகரித்து, ஐ.மா. காங்கிரஸில் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த எண்ணிக்கைகளும் உட்பட்டிருந்தன. அமெரிக்காவில் இவ்வாறு சூதாடும் பிரச்சினைகளுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கலாம் என அந்த அறிக்கை குறிப்பிட்டது.

அடிமைப்படுத்தும் சூதாட்டத்தின் காரணமாக வேலை இழப்பு, ஆரோக்கியம் குறைவுபடுதல், வேலையில்லாதவர்களுக்கான உதவிநிதி, சிகிச்சை செலவு திட்டங்கள் போன்றவை ஒவ்வொரு வருடமும் ஐ.மா. சமுதாயத்தின் கோடிக்கணக்கான டாலரை கரைப்பதாக கணிக்கப்படுகிறது. இருந்தாலும், இந்த எண்ணிக்கை அடிமைப்படுத்தும் சூதாட்டத்தினால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சித்தரிப்பதில்லை; அதாவது, திருட்டு, கையாடல், தற்கொலை, குடும்பத்தில் அடிதடிகள், குழந்தை துஷ்பிரயோகம் போன்றவற்றால் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் சக வேலையாட்களுக்கும் வரும் பாதிப்புகளை சித்தரிப்பதில்லை. சூதாட்ட அடிமைகள் ஒவ்வொருவராலும் பத்து பேர் வரை நேரடியாக பாதிக்கப்படலாம் என ஓர் ஆஸ்திரேலிய ஆய்வு கண்டறிந்தது. “50 சதவீத மணத்துணைகளும் 10 சதவீத குழந்தைகளும் சூதாட்ட வெறியர்களால் அடித்துக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்” என ஐக்கிய மாகாணங்களிலுள்ள தேசிய ஆய்வு குழுவின் ஓர் அறிக்கை கூறுகிறது.

தொற்றும் பழக்கம்

சில நோய்களைப் போல், அடிமைப்படுத்தும் சூதாட்டம் பெற்றோரிலிருந்து பிள்ளைகளுக்கு தொற்றலாமென தெரிகிறது. “சூதாட்ட வெறியர்களின் பிள்ளைகள் புகைபிடித்தல், குடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்ற கெட்ட பழக்கங்களில் ஈடுபடுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது; அதோடு சூதாட்ட அடிமைகளோ சூதாட்ட வெறியர்களோ ஆவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது” என NGISC அறிக்கை குறிப்பிடுகிறது. “வயது வந்தவர்களைவிட டீனேஜர்களுக்கே சூதாட்ட அடிமைகளாகவும் சூதாட்ட வெறியர்களாகவும் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது” என அந்த அறிக்கை மேலும் எச்சரிக்கிறது.

“இளைஞர்கள் மத்தியில் காணப்படும் சட்டவிரோதமான சூதாட்டம், குறைந்தபட்சம் சட்டப்பூர்வ சூதாட்டத்திற்கு சரிசமமாக அதிகரித்து வருகிறதையே எக்கச்சக்கமான அத்தாட்சிகள் காட்டுகின்றன” என அடிமையாதல் சம்பந்தமாக ஆய்வுகளை நடத்தும் ஹார்வர்ட் மருத்துவ பள்ளி பிரிவின் இயக்குநர் டாக்டர் ஹாவர்ட் ஜெ. ஷாஃப்பர் கூறுகிறார். வெறிகொண்ட சூதாடிகள் இன்டர்நெட் தொழில்நுட்பத்தை துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பிருப்பதால், அவர் கூறுவதாவது: “க்ராக் கொக்கேய்ன் எவ்வாறு கொக்கேய்ன் புகைக்கும் அனுபவத்தை மாற்றியிருக்கிறதோ அவ்வாறே எலக்ட்ரானிக்ஸும் சூதாட்ட அனுபவத்தை மாற்றப்போகிறது என நான் நினைக்கிறேன்.”

தீங்கற்ற பொழுதுபோக்கை தரும் ஒன்றாகவே சூதாட்ட தொழில் பெரும்பாலும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் இளைஞரை பொறுத்ததிலோ, சூதாடுதல் சட்டவிரோதமான எந்தப் போதைப் பொருளைக் காட்டிலும் அதிகமாக அடிமைப்படுத்தலாம், குற்றச்செயலுக்கும் வழிநடத்தலாம். சூதாடுவதற்காக இளைஞர்களில் “46 சதவீதத்தினர் தங்கள் வீடுகளிலிருந்து திருடிவந்ததாக” பிரிட்டிஷ் கூட்டரசில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கண்டறிந்தது.

மேற்கூறப்பட்டவை ஒருபுறமிருக்க, சூதாட்டத்தை ஊக்குவிக்கும் ஒரு சூதாட்ட சங்கம் அதை நியாயப்படுத்தி இவ்வாறு கூறுகிறது: “பந்தயம் கட்டி சூதாடும் பெரும்பாலான அமெரிக்கர்கள் எந்தப் பிரச்சினையையும் எதிர்ப்படுவதில்லை.” சூதாட்டம் பொருளாதார ரீதியிலோ உடல் ரீதியிலோ உங்களை பாதிப்பதாக நீங்கள் உணராவிட்டாலும் உங்களுடைய ஆன்மீக ஆரோக்கியத்தைப் பொறுத்ததில் அது உங்களை எப்படி பாதிக்கிறது? சூதாட்டத்தை நீங்கள் தவிர்க்க வேண்டியதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றனவா? பதில்கள் அடுத்த கட்டுரையில். (g02 7/22)

[அடிக்குறிப்பு]

a பக்கங்கள் 4 மற்றும் 5-⁠ல், “எனக்கு சூதாடும் பிரச்சினை இருக்கிறதா?” என்ற பெட்டியைக் காண்க.

[பக்கம் 45-ன் பெட்டி/படங்கள்]

எனக்கு சூதாடும் பிரச்சினை இருக்கிறதா?

அமெரிக்க மனநோய் கழகம் குறிப்பிடுகிறபடி, சூதாட்ட வெறியர்களை கண்டறிவதற்கு 5-⁠ம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் உதவலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளில் சில உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் ஒரு சூதாட்ட அடிமை என்று அர்த்தம்; அவற்றில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு பொருந்தினால் சூதாட்டத்திற்கு அடிமையாகும் ஆபத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

மன ஆக்கிரமிப்பு சூதாட்டம் உங்கள் மனதை சதா ஆக்கிரமித்திருக்கும், சூதாட்டத்தில் ஈடுபட்ட அனுபவங்களை அசைபோட விரும்புகிறீர்கள், மீண்டும் சூதாடுவதற்கு திட்டமிடுகிறீர்கள், அல்லது சூதாடுவதற்கு பணம் திரட்டும் வழிகளைக் குறித்து யோசிக்கிறீர்கள்.

இடங்கொடுத்தல் நீங்கள் விரும்பிய ‘த்ரில்’லை அடைய மேலும் மேலும் பணத்தைக் கொட்டி சூதாடுவதற்கு இடங்கொடுக்கிறீர்கள்.

பாதிப்பு சூதாடுவதை குறைக்கவோ நிறுத்தவோ முயலுகையில் எரிச்சலடைகிறீர்கள்.

தப்பிக்கும் வழி பிரச்சினைகளிலிருந்து தப்புவதற்கு, அல்லது உதவியற்ற உணர்வு, குற்றவுணர்வு, கவலை, மன உளைச்சல் ஆகியவற்றிலிருந்து தப்புவதற்கு ஒரு வழியாக சூதாட்டத்தில் ஈடுபடுகிறீர்கள்.

பின்தொடருதல் சூதாட்டத்தில் இழந்த பணத்தை பெறுவதற்கு பெரும்பாலும் மற்றொரு நாளில் மீண்டும் சூதாட செல்கிறீர்கள். இவ்வாறு இழப்பை ஈடுகட்ட முயல்வது, பின்தொடருதல் என அழைக்கப்படுகிறது.

பொய் பேசுதல் சூதாட்டத்தில் நீங்கள் எந்தளவுக்கு ஈடுபடுகிறீர்கள் என்பதை மூடிமறைப்பதற்கு குடும்பத்தாரிடம், மருத்துவரிடம், அல்லது பிறரிடமும் பொய் சொல்கிறீர்கள்.

கட்டுப்பாட்டை இழத்தல் சூதாடுவதை நிறுத்துவதற்கு, கட்டுப்படுத்துவதற்கு, அல்லது குறைப்பதற்கு அடிக்கடி முயற்சி செய்து தோல்வி கண்டிருக்கிறீர்கள்.

சட்டவிரோதமான செயல்கள் சூதாடுவதற்கு பணம் திரட்ட மோசடி, களவு, அல்லது கையாடல் போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறீர்கள்.

முக்கியமான உறவை ஆபத்திற்குள்ளாக்குதல் சூதாட்டத்தின் காரணமாக ஒரு முக்கியமான உறவை, கல்வியை, வேலை வாய்ப்பை அல்லது வேலையை இழந்து விட்டிருக்கிறீர்கள் அல்லது ஆபத்திற்குள்ளாக்கி இருக்கிறீர்கள்.

பண உதவியை நாடுதல் சூதாட்டத்தால் ஏற்பட்ட பணக் கஷ்டத்திலிருந்து விடுபட பிறருடைய உதவியை நாடியிருக்கிறீர்கள்.

[படத்திற்கான நன்றி]

ஆதாரம்: சிகாகோ பல்கலைக்கழகத்தின் தேசிய கருத்தாய்வு மையம், ஜெமினி ஆய்வு, மற்றும் லெவின் குழு.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

லாட்டரி விளம்பரங்களின் நிஜ செய்திகள்

“லாட்டரி தொழிலை முன்னேற்றுவிப்பது, . . . சூதாடுவது ஒரு நல்ல காரியம் அல்லது நேர்மையான செயல் என்பதை கற்பிக்கும் ஒழுக்கநெறி சார்ந்த கல்வியாக கருதப்படலாம்” என நேஷனல் கேம்ப்ளிங் இம்பேக்ட் ஸ்டடி கமிஷனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கையில் ஐக்கிய மாகாணங்களிலுள்ள டியூக் யுனிவர்சிட்டியின் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சமுதாயத்தின் மீது லாட்டரி விளம்பரம் உண்மையில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? அந்த அறிக்கை கூறுவதாவது: “சரியான எண்ணை தேர்ந்தெடுப்பதிலேயே வெற்றி சார்ந்துள்ளது என்ற லாட்டரி விளம்பரத்தின் செய்தி வஞ்சகமானது என சொன்னால் மிகையாகாது. லாட்டரி ஏஜன்சிகளால் பரப்பப்படும் இந்த முறையற்ற ‘கல்வித்’ திட்டம், பொருளாதார வளர்ச்சியை குறைப்பதன் மூலம் நாளடைவில் அரசாங்கத்தின் வருமானத்தையே குறைத்துவிடும் அளவுக்கு விரும்பத்தகாத பாதிப்பை ஏற்படுத்தலாம். முக்கியமாக, வேலை செய்வது, பணம் சேமிப்பது, சொந்த படிப்புக்கும் பயிற்சிக்கும் பணம் செலவிடுவது போன்ற இயல்பான விருப்பத்தை லாட்டரி விளம்பரங்கள் படிப்படியாக அரித்துவிடுவதாக இருந்தால், அதன் விளைவு நாளடைவில் உற்பத்தியை குறைத்துவிடும். எப்படியாயினும், அற்புதத்தை எதிர்பார்த்து பந்தயம் கட்டுவதே வெற்றியின் இரகசியமென நாம் பொதுவாக பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது கிடையாது.”

[பக்கம் 8-ன் பெட்டி/படம்]

ஒவ்வொரு வீடும் ஒரு கிளப்

சூதாட்ட அமைப்புகள் புதிய சூதாட்ட ஸ்தாபனங்களை கட்டுவதற்கு ஆகும் பணத்தில் ஒரு சிறு பகுதியை வைத்து இப்போது புதிய வெப் சைட்டுகளையே உருவாக்கிவிடுகின்றன; இவை, கம்ப்யூட்டருடன் இன்டர்நெட் இணைக்கப்பட்ட எந்தவொரு வீட்டையும் ஒரு கிளப்பாக மாற்றிவிடலாம். 1990-களின் மத்திபத்தில் இன்டர்நெட்டில் சுமார் 25 சூதாட்ட சைட்டுகளே இருந்தன. 2001-⁠ல் 1,200-⁠க்கும் மேற்பட்ட சைட்டுகள் இருந்தன; இதனால் கிடைக்கும் வருமானம் ஒவ்வொரு வருடமும் இரட்டிப்பாகிக் கொண்டே வந்திருக்கிறது. 1997-⁠ல் இன்டர்நெட் சூதாட்ட சைட்டுகள் 30 கோடி டாலர் சம்பாதித்தன. 1998-⁠ல் இன்னும் 65 கோடி டாலர் சம்பாதித்தன. 2000-⁠ல் 220 கோடி டாலர் சம்பாதித்தன, 2003-⁠க்குள்ளோ அவை 640 கோடி டாலர் சம்பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என கூறுகிறது ராய்ட்டர்ஸ் செய்தித்தாளின் அறிக்கை.

[பக்கம் 6-ன் படம்]

வயிற்றுப்பாட்டுக்கே காசில்லாமல் திண்டாடும் குடும்பங்கள், சூதாட்ட அடிமைத்தனம் ஏற்படுத்திய கோலம்

[பக்கம் 7-ன் படம்]

இளைஞரிடையே சூதாட்டம் திடுக்கிட வைக்கும் அளவில் அதிகரித்து வருகிறது

[பக்கம் 8-ன் படம்]

சூதாட்ட வெறியர்களின் பிள்ளைகள் சூதாட்டத்திற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம்