உலகச் செய்திகள்
அமெரிக்கா
தடை செய்யப்பட்ட பொருள்களில் 5 கோடிக்கும் அதிகமானவற்றை கடந்த பத்தாண்டுகளில் விமானநிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்; இதை அமெரிக்க பாதுகாப்புத் துறை அறிக்கையிடுகிறது. 2011-ஆம் ஆண்டில் மட்டும் 1,200-க்கும் அதிகமான துப்பாக்கிகள் விமானத்திற்குள் கொண்டுபோகப்படுவதை அதிகாரிகள் தடுத்திருக்கிறார்கள். அதை வைத்திருந்தவர்களை விசாரித்தபோது, தங்களிடம் துப்பாக்கி இருப்பதையே மறந்துவிட்டதாகச் சொன்னார்கள்.
பிரேசில்
பிள்ளைகள் தங்களுடைய பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளிக்கு மட்டம்போடுவதைத் தடுக்க, கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிச் சீருடைகளில் எலக்ட்ரானிக் சிப்களைப் பொருத்த ஆரம்பித்திருக்கிறார்கள். பிள்ளைகள் பள்ளிக்கு வந்து சேர்ந்ததை அந்த சிப்களிலுள்ள சென்ஸர்கள் கண்டுணர்ந்ததுமே பெற்றோருக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்படுகிறது. 20 நிமிடம் தாமதமாகப் போனால் வேறொரு மெசேஜ் அனுப்பப்படுகிறது.
நார்வே
லூத்தரன் மதம் இனி நார்வேயின் அதிகாரப்பூர்வ தேசிய மதமல்ல. நார்வேயின் நாடாளுமன்றம் முதன்முறையாக, அரசு சட்டத்தைத் திருத்தியமைத்து மதத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே உள்ள பிணைப்பைத் தளர்த்த தீர்மானித்திருக்கிறது.
செக் குடியரசு
ஓர் ஆய்வு நடத்தப்பட்டபோது, செக் நாட்டின் பணியாளர்களில் மூன்றில் இரண்டு பேர் வீட்டிற்குச் சென்ற பிறகும் வேலை சம்பந்தப்பட்ட ஃபோன்கால்கள், ஈ-மெயில்கள், மெசேஜ்களுக்குப் பதிலளிக்க வேண்டியிருப்பதாகச் சொன்னார்கள். உடனுக்குடன் பதிலளிக்காவிட்டால் தங்கள் கம்பனிக்குத் துரோகம் செய்வதாக அவர்களில் பெரும்பாலோர் கருதினார்கள்.
இந்தியா
கடந்த 20 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது; 7.1 கோடி டன் அரிசியும் கோதுமையும் மூட்டை மூட்டையாகக் கிடக்கின்றன. ஆனாலும், இந்திய அரசு தன் குடிமக்களின் பசியைத் தீர்க்க திண்டாடிக்கொண்டிருக்கிறது. தேங்கிக் கிடக்கும் தானியங்களில் 40 சதவீதம் மட்டுமே மக்களைச் சென்றெட்டுகிறது. ஊழலும் வீணடிப்பும் அதற்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. (g13-E 05)