Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்”

“துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்”

“துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல்”

‘துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்ய . . . கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்.’ —ஏசா. 61:1, 2.

1. துயரப்பட்டவர்களுக்கு இயேசு என்ன செய்தார், ஏன்?

 “எ ன்னை அனுப்பியவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவு” என்று இயேசு கிறிஸ்து சொன்னார். (யோவா. 4:34) யெகோவா தேவன் இயேசுவுக்கு ஒரு வேலையைக் கொடுத்தார். அந்த வேலையை இயேசு செய்தபோது, தம் தகப்பனைப் போலவே மக்கள்மீது அன்பு காட்டினார். (1 யோ. 4:7-10) யெகோவா அன்பு காட்டுகிற ஒரு வழியை அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டி, “[அவர்] எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” எனக் குறிப்பிட்டார். (2 கொ. 1:3) பூமியில் ஊழியம் செய்தபோது இயேசுவும் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பதன் மூலம் அப்படிப்பட்ட அன்பைக் காட்டினார்; இதை ஏசாயா முன்னுரைத்திருந்தார். (ஏசாயா 61:1, 2-ஐ வாசியுங்கள்.) அவர் முன்னுரைத்தது தம்மில் நிறைவேறியதாக இயேசு குறிப்பிட்டார். (லூக். 4:16-21) ஊழியத்தில் இயேசு துயரப்பட்டவர்களை ஆறுதல்படுத்தினார், அவர்களுக்கு உற்சாகத்தையும் நிம்மதியையும் அளித்தார்.

2, 3. இயேசுவைப் பின்பற்றுகிறவர்கள் ஏன் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்?

2 இயேசுவைப் பின்பற்றுகிற அனைவருமே துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும். (1 கொ. 11:1) “ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொண்டும் ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டும் இருங்கள்” என்று பவுல் சொன்னார். (1 தெ. 5:11) இன்று எல்லாருக்குமே ஆறுதல் தேவைப்படுகிறது; ஏனென்றால், ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1) சொல்லாலும் செயலாலும் மற்றவர்களுக்கு வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிற ஆட்கள் மத்தியில் வாழ்வதால் உலகெங்கும் உள்ள நல்லோர் அவதிப்படுகிறார்கள்.

3 பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறபடி, இந்தப் பொல்லாத உலகின் கடைசி நாட்களில் அநேகர், “சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக, கடவுளை நிந்திக்கிறவர்களாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, நம்பிக்கை துரோகிகளாக, பந்தபாசம் இல்லாதவர்களாக, எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக, அவதூறு பேசுகிறவர்களாக, சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, காட்டிக்கொடுக்கிறவர்களாக, அடங்காதவர்களாக, தலைக்கனம் பிடித்தவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக” இருக்கிறார்கள். பைபிளில் எழுதியிருக்கிறபடியே, கெட்டவர்களின் சிந்தையும் செயலும் ‘மேன்மேலும் மோசமாகி வருகிறது.’—2 தீ. 3:2-4, 13.

4. இன்று பூமியில் நிலைமைகள் எப்படி இருக்கின்றன?

4 இது நமக்கு ஆச்சரியம் அளிப்பதில்லை; ஏனென்றால், “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (1 யோ. 5:19) “உலகம் முழுவதும்” என்பது இந்த உலகத்தின் அரசியல், மத, வர்த்தக அமைப்புகள் அனைத்தையும் உட்படுத்துகிறது; அதோடு, சாத்தான் தன் கருத்துகளைப் பரப்ப பயன்படுத்தும் அனைத்தையும் உட்படுத்துகிறது. பிசாசாகிய சாத்தான்தான் “இந்த உலகத்தை ஆளுகிறவன்,” “இந்த உலகத்தின் கடவுள்” என்பதில் சந்தேகமே இல்லை. (யோவா. 14:30; 2 கொ. 4:4) சாத்தான் இப்போது மிகுந்த கோபத்துடன் இருப்பதால் பூமியில் நிலைமைகள் மேன்மேலும் மோசமாகி வருகின்றன. தனக்குக் கொஞ்சக் காலமே மீந்திருப்பதை அவன் அறிந்திருக்கிறான். (வெளி. 12:12) அவனையும் அவனுடைய பொல்லாத உலகையும் சீக்கிரத்தில் கடவுள் அழிக்கப்போகிறார் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது! யெகோவாவின் பேரரசுரிமை பற்றிய விவாதம் விரைவில் தீர்க்கப்படும் என்பதை அறிவதும் எப்பேர்ப்பட்ட ஆறுதல் தருகிறது!—ஆதி., அதி. 3; யோபு, அதி. 2.

நற்செய்தி உலகெங்கும் பிரசங்கிக்கப்படுகிறது

5. பிரசங்க வேலையைப் பற்றி முன்னுரைக்கப்பட்டது இந்தக் கடைசி நாட்களில் எப்படி நிறைவேறி வருகிறது?

5 “கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நற்செய்தி உலகமெங்கும் உள்ள எல்லாத் தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று இயேசு முன்னுரைத்தார். (மத். 24:14) அவர் சொன்னபடியே, யெகோவாவின் மக்கள் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை உலகெங்கும் பிரசங்கித்து வருகிறார்கள். இன்று, 1,07,000-க்கும் மேற்பட்ட சபைகளில் உள்ள 75,00,000-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் இந்த வேலையைச் செய்து வருகிறார்கள். ஆம், அவர்கள் இயேசுவைப் போலவே கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கித்தும் கற்பித்தும் வருகிறார்கள். (மத். 4:17) துயரப்படுகிற பலருக்கு இந்த வேலையின் மூலம் ஆறுதல் அளிக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் மட்டுமே, 5,70,601 பேர் ஞானஸ்நானம் பெற்று யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள்!

6. நம்முடைய பிரசங்க வேலையின் வளர்ச்சியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

6 யெகோவாவின் சாட்சிகள் இன்று 500-க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் பிரசுரங்களை மொழிபெயர்த்து விநியோகிக்கிறார்கள். இது சரித்திரம் காணாத ஒரு சாதனை! யெகோவாவின் மக்கள் சாத்தானுடைய கட்டுப்பாட்டிலுள்ள உலகில் வாழ்ந்து வந்தாலும், யெகோவாவின் சேவையை மும்முரமாகச் செய்து வருகிறார்கள், மேன்மேலும் பெருகி வருகிறார்கள். கடவுளுடைய சக்தியின் உதவியும் வழிநடத்துதலும் இல்லாமல் இது நடக்க வாய்ப்பே இல்லை. நற்செய்தி உலகெங்கும் பிரசங்கிக்கப்படுவதால், அதை ஏற்றுக்கொள்கிறவர்கள் யெகோவாவின் மக்களைப் போலவே பைபிளிலிருந்து ஆறுதலைப் பெறுகிறார்கள்.

சபையில் உள்ளோருக்கு ஆறுதல் அளித்தல்

7. (அ) நம் சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் எல்லாவற்றையும் யெகோவா இப்போதே நீக்கிவிடும்படி நாம் ஏன் எதிர்பார்க்கக் கூடாது? (ஆ) துன்புறுத்தலையும் உபத்திரவத்தையும் நம்மால் சகிக்க முடியுமென நமக்கு எப்படித் தெரியும்?

7 இந்த உலகம் துன்மார்க்கத்தாலும் துன்பத்தாலும் நிரம்பியிருப்பதால் ஏதோவொரு விதத்தில் எல்லாருமே கஷ்டத்தை எதிர்ப்படத்தான் செய்வோம். கடவுள் இந்த உலகத்தை அழிக்கும் முன்பு, நம் சந்தோஷத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் எல்லாவற்றையும் நீக்கிவிடுவாரென நாம் எதிர்பார்க்கக் கூடாது. அந்த நாளுக்காக நாம் காத்திருக்கும் வேளையில், துன்புறுத்தல் நம் உத்தமத்தைச் சோதிக்கும்; யெகோவாவின் பேரரசாட்சியை ஆதரிக்கிறோமா என்பதையும் சோதிக்கும். (2 தீ. 3:12) ஆனால், நம்முடைய பரலோகத் தகப்பன் அளிக்கிற உதவியாலும் ஆறுதலாலும், நாம் பூர்வ தெசலோனிக்கே சபையிலிருந்த கிறிஸ்தவர்களைப் போல் இருக்கலாம். பரலோக நம்பிக்கை உள்ள அந்தக் கிறிஸ்தவர்கள், துன்புறுத்தல்களையும் உபத்திரவங்களையும் சந்தித்தபோது சகிப்புத்தன்மையையும் விசுவாசத்தையும் காட்டினார்கள்.2 தெசலோனிக்கேயர் 1:3-5-ஐ வாசியுங்கள்.

8. யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார் என்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது?

8 தம்முடைய ஊழியர்களுக்குத் தேவையான ஆறுதலை யெகோவா தருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை. உதாரணத்திற்கு, கெட்ட எண்ணம் கொண்ட யேசபேல் ராணி எலியா தீர்க்கதரிசியைக் கொல்ல நினைத்தாள்; அதை அறிந்த எலியா பயந்துபோய் ஊரைவிட்டே ஓடினார். தான் சாக விரும்புவதாகக்கூடச் சொன்னார். அப்படிச் சொன்னதற்காக அவரை யெகோவா கடிந்துகொள்வதற்குப் பதிலாக ஆறுதல்படுத்தினார்; தீர்க்கதரிசியாகத் தொடர்ந்து சேவை செய்வதற்குத் தேவையான தைரியத்தைக் கொடுத்தார். (1 இரா. 19:1-21) யெகோவா தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல் அளித்ததற்கு மற்றொரு உதாரணத்தைக் கவனிப்போம். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவச் சபைக்கு அவர் உதவியதைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “யூதேயா, கலிலேயா, சமாரியா முழுவதிலுமிருந்த சபை கொஞ்சக் காலத்திற்கு எதிர்ப்புகள் இல்லாமல் அமைதியை அனுபவித்தது, விசுவாசத்திலும் பலப்பட்டு வந்தது. அதோடு, யெகோவாவுக்குப் பயந்து நடந்ததாலும், அவருடைய சக்தியின் மூலம் ஆறுதலைப் பெற்றதாலும் பெருகிக்கொண்டே இருந்தது.” (அப். 9:31) கடவுளுடைய சக்தி தரும் ஆறுதலுக்கு நாமும் அதிக நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!

9. இயேசுவைப் பற்றிக் கற்றுக்கொள்வது நமக்கு ஏன் ஆறுதல் அளிக்கிறது?

9 கிறிஸ்தவர்களான நாம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கற்றுக்கொள்வதாலும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதாலும் ஆறுதல் பெற்றிருக்கிறோம். இயேசு இவ்வாறு சொன்னார்: “உழைத்துக் களைத்துப் போனவர்களே, பெருஞ்சுமை சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். ஏனென்றால், என்னுடைய நுகம் மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது.” (மத். 11:28-30) இயேசு எப்படி ஜனங்களைக் கனிவாகவும் அன்பாகவும் நடத்தினார் என்பதைக் கற்றுக்கொண்டு, அதுபோலவே நாமும் மற்றவர்களை நடத்தும்போது நம் மன உளைச்சல் ஓரளவு தணியும்.

10, 11. சபையில் உள்ள யாரெல்லாம் ஆறுதல் அளிக்கலாம்?

10 சபையில் உள்ளோரிடமிருந்துகூட நாம் ஆறுதலைப் பெற முடியும். உதாரணத்திற்கு, விசுவாசத்தை இழந்துவருவோருக்கு மூப்பர்கள் எப்படி உதவலாமெனச் சற்று யோசித்துப் பாருங்கள். “உங்களில் எவனாவது [ஆன்மீக ரீதியில்] வியாதிப்பட்டிருக்கிறானா? அப்படியானால், சபையின் மூப்பர்களை அவன் வரவழைக்கட்டும். அவர்கள் யெகோவாவின் பெயரில் . . . அவனுக்காக ஜெபம் செய்யட்டும்” என்று யாக்கோபு எழுதினார். மூப்பர்கள் உதவுவதால் என்ன பலன் கிடைக்கும்? “விசுவாசத்தோடு ஏறெடுக்கப்படுகிற ஜெபம் சுகமில்லாதவனைச் சுகப்படுத்தும், யெகோவா அவனை எழுந்திருக்கச் செய்வார். அதோடு, அவன் பாவங்கள் செய்திருந்தால், அவற்றை அவர் மன்னிப்பார்.” (யாக். 5:14, 15) என்றாலும், மூப்பர்கள் தவிர சபையில் உள்ள மற்றவர்களும் நமக்கு ஆறுதல் அளிக்க முடியும்.

11 பொதுவாகப் பெண்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி மற்ற பெண்களிடம் பேசத்தான் விரும்புவார்கள். முக்கியமாக வயதில் மூத்த, அனுபவமிக்க சகோதரிகள் இளம் சகோதரிகளின் பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த ஆலோசனைகளைக் கொடுக்கலாம். ஏனென்றால், தங்களுடைய வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட பிரச்சினைகளை அவர்கள் அனுபவித்திருக்கலாம். செவிகொடுத்துக் கேட்பதன் மூலமும் அக்கறை காட்டுவதன் மூலமும் அவர்கள் இளம் சகோதரிகளுக்குப் பேருதவி செய்யலாம். (தீத்து 2:3-5-ஐ வாசியுங்கள்.) ஆம், நம் மத்தியிலுள்ள மூப்பர்களும் மற்றவர்களும் ‘சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேச’ முடியும், அப்படிப் பேசவும் வேண்டும். (1 தெ. 5:14, 15) கடவுள் ‘நம்முடைய எல்லா உபத்திரவங்களிலும் நமக்கு ஆறுதல் அளிக்கிறார்’ என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதனால் நாம், ‘எப்பேர்ப்பட்ட உபத்திரவத்தில் இருப்பவர்களுக்கும் ஆறுதல் அளிக்க முடிகிறது.’—2 கொ. 1:4.

12. கூட்டங்களில் கலந்துகொள்வது ஏன் முக்கியம்?

12 ஆறுதலைப் பெறுவதற்கான மிக முக்கியமான வழி, சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதாகும். கூட்டங்களில் நாம் கேட்கும் பைபிள் விஷயங்கள் நமக்கு உற்சாகமளிக்கின்றன. யூதாஸும் சீலாவும், ‘ஊக்கமூட்டும் பல பேச்சுகளைக் கொடுத்து சகோதரர்களைப் பலப்படுத்தினார்கள்’ என்று நாம் வாசிக்கிறோம். (அப். 15:32) கூட்டங்களுக்கு முன்பும் பின்பும், சபையில் உள்ள எல்லாரும் ஒருவருக்கொருவர் பேசி மகிழ்கிறார்கள். எனவே, ஏதோவொரு பிரச்சினையால் நாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும், சக கிறிஸ்தவர்களோடு நேரத்தைச் செலவிடுவது நல்லது. யாருடனும் ஒட்டாமல் ஒதுங்கியிருந்தால் பிரச்சினை அதிகமாகத்தான் செய்யும். (நீதி. 18:1) எனவே, அப்போஸ்தலன் பவுல் கொடுத்த பின்வரும் அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டும்: “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக; சபைக் கூட்டங்களைச் சிலர் வழக்கமாகத் தவறவிடுவதுபோல் நாமும் தவறவிடாமல், ஒன்றுகூடிவந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக; நாளானது நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக.”—எபி. 10:24, 25.

பைபிள் அளிக்கும் ஆறுதல்

13, 14. வேதவசனங்கள் எந்த வழிகளில் நமக்கு ஆறுதல் அளிக்கலாம்?

13 நாம் ஞானஸ்நானம் பெற்றவர்களாக இருந்தாலும்சரி கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி இப்போதுதான் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தாலும்சரி, பைபிளிலிருந்து அதிக ஆறுதலைப் பெறலாம். பவுல் இவ்வாறு எழுதினார்: “வேதவசனங்களின் மூலம் உண்டாகிற சகிப்புத்தன்மையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை பெறும்படி, முற்காலத்தில் எழுதப்பட்ட அனைத்தும் நம்முடைய அறிவுரைக்காகவே எழுதப்பட்டன.” (ரோ. 15:4) பைபிள் நமக்கு ஆறுதல் அளிக்க முடியும், “எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு முழுமையான திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும்” பெற உதவ முடியும். (2 தீ. 3:16, 17) பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் படிப்பதன் மூலம் கடவுளுடைய நோக்கங்களைப் பற்றிய சத்தியத்தை அறிந்துகொள்ள முடியும்; அதோடு, ஒளிமயமான எதிர்கால நம்பிக்கையைப் பெற முடியும். அதுமட்டுமல்ல, பைபிள் தரும் நம்பிக்கையினால் நாம் ஆறுதலையும் மற்ற நன்மைகளையும் பெற முடியும்.

14 வேதவசனங்களைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குக் கற்பிப்பதிலும் ஆறுதல் அளிப்பதிலும் இயேசு நமக்குச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். அவருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, சீடர்களில் இருவருக்குத் தரிசனமானார். அப்போது, வேதவசனங்களை அவர்களுக்கு முழுமையாக விளக்கிக் காட்டினார். அது அவர்களை ஆறுதல்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. (லூக். 24:32) அப்போஸ்தலன் பவுல் இயேசுவின் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றினார்; வேதவசனங்களைப் பயன்படுத்தி மக்களிடம் “நியாயங்காட்டிப் பேசினார்.” பெரோயா நகரத்தார், ‘கடவுளுடைய வார்த்தைகளை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு, அவையெல்லாம் சரிதானா என்று தினந்தோறும் வேதவசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தார்கள்.’ (அப். 17:2, 10, 11) ஆகவே, தினந்தோறும் பைபிளை வாசிப்பது மிக முக்கியம்! ஆம், கஷ்ட காலங்களில் நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுப்பதற்காகவே கடவுள் தந்திருக்கும் இந்தப் புத்தகத்தையும் கிறிஸ்தவப் பிரசுரங்களையும் நாம் படித்து நன்மையடைவது முக்கியம்.

ஆறுதல் அளிப்பதற்கான மற்ற வழிகள்

15, 16. நம் சகோதர சகோதரிகளுக்கு உதவியும் ஆறுதலும் அளிக்க நாம் என்னென்ன செய்யலாம்?

15 நம் சகோதர சகோதரிகளுக்கு உதவியும் ஆறுதலும் அளிக்க பல வழிகள் இருக்கின்றன. உதாரணத்திற்கு, வயதானோருக்காக அல்லது வியாதிப்பட்டோருக்காகக் கடைக்குப் போய் சாமான்கள் வாங்கி வந்து தரலாம். மற்றவர்களுக்கு ஏதாவது வீட்டு வேலைகளைச் செய்து கொடுக்கலாம். இது, அவர்கள்மீது அக்கறையாய் இருக்கிறோம் என்பதைக் காட்டும். (பிலி. 2:4) சகோதர சகோதரிகளின் திறமைகளுக்காக அவர்களைப் பாராட்டலாம்; அன்பு, தைரியம், விசுவாசம் போன்ற நல்ல குணங்களுக்காகவும் அவர்களைப் பாராட்டலாம்.

16 வயதானவர்களுக்கு இன்னொரு விதத்திலும் நாம் ஆறுதல் அளிக்கலாம்; அவர்களைச் சந்தித்து, கடந்தகால அனுபவங்களையும் யெகோவாவின் சேவையில் பெற்ற ஆசீர்வாதங்களையும் பற்றி அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கலாம். அப்படிச் செய்யும்போது, அவர்களிடமிருந்து நாமும் உற்சாகத்தையும் ஆறுதலையும் பெறலாம்! அவர்களுக்கு நாம் பைபிளிலிருந்து அல்லது நம் பிரசுரங்களிலிருந்து வாசித்துக் காட்டலாம். ஒருவேளை, அந்த வாரத்திற்குரிய காவற்கோபுர படிப்புக் கட்டுரையை அவர்களோடு சேர்ந்து படிக்கலாம் அல்லது சபை பைபிள் படிப்புக்காகத் தயாரிக்கலாம். நம் அமைப்பின் டிவிடி ஒன்றை அவர்களோடு சேர்ந்து பார்க்கலாம். நம் பிரசுரங்களில் உள்ள உற்சாகமூட்டும் அனுபவங்களை அவர்களுக்கு வாசித்துக் காட்டலாம் அல்லது சொல்லலாம்.

17, 18. யெகோவா தம் உண்மை ஊழியர்களுக்கு ஆறுதலையும் உதவியையும் தருவார் என நாம் ஏன் நம்பலாம்?

17 ஒரு சகோதரருக்கோ சகோதரிக்கோ ஆறுதல் தேவை என்பது நமக்குத் தெரிந்தால், அவர்களுக்காக ஜெபம் செய்யலாம். (ரோ. 15:30; கொலோ. 4:12) நாம் ஏதேனும் கஷ்டங்களை எதிர்ப்படும்போதும், மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க முயற்சி செய்யும்போதும், தாவீதைப் போலவே விசுவாசத்தைக் காட்டலாம்; அவர் பின்வருமாறு சொன்னார்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங். 55:22) யெகோவா எப்போதுமே நமக்கு ஆறுதலையும் உதவியையும் தருவார். தம் உண்மை ஊழியர்களுக்கு அவர் ஒருபோதும் ஏமாற்றமளிக்க மாட்டார்.

18 “நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்” என யெகோவா தம்முடைய பூர்வகால வணக்கத்தாரிடம் சொன்னார். (ஏசா. 51:12) அவர் நமக்கும் ஆறுதல் செய்வார்; மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க நாம் எடுக்கும் முயற்சிகளைக்கூட ஆசீர்வதிப்பார். நம் எதிர்கால நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சரி, பவுல் தன் காலத்தில் வாழ்ந்த பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்குச் சொன்ன பின்வரும் வார்த்தைகளிலிருந்து நாம் ஒவ்வொருவரும் ஆறுதல் பெறலாம்: “நம்மீது அன்பு காட்டி அளவற்ற கருணையினால் நிரந்தர ஆறுதலையும் அருமையான நம்பிக்கையையும் அளித்திருக்கிற நம் தகப்பனாகிய கடவுளும், நம் எஜமானராகிய இயேசு கிறிஸ்துவும், உங்கள் இருதயங்களை ஆறுதல்படுத்தி, நீங்கள் நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களைப் பலப்படுத்துவார்களாக.”—2 தெ. 2:16, 17.

நினைவிருக்கிறதா?

• துயரப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வேலை எந்தளவு பரவலாகச் செய்யப்படுகிறது?

• மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க நாம் என்னென்ன செய்யலாம்?

• யெகோவா தம் மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறார் என்பதற்கு என்ன வேதப்பூர்வ அத்தாட்சி இருக்கிறது?

[கேள்விகள்]

[பக்கம் 28-ன் படம்]

துயரப்படுகிறவர்களுக்கு நீங்களும் ஆறுதல் அளிக்கிறீர்களா?

[பக்கம் 30-ன் படம்]

சிறியோர் பெரியோர் என அனைவருமே மற்றவர்களுக்கு உற்சாகம் தர முடியும்