Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நன்கு தயாரிக்கப்பட்ட ஜெபத்திலிருந்து நமக்குப் பாடங்கள்

நன்கு தயாரிக்கப்பட்ட ஜெபத்திலிருந்து நமக்குப் பாடங்கள்

“உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.”—நெ. 9:5.

1. கடவுளுடைய மக்களின் எந்தக் கூட்டத்தைப் பற்றி இப்போது சிந்திக்கப்போகிறோம், நம்மையே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்?

 “நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.” ஒன்றுகூடிவந்து யெகோவாவிடம் ஜெபம் செய்யும்படி கடவுளுடைய மக்களிடம் சொல்லப்பட்ட உற்சாகமூட்டும் வார்த்தைகளே இவை. பைபிளில் பதிவாகியுள்ள நீண்ட ஜெபங்களில் இதுவும் ஒன்று. (நெ. 9:4, 5) கி.மு. 455-ஆம் வருடம், யூத மாதமாகிய திஷ்ரி 24-ஆம் தேதியன்று மக்கள் எல்லோரும் எருசலேமில் கூடிவந்தார்கள். இந்த விசேஷ நாளுக்கு முன் நடந்த சில சம்பவங்களைப் பற்றி இப்போது சிந்திக்கலாம். அப்படிச் சிந்திக்கையில் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்தக் கூட்டம் வெற்றிகரமாக நடக்க லேவியர்கள் என்ன செய்துவந்தார்கள்? நன்கு தயாரிக்கப்பட்ட லேவியர்களின் ஜெபத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?’—சங். 141:2.

ஒரு விசேஷித்த மாதம்

2. இஸ்ரவேலர்கள் நமக்கு எப்படி நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள்?

2 இந்த விசேஷ நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் யூதர்கள் எருசலேமின் மதில்களை திரும்பக் கட்டி முடித்திருந்தார்கள். (நெ. 6:15) 52 நாட்களிலேயே இந்த வேலையை முடித்துவிட்டார்கள். அதற்குபின் ஆன்மீகத் தேவைகளுக்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். எப்படி? எஸ்றா மற்றும் லேவியர்கள் கடவுளுடைய சட்டத்தை வாசித்து விளக்குவதைக் கேட்பதற்காகப் பொது இடங்களில் கூடிவந்தார்கள். இந்தக் கூட்டம் திஷ்ரி மாதத்தின் முதல் நாளில் நடந்தது. எல்லாக் குடும்பங்களும் அவர்களுடைய பிள்ளைகளோடு அங்கு கூடிவந்து ‘காலை தொடங்கி மத்தியானமட்டும்’ நின்றுகொண்டே கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், நாம் இன்று பெரும்பாலும் வசதியான ராஜ்ய மன்றங்களில் கூடிவருகிறோம். இருந்தாலும் சிலசமயம் கூட்டத்தின்போது நம்முடைய மனம் அலைபாய்கிறதா? தேவையில்லாத விஷயங்களை யோசிக்கிறதா? அப்படியானால், இஸ்ரவேலர்களின் முன்மாதிரியைக் கவனியுங்கள். அந்த இஸ்ரவேலர்கள் கவனமாகக் காதுகொடுத்து கேட்டார்கள், கேட்டதைச் சிந்தித்துப் பார்த்தார்கள், கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படியாததை நினைத்து அழவும் செய்தார்கள்.—நெ. 8:1-9.

3. இஸ்ரவேலர்கள் எந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள்?

3 ஆனால், இது பாவங்களை அறிக்கையிடுவதற்கான நாள் அல்ல. பண்டிகை நாளாக இருந்ததால் மக்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென யெகோவா விரும்பினார். (எண். 29:1) எனவே, நெகேமியா மக்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்.” மக்கள் இதற்குக் கீழ்ப்படிந்தார்கள்; எனவே, அது ‘மிகுந்த சந்தோஷமான’ நாளாக ஆனது.—நெ. 8:10-12.

4. இஸ்ரவேலிலிருந்த குடும்பத் தலைவர்கள் என்ன செய்தார்கள், கூடாரப் பண்டிகையின்போது என்ன செய்யப்பட்டது?

4 மறுநாளே குடும்பத் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுகூடிவந்தார்கள். எதற்காக? கடவுளுடைய சட்டங்கள் எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கிறார்களா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக. திருச்சட்டத்தைப் படித்தபோது, அதே மாதத்தின், அதாவது ஏழாவது மாதத்தின், 15-ஆம் தேதிமுதல் 22-ஆம் தேதிவரை கூடாரப் பண்டிகையைக் கொண்டாட வேண்டியிருந்ததையும் அதன் முடிவில் சபையாகக் கூடிவர வேண்டியிருந்ததையும் அறிந்துகொண்டார்கள். சற்றும் தாமதிக்காமல் அந்தப் பண்டிகைக்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பித்தார்கள். மிகச் சிறந்த கூடாரப் பண்டிகையாக அது திகழ்ந்தது; யோசுவாவின் நாள்தொடங்கி அதுவரை இவ்வளவு பிரமாதமாக வேறு எந்தக் கூடாரப் பண்டிகையும் கொண்டாடப்படவில்லை. அதோடு அங்கே “மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.” இந்தப் பண்டிகையின் சிறப்பம்சம் என்னவென்றால், “முதலாம் நாள்தொடங்கிக் கடைசி நாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது.”—நெ. 8:13-18.

பாவத்தை அறிக்கையிடுவதற்கான நாள்

5. லேவியர்கள் ஜெபம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு கடவுளுடைய மக்கள் என்ன செய்தார்கள்?

5 கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியாததன் காரணமாக மக்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட வேண்டியிருந்தது. இதைச் செய்வதற்கு திஷ்ரி 24-ஆம் தேதி சரியான சமயமாக இருந்தது; ஏனென்றால், பண்டிகை முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சாப்பிட்டுக் கொண்டாடுவதற்குப் பதிலாக, அவர்கள் தங்களுடைய வருத்தத்தைத் தெரிவிப்பதற்காக விரதமிருந்து இரட்டுடுத்தினார்கள். மறுபடியும், காலையில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அவர்களுக்கு கடவுளுடைய சட்டம் வாசிக்கப்பட்டது. பிறகு, மதிய வேளையில் “அவர்கள் பாவ அறிக்கைபண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள்.” மக்கள் சார்பாக நன்கு தயாரிக்கப்பட்ட ஜெபத்தை லேவியர்கள் ஏறெடுத்தார்கள். —நெ. 9:1-4.

6. லேவியர்களால் எப்படி அர்த்தமுள்ள ஜெபத்தை செய்ய முடிந்தது, இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

6 கடவுளுடைய சட்டத்தைத் தவறாமல் வாசித்தது, அர்த்தமுள்ள இந்த ஜெபத்தைத் தயாரிக்க லேவியர்களுக்கு உதவியது. இந்த ஜெபத்தின் முதல் பத்து வசனங்கள், யெகோவாவின் செயல்களையும் குணங்களையும் சிறப்பித்துக் காட்டின. ஜெபத்தின் மீதமுள்ள வசனங்கள், இஸ்ரவேலர்கள் செய்த பாவங்களைப் பற்றியும் அவர்கள் ஏன் கடவுளுடைய ‘மிகுந்த இரக்கத்தை’ பெற தகுதியற்றவர்கள் என்பதைப் பற்றியும் விளக்கின. (நெ. 9:19, 27, 28, 31) லேவியர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கடவுளுடைய வார்த்தையைத் தினந்தோறும் படித்துத் தியானிக்கும்போது, யெகோவாவை நம்மிடம் பேச அனுமதிக்கிறோம். அப்படிச் செய்தால்தான், ஜெபிக்கும்போது அவரிடம் பேசுவதற்கு அநேக விஷயங்கள் இருக்கும், ஜெபமும் அர்த்தமுள்ளதாக இருக்கும்.—சங். 1:1, 2.

7. லேவியர்கள் கடவுளிடம் என்ன வேண்டினார்கள், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

7 லேவியர்கள் செய்த ஜெபத்தில் ஒரேவொரு எளிய வேண்டுகோள்தான் இருந்தது, அதுவும் அந்த ஜெபத்தின் கடைசியில்தான் அது ஏறெடுக்கப்பட்டது. “இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும் எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும், எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும், உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக” என்று ஜெபித்தார்கள். (நெ. 9:32) லேவியர்கள் நமக்கு நல்ல முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். அவர்களைப்போலவே, நாமும் சொந்த காரியங்களுக்காக வேண்டுவதற்குமுன் யெகோவாவுக்குத் துதிகளையும் நன்றிகளையும் ஏறெடுக்க வேண்டும்.

கடவுளுடைய மகத்தான பெயரைப் புகழ்வோமாக!

8, 9. (அ) லேவியர்கள் எப்படி ஜெபிக்க ஆரம்பித்தார்கள்? (ஆ) என்ன இரண்டு வான சேனைகளைப் பற்றி லேவியர்கள் குறிப்பிடுகிறார்கள்?

8 நன்கு தயாரிக்கப்பட்ட ஜெபத்தை ஏறெடுத்திருந்தாலும், தங்களுடைய வார்த்தைகளால் யெகோவாவின் புகழை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை என்பதை லேவியர்கள் உணர்ந்திருந்தார்கள். என்னே ஒரு மனத்தாழ்மை! எனவே, இஸ்ரவேலர்களின் சார்பாக யெகோவாவிடம் மனத்தாழ்மையோடு இப்படி ஜெபிக்க ஆரம்பித்தார்கள்: “எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.”—நெ. 9:5.

9 அவர்களுடைய ஜெபம் இப்படி தொடர்கிறது: “நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வான சேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.” (நெ. 9:6) இங்கே, யெகோவாவின் சில அற்புதப் படைப்புகளைப் பற்றி லேவியர்கள் குறிப்பிடுகிறார்கள். அவர் வானத்தையும் அதன் “சேனைகளையும்” அதாவது நட்சத்திர மண்டலங்களையும் படைத்திருக்கிறார். அதோடு, பூமியிலிருக்கும் எல்லாவற்றையும் படைத்திருக்கிறார். அதிலுள்ள உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் தேவையான எல்லாவற்றையும் தந்திருக்கிறார். “வான சேனைகள்” பற்றியும் லேவியர்கள் குறிப்பிடுகிறார்கள். தேவதூதர்களே அந்தச் சேனைகள். (1 இரா. 22:19; யோபு 38:4, 7) ‘மீட்பைப் பெறப்போகிறவர்களான’ பாவமுள்ள மனிதர்களுக்கு தாழ்மையோடு பணிவிடை செய்வதன்மூலம் இவர்கள் கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறார்கள். (எபி. 1:14) தேவதூதர்கள் நமக்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரிகள்! ஏனென்றால், இன்று நாமும்கூட நன்கு பயிற்றுவிக்கப்பட்ட சேனையைப்போல் ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்து வருகிறோம்.—1 கொ. 14:33, 40.

10. கடவுள் ஆபிரகாமுக்குச் செய்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

10 அடுத்து, கடவுள் ஆபிராமுக்கு செய்தததைப் பற்றி லேவியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆபிராமுக்கு 99 வயதாகியும் பிள்ளைகளே இல்லை. அப்படியிருந்தும் யெகோவா அவருடைய பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார்; அதற்கு, ‘திரளான ஜாதிகளுக்குத் தகப்பன்’ என்று அர்த்தம். (ஆதி. 17:1-6, 15, 16) ஆபிரகாமின் சந்ததி கானான் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள் என்று கடவுள் அவருக்கு வாக்களித்திருந்தார். மனிதர்கள், தாங்கள் கொடுத்த வாக்கை மறந்துவிடுவார்கள்; ஆனால், யெகோவா அப்படியல்ல. லேவியர்கள் செய்த ஜெபம் இதைக் காட்டியது. ‘ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர். அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக் கண்டு, கானானியருடைய . . . தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கை பண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர்’ என்று ஜெபித்தார்கள். (நெ. 9:7, 8) நாமும், நம்முடைய நீதியுள்ள கடவுளைப் பின்பற்றி, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவோமாக!—மத். 5:37.

யெகோவாவின் செயல்களை நினைத்துப் பார்த்தார்கள்

11, 12. யெகோவா என்ற பெயரின் அர்த்தத்தையும், தம் பெயருக்கேற்ப அவர் செயல்பட்டதையும் பற்றி விளக்குங்கள்.

11 யெகோவா என்ற பெயருக்கு “ஆகும்படி செய்கிறவர்” என்று அர்த்தம். அதாவது, தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடர்ந்து செயல்படுகிறவர் என்று அர்த்தம். எகிப்தில் அடிமைகளாயிருந்த ஆபிரகாமின் சந்ததிக்கு, கடவுள் தாம் கொடுத்திருந்த வாக்கை நிறைவேற்றியதிலிருந்து இது தெரிகிறது. என்ன வாக்கு கொடுத்திருந்தார்? அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவார்கள் என்று சொல்லியிருந்தார். அந்தச் சமயத்தில் இது முடியாததுபோல் அவர்களுக்குத் தோன்றியது. ஆனால், தாம் கொடுத்த வாக்கு நிறைவேறும்வரை கடவுள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருந்தார். இப்படியாக, யெகோவா என்ற தம்முடைய உன்னதப் பெயருக்கேற்ப செயல்பட்டார்.

12 யெகோவாவின் செயல்களைப் பற்றித் தொடர்ந்து இவ்வாறு ஜெபம் செய்தார்கள்: “எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர். பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர். நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால் நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப் போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.” வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்ற யெகோவா அவர்களுக்கு உதவியதைப் பற்றி மேலும் இப்படிச் சொன்னார்கள்: “நீர் அவர்களுக்கு முன்பாகத் தேசத்தின் குடிகளாகிய கானானியரைத் தாழ்த்தி . . . அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடைமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும், ஏராளமான திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள்.”—நெ. 9:9-11, 24, 25.

13. யெகோவா எப்படி இஸ்ரவேலர்களுடைய ஆன்மீகத் தேவைகளைக் கவனித்துக்கொண்டார், ஆனால் அவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?

13 யெகோவா, தம்முடைய வாக்கை நிறைவேற்ற இன்னும் அநேக காரியங்களைச் செய்தார். உதாரணத்திற்கு, எகிப்திலிருந்து விடுதலையானவுடனே இஸ்ரவேலர்களுடைய ஆன்மீகத் தேவைகளைக் கவனித்துக்கொண்டார். இதைப் பற்றி லேவியர்கள் ஜெபிக்கும்போது, “நீர் சீனாய் மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்” என்று சொன்னார்கள். (நெ. 9:13) யெகோவா, இஸ்ரவேலர்களை தம்முடைய சொந்த ஜனமாகத் தேர்ந்தெடுத்திருந்தார்; அவர்களுக்கு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தையும் கொடுக்கவிருந்தார். எனவே, தம்முடைய பெயருக்கேற்ப நடந்துகொள்ளும்படி அவர்களுக்குக் கற்பித்தார். ஆனால், சில நாட்களிலேயே அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டார்கள்.நெகேமியா 9:16-18-ஐ வாசியுங்கள்.

கண்டிப்பு தேவைப்பட்டது

14, 15. (அ) இஸ்ரவேலர்களுக்கு யெகோவா எப்படி இரக்கம் காட்டினார்? (ஆ) இஸ்ரவேலர்களைக் கடவுள் நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

14 இஸ்ரவேலர்கள், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகச் சீனாய் மலையில் உறுதியளித்திருந்தார்கள். ஆனால், உடனடியாக இரண்டு பாவங்களைச் செய்ததாக லேவியர்கள் ஜெபத்தில் குறிப்பிட்டார்கள். நியாயமாகப் பார்த்தால் அவர்கள் வனாந்தரத்திலேயே இறந்திருக்க வேண்டும். ஆனால், யெகோவா இரக்கம் காட்டினார், தொடர்ந்து அவர்களுடைய தேவைகளையும் கவனித்துக்கொண்டார். இதற்காக, லேவியர்கள் யெகோவாவைப் புகழ்ந்து, “நீர் உம்முடைய மிகுந்த மன உருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; . . . நாற்பது வருஷமாக . . . ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்துவந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை” என்று ஜெபித்தார்கள். (நெ. 9:19, 21) இன்றும், விசுவாசத்தோடு சேவை செய்வதற்குத் தேவையான எல்லாவற்றையும் யெகோவா நமக்குக் கொடுக்கிறார். கீழ்ப்படியாமையினாலும் விசுவாசக் குறைவினாலும் ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் மடிந்தார்கள். அவர்களைப்போல் இருக்க நாம் நிச்சயம் விரும்பமாட்டோம், அல்லவா? உண்மையில் இவையெல்லாம், ‘இந்த உலகத்தின் முடிவு காலத்தில் வாழ்கிற நமக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி எழுதப்பட்டிருக்கின்றன.’—1 கொ. 10:1-11.

15 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்த உடனேயே, இஸ்ரவேலர்கள் படுமோசமான காரியங்களைச் செய்யத் தொடங்கினார்கள். கானானிய கடவுட்களை வழிபட ஆரம்பித்தார்கள்; அதன் விளைவாக ஒழுக்கமற்ற காரியங்களைச் செய்யவும் தங்களுடைய பிள்ளைகளை பலி செலுத்தவும் ஆரம்பித்தார்கள். ஆகவே, மற்ற தேசங்கள் இஸ்ரவேலர்களை ஒடுக்குவதற்கு யெகோவா அனுமதித்தார். அவர்கள் மனந்திரும்பியபோதோ, யெகோவா அவர்களை மன்னித்து எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார். “அநேகந்தரம்” இப்படி நடந்தது. (நெகேமியா 9:26-28, 31-ஐ வாசியுங்கள்.) இதை லேவியர்கள் இவ்வாறு ஒப்புக்கொண்டார்கள்: “நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்களை அந்நிய தேச ஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர்.”—நெ. 9:30.

16, 17. (அ) இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு மறுபடியும் கீழ்ப்படியாமல் போனபோது என்ன நடந்தது? (ஆ) இஸ்ரவேலர்கள் எதை ஒப்புக்கொண்டார்கள், என்ன செய்வதாக வாக்களித்தார்கள்?

16 பாபிலோனிலிருந்து திரும்பி வந்தவுடனேயே இஸ்ரவேலர்கள் மறுபடியும் கீழ்ப்படியாமல் போனார்கள். இதன் விளைவு? லேவியர்கள் தங்களுடைய ஜெபத்தில் இப்படிச் சொன்னார்கள்: “இதோ, இன்றைய தினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்; இதோ, பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம். அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப்போகிறது; . . . நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம்.”—நெ. 9:36, 37.

17 இஸ்ரவேலர்களைக் கஷ்டப்பட அனுமதித்ததன் மூலம், யெகோவா அவர்களிடம் அநியாயமாக நடந்துகொண்டார் என்றா லேவியர்கள் சொல்ல வந்தார்கள்? இல்லவே இல்லை! “எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம்பண்ணினோம் [அதாவது, தீமை செய்தோம்]” என்று லேவியர்கள் ஒப்புக்கொண்டார்கள். (நெ. 9:33) இந்தத் தன்னலமற்ற ஜெபத்தை ஒரு வாக்குறுதியோடு முடித்தார்கள்; அதாவது, இனிமேல் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதாகச் சொன்னார்கள். (நெகேமியா 9:38-ஐ வாசியுங்கள்; நெ. 10:29) இந்த வாக்குறுதியைப் பதிவும் செய்தார்கள், யூத தலைவர்களான 84 பேர் அதில் கையெழுத்திட்டார்கள்.—நெ. 10:1-27.

18, 19. (அ) புதிய பூமியைச் சொந்தமாக்கிக்கொள்ள நமக்கு என்ன தேவை? (ஆ) எந்த விஷயத்திற்காக நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும், ஏன்?

18 புதிய உலகில் வாழ்வதற்குத் தகுதி பெற வேண்டுமென்றால் யெகோவாவின் கண்டிப்பு நமக்கு அவசியம். “தகப்பனால் கண்டித்துத் திருத்தப்படாத பிள்ளை உண்டோ?” என்று அப்போஸ்தலன் பவுல் கேட்டார். (எபி. 12:7) யெகோவா கொடுக்கும் கண்டிப்பை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து அவருக்கு விசுவாசத்தோடு சேவை செய்யும்போது, அவர் நம்மை பயிற்றுவிக்க அனுமதிக்கிறோம். அதோடு, நாம் ஏதாவது படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டால், உண்மையான மனந்திரும்புதலைக் காட்டி, அவருடைய கண்டிப்பை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளும்போது, அவர் நம்மை மன்னிப்பார் என்பது உறுதி.

19 எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களை விடுவித்தபோது செய்ததைவிட, இன்னும் அற்புதமான காரியங்களை யெகோவா வெகு சீக்கிரத்தில் செய்யப்போகிறார். இவ்வாறு யெகோவா தம்முடைய பெயரை மாபெரும் அளவில் பரிசுத்தப்படுத்துவார். (எசே. 38:23) அந்தச் சமயத்தில் யெகோவாவுக்கு உண்மையோடு இருக்கிறவர்கள் புதிய பூமியைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; ஆம், அன்று இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டது போலவே இது இருக்கும். (2 பே. 3:13) இப்படிப்பட்ட அருமையான எதிர்பார்ப்புகள் நம் கண்முன் இருப்பதால், கடவுளுடைய மகத்தான பெயர் பரிசுத்தப்பட வேண்டுமென்று தொடர்ந்து ஜெபிப்போமாக! கடவுளுடைய ஆசீர்வாதத்தை இன்றும் என்றும் பெற்றுக்கொள்ள உதவும் மற்றொரு ஜெபத்தைப் பற்றி அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.