Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அரும்பெரும் சாதனைகள் படைத்த அரசர்

அரும்பெரும் சாதனைகள் படைத்த அரசர்

அரும்பெரும் சாதனைகள் படைத்த அரசர்

கேமரூனிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

மேற்கு கேமரூனின் மேய்ச்சல் நிலங்களில் இன்றும்கூட ஒரு பெரிய இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களே பேமும் இன மக்கள். இப்ராஹிம் ஜோயா என்பவர் இம்மக்களின் 17-வது அரசராக இருந்தார். இவர் 1889 முதற்கொண்டு 1933-ல் மரணமடையும் வரைக்கும் ஆட்சி புரிந்தார்; 14-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரையுள்ள பேமும் அரசர்களின் பெயர்ப் பட்டியல் அடுத்தப் பக்கத்திலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஜோயாவின் ஆட்சி காலத்தில், பிரான்சும் ஜெர்மனியும் இப்பகுதியை தங்களுடைய காலனியாக்க கடும் முயற்சி செய்தன.

இளம் பருவத்திலேயே ஜோயா பெரிய அறிவாளியாகவும், மாமேதையாகவும் விளங்கினார்; தன்னுடைய இலட்சியங்களோடு ஒத்துப்போன அறிவாளிகளையும் புதுமைப் பித்தர்களையும் தன்னோடு வைத்துக் கொண்டார். அவர் கட்டிய பிரம்மாண்டமான அரண்மனையை கீழேயுள்ள படத்தில் காணலாம். இது கட்டடக்கலையில் அவருக்கிருந்த பிரத்தியேக திறமைக்குச் சான்றளிக்கிறது. இங்கே படத்தில் காட்டப்பட்டுள்ள, சோளத்தை அரைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மாவரைக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்த பெருமையும் அவரையே சேரும். என்றாலும், பேமும் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்க அவர் உருவாக்கிய புதிய முறையே அவருடைய கண்டுபிடிப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது.

பதிவு செய்வதைச் சாத்தியமாக்கிய புதிய எழுத்துமுறை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை, பேமும் மக்களின் சரித்திரம் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுவதன் மூலமே முக்கியமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது. இவ்வாறு செய்யும்போது தகவல்கள் விடுபட்டுப் போவதற்கோ கூட்டப்படுவதற்கோ வாய்ப்பிருப்பதை ஜோயா புரிந்துகொண்டார். அரபி மொழியையும் அவர் தெரிந்து வைத்திருந்தார்; தன்னுடைய நாட்டைக் கடந்து சென்ற வணிகர்களிடமும், பிரயாண வியாபாரிகளிடமும் அம்மொழியில் புத்தகங்களைப் பெறுவதன்மூலம் அதைக் கற்றுக்கொண்டார். இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட வை எழுத்துக்களையும்கூட அவர் ஒருவேளை தெரிந்து வைத்திருக்கலாம்; ஏனென்றால், லைபீரியாவில் அப்போது அதுவே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனவே தன்னுடைய மொழியை எழுதுவதற்கென்று ஒரு முறையை உருவாக்கத் துவங்கினார்.

நூற்றுக்கணக்கான பல்வேறு சின்னங்களை உருவாக்கி, ஜோயா இந்த வேலையை ஆரம்பித்தார்; அவை பெரும்பாலும், ஓவிய எழுத்துக்களாயும், பொருளைக் குறிப்பாய்த் தெரிவிக்கும் படமாகவும் அல்லது சின்னமாகவும் இருந்தன. ஒவ்வொரு சின்னமும் எதைக் குறிக்கிறதென்பதை மனப்பாடம் செய்வதன்மூலம் அவருடைய குடிமக்கள் இந்த எழுத்து முறையைக் கற்க வேண்டியிருந்தது. காலப்போக்கில், இந்த எழுத்து முறையை எளிமையாக்க அவருடைய நம்பிக்கைக்குரிய பணியாளர்கள் அவருக்கு உதவினார்கள். அசைகளாலான எழுத்துக்களைப் பயன்படுத்துவதன்மூலம் அவர்கள் சின்னங்களின் எண்ணிக்கையைக் குறைத்தார்கள். புதிய எழுத்து முறையிலிருந்த பல சின்னங்களை அல்லது எழுத்துக்களை இணைப்பதன்மூலம் குறிப்பிட்ட வார்த்தைகளை உருவாக்கினார்கள். அம்மொழியை வாசிப்பவர் முன்பைவிட குறைவான எழுத்துக்களையும் அவற்றின் ஒலிகளையும் மட்டுமே நினைவில் வைக்க வேண்டியிருந்தது. ஆ-கா-யூ-கூ என அழைக்கப்பட்ட தன் புதிய எழுத்து முறையை ஜோயா முடித்தபோது அதில் 70 எழுத்துக்கள் இருந்தன.

பள்ளிகளில் கற்பிப்பதையும் அரசாங்கத்தின் எல்லா மட்டத்திலும் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதையும் கட்டாயமாக்குவதன்மூலம் பேமும் மொழியை ஜோயா ஊக்குவித்தார். பேமும் எழுத்துக்களில் தன் நாட்டையும் அரசகுலத்தையும் பற்றிய அசத்தலான சரித்திரத்தை எழுதுவதற்கு அவர் ஆணையிட்டார். இவ்வாறு, முதன்முறையாக பேமும் மக்களால் தங்களுடைய பாரம்பரியத்தையும், சட்டங்களையும் கலாச்சாரங்களையும் படித்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. புதிய பேமும் எழுத்துக்களில் மருத்துவம் சம்பந்தப்பட்ட குறிப்புகளையும்கூட ஜோயா பதிவு செய்து வைத்திருந்தார். 8,000-க்கும் அதிகமான இத்தகைய மூல ஆவணங்கள் இன்றும்கூட அரண்மனையின் ஆவணக் காப்பகத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

1902-ஆம் வருடத்தில் ஜெர்மன் காலனியாட்கள் அங்கே குடியேறிய சில காலத்திற்குள் இந்தப் புதிய எழுத்துக்களின் ஒரு பயன் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. அவர்களுடைய வரவால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்பட்டது. இது ஜோயாவுக்கு லாபத்தை ஈட்டித்தந்தது; இருந்தாலும், ஜெர்மன் அதிகாரிகள் சொன்ன எல்லாவற்றிற்கும் அவர் தலையாட்டவில்லை. எனவே தன்னுடைய புதிய கண்டுபிடிப்பான பேமும் மொழியை அவர் பயன்படுத்தினார்; ஏனென்றால், இதை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் ஜெர்மானியர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் பேமும் எழுத்துக்கள் எவ்வளவு காலத்திற்கு வழக்கில் இருந்தன?

முதல் உலகப் போரின்போது (1914-1918), ஜோயாவின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் ஜெர்மனியின் கையிலிருந்து பறிக்கப்பட்டன. கடைசியில், புதிதாக அமைக்கப்பட்ட சர்வதேச சங்கம், பேமும் பிராந்தியத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பிரான்சுக்கு அளித்தது. ஜோயா புதிய கருத்துக்களை திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டபோதிலும் தன் நாட்டின் பாரம்பரியத்தைக் குறித்து பெருமை கொண்டார்; அதோடு எப்படியாவது தன் மக்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் அவற்றை வளர்க்கவும் வேண்டுமென விரும்பினார். இத்தகைய மனப்பான்மையினால், தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தை அவர் எதிர்த்தார். அதனால், 1931-ல் பிரெஞ்சு அரசாங்கம் அவரை பதவியிலிருந்து இறக்கியது; காலனியாட்களுக்கு விசுவாசமாய் நடந்துகொள்ளாத தலைவர்களுக்குப் பொதுவாக இக்கதியே ஏற்பட்டது. நாடுகடத்தப்பட்ட ஜோயா இரண்டு ஆண்டுகள் கழித்து இறந்தார்.

பள்ளிகளில் பேமும் எழுத்துக்களைக் கற்பிப்பதற்கு பிரான்சு தடை விதித்ததாலும் அவ்வெழுத்துக்களை முன்னேற்றுவிப்பதற்கு ஜோயா இல்லாததாலும் வெகு விரைவில் அது பயன்பாட்டில் இல்லாமல் போனது; பேமும் மக்களில் பெரும்பான்மையர் அதைச் சுத்தமாக மறந்துபோனார்கள். அப்பகுதிக்கு கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் வந்தபோது பேமும் மக்கள் பேசிய மொழியைக் கற்றுக்கொண்டு, தங்களுடைய பள்ளிகளில் அதைக் கற்பிப்பதற்காக இலக்கணத்தைத் தயாரித்தார்கள். ஜோயா செய்தது போலின்றி, இவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே இருந்த ரோமன் எழுத்துக்களையும் அதன் ஒலிகளையும் வைத்தே இதைத் தயாரித்தார்கள்.

சமீபத்தில், பேமும் எழுத்துக்களில் ஆர்வத்தைப் புதுப்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய சுல்தானாகிய இப்ராஹிம் பாம்போ ஜோயா தன் தாத்தா கட்டிய அரண்மனையில் ஒரு பள்ளியைத் துவக்கியிருக்கிறார். பேமும் மொழி முற்றிலும் மறைந்துபோகாமல் இருப்பதற்காக இங்கே உள்ளூர் பள்ளி மாணவர்களுக்கு இது மீண்டும் கற்பிக்கப்படுகிறது.

[பக்கம் 27-ன் படம்]

14-ஆம் நூற்றாண்டிலிருந்து இன்றுவரையுள்ள பேமும் அரச பரம்பரையைக் காட்டும் நினைவுச்சின்னம்; இடது பக்கம் ரோமன் எழுத்துக்களிலும் வலது பக்கம் பேமும் எழுத்துக்களிலும் உள்ளன

[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]

புகைப்படங்கள் அனைத்தும்: Courtesy and permission of Sultan Ibrahim Mbombo Njoya, Foumban, Cameroon