கடவுளுடைய சேவைதான் இவரது மருந்து!
கென்யாவில், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்த இரண்டு பயனியர் சகோதரர்கள் ஒரு வீட்டிற்குள் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் உள்ளே சென்றபோது, மிகச் சிறிய உருவமுள்ள ஒரு நபர் கட்டிலில் படுத்துக் கிடப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அவரது கழுத்துக்குக் கீழுள்ள பகுதியும் கைகளும் படுகுட்டியாக இருந்தன. “முடவன் மானைப் போல் குதிப்பான்” என்று கடவுள் அளித்த வாக்குறுதியை அந்தச் சகோதரர்கள் அவருக்குப் படித்துக் காண்பித்தபோது அவருடைய முகத்தில் அப்படியொரு சந்தோஷம்!—ஏசா. 35:6.
தற்போது 40 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நபரின் பெயர் ஓநேஸிமஸ். அவருக்கு பிறவியிலேயே ஆஸ்டியோஜெனிஸிஸ் இம்பெர்ஃபெக்டா என்ற நோய் இருப்பதை சகோதரர்கள் தெரிந்துகொண்டார்கள். இது, எளிதில் எலும்புமுறிவை ஏற்படுத்தும் நோய். லேசாக அழுத்தினால்கூட அவருடைய எலும்புகள் நொறுங்கிவிடும். இந்த நோய்க்கு மருந்து மாத்திரையோ சிகிச்சையோ இல்லை. வாழ்நாள் முழுக்க வலியோடும் சக்கர நாற்காலியோடும் காலம் தள்ள வேண்டியிருப்பதை நினைத்து அவர் விரக்தியடைந்திருந்தார்.
பைபிள் படிப்புக்கு ஓநேஸிமஸ் ஒத்துக்கொண்டார். ஆனால், சபைக் கூட்டங்களுக்கு அவரை அனுப்ப அவருடைய அம்மா ஒத்துக்கொள்ளவில்லை; ஓநேஸிமசுக்கு எலும்பு உடைந்துவிடுமோ, வலி அதிகமாகிவிடுமோ என்று அவர் பயந்தார். அதனால், நிகழ்ச்சிகளைச் சகோதரர்கள் ஆடியோ பதிவு செய்தார்கள்; ஓநேஸிமஸ் அதைக் கேட்டுப் பயனடைந்தார். இப்படியே ஐந்து மாதங்கள் ஓடின. பின்பு, தனக்கு என்ன ஆனாலும் சரி, கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டுமென்று தீர்மானம் எடுத்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்டதால் ஓநேஸிமசுக்கு வலி அதிகரித்ததா? “சதா வாட்டியெடுக்கும் வலி, கூட்டங்களின்போது குறைந்துவிடுவது போல் தெரிந்தது” என்று அவர் சொல்கிறார். பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் தனக்குத் தெம்பளித்ததாக அவர் உணர்ந்தார். ஓநேஸிமஸ் புது தெம்போடு இருப்பதைக் கவனித்த அவருடைய அம்மா மிகவும் சந்தோஷப்பட்டார், பைபிள் படிப்புக்கும் ஒத்துக்கொண்டார். “கடவுளுடைய சேவைதான் என் மகனுக்கு மருந்து” என அடிக்கடி சொல்லவும் ஆரம்பித்தார்.
சீக்கிரத்திலேயே ஓநேஸிமஸ் ஞானஸ்நானம் பெறாத பிரஸ்தாபி ஆனார். பிறகு, ஞானஸ்நானம் பெற்றார், இப்போது ஓர் உதவி ஊழியராகச் சேவை செய்கிறார். இரண்டு கால்களும் ஒரு கையும் செயலற்று இருந்தாலும் யெகோவாவின் சேவையில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்பினார். துணை பயனியர் ஊழியம் செய்ய ஆசைப்பட்டார். ஆனாலும், விண்ணப்பிக்கத் தயங்கினார். ஏன்? தன் சக்கர நாற்காலியைத் தள்ள எப்போதும் மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டுமே என்று நினைத்துதான். இதைப் பற்றி சகோதரர்களிடம் அவர் தெரிவித்தபோது, அவருக்கு முழு ஆதரவும் உதவியும் அளிப்பதாக அவர்கள் உறுதியளித்தார்கள். அவர்களின் உதவியோடு ஓநேஸிமஸ் துணை பயனியர் ஊழியம் செய்தார்.
பிற்பாடு, ஒழுங்கான பயனியர் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டார்; ஆனால், சகோதரர்களைத் தொந்தரவு செய்ய வேண்டியிருக்குமே என்று நினைத்து மறுபடியும் தயங்கினார். என்றாலும், அவர் படித்த தினவசனம் ஒன்று அவருக்குத் தேவையான உத்வேகத்தை அளித்தது. ‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்’ என்பதே அந்த வசனம். (சங். 34:8) இந்த வசனத்தைத் தியானித்த பிறகு ஓநேஸிமஸ் ஒழுங்கான பயனியர் சேவை செய்ய வேண்டுமென்று தீர்மானித்தார். அவர் இப்போது வாரத்திற்கு நான்கு நாட்கள் ஊழியம் செய்கிறார், முன்னேறிவரும் பல பைபிள் படிப்புகளை நடத்துகிறார். 2010-ல், பயனியர் ஊழியப் பள்ளியிலும் கலந்துகொண்டார். தன்னை முதன்முதலில் சந்தித்த சகோதரர்களில் ஒருவர் பள்ளிப் போதகராய் இருந்ததைக் கண்டபோது அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்!
ஓநேஸிமசின் பெற்றோர் இப்போது உயிரோடு இல்லை; சபையிலுள்ள சகோதர சகோதரிகள்தான் அவருடைய அன்றாடத் தேவைகளை அக்கறையோடு கவனித்துக்கொள்கிறார்கள். தனக்குக் கிடைக்கிற எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் ஓநேஸிமஸ் நன்றியோடு இருக்கிறார். “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என்ற வாக்குறுதி நிறைவேறும் பொன் நாளுக்காக அவர் ஆவலோடு காத்திருக்கிறார்!—ஏசா. 33:24.