Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

என் கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

என் கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர்

என் கோபத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

நீங்கள் எவ்வளவு அடிக்கடி கோபப்படுகிறீர்கள்?

❑ கோபப்படுவதே கிடையாது

❑ மாதந்தோறும்

❑ வாரந்தோறும்

❑ நாள்தோறும்

உங்களுடைய கோபத்துக்குப் பெரும்பாலும் யார் காரணம்?

❑ யாரும் கிடையாது

❑ பள்ளி மாணவர்கள்

❑ பெற்றோர்

❑ கூடப் பிறந்தவர்கள்

❑ வேறு யாராவது

உங்களுடைய கோபத்தைக் கிளறுகிற ஒரு சூழ்நிலை என்ன?

.....

“கோபப்படுவதே கிடையாது,” “யாரும் கிடையாது” என்ற வார்த்தைகளுக்கு நேராகபோட்டுவிட்டு, கடைசிக் கேள்விக்குப் பதில் எழுதாமல் விட்டுவிட்டால் உங்களுக்குச் சபாஷ்! உங்களால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது என்பதை இது காட்டுகிறது.

என்றாலும், எரிச்சலூட்டும் சூழ்நிலைகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடந்துகொள்கிறோம்; நாம் எல்லாருமே ஏதாவதொரு விதத்தில் குற்றங்குறை உள்ளவர்களாய் இருக்கிறோம். “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம்” என பைபிள் எழுத்தாளரான யாக்கோபு சொன்னார். (யாக்கோபு 3:2) சொல்லப்போனால், கோபம் என்று வரும்போது 17 வயது சரீனாவைப் போலவே நீங்களும் உணரலாம். * “யாராவது எனக்கு எரிச்சல் உண்டாக்கினால், கோபம் உள்ளுக்குள் புகைந்துகொண்டே இருக்கும். அதன் பிறகு யார் என்னைச் சீண்டினாலும் சரி பொறிந்து தள்ளி விடுவேன். அது என் அம்மா அப்பாவாக இருந்தாலும் சரி, என் சகோதரியாக இருந்தாலும் சரி, என் நாயாகவே இருந்தாலும் சரி!” என்று அவள் சொல்கிறாள்.

தவறையும் உண்மையையும் பகுத்துப் பார்த்தல்

உங்களுடைய கோப வெள்ளத்திற்கு அணை கட்டுவது கடினமாக இருக்கிறதா? அப்படியானால், உங்களுக்கு உதவி இருக்கிறது. ஆனால் முதலில், சில தவறான கருத்துகளை ஒதுக்கித்தள்ள வேண்டும்.

தவறு: “என்னால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது. என்னுடைய பரம்பரையே கோபத்திற்குப் பேர்போனது!”

உண்மை: குடும்பம், சுற்றுச்சூழல், அல்லது பிற காரணங்களால் ‘விரைவில் கோபம் கொள்ளும்’ சுபாவம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், கோபம் வரும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. (நீதிமொழிகள் 29:22, ஈஸி டு ரீட் வர்ஷன்) இப்போது கேள்வி என்னவென்றால், கோபம் வருகையில் அதை நீங்கள் கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா, அல்லது அது உங்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறீர்களா? மற்றவர்கள் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த கற்றுக்கொண்டிருக்கிறார்கள், நீங்களும் அதைக் கற்றுக்கொள்ளலாம்!—கொலோசெயர் 3:8-10.

முக்கிய வசனம்: “எல்லா விதமான மனக்கசப்பையும், சினத்தையும், கடுங்கோபத்தையும், கூச்சலையும், பழிப்பேச்சையும், . . . உங்களைவிட்டு நீக்கிப்போடுங்கள்.”—எபேசியர் 4:31.

தவறு: “என்னைப் பொறுத்தவரை, கோபம் வந்தால் அதை உள்ளுக்குள் புதைத்து வைப்பதைவிடக் கொட்டித் தீர்ப்பதுதான் நல்லது.”

உண்மை: இரண்டுமே உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவையாக இருக்கலாம். உங்களுடைய வேதனையை ‘கொட்டித் தீர்க்க’ ஒரு காலம் உண்டு என்பது வாஸ்தவமே. (யோபு 10:1, பொது மொழிபெயர்ப்பு) அதற்காக, யாரிடம் போய்க் கோபத்தில் வெடிக்கலாமென பார்த்துக்கொண்டிருக்க அவசியமில்லை. கோபத்தில் கொப்பளிக்காமலேயே உணர்ச்சிகளைத் தெரிவிக்க உங்களால் பழகிக்கொள்ள முடியும்.

முக்கிய வசனம்: “நம் எஜமானரின் ஊழியக்காரனோ சண்டைபோடக் கூடாது; மாறாக, எல்லாரிடமும் மென்மையாய் நடந்துகொள்கிறவனாகவும், . . . தீங்கைப் பொறுத்துக்கொள்கிறவனாகவும்” இருக்க வேண்டும்.—2 தீமோத்தேயு 2:24.

தவறு: “நான் ‘எல்லாரிடமும் மென்மையாக நடந்துகொண்டால்’ என்னை ஏறி மிதிப்பார்கள்.”

உண்மை: சுயக்கட்டுப்பாடுடன் நடப்பதற்கு நெஞ்சுரம் தேவை என்பது மற்றவர்களுக்குத் தெரியும்; ஆகவே, நீங்கள் அப்படி நடக்கும்போது அவர்கள் உங்களை இன்னும் அதிகமாக மதிப்பார்கள்.

முக்கிய வசனம்: “கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாகுங்கள்.”—ரோமர் 12:18.

கோபத்திற்குக் கடிவாளம்

அடிக்கடி ‘மூட்’ மாறிவிடுவது உங்களுடைய சுபாவமாக இருந்தால், நீங்கள் கோபத்தில் பீறிட்டதற்கான பழியை இதுவரையில் மற்றவர்கள்மீது போட்டிருக்கலாம். உதாரணமாக, “அவள்தான் என் கோபத்தைக் கிளறினாள்” அல்லது “அவன்தான் என்னைக் கோபப்பட வைத்தான்” என்று சொல்லியிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுடைய உணர்ச்சிகளின் ‘ரிமோட் கண்ட்ரோல்’ மற்றவர்கள் கையில் இருக்கிறது என்றுதான் அர்த்தம். அந்த ‘கண்ட்ரோலை’ மறுபடியும் உங்கள் கைக்குக் கொண்டுவர நீங்கள் என்ன செய்யலாம்? பின்வருவனவற்றை முயன்று பாருங்கள்.

பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். முதலாவதாக, உங்களுடைய கோபத்திற்கு நீங்கள்தான், ஆம் நீங்கள் மட்டும்தான், காரணம் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். ஆகவே, மற்றவர்கள்மீது பழிபோடுவதைத் தவிருங்கள். “அவள்தான் என் கோபத்தைக் கிளறினாள்” என்று சொல்வதற்குப் பதிலாக, ‘என்னுடைய கோபாவேசத்திற்கு நான்தான் இடங்கொடுத்தேன்’ என்று நினைத்துக்கொள்ளுங்கள். “அவன்தான் என்னைக் கோபப்பட வைத்தான்” என்று சொல்வதற்குப் பதிலாக, ‘நான்தான் ஆத்திரப்பட்டுவிட்டேன்’ என்று நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய செயல்களுக்கு நீங்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவது எளிதாகிவிடும்.—கலாத்தியர் 6:5.

பிரச்சினையை எதிர்பாருங்கள். பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அறிவுள்ளவர்கள் துன்பம் வருவதைப் பார்த்து அதிலிருந்து விலகிக்கொள்வார்கள். ஆனால் அறிவற்றவர்களோ நேராகத் துன்பத்தை நோக்கிப் போய் அதில் சிக்கிக்கொள்வார்கள்.” (நீதிமொழிகள் 22:3, ERV) அப்படியென்றால், பிரச்சினை வருமென எதிர்பார்ப்பது முக்கியம். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பெரும்பாலும் எந்தச் சமயத்தில் எனக்குக் கோபம் தலைக்கேற வாய்ப்புள்ளது?’ உதாரணமாக, மேகன் என்ற பெண் இவ்வாறு சொல்கிறாள்: “நான் நைட் ஷிஃப்டில் வேலை செய்கிறேன்; வேலை முடிந்ததும் ரொம்பவே களைப்பாக இருப்பேன். அந்தச் சமயத்தில்தான், சின்ன விஷயத்திற்குக்கூட எரிந்துவிழுவேன்.”

கேள்வி: எந்தெந்த சூழ்நிலைகளில் உங்களுக்குக் கோபம் தலைக்கேற வாய்ப்புள்ளது?

.....

சரியாக நடந்துகொள்ளத் திட்டமிடுங்கள். கோபம் வரும்போது, நன்கு மூச்செடுத்து, குரலைத் தாழ்த்தி, மெதுவாகப் பேசுங்கள். (“திருடா/திருடி! என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்காமல் என்னுடைய ஸ்வெட்டரை எடுத்துவிட்டாய்!”) என்று பழிபோடுவதற்குப் பதிலாக, அப்படிச் செய்தது உங்களை எப்படிப் பாதித்ததெனச் சொல்லுங்கள். (“ஸ்வெட்டர் போடுவதற்குத் தேடியபோது அதைக் காணவில்லை; நீ என்னிடம் கேட்காமல் அதை எடுத்திருந்தது என் மனசுக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது.”)

பயிற்சி: சமீபத்தில் நீங்கள் கோபப்பட்ட ஒரு சூழ்நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்.

1. எது உங்கள் கோபத்தைத் தூண்டியது?

.....

2. அப்போது நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள்? (நீங்கள் என்ன சொன்னீர்கள்/அல்லது செய்தீர்கள்?)

.....

3. எப்படி நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்?

.....

விளைவுகளைச் சிந்தித்துப் பாருங்கள். இதற்கு அநேக பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும். உதாரணமாக:

நீதிமொழிகள் 12:18 (ERV): “ஒருவன் சிந்திக்காமல் பேசினால் அவ்வார்த்தைகள் வாளைப்போன்று மற்றவர்களைத் துன்புறுத்தும்.” வார்த்தைகள் மனதைப் புண்படுத்தலாம்; நீங்கள் கோபத்தில் வெடிக்கும்போது, பின்னால் வருத்தப்படும் அளவுக்கு எதையாவது நிச்சயம் பேசிவிடுவீர்கள்.

நீதிமொழிகள் 29:11 (ERV): ‘ஒரு முட்டாள் விரைவில் கோபம் அடைகிறான். ஆனால் ஞானமுள்ளவனோ பொறுமையாகத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான்.’ முடிவில், வசைபாடுவது உங்களைத்தான் முட்டாளாகக் காட்டும்.

நீதிமொழிகள் 14:30 (பொ.மொ.): “மன அமைதி உடல் நலம் தரும்.” கோபப்படுவது உங்களுடைய ஆரோக்கியத்தைக் கெடுக்கும்! அனிதா என்ற பெண் இவ்வாறு சொல்கிறாள்: “என்னுடைய குடும்பத்தில் நிறையப் பேருக்கு இரத்தக் கொதிப்பு இருக்கிறது; நான் அடிக்கடி ‘டென்ஷன்’ ஆகிவிடுவதால், கோபத்தில் எதையாவது செய்வதற்குமுன் ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்துப் பார்க்கிறேன்.”

இதிலிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? உங்களுடைய சொல்லாலும் செயலாலும் என்ன விளைவடையலாம் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். 18 வயது ஹெதர் இவ்வாறு சொல்கிறாள்: “‘இந்த நபரிடம் கோபப்பட்டால் என்ன ஆகும்? இவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்? எங்களுக்கு இடையிலுள்ள நட்பு என்ன ஆகும்? யாராவது என்னிடம் அப்படி நடந்துகொண்டால் எனக்கு எப்படி இருக்கும்?’ என்றெல்லாம் என்னையே கேட்டுக்கொள்கிறேன்.” நீங்களும்கூட பேசுவதற்கு முன், கடிதம் எழுதுவதற்கு முன், அல்லது செல்ஃபோனிலோ ஈ-மெயிலிலோ மெஸேஜ் அனுப்புவதற்கு முன் இதே போன்ற கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்.

கேள்வி: ஒருவர் உங்களுக்கு எரிச்சலூட்டியதற்காக, நீங்கள் கோபத்தில் அவருக்குக் கன்னாபின்னாவென மெஸேஜ் அனுப்பினால் என்ன நடக்கலாம்?

.....

உதவி பெறுங்கள். “இரும்புக் கத்தியைக் கூராக்க ஜனங்கள் இரும்பையே பயன்படுத்துவார்கள். இதே விதத்தில் ஒருவரிடமிருந்து ஒருவர் அறிந்து கொள்வதன் மூலம், இருவருமே கூர்மை அடைய முடியும்” என்று நீதிமொழிகள் 27:17 (ERV) சொல்கிறது. உங்களுடைய அம்மா அப்பாவோ முதிர்ச்சியுள்ள நண்பரோ எப்படிக் கோபத்தை அடக்கிக்கொண்டு அமைதியாய் இருக்கிறார் என நீங்கள் கேட்கலாம், அல்லவா?

உங்களுடைய முன்னேற்றத்தைக் கவனியுங்கள். உங்களுடைய முன்னேற்றத்தை ஒரு டைரியில் எழுதி வைத்துக்கொண்டு எந்தளவுக்குத் தேறியிருக்கிறீர்கள் என்பதைக் கவனித்து வாருங்கள். உங்களுக்குக் கோபம் பீறிட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், (1என்ன நடந்தது, (2எப்படி நடந்துகொண்டீர்கள், (3எப்படிச் சரியாக நடந்திருக்கலாம் என்பதையெல்லாம் எழுதுங்கள். காலப்போக்கில், கோபம் வரும்போது நீங்கள் எடுத்த எடுப்பிலேயே சரியாக நடந்துகொள்வீர்கள்! (g09-E 09)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்பு]

^ இந்தக் கட்டுரையில் உள்ள சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

சிந்திப்பதற்கு

சில சமயங்களில், நாம் நினைத்துப் பார்க்காதவர்கள்கூட கோபத்தில் வெடிக்கலாம். பின்வரும் உதாரணங்களிலிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?

◼ மோசே.—எண்ணாகமம் 20:1-12; சங்கீதம் 106:32, 33.

◼ பவுலும் பர்னபாவும்.—அப்போஸ்தலர் 15:36-40.

[பக்கம் 27-ன் பெட்டி/படம்]

உங்களைப் போன்றவர்கள் சொல்கிறார்கள்

என்னுடைய உணர்ச்சிகளை டைரியில் எழுதுவது அல்லது அம்மாவிடம் சொல்வது கோபப்படாமல் அமைதியாய் இருக்க எனக்கு உதவுகிறது.”​—⁠அலெக்ஸஸ், அமெரிக்கா.

நான் ரொம்ப டென்ஷனில் இருந்தால், வேக வேகமாக நடப்பேன்; அப்போது, டென்ஷன் குறையும், வெளிக்காற்றைச் சுவாசிப்பதால் தெளிவாக யோசிக்கவும் முடியும்.—எலிசபெத், அயர்லாந்து.

நான் கோபமூட்டும் சூழ்நிலையிலிருந்து மனதளவில் வெளியே வந்து, ‘நான் காட்டுக் கூச்சல் போட ஆரம்பித்தால் என்ன நடக்கும்?’ என என்னையே கேட்டுக்கொள்கிறேன். அப்படிக் கூச்சல் போடுவது எந்த விதத்திலும் உதவாது என்ற முடிவுக்கே எப்போதும் வருகிறேன்.—கிரேம், ஆஸ்திரேலியா.

[பக்கம் 27-ன் பெட்டி]

உங்களுக்குத் தெரியுமா?

சில சமயங்களில் கடவுளும்கூட கோபப்படுகிறார். ஆனாலும், நியாயமான காரணங்களுக்காக மட்டுமே அவர் கோபப்படுகிறார்; அதுவும் தம்முடைய கோபத்தை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவர் உணர்ச்சிவசப்பட்டு இசகுபிசகாக நடந்துகொள்வதில்லை!—யாத்திராகமம் 34:6; உபாகமம் 32:4; ஏசாயா 48:9 ஆகிய வசனங்களைப் பாருங்கள்.

[பக்கம் 28-ன் படம்]

நீங்கள் கோபத்தில் கொதிப்படைவீர்களா? அது உங்கள் கையில்