Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தனிமையை விரும்புவது தவறா?

தனிமையை விரும்புவது தவறா?

இளைஞர் கேட்கின்றனர்

தனிமையை விரும்புவது தவறா?

பின்வரும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் பதிலுக்குப் பக்கத்தில் செய்யுங்கள்.

1. உங்கள் ரூம் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருக்கையில், தம்பியோ தங்கையோ கதவைத் தட்டாமல் திடீரென உள்ளே நுழைகிறார்கள்.

❍ ‘அதனால் என்ன . . . நானும் அப்படித்தான் செய்கிறேன்.’

❍ ‘அறிவில்லையா உனக்கு! நான் துணி மாற்றிக்கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?’

2. ஃபோனில் உங்கள் ஃபிரெண்டிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், அம்மா பக்கத்திலேயே நின்றுகொண்டு நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

❍ ‘அதனால் என்ன . . . நான் ஒன்றும் இரகசியம் பேசவில்லையே.’

❍ ‘எனக்கு சங்கடமாக இருக்கிறது! நீங்கள் எப்போதும் என்னை நோட்டம்விடுவது போல் உணருகிறேன்.’

3. நீங்கள் வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே உங்கள் பெற்றோர் கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள். “எங்க போயிருந்த? என்ன செய்திட்டிருந்த? யார்கூட போயிருந்த?”

❍ ‘அதனால் என்ன . . . எப்படியிருந்தாலும் எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்லத்தான் போகிறேன்.’

❍ ‘எனக்கு எரிச்சலாக இருக்கிறது! என் பெற்றோருக்கு என்மேல் நம்பிக்கையே இல்லை!’

நீங்கள் சிறு பிள்ளையாக இருந்தபோது தனிமையை ரொம்ப விரும்பி இருக்கமாட்டீர்கள். உங்கள் தம்பியோ தங்கையோ கேட்காமல் கொள்ளாமல் திடீரென ரூமுக்குள் வந்தால் அவர்களை ஒன்றும் சொல்லியிருக்க மாட்டீர்கள். உங்கள் பெற்றோர் உங்களிடம் ஏதாவது கேட்டால், சட்டென பதில் சொல்லியிருப்பீர்கள். அந்தச் சமயத்தில் உங்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருந்தது. ஆனால் இப்போது சில சமயங்களில், சில விஷயங்களை இரகசியமாக வைக்க நீங்கள் விரும்பலாம். “சில விஷயங்களை என் மனதுக்குள்ளேயே வைத்துக்கொள்ள விரும்புகிறேன்” என்கிறாள் 14 வயது கேரி. *

இந்தத் தனிமை ஆசை எப்படித் திடீரென உங்களுக்குள் வந்தது? உங்கள் வளர்ச்சியின் ஒரு பாகம்தான் இந்த ஆசை. உதாரணத்திற்கு, பருவ வயதில் உங்கள் உடலில் நிகழும் மாற்றங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம், ஏன் உங்கள் குடும்பத்தினர் முன்புகூட உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம். அதுமட்டுமல்ல, நீங்கள் வளர்ந்து வரும்போது சில விஷயங்களை தனிமையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டுமென விரும்பலாம். அப்படியென்றால், நீங்கள் ‘சிந்திக்கும் திறனை’ வளர்த்துக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம். சிந்திக்கும் திறன் இளைஞர்களுக்கு அழகு என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 1:1, 4, NW; உபாகமம் 32:29) இயேசு கிறிஸ்துவும்கூட ஆழ்ந்து சிந்திப்பதற்காக “ஒதுக்குப்புறமான ஓர் இடத்திற்குப்” போனார்.—மத்தேயு 14:13.

என்றாலும், நீங்கள் இன்னும் பெற்றோருடைய கண்காணிப்பில் இருப்பதால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. (எபேசியர் 6:1) உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவர்களுடைய விருப்பமும் தனிமைக்கான உங்களுடைய விருப்பமும் சந்திக்கும்போது பிரச்சினைகள் எழலாம். இந்தச் சவாலை எப்படிச் சமாளிக்கலாம்? சரி, என்ன இரண்டு காரணங்களால் பிரச்சினைகள் வரலாம் என்று இப்போது பார்ப்போம்.

நீங்கள் தனிமையை விரும்புகையில்

தனிமையை விரும்ப உங்களுக்கு நியாயமான காரணங்கள் பல இருக்கலாம். ஒருவேளை, நீங்கள் கொஞ்சம் “ஓய்வெடுக்க” விரும்பலாம். (மாற்கு 6:31) அல்லது, இயேசு தம் சீடர்களுக்குச் சொன்னதுபோல் ‘தனி அறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்ய’ விரும்பலாம். (மத்தேயு 6:6; மாற்கு 1:35) பிரச்சினை என்னவென்றால், (உங்களுக்கென்று ஒரு தனி ரூம் இருந்தால்) உங்கள் ரூம் கதவை மூடிக்கொள்ளும்போது நீங்கள் ஜெபம் செய்கிறீர்கள் என்று பெற்றோர் நினைக்கமாட்டார்கள். அந்தச் சமயத்தில் நீங்கள் தனியாக இருக்க விரும்புவதை உங்கள் உடன் பிறந்தவர்களும் உணராமல் போகலாம்.

நீங்கள் என்ன செய்யலாம். உங்கள் படுக்கை அறையை போர்க்களமாக மாற்றுவதற்குப் பதிலாக இப்படிச் செய்து பாருங்கள்.

உங்கள் உடன்பிறப்புகள் விஷயத்தில், அவர்களுடன் கலந்துபேசி சில நியாயமான வரையறைகளை விதிக்கலாம். அப்போதுதான் உங்களுக்கென்று கொஞ்சம் நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடியும். தேவைப்பட்டால், உங்கள் பெற்றோரிடமும் ஆலோசனை கேட்கலாம்.

உங்கள் பெற்றோர் விஷயத்தில், அவர்களுடைய கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “சில சமயங்களில், என் பெற்றோர் என்மீது ஒரு கண் வைத்திருப்பார்கள்” என்கிறாள் 16 வயது ரெபேக்கா. “ஆனால், நான் ஒரு பெற்றோராக இருந்து, எனக்கு ஒரு டீனேஜ் பிள்ளை இருந்தால் நானும் அவன்/அவள்மீது ஒரு கண் வைத்திருப்பேன். ஏனென்றால், இந்த உலகத்தில் அவர்கள் எதிர்ப்படும் சவால்கள் எனக்கு நன்றாகவே தெரியும்!” என்கிறாள். ரெபேக்காவைப் போல், உங்கள் பெற்றோரின் கவலைகளை உங்களாலும் புரிந்துகொள்ள முடிகிறதா?—நீதிமொழிகள் 19:11.

இந்தக் கேள்விகளுக்கு நீங்களே நேர்மையாக பதில் சொல்லிக்கொள்ளுங்கள்: ‘என் ரூம் கதவு மூடியிருக்கும்போது நான் ஏதாவது வேண்டாத வேலை செய்துகொண்டிருப்பேன் என்று என் பெற்றோர் சந்தேகப்படுகிற அளவுக்கு நான் நடந்திருக்கிறேனா? நான் என்ன செய்கிறேன், ஏது செய்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ள என் பெற்றோர் இரகசிய வழிகளைப் பயன்படுத்தும் அளவுக்கு என் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே நான் மூடி வைத்திருக்கிறேனா?’ பொதுவாக, நீங்கள் எந்தளவுக்கு உங்கள் பெற்றோரிடம் ஒளிவுமறைவில்லாமல் இருக்கிறீர்களோ அந்தளவுக்கு அவர்களும் உங்கள்மீது சந்தேகப்பட மாட்டார்கள். *

செயல் திட்டம். இந்த விஷயத்தைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு என்ன சொல்லி ஆரம்பிக்கலாம் என்பதைக் கீழே எழுதுங்கள்.

.....

உங்கள் நட்பு வட்டம் விரிகையில்

பருவ வயதில், குடும்ப வட்டத்தைவிட்டு வெளி உலகில் நீங்கள் நண்பர்களைத் தேடுவது இயல்பு. அதேபோல், உங்கள் நண்பர்கள் யார், அவர்களோடு நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் பெற்றோர் ஆசைப்படுவதும் இயல்பே. உங்களுடைய பெற்றோரைப் பொறுத்தவரை, இது அவர்களுடைய பொறுப்பு, ஏன், அவர்களுடைய கடமை என்றுகூட சொல்லலாம். உங்களுக்கோ அவர்கள் அளவுக்கதிகமாகச் சந்தேகப்படுவது போல் தோன்றலாம். “நான் செல் ஃபோனை எடுத்தாலும் சரி ஈ-மெயிலை பயன்படுத்தினாலும் சரி, பத்து நிமிடத்திற்கு ஒருமுறை, என் அப்பா அம்மா யாரிடம் பேசுகிறேன் என்று கேட்டுக் கேட்டே துளைத்தெடுத்துவிடுவார்கள்” என்று பொருமுகிறாள் 16 வயது ஏமி.

நீங்கள் என்ன செய்யலாம். உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் இடையே உள்ள நல்லுறவை நண்பர்கள் குலைத்துப்போட விடுவதற்குப் பதிலாக, பின்வரும் ஆலோசனைகளை முயன்று பாருங்கள்.

உங்கள் நண்பர்கள் யார் என்று பெற்றோரிடம் சொல்லுங்கள், அவர்களை பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வையுங்கள். உங்கள் நண்பர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க உங்கள் பெற்றோர் துப்பறிவதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். ஆனால், அவர்கள் யார் என்ற விஷயம் மர்மமாக இருந்தால் உங்கள் பெற்றோருக்கு வேறு வழியில்லையே! உங்கள் நண்பர்கள் உங்கள்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பது உங்கள் பெற்றோருக்குத் தெரியும் என்பதை நினைவில் வையுங்கள். (1 கொரிந்தியர் 15:33) உங்கள் நண்பர்களைப் பற்றி உங்கள் பெற்றோருக்கு எந்தளவு தெரிந்திருக்கிறதோ அந்தளவு அவர்களும் உங்கள் நட்பு வட்டத்தைப் பற்றி கவலைப்படாமல் இருப்பார்கள்.

இந்த விஷயத்தைக் குறித்து உங்கள் பெற்றோரிடம் மரியாதையுடன் பேசுங்கள். ‘நீங்கள் என் விஷயத்தில் ரொம்ப தலையிடுகிறீர்கள்’ என்று அவர்களைக் குறை சொல்லாதீர்கள். அதற்கு பதில் இப்படிச் சொல்லிப் பாருங்கள்: “என் நண்பர்களோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் கவனிப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. அதனால், சாதாரண விஷயங்களைப் பற்றிகூட என்னால் அவர்களிடம் சகஜமாகப் பேச முடிவதில்லை.” அப்போது உங்கள் பெற்றோர், நண்பர்கள் விஷயத்தில் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் சுதந்திரம் தரலாம்.—நீதிமொழிகள் 16:23.

உண்மையிலேயே உங்களுக்கு என்ன வேண்டும்: வெறுமனே தனிமையில் இருக்க விரும்புகிறீர்களா அல்லது எதையாவது இரகசியமாக செய்ய விரும்புகிறீர்களா? 22 வயது பிரிட்டானி சொல்கிறாள்: “உங்கள் பெற்றோருடன் வசிக்கையில், அவர்கள் உங்கள்மீது சந்தேகப்படுகிறார்கள் என்றால், நீங்கள் இப்படித்தான் நினைக்க வேண்டும்: ‘நான் செய்வது ஒன்றும் தவறில்லையே, பிறகு நான் ஏன் அதை அவர்களிடமிருந்து மறைக்க வேண்டும்?’ அப்படி மறைக்க வேண்டுமென நினைத்தால் நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்று அர்த்தம்.”

செயல் திட்டம். இந்த விஷயத்தைப் பற்றி உங்கள் பெற்றோரிடம் பேசுவதற்கு என்ன சொல்லி ஆரம்பிக்கலாம் என்பதைக் கீழே எழுதுங்கள்.

.....

தனிமை பெற

உங்களுக்கு எந்தெந்த சந்தர்ப்பங்களில் தனிமை தேவை என்பதை இப்போது உங்களால் யோசித்துப் பார்க்க முடியும்.

முதல் படி: பிரச்சினையைக் கண்டுபிடியுங்கள்.

எந்த விஷயத்தில் உங்களுக்கு இன்னும் கொஞ்சம் தனிமை தேவை என்று நினைக்கிறீர்கள்?

.....

இரண்டாம் படி: பெற்றோரின் கவலைகளை மனதில் கொள்ளுங்கள்.

அவர்கள் கவலைப்படுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

.....

மூன்றாம் படி: தீர்வு கண்டுபிடியுங்கள்.

() உங்களுக்கே தெரியாமல் பிரச்சினைக்கு நீங்கள் எந்த விதத்திலாவது காரணமாய் இருக்கக்கூடும் என்றால் அதைக் கீழே எழுதுங்கள்.

.....

() உங்கள் பதிலுக்கு ஏற்றபடி என்ன மாற்றங்களை நீங்கள் செய்யலாம்?

.....

() உங்கள் பெற்றோர் எந்த விதத்தில் உதவி செய்ய வேண்டுமென விரும்புகிறீர்கள்?

.....

நான்காம் படி: மனம்விட்டு பேசுங்கள்.

நீங்கள் மேலே எழுதிய விஷயங்களைப் பற்றி பொருத்தமான சமயத்தில் உங்கள் பெற்றோருடன் கலந்து பேசுங்கள். (g10-E 03)

“இளைஞர் கேட்கின்றனர்” தொடர் கட்டுரைகளுக்கு: www.watchtower.org/ype

[அடிக்குறிப்புகள்]

^ சில பெயர்கள் நிஜப் பெயர்கள் அல்ல.

^ உங்கள் பெற்றோர் இன்னும் உங்கள்மீது சந்தேகப்படுவதாக தெரிந்தால், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைக் குறித்து நிதானமாகவும் மரியாதையாகவும் அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் மனதிலுள்ள கவலைகளை உங்களிடம் சொல்லும்போது காதுகொடுத்துக் கேளுங்கள். எவ்வித தவறான காரியத்திலும் நீங்கள் ஈடுபடுவதில்லை என்று அவர்களிடம் உறுதி அளியுங்கள்.—யாக்கோபு 1:19.

சிந்திப்பதற்கு

● நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் பெற்றோருக்கு ஏன் உரிமை இருக்கிறது?

● பெற்றோரிடம் பேசும் திறமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சி எதிர்காலத்தில் மற்றவர்களோடு உறையாட உங்களுக்கு எப்படிக் கைகொடுக்கும்?

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

உங்கள் சகாக்கள் சொல்வது

“இளைஞர்கள் தங்கள் பெற்றோரிடம் எதையும் மறைக்காமல் இருந்தால் அவர்களும் தங்கள் பிள்ளைகள் என்னதான் செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க அவர்களுடைய ஈமெயில்களையும் எஸ்எம்எஸ்களையும் படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.”

“என் பெற்றோர் எனக்கு வரும் ஈமெயில்களை வாசித்தால் நான் கோபப்பட மாட்டேன். தன்னிடம் வேலை பார்ப்பவர்களின் ஈமெயில்களைப் பார்க்க முதலாளிக்கு உரிமை இருக்கும்போது பிள்ளைகளுக்கு வரும் ஈமெயில்களைப் பெற்றோர் ஏன் பார்க்கக்கூடாது?”

“உங்களுக்கு எந்த ஆபத்தும் நேரிடக்கூடாது என்று பெற்றோர் நினைக்கிறார்கள். அதனால் சில சமயங்களில் உங்களுடைய தனிமையில் தலையிடுவதாகத் தோன்றலாம். அவர்கள் செய்வது உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். ஆனால், ஒரு பெற்றோராக இருந்தால் நானும் அப்படித்தான் செய்வேன்.”

[படங்கள்]

ஈடென்

கெவின்

அலெனா

[பக்கம் 13-ன் பெட்டி]

பெற்றோரின் கவனத்திற்கு

● உங்கள் மகன் கதவை அடைத்துக்கொண்டு ரூமுக்குள் இருக்கிறான். கதவைத் தட்டாமல் நீங்கள் உள்ளே போகலாமா?

● ஸ்கூலுக்குப் போகும் அவசரத்தில் உங்கள் மகள் செல் ஃபோனை எடுத்துச் செல்ல மறந்துவிட்டாள். அவளுக்கு வந்திருக்கும் மெசேஜ்களையெல்லாம் நீங்கள் வாசிக்கலாமா?

இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்வது சுலபமல்ல. ஒருபக்கம், உங்கள் டீன் ஏஜ் பிள்ளை என்ன செய்கிறான்/ள் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை உங்களுக்கு இருக்கிறது; அதுமட்டுமல்ல, அவனை/ளை நல்லபடியாக வளர்க்க வேண்டிய கடமையும் உங்களுக்கு இருக்கிறது. அதேசமயம், உங்கள் பிள்ளை என்ன செய்கிறான், ஏது செய்கிறான் என்பதை நீங்கள் காலமெல்லாம் இருந்து கண்காணிக்கவும் முடியாது. அப்படியென்றால், நீங்கள் எப்படிச் சமநிலையுடன் செயல்படலாம்?

முதலாவதாக, உங்கள் டீன் பிள்ளை தனிமையை விரும்புகிறான்/ள் என்றால் எப்போதுமே அவன் ஏதோ தவறு செய்கிறான்/ள் என்று அர்த்தமில்லை என்பதை நினைவில் வையுங்கள். பெரும்பாலும், அது அவர்களுடைய வளர்ச்சியின் ஒரு பாகம். பதின் வயது பிள்ளைகள் நண்பர்களை ஏற்படுத்திக்கொள்ளவும், தங்கள் “சிந்திக்கும் திறனைப்” பயன்படுத்தி பிரச்சினைகளைத் தீர்க்கவும் அதன் மூலம் சுயமாகச் செயல்பட கற்றுக்கொள்ளவும் தனிமை அவர்களுக்குத் துணைபுரிகிறது. (ரோமர் 12:1, 2) இந்தச் சிந்திக்கும் திறன், பொறுப்புள்ள நபர்களாக வளர அவர்களுக்கு உதவுகிறது. (1 கொரிந்தியர் 13:11) அவர்களுடைய விசுவாசம், ஒழுக்க நெறிகள் சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்படும்போது யோசித்து பதில் சொல்லவும் தனிமை அவர்களுக்கு உதவுகிறது.—நீதிமொழிகள் 15:28.

இரண்டாவதாக, உங்கள் டீன் ஏஜ் மகன்/மகள் ஒவ்வொரு நிமிடமும் என்ன செய்கிறான்/ள் என்பதைத் தெரிந்துகொள்ள முயன்றால், அது அவர்களுக்குக் கோபமூட்டலாம், அவர்கள் உங்களை எதிர்க்கவும் ஆரம்பித்துவிடலாம் என்பதை நினைவில் வையுங்கள். (எபேசியர் 6:4; கொலோசெயர் 3:21) அதற்காக நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட வேண்டுமா? இல்லை, நீங்கள்தான் அவர்களுடைய பெற்றோர். உங்கள் பிள்ளையின் மனசாட்சியைப் பயிற்றுவிப்பதுதான் உங்களுடைய குறிக்கோள். (உபாகமம் 6:6, 7; நீதிமொழிகள் 22:6) உண்மையில், கண்காணிப்பைவிட வழிநடத்துதல் கொடுப்பதுதான் நல்ல பலன் தரும்.

மூன்றாவதாக, உங்கள் டீன் வயது பிள்ளையிடம் இதைக் குறித்து பேசுங்கள். அவர்களுடைய உணர்ச்சிகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது அதற்கு செவிகொடுங்கள். சில விஷயங்களில் அவர்களுடன் அனுசரித்துப் போக உங்களால் முடியுமா? (பிலிப்பியர் 4:5) உங்களுக்கு அவர்கள் மீதிருக்கும் நம்பிக்கை சிதையாதவரை நீங்கள் அவர்களுக்கு ஓரளவு சுதந்திரம் கொடுப்பீர்கள் என்பதைத் தெரியப்படுத்துங்கள். அவர்கள் கீழ்ப்படியாமல் போனால் என்ன செய்வீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லுங்கள், கீழ்ப்படியாமல் போகும்போது நீங்கள் சொன்னமாதிரியே செய்யுங்கள். இவ்வாறு, அக்கறையுள்ள ஒரு பெற்றோராக உங்கள் கடமையைச் செய்துகொண்டே உங்கள் டீன் வயது பிள்ளைகளுக்கு நீங்கள் ஓரளவு சுதந்திரமும் கொடுக்க முடியும்.

[பக்கம் 12-ன் படம்]

நம்பிக்கை என்பது சம்பளம் போல —அதை சம்பாதிக்க வேண்டும்