வழி 2 உறுதிமொழி காத்தல்
வழி 2 உறுதிமொழி காத்தல்
“கடவுள் இணைத்திருப்பதை எந்த மனிதனும் பிரிக்காதிருக்கட்டும்.”—மத்தேயு 19:6.
இதன் அர்த்தம். இனிய இல்லற வாழ்வில், கணவனும் மனைவியும் திருமணப் பந்தத்தை ஆயிரங்காலத்துப் பயிராகக் கருதுவார்கள். ஏதாவது பிரச்சினை எழுந்தால், அதைத் தீர்க்கவே முயற்சி செய்வார்கள், அதைச் சாக்காக வைத்துக்கொண்டு தங்கள் பந்தத்தை முறித்துக்கொள்ள வழிதேட மாட்டார்கள். பிரியாமல் வாழ்வோம் என்ற உறுதிமொழியைக் காப்பாற்றவே எப்போதும் நினைப்பார்கள்; இதனால், பாதுகாப்பு உணர்வுடன் வாழ்வார்கள். ‘திருமண பந்தத்தை அவர்(ள்) எப்போதும் மதிப்பார்(ள்)’ என்ற நம்பிக்கை இருவருக்கும் இருக்கும்.
இதன் முக்கியத்துவம். உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டுமென்ற உணர்வு, மணவாழ்வுக்குப் பல விதங்களில் முதுகெலும்பாக இருக்கிறது. ஆனால், அடிக்கடி சண்டை வந்தால், ‘வாக்கைக் கொடுத்து வசமாக மாட்டிக்கொண்டோமே’ என்ற எண்ணம் ஏற்படலாம். காலப்போக்கில், “உயிர் பிரியும்வரை இணை பிரியோம்” என்ற உறுதிமொழி ஏதோ கடமைக்கு செய்த ஒப்பந்தமாக ஆகிவிடலாம்; ‘அதில் ஓட்டைகள் இருக்காதா, அதிலிருந்து நழுவ முடியாதா’ என தம்பதியர் ஏங்க ஆரம்பிக்கலாம். அவர்கள் நிஜமாகவே ஆளுக்கொரு திசையில் பிரிந்து போகாவிட்டாலும், நான்கு சுவருக்குள்ளேயே பிரிந்து வாழலாம்; உதாரணமாக, முக்கியப் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வேண்டிய சமயங்களில்கூட, ‘நான் ஏன் பேச வேண்டும்’ என்று ‘உர்ரென’ இருந்துவிடலாம்.
இதைச் செய்து பாருங்கள். உறுதிமொழியைக் காப்பாற்றுவது எந்தளவுக்கு முக்கியமென நினைக்கிறீர்கள் என்று உங்களையே சோதித்துப் பாருங்கள். அதற்காக, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
◼ சண்டை மூளும்போது, ‘ஏன்தான் இவரை(ளை) கல்யாணம் செய்துகொண்டேனோ’ என்று வருந்துகிறேனா?
◼ நான் இன்னொரு ஆணோடு/பெண்ணோடு சேர்ந்து இருப்பதுபோல் அடிக்கடி பகற்கனவு காண்கிறேனா?
◼ சிலசமயங்களில் என் கணவனிடம்/மனைவியிடம், “இனி என்னால் இந்த வீட்டில் வாழ முடியாது” என்றோ, “என்னைப் புரிந்து நடக்கிற ஒரு ஜீவன் எனக்குக் கிடைக்காமலா போய்விடும்” என்றோ சொல்கிறேனா?
தீர்மானம் எடுங்கள். உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தை மேலும் வளர்ப்பதற்கு ஓரிரண்டு வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். (சில ஆலோசனைகள்: அவ்வப்போது உங்கள் கணவருக்கு/மனைவிக்கு அன்பாக நாலு வார்த்தை எழுதிக் கொடுங்கள்; வேலை செய்யுமிடத்தில் உங்கள் கணவரின்/மனைவியின் ஃபோட்டோக்களை வையுங்கள்; அல்லது, பேச்சுத்தொடர்பு விட்டுப்போகாமல் இருக்க, தினமும் வேலை செய்யுமிடத்திலிருந்து உங்கள் கணவருக்கு/மனைவிக்கு ஃபோன் செய்து பேசுங்கள்.)
இதுபோன்ற பல்வேறு ஆலோசனைகளைச் சொல்லி, அவற்றில் எது உங்கள் துணைக்கு மிகவும் பிடித்திருக்கிறதென ஏன் கேட்கக் கூடாது? (g09 10)
[பக்கம் 4-ன் படம்]
சாலையோர தடுப்பு எப்படி வாகனங்களைப் பாதுகாக்கிறதோ, அப்படியே திருமண உறுதிமொழி இல்லறத்தைப் பாதுகாக்கிறது
[படத்திற்கான நன்றி]
© Corbis/age fotostock