Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் பிலிப்பைன்ஸில்

தங்களையே மனப்பூர்வமாய் அர்ப்பணித்தார்கள் பிலிப்பைன்ஸில்

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, முப்பது வயதைக் கடந்திருந்த க்ரெகோரியோ-மாரிலூ தம்பதி, மணிலாவில் பயனியர்களாகச் சேவை செய்து வந்தார்கள். அதே சமயத்தில் முழு நேர வேலையும் செய்து கொண்டிருந்தார்கள். சவாலாக இருந்தாலும் இரண்டையுமே வெற்றிகரமாகச் சமாளித்து வந்தார்கள். இதற்கிடையே, மாரிலூவுக்குத் தான் வேலை செய்த வங்கியில் மேனேஜராகப் பதவி உயர்வு கிடைத்தது. அவர் சொல்கிறார்: “எங்க ரெண்டு பேருக்கும் நல்ல வேலை இருந்ததால வசதியா வாழ்ந்துட்டு இருந்தோம்.” கையில் நிறையப் பணம் புரண்டதால் மணிலாவுக்கு கிழக்கே 19 கி.மீ. தூரத்திலுள்ள முக்கியமான ஓர் இடத்தில் ஒரு வீட்டைக் கட்டத் தீர்மானித்தார்கள். இது அவர்களுடைய நீண்ட நாள் கனவு. வீட்டைக் கட்டும் பொறுப்பை ஒரு கம்பெனியிடம் ஒப்படைத்தார்கள். அதற்காக பத்து வருடங்களுக்கு மாதத் தவணை கட்ட வேண்டியிருந்தது.

“யெகோவாவ ஏமாத்திட்டு இருக்கிறதா உணர்ந்தேன்”

மாரிலூ சொல்கிறார்: “புது வேலை என்னோட நேரத்தையும் சக்தியையும் சக்கையாய் பிழிஞ்செடுத்தது. அதனால் ஆன்மீக காரியங்கள்ல ஆர்வம் குறைஞ்சிடுச்சு. நான் யெகோவாவ ஏமாத்திட்டு இருக்கிறதா உணர்ந்தேன். பயனியர் சேவைய என்னால சரியா செய்ய முடியல.” நிலைமை இப்படி மோசமாகப் போய்க்கொண்டிருந்ததால், க்ரெகோரியோவும் மாரிலூவும் ஒரு நாள் அதைப் பற்றி பேசினார்கள். க்ரெகோரியோ சொல்கிறார்: “மாற்றம் செய்யணும்னு தெரிஞ்சுது, ஆனா என்ன மாற்றம் செய்யணும்னு தெரியல. பிள்ளைங்களும் இல்லாததுனால எங்களோட வாழ்க்கைய எப்படி யெகோவாவுடைய சேவையில முழுசா பயன்படுத்தலாம்னு பேசினோம். இதற்காக யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சோம்.”

அந்தச் சமயத்தில், தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வது பற்றி நிறையப் பேச்சுகள் கேட்டார்கள். “இந்த பேச்சுகள் எல்லாமே நாங்க செஞ்ச ஜெபத்துக்கு யெகோவா கொடுத்த பதில் மாதிரி இருந்துச்சு” என்று க்ரெகோரியோ சொல்கிறார். தைரியமாகத் தீர்மானம் எடுக்க அவர்களுக்கு அதிக விசுவாசம் தேவைப்பட்டது. அதற்காக ஜெபம் செய்தார்கள். ஆனால், அவர்கள் கட்டிக்கொண்டிருந்த வீடு இதற்குப் பெருந்தடையாக இருந்தது. ஏற்கெனவே அவர்கள் மூன்று வருடத்திற்கான பணம் கட்டியிருந்தார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? மாரிலூ சொல்கிறார்: “போட்ட கான்ட்ராக்ட்ட இடையில முடிச்சுகிட்டா, இது வரைக்கும் கட்டுன எல்லா பணத்தையும் இழந்துடுவோம். ஆனா யெகோவாவுடைய சித்தமா, இல்ல எங்களோட விருப்பமா, எதுக்கு முதலிடம் கொடுக்குறதுனு யோசிச்சோம்.” அப்போஸ்தலன் பவுல் “எல்லாவற்றையும் நஷ்டமென்று” கருதியதை நினைத்துப் பார்த்தார்கள். உடனே, வீட்டு கான்ட்ராக்ட்டை ரத்து செய்தார்கள், வேலையை ராஜினாமா செய்தார்கள், பெரும்பாலான பொருட்களை விற்றார்கள். மணிலாவுக்குத் தெற்கே சுமார் 480 கி.மீ. தூரத்திலிருக்கும் பலவான் தீவிலுள்ள ஒதுக்குப்புறமான ஒரு கிராமத்திற்குக் குடிமாறினார்கள்.—பிலி. 3:8.

‘ரகசியத்தைக் கற்றுக்கொண்டார்கள்’

க்ரெகோரியோவும் மாரிலூவும் குடிமாறுவதற்கு முன்பே, எளிமையாக வாழ்வதற்குத் தங்களைத் தயார்படுத்தினார்கள். இருந்தாலும், இன்னும் எந்தளவுக்கு எளிமையாக வாழ வேண்டியிருக்கும் என்பதை அங்குபோன பின்புதான் உணர்ந்தார்கள். மாரிலூ சொல்கிறார்: “எங்களுக்கு ஒரே அதிர்ச்சியா இருந்துச்சு. ஏன்னா, மின்வசதி இல்ல. ரைஸ் குக்கர்ல சமைக்கிறதுக்கு பதிலா விறகு வெட்டி, தீ மூட்டி சமைக்க வேண்டியிருந்துச்சு. ஷாப்பிங் காம்ப்ளக்ஸுக்கு போக முடியல, ஹோட்டல்ல சாப்பிட முடியல, நகரத்துல அனுபவிச்ச வசதி எதையுமே இங்க அனுபவிக்க முடியல.” இருந்தாலும், அவர்கள் குடிமாறியதற்கான காரணத்தை அடிக்கடி யோசித்துப் பார்த்தார்கள். அதனால், சீக்கிரத்தில் அந்த வாழ்க்கை முறைக்குத் தங்களை மாற்றிக்கொண்டார்கள். மாரிலூ சொல்கிறார்: “இப்போ ராத்திரில பிரகாசமா மின்னுற நட்சத்திரங்கள பார்க்க முடியது, இயற்கையின் அழகை ரசிக்க முடியுது. எல்லாத்துக்கும் மேல, ஊழியம் செய்யும்போது ஜனங்க முகத்துல சந்தோஷத்த பார்க்க முடியுது. இங்க சேவை செய்றதுனால, திருப்தியுடன் இருப்பதற்கான ‘ரகசியத்தை கற்றுக்கொண்டோம்’”.—பிலி. 4:12.

“சபையோட வளர்ச்சியைப் பார்க்கிற சந்தோஷத்தவிட வேற சந்தோஷம் எதுவும் இல்ல. வாழ்க்கைக்கு இப்பதான் அர்த்தம் கிடைச்ச மாதிரி இருக்கு.”—க்ரெகோரியோ-மாரிலூ

“நாங்க இங்க வந்த சமயத்துல நாலு யெகோவாவின் சாட்சிகள்தான் இருந்தாங்க. வாரா வாரம் பொதுப் பேச்சு கொடுத்தேன், ராஜ்ய பாடல்கள பாடுறதுக்காக கிட்டார் வாசிச்சேன். எல்லாருக்கும் ஒரே சந்தோஷம்” என்கிறார் க்ரெகோரியோ. ஒரு வருடத்திலேயே அந்தச் சிறிய தொகுதி, 24 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரு சபையாக மாறியதை அந்தத் தம்பதி பார்த்தார்கள். “இந்த சபையில உள்ளவங்க எங்க மேல காட்டுற பாசத்த எங்களால மறக்கவே முடியாது” என்று க்ரெகோரியோ சொல்கிறார். ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் ஆறு வருடங்களுக்கும்மேல் சேவை செய்த இவர்கள், “சபையோட வளர்ச்சியைப் பார்க்கிற சந்தோஷத்தவிட வேற சந்தோஷம் எதுவும் இல்ல. வாழ்க்கைக்கு இப்பதான் அர்த்தம் கிடைச்ச மாதிரி இருக்கு” என்று சொல்கிறார்கள்.

‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பார்த்திருக்கேன்!’

பிலிப்பைன்ஸில், தேவை அதிகமுள்ள பகுதிகளுக்கு சுமார் 3,000 சகோதர சகோதரிகள் குடிமாறியிருக்கிறார்கள். அதில், கிட்டத்தட்ட 500 பேர் மணமாகாத சகோதரிகள். கேரன் என்ற சகோதரியின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

கேரன்

இருபது வயதைக் கடந்த கேரன், காகயன் மாகாணத்திலுள்ள பேகோவில் வளர்ந்தவள். பதின் வயதிலேயே ஊழியத்தில் அதிகமாக ஈடுபடுவதைப் பற்றி அவள் அடிக்கடி யோசித்ததுண்டு. அவள் சொல்கிறாள்: “இன்னும் கொஞ்ச காலம்தான் இருக்குதுனு எனக்கு தெரியும். அதுக்குள்ள எல்லா மக்களுக்கும் நற்செய்திய எப்படியாவது சொல்லணுமே. அதனால தேவை அதிகமுள்ள இடத்துக்கு போய் சேவை செய்ய ஆசைப்பட்டேன்.” குடும்பத்திலுள்ள சிலர் மேல்படிப்பிற்கு அவளை ஊக்கப்படுத்தியபோது, கேரன் உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்தாள். ஒதுக்குப்புறமான இடங்களில் ஊழியம் செய்கிறவர்களிடம் அதைப் பற்றி விசாரித்தாள். பதினெட்டு வயதில், தன்னுடைய ஊரைவிட்டு சுமார் 64 கி.மீ. தொலைவிலுள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு குடிமாறினாள்.

அது ஒரு சிறிய சபை. பசிபிக் கரையோரமுள்ள மலைப்பாங்கான இடம் அந்தச் சபையின் பிராந்தியமாக இருந்தது. “பேகோவிலிருந்து அந்த சபைக்கு போக மூணு நாள் நடக்க வேண்டியிருந்துச்சு, மலைகள்ல ஏறி இறங்கினோம், 30 தடவ ஆறுகள கடந்தோம்” என்று கேரன் சொல்கிறாள். “சில பைபிள் மாணாக்கர்கள சந்திக்கிறதுக்கு ஆறு மணி நேரம் நடக்க வேண்டியிருக்கும். இரவு, மாணாக்கரோட வீட்டிலேயே தங்கிட்டு, மறுநாள் மறுபடியும் ஆறு மணி நேரம் நடந்து வீட்டுக்கு வருவேன்.” இவள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்ததா? “சில நேரங்கள்ல கால்கள் ரொம்ப வலிக்கும். ஆனாலும்,” புன்னகை பூக்க கேரன் சொல்கிறாள்: “நான் 18 பைபிள் படிப்புகள எடுத்திருக்கேன். ‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பார்த்திருக்கேன்!’”—சங். 34:8.

“யெகோவாவைச் சார்ந்திருக்கக் கற்றுக்கொண்டேன்”

ஸூக்கி

ஸூக்கி என்ற மணமாகாத சகோதரி அமெரிக்காவில் குடியிருந்தார். நாற்பது வயதைக் கடந்த இவர், பிலிப்பைன்ஸுக்கு குடிமாற எது அவரைத் தூண்டியது? ஒரு தம்பதியின் பேட்டியே! 2011-ல் இவர் கலந்துகொண்ட ஒரு வட்டார மாநாட்டில் அவர்களுடைய பேட்டி இருந்தது. மெக்ஸிக்கோவிற்குப் போய் ஊழியம் செய்வதற்காக பெரும்பாலான பொருட்களை விற்றதைப் பற்றி அவர்கள் அதில் சொன்னார்கள். “நான் இதுவரை நெனச்சு பார்க்காத இலக்குகள பத்தி யோசிச்சு பார்க்க அந்த பேட்டி எனக்கு உதவுச்சு” என்று ஸூக்கி சொல்கிறார். ஸூக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். பிலிப்பைன்ஸிலிருக்கும் பஞ்சாபி மக்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டபோது, அங்கு குடிமாற தீர்மானித்தார். அதற்கு ஏதாவது தடை இருந்ததா?

“எந்த பொருள வெச்சுக்கிறது எத விக்கிறதுனு என்னால முடிவெடுக்கவே முடியல; நெனச்சதவிட அது கஷ்டமா இருந்துச்சு. பதிமூணு வருஷமா என்னோட அப்பார்ட்மென்ட்டுல வசதியா வாழ்ந்துட்டு, இப்போ குடும்பத்தோட வசதியே இல்லாத இடத்துக்கு குடிமாறியிருக்கோம். அது அவ்ளோ ஈஸியா இல்ல. ஆனா, எளிமையான வாழ்க்கைக்கு அது என்ன தயார்படுத்துச்சு” என்கிறார் ஸூக்கி. பிலிப்பைன்ஸில் என்னென்ன சவால்களைச் சந்தித்தார்? “பூச்சி, புழுனாலே எனக்கு ரொம்ப பயம்; அதோட வீட்டு ஞாபகம் வேற என்ன வாட்டும். ஆனா முன்னவிட யெகோவாவ முழுமையா சார்ந்திருக்க கத்துக்கிட்டேன்.” அதனால் பலன் கிடைத்ததா? “‘இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோ என்று என்னைச் சோதித்துப் பாருங்கள்’-னு யெகோவா சொல்லியிருக்காரு. ‘நீங்க எப்போ திரும்பி வருவீங்க? எனக்கு நிறைய கேள்விகள் இருக்கு’னு ஒரு வீட்டுக்காரர் சொல்றப்போ இந்த வசனம் எவ்ளோ உண்மைனு என்னால உணர முடியுது. ஆன்மீக பசியில வாடிட்டு இருக்கிறவங்களுக்கு உதவுறப்போ கிடைக்கிற திருப்தியும் சந்தோஷமும் தனிதான்” என்று புன்னகை பொங்க சொல்கிறார் ஸூக்கி. (மல். 3:10) “குடிமாறுறத பத்தி தீர்மானிக்கிறதுதான் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா, குடிமாறுனதுக்கு அப்புறம் யெகோவா என்ன எந்த குறையும் இல்லாம பாத்துகிட்டத யோசிக்கும்போது அப்படியே மெய்சிலிர்த்துபோறேன்” என்றும் அவர் சொல்கிறார்.

‘வேலைய பத்தின பயத்த விட்டுட்டேன்’

ஸிமே என்ற சகோதரர் மணமானவர், இவருக்கு இப்போது சுமார் 38 வயது. கைநிறைய சம்பாதிப்பதற்காக பிலிப்பைன்ஸைவிட்டு மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு நாட்டுக்குச் சென்றார். அங்கிருந்த சமயத்தில், வட்டாரக் கண்காணி ஒருவர் கொடுத்த உற்சாகமும் ஆளும் குழு அங்கத்தினர் ஒருவர் கொடுத்த பேச்சும், வாழ்க்கையில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க அவரைத் தூண்டியது. “வேலைய விடுறது பத்தி யோசிச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கும்” என்கிறார் ஸிமே. இருந்தாலும், தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிலிப்பைன்ஸுக்கு திரும்பினார். இந்த நாட்டின் தெற்கு பகுதியில் தவோ டெல் சூர் என்ற மாகாணம் இருக்கிறது. தேவை அதிகமுள்ள இந்தப் பெரிய பிராந்தியத்தில் ஸிமேயும் அவருடைய மனைவி ஹைடீயும் சேவை செய்கிறார்கள். ஸிமே சொல்கிறார்: “வேலை இல்லனா என்ன செய்வேன்ற பயத்த விட்டுட்டு யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்தத நெனச்சு பார்க்கும்போது எனக்கு சந்தோஷமா இருக்கு. நம்மகிட்ட இருக்கிறதுலயே மிக சிறந்தத யெகோவாவுக்கு தரும்போது, கிடைக்கிற திருப்திக்கு வேற எதுவுமே ஈடு இல்ல!”

ஸிமே-ஹைடீ

“எங்களுக்கு பரம திருப்தி தருது!”

ரமிலோ-ஜூல்யட் என்ற பயனியர் தம்பதி முப்பது வயதைக் கடந்தவர்கள். தங்களுடைய வீட்டிலிருந்து 30 கி.மீ. தூரத்திலுள்ள ஒரு சபையில் தேவை இருப்பதை கேள்விப்பட்டு, உதவிக்கரம் நீட்ட முன்வந்தார்கள். மழை வெயில் என்று பார்க்காமல் ஒவ்வொரு வாரமும் தங்களுடைய பைக்கில் கூட்டத்திற்கும் ஊழியத்திற்கும் பலமுறை போய் வருகிறார்கள். மேடுபள்ளமான சாலைகளிலும் தொங்கு பாலங்களிலும் பைக்கை ஓட்டிச் செல்வது அவ்வளவு சுலபமல்ல. இருந்தாலும், ஊழியத்தை விரிவாக்குவதில் அவர்களுக்கு அதிக சந்தோஷம். ரமிலோ சொல்கிறார்: “நானும் என் மனைவியும் 11 பைபிள் படிப்புகளை நடத்துறோம்! தேவை அதிகமுள்ள இடத்துல சேவிக்கிறதுக்கு நிறைய தியாகங்கள செய்ய வேண்டி இருந்தாலும், அது எங்களுக்கு பரம திருப்தி தருது!”—1 கொ. 15:58.

ஜூல்யட்-ரமிலோ

உங்களுடைய சொந்த நாட்டிலோ வேறு நாட்டிற்கோ சென்று தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்வது பற்றி தெரிந்துகொள்ள விருப்பமா? அப்படியென்றால், உங்களுடைய வட்டாரக் கண்காணியிடம் பேசுங்கள். அதோடு, நம் ராஜ்ய ஊழியம், ஆகஸ்ட் 2011-லுள்ள “‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவி செய்ய’ முடியுமா?” என்ற கட்டுரையை வாசியுங்கள்.