வழி 5 நியாயமாக நடத்தல்
வழி 5 நியாயமாக நடத்தல்
“நீங்கள் நியாயமானவர்கள் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்திருக்கட்டும்.”—பிலிப்பியர் 4:5.
இதன் அர்த்தம். இனிய இல்லற வாழ்வில், கணவனும் மனைவியும் எப்போதும் ஒருவரையொருவர் பெருந்தன்மையோடு மன்னிப்பார்கள். (ரோமர் 3:23) பிள்ளைகளை ஒரேயடியாகக் கண்டிக்க மாட்டார்கள், அவர்களுக்கு ஒரேயடியாகச் செல்லம் கொடுக்கவும் மாட்டார்கள். வீட்டில் ஓரளவே சட்டங்கள் போடுவார்கள். கண்டித்துத் திருத்த வேண்டிய சந்தர்ப்பத்தில்கூட, அதை ‘மட்டாகவே,’ அதாவது அளவாகவே செய்வார்கள்.—எரேமியா 30:11.
இதன் முக்கியத்துவம். ‘பரலோகத்திலிருந்து வருகிற ஞானம் நியாயமானதாக இருக்கிறது’ என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:17) தவறு செய்யும் இயல்புள்ள மனிதரிடம் கடவுளே பரிபூரணத்தை எதிர்பார்க்காதபோது, தம்பதிகள் மட்டும் ஏன் அதை ஒருவருக்கொருவர் எதிர்பார்க்க வேண்டும்? உண்மையில், சின்னச் சின்ன குறைகளையெல்லாம் குத்திக்காட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குறைகள் சரியாகாது, மனக்கசப்புதான் வளரும். “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம்” என்ற உண்மையை உணர்வதே புத்திசாலித்தனம்.—யாக்கோபு 3:2.
இனிய இல்லற வாழ்வில், பெற்றோர் பிள்ளைகளிடம் நியாயமாக நடந்துகொள்வார்கள். அளவுக்குமீறி அவர்களைக் கண்டிக்க மாட்டார்கள், “பிரியப்படுத்தக் கடினமானவர்களாக” இருக்க மாட்டார்கள். (1 பேதுரு 2:18) ஓரளவு பொறுப்புடன் நடந்துகொள்ளும் டீனேஜ் பிள்ளைகளுக்குச் சுதந்திரம் தருவார்கள். அவர்களுடைய ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்த முயற்சிக்க மாட்டார்கள். பிள்ளைகளை ரோபோக்கள்போல் நினைத்து சதா ரிமோட் கன்ட்ரோலைப் பயன்படுத்துவது, “மழை வர வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக ஆடுவது போல் இருக்கும். நீங்கள் ஆடி ஆடிக் களைத்துவிடுவீர்கள், ஆனால் மழையே வராது” என்கிறது ஒரு புத்தகம்.
இதைச் செய்து பாருங்கள். நீங்கள் எந்தளவுக்கு நியாயமாக நடந்துகொள்கிறீர்களென உங்களையே சோதித்துப் பார்க்க இந்தக் கேள்விக்குப் பதிலளியுங்கள்:
◼ உங்கள் கணவரை/மனைவியை எப்போது கடைசியாகப் பாராட்டினீர்கள்?
◼ உங்கள் கணவரை/மனைவியை எப்போது கடைசியாகக் குறைசொன்னீர்கள்?
தீர்மானம் எடுங்கள். இங்குள்ள முதல் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினீர்களா? இரண்டாவது கேள்விக்கு சட்டென பதிலளித்துவிட்டீர்களா? அப்படியென்றால், இன்னும் நியாயமாக நடந்துகொள்ள நீங்கள் என்ன லட்சியம் வைக்கலாமென சிந்தித்துப் பாருங்கள்.
நீங்களும் உங்கள் துணையும் சேர்ந்து என்ன தீர்மானங்கள் எடுக்கலாம் என்பதைப் பற்றி ஏன் அவரோடு பேசக் கூடாது?
ஓரளவு பொறுப்புடன் நடந்துகொள்ளும் உங்கள் டீனேஜ் பிள்ளைக்கு என்னென்ன விதங்களில் சுதந்திரம் தரலாமென சிந்தித்துப் பாருங்கள்.
எந்த நேரத்திற்குள் வீட்டிற்கு வர வேண்டும் போன்ற விஷயங்களை உங்கள் டீனேஜ் பிள்ளையோடு ஏன் மனந்திறந்து பேசக் கூடாது? (g09 10)
[பக்கம் 7-ன் படம்]
கவனமான ஓட்டுநரைப் போலவே நியாயமான குடும்ப அங்கத்தினரும் வளைந்துகொடுக்கிறார்