Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘சீறிவரும் அலைகளை’விடச் சிறப்பானது

‘சீறிவரும் அலைகளை’விடச் சிறப்பானது

‘சீறிவரும் அலைகளை’விடச் சிறப்பானது

கார்ல் ஹைன்ட்ஸ் ஷ்வரர் சொன்னபடி

அ.ஐ.மா., பென்சில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் 1952-ஆம் வருடம் நான் பிறந்தேன். வளர்ந்ததோ ப்ளோரிடாவிலுள்ள நியு ஸ்மர்னா பீச் சிட்டியில்தான். டீனேஜிலிருந்தே நீர்சறுக்கு விளையாடுவதென்றால், அதாவது பாய்ந்துவரும் அலைகள்மீது பலகையில் நின்றபடி சவாரி செய்வதென்றால் எனக்குக் கொள்ளை ஆசை. சொல்லப்போனால், என் வாழ்க்கையே நீர்சறுக்கு விளையாட்டுதான் என்பதுபோல் ஆகிவிட்டது.

வர்த்தக விமானியாக வேண்டுமென்ற கனவோடு 1970-ஆம் வருடம் ப்ளோரிடாவின் டேட்டோனா பீச்சிலுள்ள எம்ப்ரி-ரிட்டல் ஏரோநாட்டிக்கல் யுனிவர்சிட்டியில் கால் பதித்தேன். இருந்தாலும், அன்றைய அரசாங்கம் அச்சமயத்தில் வியட்நாமின்மீது போர் தொடுத்தது எனக்கு அநியாயமாகப் பட்டது. அதனால், அரசாங்கத்தின்மீது எனக்கு வர வர வெறுப்பு அதிகமானது. அன்றிருந்த மற்ற இளைஞர்களைப் போல எனக்கும் இந்த உலகமே வெறுத்துவிட்டது; எனவே படிப்புக்கு முழுக்குபோட்டுவிட்டு ஹிப்பியாக வாழத் துவங்கினேன். முடியை நீளமாக வளர்த்துக் கொண்டேன்; போதை மருந்துகளையும் பயன்படுத்தினேன்.

சீக்கிரத்திலேயே சூசன் என்ற பெண்ணைச் சந்தித்தேன்; அவள் எதிலும் துணிந்து இறங்குபவளாகவும் ஓவியம் வரைவது புகைப்படங்கள் எடுப்பது ஆகியவற்றில் கெட்டிக்காரியாகவும் இருந்தாள். எங்களுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டால், ப்ளோரிடாவில் ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு கட்டிட வேலையைச் செய்துவிட்டு, பிறகு மற்ற மாதங்களில் மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையோரங்களிலும் மத்திய அமெரிக்காவின் கடற்கரையோரங்களிலும் கூடாரத்தில் தங்கிப் பொழுதைப் போக்கலாமென்று நான் கணக்கு பண்ணினேன்.

கடவுளைத் தேடி . . .

அழகை அள்ளி வழங்கும் வெப்பமண்டல கடற்கரையோரங்களில் நாங்கள் உல்லாசமாக உலா வந்தோம்; சூசன் ஓவியங்களை வரைந்து கொண்டும், புகைப்படங்களை எடுத்துக் கொண்டுமிருக்க, நானோ நீர்சறுக்கு விளையாடிக்கொண்டிருப்பேன்; எதைப் பற்றியும் கவலைப்படாத அந்த வாழ்க்கை சொல்லப்போனால் ரொம்ப ஜாலியாகத்தான் இருந்தது. ஆனால், ஒருசில ஆண்டுகளுக்குப் பிறகு, ஏதோ அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோம் என்பது எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. வாழ்க்கையில் ஏதோவொன்று குறைவுபடுவதாகவும் நாங்கள் உணர்ந்தோம். அதனால், 1975-ஆம் வருடத்தின் மத்திபத்தில் கோஸ்டா ரிகாவிலுள்ள பசிபிக் கடற்கரையோரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தபோது நான் கடவுளைத் தேட ஆரம்பித்தேன். கிழக்கத்திய மதங்களையும் தத்துவங்களையும் பற்றிய புத்தகங்களை வாசித்தேன்; அவை அப்போது பிரபலமாக இருந்தன.

நான் வாசித்த புத்தகங்களின் எழுத்தாளர்கள் தங்கள் போதனைகளை உண்மையென நிரூபிக்க பெரும்பாலும் பைபிளிலிருந்தே மேற்கோள் காட்டியிருந்தார்கள்; அதனால், பைபிள்தான் சத்தியத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே, போதையில் மிதக்க வைக்கும் காளான்கள் சிலவற்றைக் கொடுத்து அதற்குப் பதிலாக ஒரு பழைய கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிளைப் பெற்றுக்கொண்டேன். காலைதோறும் நீர்சறுக்கு விளையாடிவிட்டு, மதியம்தோறும் ஓரிடத்தில் அமர்ந்து பைபிளைப் படிக்கத் துவங்கினேன். ரொம்ப ஆர்வத்தோடு பைபிளைப் படித்தபோதிலும் அதைப் புரிந்துகொள்வது என்னவோ எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது.

“பைபிள் சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கிறதா?”

ஆகஸ்ட் 1975-ல் கோஸ்டா ரிகாவிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம்; வழியில் மருந்து வாங்குவதற்காக எல் சால்வடாரிலுள்ள ஒரு மருந்து கடையின் முன்பு காரை நிறுத்தினோம். நாங்கள் சொல்வதைப் புரியாமல் மருந்துக் கடைக்காரரும், அவர் சொல்வதைப் புரியாமல் நாங்களும் தவித்துக் கொண்டிருந்த சமயத்தில், அங்கு மருந்து வாங்க வந்த ஜென்னி என்ற பெண் எங்களுக்கு உதவினாள். அவள் அமெரிக்காவைச் சேர்ந்த 16 வயது பெண்; ஆனால் ஸ்பானிஷ் மொழியையும் சரளமாகப் பேசினாள். அவளும் அவளுடைய பெற்றோரும் யெகோவாவின் சாட்சிகள் என்றும் பைபிளைப்பற்றி மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக எல் சால்வடாருக்கு மாறி வந்திருப்பதாகவும் அவள் தெரிவித்தாள்.

“பைபிள் சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கிறதா?” என ஜென்னி என்னிடம் கேட்டாள்.

“ஆமாம்! இருக்கிறது” என நான் பதிலளித்தேன். நாங்கள் ஹிப்பி கோலத்தில் இருந்தபோதிலும், தன் அப்பா ஜோவையும் அம்மா நேன்ஸி டிரெம்லியையும் சந்திப்பதற்காக வீட்டுக்கு வரும்படி ஜென்னி எங்களை அழைத்தாள். அவளுடைய அழைப்பைத் தட்டாமல் நாங்கள் சென்றோம். அந்த மதியவேளை முழுவதும் அவர்களிடம் பைபிளிலிருந்து கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தோம்; அதற்கெல்லாம் அவர்கள் சளைக்காமல் பதில் சொன்ன விதத்தைப் பார்த்து அசந்து போனோம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், “உங்கள் பைபிளிலிருந்து இந்த வசனத்தை எடுத்து வாசித்துப் பாருங்கள்” என்றே அவர்கள் பதிலளித்தார்கள்.

சிறிதுநேரத்தில், இருட்டத் துவங்கிவிட்டது; எனவே, அந்த இரவு அங்கேயே தங்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். இருந்தாலும், சூசனும் நானும் மணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்ததால், இருவரையும் ஒரே அறையில் தங்குவதற்கு அவர்கள் அனுமதிக்கவில்லை. அன்றிரவு, சூசனும் ஜென்னியும் தூங்காமல் விழித்திருந்து ஆதாமிலிருந்து அர்மகெதோன் வரைக்கும் நிறைய பைபிள் விஷயங்களை மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தார்கள்.

பச்சை பைபிள்

அடுத்த நாள், நாங்கள் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு, ஜோவும் நேன்ஸியும் நிறைய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளையும் சில புத்தகங்களையும் ஒரு பைபிளையும் எங்களுக்குக் கொடுத்தார்கள். அந்த பைபிள் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் ஆகும்; அப்போது அது பச்சை நிற கெட்டியான அட்டையுடன் தயாரிக்கப்பட்டிருந்தது. ஜோ எங்களை அங்கிருந்த ராஜ்ய மன்றத்திற்கும் அழைத்து சென்று காண்பித்தார். அது பகட்டில்லாத எளிய கட்டடமாக இருந்தது; அங்கேதான் யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் படிப்பதற்காக கூடிவந்தார்கள். நான் இவ்வாறு மனதுக்குள் நினைத்தேன்: ‘கிறிஸ்தவமண்டலத்தின் டாம்பீகமான சர்ச்சுகளுக்கும் இதற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்; அங்கே மக்களுக்கு பைபிளைப்பற்றி ஏதோ பேருக்குத்தான் சொல்லித் தரப்படுகிறது!’

பிறகு, அன்றைக்கே நாங்கள் எல் சால்வடாரின் எல்லையைக் கடந்து குவாதமாலாவிற்குள் நுழைவதற்காக சோதனைச் சாவடியில் நின்றபோது, அந்தப் பச்சை பைபிளைப் பார்த்து அங்கிருந்த அதிகாரிகள் குழம்பிப் போனார்கள். சாதாரணமாக அதுபோன்ற ஒரு பைபிளை யெகோவாவின் சாட்சிகள்தான் வைத்திருப்பார்கள் என்பதை அவர்கள் அறிந்திருந்ததே அக்குழப்பத்திற்குக் காரணம். ஆனால், எங்களைப் பார்த்தால் யெகோவாவின் சாட்சிகள் என்று சொல்லவே முடியாது. எங்களுடைய கோலத்தைப் பார்த்து அவர்கள் குழம்பிப்போன போதிலும், சில நிமிடங்களுக்குப் பிறகு அதிகாரிகள் எங்களைப் போக அனுமதித்தார்கள். இதனால் நாங்களுமே திகைத்துப் போனோம்; ஏனென்றால், சாதாரணமாக போதை மருந்துகள் அல்லது கடத்தல் பொருட்கள் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காக எங்கள் காரையும் உடைமைகளையும் சோதனையிடுவார்கள். எனவே பச்சை பைபிளை ஒரு தாயத்தைப்போல அல்லது ஒரு மாந்திரீகப் பொருளைப்போல கருதத் துவங்கினோம்.

பைபிளையும் பைபிள் படிப்புக்கு உதவும் மற்ற பிரசுரங்களையும் தொடர்ந்து வாசித்தபோது, கடவுளைப் பற்றிய சத்தியம் இதுதான் என்பது எங்களுக்கு உறுதியாகிவிட்டது. மெக்சிகோ வழியாகச் சென்றபோது, பியூர்டோ எஸ்கண்டிடோ என்ற இடத்தில் இரண்டு வாரங்கள் நீர்சறுக்கு விளையாடுவதற்கு ஆவலோடு காத்திருந்தேன். அதுதான் நீர்சறுக்கு விளையாடுவதற்கு எனக்கு ரொம்பப் பிடித்தமான இடம். அங்கே ஆசைதீர நீர்சறுக்கு விளையாடிவிட்டு, பிறகு ப்ளோரிடாவுக்குத் திரும்பிச் சென்று யெகோவாவின் ஊழியனாக ஆகிவிட வேண்டுமென்று முடிவு செய்தேன்.

அடுத்த இரண்டு வாரங்களுக்கு காலைநேரம் முழுவதும் நீர்சறுக்கு விளையாடினேன். மதியவேளையில் கடற்கரையில் அமர்ந்து பைபிள் படிப்பு புத்தகங்களை வைத்து என்னுடைய பைபிளை வாசித்தேன். என் கையிலிருந்த பச்சை பைபிள் அங்கு வந்த எட்டு வயது சிறுமியின் கண்ணில் பட்டுவிட்டது; எனவே சாயங்காலம் தன்னோடு எங்கோ வரும்படி அவள் எங்களை வற்புறுத்தினாள். அவள் எங்களை எங்கே அழைக்கிறாள் என்பது எங்களுக்குப் பிடிபடவில்லை. ஆனால், அதற்கும் அந்தப் பச்சை பைபிளுக்கும் ஏதோ சம்பந்தமிருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. நாங்கள் அவளுடன் செல்ல மறுத்துவிட்டோம்; ஆனாலும் அவள் விடாப்பிடியாக அழைத்துக் கொண்டே இருந்தாள். கடைசியில், சில நாட்கள் கழித்து, அவளுடன் செல்லத் தீர்மானித்தோம். யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு அவள் எங்களை அழைத்துச் சென்றாள்; அது கூரை வேயப்பட்டு மூங்கிலால் அமைக்கப்பட்ட சிறிய மன்றமாக இருந்தது. அங்கிருந்த எல்லாரும் நாங்கள் ஏதோ அவர்களுடைய பழைய நண்பர்கள் என்பதுபோல கைகுலுக்கி, கட்டித்தழுவி வரவேற்றார்கள்.

அங்கிருந்த எல்லாருமே பயபக்தியோடும் மரியாதையோடும் அமர்ந்து கேட்டது எங்கள் மனதைக் கவர்ந்தது. கூட்டம் நடக்கும்போது சில பொடிசுகள் எங்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன; ஒருவேளை பழுப்பு நிறத்தில் இவ்வளவு நீண்ட முடியை உடைய ஆட்களை அவர்கள் அதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டார்கள் போலும். கூட்டத்தில் சொல்லப்படுவதைக் கவனிக்கும்படி அவர்களுடைய பெற்றோர் திரும்பத்திரும்ப அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களைப் போன்ற ஒரு சிறு பிள்ளையைப் பயன்படுத்திதான் யெகோவா எங்களை முதன்முதலாக கூட்டத்திற்கு அழைத்து வந்திருந்தார்.

யெகோவாவைச் சேவிக்கத் திடத்தீர்மானம்

இரண்டு வாரங்கள் ஆசைதீர நீர்சறுக்கு விளையாடிய பிறகு, அப்பலகைகளை விற்றுவிட்டு, காரில் நேரடியாக ப்ளோரிடாவுக்குப் பயணித்தோம். அங்கே யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தோம், அதோடு எல்லா சபை கூட்டங்களிலும் கலந்துகொண்டோம். யெகோவாவைச் சேவிக்கத் திடத்தீர்மானமாய் இருந்ததால், நாங்கள் சேர்ந்து வாழ்வதை விட்டுவிட்டோம்; அதோடு பழைய நண்பர்களோடிருந்த நெருங்கிய சகவாசத்தையும் விட்டொழித்தோம். நான் என்னுடைய தாடியைச் சவரம் செய்து, முடியையும் வெட்டிக் கொண்டேன்; சூசன் சில புதிய உடைகளை வாங்கினாள். நான்கு மாதங்களுக்குப் பிறகு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்; ஏப்ரல் 1976-ல், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக முழுக்காட்டுதல் பெற்றோம்.

அப்போதுமுதல் எங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருப்பதை உணர முடிந்தது. யெகோவா எங்கள்மேல் பொழிந்த ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றிசெலுத்த விரும்பினோம்; அதனால், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக ஸ்பானிய மொழி பேசுகிற ஒரு நாட்டிற்குச் செல்ல ஆசைப்பட்டோம். ஆனால், சபை மூப்பர்களோ, “இப்போது வேண்டாம், முதலில் உங்களுடைய விசுவாசத்தை பலப்படுத்திக் கொண்டு பிறகு செல்லுங்கள்; அப்போதுதான் அங்கிருப்பவர்களுக்கு உங்களால் உதவ முடியும்” என்று ஆலோசனை சொன்னார்கள். அந்த ஆலோசனையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனவே பயனியர் சேவையைத் துவங்குவது என்ற இலக்கை வைத்தோம். யெகோவாவின் சாட்சிகள் முழுநேர ஊழியர்களை பயனியர்களென்றே அழைக்கிறார்கள்.

ஜனவரி 1978-ல் சூசன் பயனியரானாள். நானும்கூட பயனியர் செய்ய விரும்பினேன்; ஆனால், நான் படித்த யுனிவர்சிட்டியில் எக்கச்சக்கமான பணத்தைக் கடனாகச் செலுத்த வேண்டியிருந்தது. நான் திவாலாகிவிட்டதாகத் தெரிவித்தால், பிறகு கவலையில்லாமல் பயனியர் செய்யலாம் என்று ஒரு சுலபமான தீர்வைக் கண்டுபிடித்தேன்.

என்றாலும், அவ்வாறு செய்வது சரியல்ல என மூப்பர்கள் ஞானமான முறையில் எடுத்துச் சொன்னார்கள். ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் [அதாவது, நேர்மையாய்] நடக்க’ வேண்டுமென பைபிள் சொல்வதால், அவ்வாறு செய்வது பைபிள் நியமங்களுக்கு இசைவானதாக இருக்காது என்று விளக்கினார்கள். (எபிரெயர் 13:18) எனவே, கடனை அடைக்க தொடர்ந்து வேலை செய்தேன். ஒருவழியாக, செப்டம்பர் 1979-ல் என் இலக்கை எட்டினேன், அதாவது சூசனுடன் சேர்ந்து பயனியர் செய்யத் துவங்கினேன். அதற்குப் பிறகு, வாழ்க்கையை எளிமையாக வைத்துக் கொண்டோம்; அதனால் வாரத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே நான் வேலை செய்தேன்; அதில் கிடைத்த வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தினோம்.

புருக்லின் பெத்தேலில் சேவை

ஏப்ரல் 1980-ல் எங்களைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒன்று நடந்தது. அப்போது நாங்கள் சேர்ந்து பயனியர் செய்யத் துவங்கி ஒரு வருடம்கூட ஆகியிருக்கவில்லை. கட்டுமானப் பணியாளர்கள் தேவைப்படுவதாக ஏற்கெனவே வந்த அறிவிப்புக்கு இணங்கி, நியு யார்க், புருக்லினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகமான பெத்தேலில் சேவை செய்வதற்கு நாங்கள் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தோம். இப்போது, 30 நாட்களுக்குள் வரும்படி நாங்கள் அழைப்பைப் பெற்றோம்! எங்களுக்கு ஒருபுறம் சந்தோஷமாக இருந்தாலும், மறுபுறம் கொஞ்சம் துக்கமாகவும் இருந்தது. ஏனென்றால், பயனியர் சேவையை நாங்கள் ரொம்பவே ரசித்து ருசித்து செய்துகொண்டிருந்தோம். என்ன செய்வதென்று தெரியாமல், இந்த விஷயத்தைக் குறித்து இரண்டு மூப்பர்களுடன் பேசினோம்; எவ்வளவு பெரிய விசேஷ பாக்கியம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் எங்களுக்கு உதவினார்கள். “போங்கள், பெத்தேலில் ஒரு வருடமாவது சேவை செய்துபாருங்கள்” என அவர்கள் எங்களுக்கு ஆலோசனை சொன்னார்கள். எனவே எங்களுடைய உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு புருக்லினுக்குச் சென்றோம்.

கட்டுமானப் பணியில் இரண்டு வருடங்கள் வேலைசெய்த பிறகு, கட்டுமானப் பொறியியல் அலுவலகத்தில் வேலை செய்வதற்கு அழைக்கப்பட்டேன்; அங்கே கட்டுமான வடிவமைப்பில் எனக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. சூசன் பைன்டரியில் ஒரு வருடத்திற்கு வேலைப் பார்த்தாள்; பிறகு கிராஃபிக்ஸ் துறைக்கு அழைக்கப்பட்டாள். ஒவ்வொரு வருடமும் எங்களுடைய திருமண நாளன்று, கடந்துபோன வருடத்தைப் பற்றி நிதானமாகச் சிந்தித்து எங்களுடைய சூழ்நிலைகளையும் ஆசைகளையும் சீர்தூக்கிப் பார்த்தோம்; பெத்தேலில் தொடர்ந்து சேவை செய்வது என்று தீர்மானித்தோம்.

வருடங்கள் செல்லச் செல்ல அருமையான உயிர் நண்பர்கள் எங்களுக்குக் கிடைத்தார்கள். அதுமட்டுமல்லாமல், பெத்தேலில் யெகோவாவுக்கும் நம் உலகளாவிய சகோதரர்களுக்கும் பயனுள்ள விதத்தில் சேவை செய்ய முடிவதால், அங்கேயே இருந்துவிட நாங்கள் தீர்மானித்தோம். 1989-ல் ஸ்பானிஷ் மொழியைக் கற்கத் துவங்கினோம்; இதனால் புருக்லினிலிருந்த ஸ்பானிய மொழி சபைக்கு நியமிக்கப்பட்டோம். அதன் காரணமாக, இரண்டு விதங்களில் சேவை செய்யும் அரிய வாய்ப்பைப் பெற்றோம்; ஒன்று பெத்தேல் சேவை, மற்றொன்று அயல்மொழி சபையில் சேவை.

ஒரு சமயம், ஜென்னி எங்களைப் பார்ப்பதற்காக புருக்லின் பெத்தேலுக்கு வந்தாள்; எல் சால்வடாரில் அவள் எங்களை எப்படிச் சந்தித்தாள் என்ற கதையைக் அவளிடம் கேட்டது சுவாரஸ்யமாக இருந்தது. அன்று அவள் ஒரு பைபிள் படிப்புக்குச் சென்றிருந்தாள்; படிப்பை நடத்திக் கொண்டிருந்தபோதே உடம்புக்கு ஏதோ செய்வதுபோல் அவளுக்குத் தோன்றியிருக்கிறது. வீட்டுக்குச் செல்லும் வழியில், மருந்து வாங்குவதற்கு வந்திருக்கிறாள். ஏதோ காரணத்தினால் எப்போதும் போகிற மருந்து கடைக்குச் செல்லாமல் நாங்கள் சென்ற அதே கடைக்கு வந்திருக்கிறாள்.

பிற நாடுகளில் சேவை

1999-ல் ஒரு நாள், பெத்தேலில் என்னுடைய கண்காணி இவ்வாறு கேட்டு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்: “ஆஸ்திரேலிய கிளைக்குச் சென்று அங்குள்ள மண்டல பொறியியல் அலுவலகத்தில் நடைபெறுகிற ஒரு புராஜெக்டில் மூன்று மாதங்கள் வேலை செய்ய விரும்புகிறீர்களா?”

நான் எந்தத் தயக்கமுமின்றி “ஆம்” என்று சொன்னேன். விரைவில் நாங்கள் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பினோம்; அங்கே மூன்று வருடங்கள் சேவை செய்தோம். கிழக்கிலும் தென் பசிபிக்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் கிளை அலுவலக கட்டடங்களை வடிவமைப்பதற்கு உதவியது எங்களுக்குப் பெரும் சந்தோஷத்தைத் தந்தது. 2003-ல் புருக்லின் திரும்பியபோது, எங்களுக்கு இன்னுமொரு ஆச்சரியம் காத்திருந்தது. மற்றொரு அயல்நாட்டு நியமிப்பிற்கு நாங்கள் அழைக்கப்பட்டோம்; பிரேசிலிலுள்ள கிளையில் இயங்கும் ராஜ்ய மன்ற மண்டல அலுவலத்தில் சேவை செய்ய நாங்கள் அழைக்கப்பட்டோம்; அது மிகப்பெரிய நகரமான சாவோ போலாவுக்குச் சற்று தொலைவில் அமைந்துள்ளது.

அங்கேதான் இப்போதும் நாங்கள் இருக்கிறோம். தென் அமெரிக்காவிலுள்ள பெரும்பாலான நாடுகளில் நடைபெறுகிற ராஜ்ய மன்றக் கட்டுமானப் பணியை இந்த அலுவலகம் மேற்பார்வை செய்கிறது. அத்தகைய கட்டுமானப் பணியில் உதவுவதும், இப்படிப்பட்ட பல பிராஜெக்டுகளில் வேலை செய்கிறவர்களை ஊக்கமூட்டுவதுமே என்னுடைய நியமிப்பு; எனவே நான் அத்தகைய இடங்களுக்குப் பயணிக்கும்போது சூசனும் என்னுடன் சேர்ந்து கொள்கிறாள்.

முக்கியமானவற்றுக்கே முதலிடம்

சொல்லப்போனால், இப்போதும்கூட நீர்சறுக்கு விளையாடுவதென்றால் எனக்கு குஷிதான்; ஆனால், ‘சீறிவரும் அலைகளை’விடச் சிறப்பான ஒன்றை நான் கண்டுபிடித்திருக்கிறேன். எனவே நீர்சறுக்கு விளையாட்டை அதற்குரிய இடத்தில் வைத்திருக்கிறேன்; ஒரு பொழுதுபோக்காக மட்டுமே அதில் ஈடுபடுகிறேன். சூசனுடைய அன்பான ஆதரவுடன் அதைவிட முக்கியமான ஒன்றில், அதாவது நம் அன்பான கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்வதில் என் கவனத்தை ஒருமுகப்படுத்தி வருகிறேன்.

ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலைகளை மேம்படுத்துவதற்கும், யெகோவாவின் தூய வணக்கத்தை ஆதரிப்பதற்கும் எங்களுடைய வாழ்க்கையையும் திறமைகளையும் பயன்படுத்துவதே எங்கள் முக்கிய அக்கறையாக இருக்கிறது. யெகோவாவை எங்கு சேவிக்கிறோம் என்பதல்ல, எங்கு சேவித்தாலும் முழு ஆத்துமாவோடு அவரைச் சேவிப்பதே மிக முக்கியமானது என்ற பாடத்தை நாங்கள் கற்றிருக்கிறோம்.—கொலோசெயர் 3:24.

[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]

“இப்போதும்கூட நீர்சறுக்கு விளையாடுவதென்றால் எனக்கு குஷிதான்; ஆனால், ‘சீறிவரும் அலைகளை’விடச் சிறப்பான ஒன்றை நான் கண்டுபிடித்திருக்கிறேன்”

[பக்கம் 22, 23-ன் படம்]

நான் நீர்சறுக்கு விளையாடும் படம், இது சம்மர் சர்ஃப் பெஸ்டிவல் போஸ்டரில் பயன்படுத்தப்பட்டது

[பக்கம் 23-ன் படம்]

13 வயதில்

[பக்கம் 23-ன் படம்]

ஹிப்பி வாழ்க்கை அர்த்தமற்றதாக தோன்றியது

[பக்கம் 25-ன் படங்கள்]

மேலே: ராஜ்ய மன்ற கட்டுமான வேலைக்கு உதவுகையில்

வலது: இன்று சூசனுடன்