Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மூப்பர்களே, “சோர்ந்த உள்ளங்களுக்கு” புத்துயிர் அளிப்பீர்களா?

மூப்பர்களே, “சோர்ந்த உள்ளங்களுக்கு” புத்துயிர் அளிப்பீர்களா?

அனிதா * 30 வயதைத் தாண்டியவர், மணமாகாதவர். வேர்த்து விறுவிறுத்துப்போய் நிற்கிறார். காரணம்? மூப்பர்கள் அவருக்கு மேய்ப்பு சந்திப்பு செய்ய வருகிறார்கள். என்ன சொல்வார்களோ என்று அவருக்கு மனம் பதறுகிறது. ஏனென்றால், சில கூட்டங்களைத் தவறவிட்டிருக்கிறார். ஆனால், நாள் முழுவதும் முதியோர்களை கவனித்துக்கொள்ளும் வேலையை செய்துவிட்டு களைத்துப்போய் வீடு திரும்பியிருக்கிறார். அதோடு, அவருடைய அம்மாவின் உடல்நலப் பிரச்சினையை நினைத்து கவலையில் துவண்டுபோய் இருக்கிறார்.

அனிதாவைச் சந்திக்கப்போகும் மூப்பர் நீங்கள் என்றால், இந்த ‘சோர்ந்த உள்ளத்தை’ எப்படித் தேற்றுவீர்கள்? (எரே. 31:25) சரி. முதலில், புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு மேய்ப்பு சந்திப்புக்கு நீங்கள் எப்படித் தயாரிக்கலாம்?

சூழ்நிலையை யோசித்துப் பாருங்கள்

நாம் எல்லோருமே சில நேரங்களில் வேலை காரணமாகவோ ஆன்மீகப் பொறுப்புகள் காரணமாகவோ சோர்வடைகிறோம். உதாரணத்திற்கு, தானியேல் தான் கண்ட தரிசனத்திற்கு அர்த்தம் புரியாமல் ‘சோர்வடைந்தார்.’ (தானி. 8:27) அப்போது, காபிரியேல் தூதன் வந்து அந்தத் தரிசனத்தை விளக்கினார், யெகோவா தானியேலின் ஜெபத்தைக் கேட்டார் என்றும் தானியேலை ‘மிகவும் பிரியமானவனாகவே’ நினைக்கிறார் என்றும் சொன்னார். (தானி. 9:21-23) இப்படி யெகோவா அவருடைய தூதனை அனுப்பி தானியேலை உற்சாகப்படுத்தினார். மற்றொரு சமயத்தில், வேறொரு தேவதூதன் நல்வார்த்தைகளை சொல்லி சோர்ந்துபோயிருந்த தானியேலை உற்சாகப்படுத்தினார்.—தானி. 10:19.

மேய்ப்பு சந்திப்பு செய்வதற்குமுன் பிரஸ்தாபியின் சூழ்நிலையை நன்கு யோசித்துப் பாருங்கள்

அதேபோல், சோர்ந்திருக்கும் ஒருவரைச் சந்திக்க வேண்டியிருந்தால், போகும்முன் அவருடைய சூழ்நிலையைக் கொஞ்சம் யோசியுங்கள். அவருக்கு என்ன பிரச்சினை? அதனால் எந்தளவுக்குச் சோர்வடைந்திருக்கிறார்? அதன் மத்தியிலும் என்ன நல்ல குணங்களை வெளிக்காட்டுகிறார்? என்றெல்லாம் யோசித்துப்பாருங்கள். 20 வருடங்களுக்குமேல் மூப்பராகச் சேவை செய்யும் ரிச்சர்ட் சொல்கிறார்: “சகோதரர்களோட நல்ல குணங்களை பற்றியே யோசிச்சு பார்ப்பேன். ஒருத்தரை சந்திக்கறதுக்கு முன்னாடி அவரோட சூழ்நிலையை நல்லா யோசிச்சு பார்க்கும்போதுதான் அவருக்கு ஏற்ற விதத்துல சுலபமா உற்சாகம் அளிக்க முடியும்.” மற்றொரு மூப்பரோடு சேர்ந்து போவதாக இருந்தால் நீங்கள் இருவரும் சேர்ந்து அவருடைய சூழ்நிலையைப் பற்றிப் பேசுவது நல்லது.

மனந்திறந்து பேச வாய்ப்பளியுங்கள்

பொதுவாக, ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளை மூப்பர்களிடம் சொல்ல சங்கோஜப்படுவார் என்பது உண்மைதான். ஆனால், அவர் தயக்கமில்லாமல் பேசுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? உள்ளப்பூர்வமான புன்முறுவல், ஆறுதலான சில வார்த்தைகள் இதற்குக் கைகொடுக்கும். 40 வருடங்களுக்குமேல் மூப்பராகச் சேவை செய்யும் மைக்கேல், மேய்ப்பு சந்திப்பின்போது பெரும்பாலும் இப்படித்தான் பேச ஆரம்பிப்பார்: “மூப்பரா சேவை செய்றதுல இருக்குற ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா? சகோதரர்கள அவங்க வீட்டுல போய் சந்திச்சு அவங்களப் பற்றி நல்லா தெரிஞ்சுக்க முடியும். உங்களகூட வீட்டுல வந்து சந்திக்கிறதுக்கு நான் ஆவலா காத்துக்கிட்டு இருந்தேன்.”

மேய்ப்பு சந்திப்பை ஜெபத்தோடு ஆரம்பியுங்கள். அப்போஸ்தலன் பவுல் செய்த ஜெபத்தில் சகோதரர்களுடைய விசுவாசம், அன்பு, சகிப்புத்தன்மை பற்றியெல்லாம் குறிப்பிட்டார். (1 தெ. 1:2, 3) நீங்களும் அதேபோல் சகோதரருடைய நல்ல குணங்களைப் பற்றி ஜெபத்தில் குறிப்பிடலாம். அப்படிச் செய்யும்போது அவருடைய இதயக் கதவை உங்களால் அகல திறக்க முடியும். இது ஒரு நல்ல உரையாடலுக்கு வழி திறக்கும். நீங்கள் செய்யும் ஜெபத்தால் அவர் ஆறுதல் பெறுவார். “நம்மகிட்ட சில நல்ல குணங்கள் இருக்கும், நல்ல விஷயங்கள செய்வோம், ஆனா, அதையெல்லாம் எப்பவுமே ஞாபகம் வெச்சிருக்க மாட்டோம் . . . யாராவது அத நமக்கு ஞாபகப்படுத்தும்போது ரொம்ப சந்தோஷப்படுவோம்” என்று ரே என்ற அனுபவமுள்ள மூப்பர் சொல்கிறார்.

ஆன்மீக அன்பளிப்பை அளியுங்கள்

பவுலைப் போலவே நீங்களும் ஒரு பைபிள் விஷயத்தைப் பற்றிப் பேசி சகோதரர்களுக்கு “ஆன்மீக அன்பளிப்பை” அளிக்கலாம். (ரோ. 1:11) ஏன், ஒரே ஒரு வசனத்தை வாசித்தால்கூட போதும். உதாரணத்திற்கு, ‘புகையிலுள்ள துருத்தியைப் போல்’ சுருங்கிப்போய்விட்டேன் என்று சொன்ன சங்கீதக்காரனைப் போலவே மனச்சோர்வடைந்த சகோதரர் உணரலாம். (சங். 119:83, 176) அவருடன் சேர்ந்து அந்த வசனத்தை வாசித்த பிறகு அதைச் சுருக்கமாக விளக்கலாம். பிறகு, “நீங்கள் கடவுளுடைய கட்டளைகளை ‘மறக்கவில்லை’ என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று சொல்லலாம்.

செயலிழந்திருக்கும் அல்லது கடவுளுடைய சேவையில் ஆர்வம் குறைந்திருக்கும் ஒரு சகோதரிக்கு எப்படி உதவலாம்? தொலைந்துபோன வெள்ளிக் காசு பற்றிய உதாரணத்தைச் சொல்லி உற்சாகமளிக்கலாம். (லூக். 15:8-10) தொலைந்துபோன அந்தக் காசு, ஓர் அழகான வெள்ளிக் காசுமாலையிலிருந்த ஒரு காசாக இருந்திருக்கலாம். இந்த உதாரணத்தை அந்தச் சகோதரியோடு கலந்துபேசுகையில், சபை எனும் காசு மாலையை அலங்கரிக்கும் ஒரு வெள்ளிக் காசாக அவர் இருக்கிறார் என்று சொல்லலாம். பிறகு, அவர் யெகோவாவுடைய ஆட்டுக்குட்டிகளில் ஒருவர் என்றும் யெகோவா அவர்மேல் மிகவும் அக்கறையாய் இருக்கிறார் என்றும் சொல்லலாம்.

பொதுவாக, பைபிளில் படித்த விஷயங்களைப் பற்றிப் பேச பிரஸ்தாபிகள் விரும்புவார்கள். அதனால், நீங்களே பேசிக்கொண்டு இருக்காதீர்கள்! அவருடைய சூழ்நிலைக்குப் பொருத்தமான ஒரு வசனத்தை வாசித்த பிறகு அதிலுள்ள முக்கியமான வார்த்தையையோ வாக்கியத்தையோ குறிப்பிட்டு அதைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என கேளுங்கள். உதாரணத்திற்கு, 2 கொரிந்தியர் 4:16-ஐ வாசித்துவிட்டு இவ்வாறு கேட்கலாம், “யெகோவா உங்களை எப்படியெல்லாம் புதுப்பித்திருக்கிறார் என்று சொல்ல முடியுமா?” இப்படிப் பேசுவது “ஒருவருக்கொருவர் ஊக்கம்பெற” உதவும்.—ரோ. 1:12.

பொதுவாக, பைபிளில் படித்த விஷயங்களைப் பற்றி பேச பிரஸ்தாபிகள் விரும்புவார்கள்

அந்த நபருடைய அதே சூழ்நிலையில் இருந்த ஒரு பைபிள் கதாபாத்திரத்தைப் பற்றியும் அவரிடம் பேசலாம். இது அவருக்கு உற்சாகமளிக்கும். விரக்தியில் இருக்கும் ஒருவர் அன்னாளைப் போலவோ எப்பாப்பிரோதீத்துவைப் போலவோ உணரலாம். இவர்கள் இருவரும் சில சமயங்களில் சோர்வடைந்தார்கள், ஆனாலும் யெகோவாவின் பார்வையில் அருமையானவர்களாக இருந்தார்கள். (1 சா. 1:9-11, 20; பிலி. 2:25-30) சூழ்நிலைக்குத் தகுந்த பைபிள் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி நீங்கள் அவரை உற்சாகப்படுத்தலாம்.

தொடர்ந்து அக்கறை காட்டுங்கள்

மேய்ப்பு சந்திப்பு செய்வதோடு நிறுத்திவிடாதீர்கள். அவர்கள்மீது உண்மையான அக்கறை இருப்பதைத் தொடர்ந்து வெளிக்காட்டுங்கள். (அப். 15:36) மேய்ப்பு சந்திப்பை முடிக்கும்போது அவரோடு சேர்ந்து ஊழியம் செய்வதற்காக ஏற்பாடு செய்யுங்கள். அனுபவமுள்ள மூப்பர், பெர்னார்ட், தான் மேய்ப்பு சந்திப்பு செய்தவரை மீண்டும் சந்திக்கும்போது தான் கொடுத்த ஆலோசனையைப் பற்றிச் சாதுரியமாக இப்படிக் கேட்பார்: “அன்னைக்கு பேசின விஷயங்கள் பிரயோஜனமா இருந்துச்சா?” இப்படி அக்கறை காட்டும்போது வேறு ஏதாவது உதவி தேவையா என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

இந்தக் காலக்கட்டத்தில், சகோதர சகோதரிகள்மீது உங்களுக்கு அக்கறை இருப்பதை, அவர்களைப் புரிந்துகொள்கிறீர்கள், நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் நன்கு உணரும் விதத்தில் நடந்துகொள்வது ரொம்ப முக்கியம். (1 தெ. 5:11) எனவே, மேய்ப்பு சந்திப்பு செய்வதற்குமுன் சகோதரருடைய சூழ்நிலையை நன்கு யோசித்துப் பார்க்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். மேய்ப்பு சந்திப்பிற்காக ஜெபம் செய்யுங்கள். சரியான வசனங்களைத் தேர்ந்தெடுங்கள். இப்படிச் செய்யும்போது “சோர்ந்த உள்ளங்களுக்கு” புத்துயிர் அளிக்க உங்களால் சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியும்.

^ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.