Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்

தீமோத்தேயு—சேவை செய்யத் தயாராயும் மனமுள்ளவராயும் இருந்தார்

தீமோத்தேயு—சேவை செய்யத் தயாராயும் மனமுள்ளவராயும் இருந்தார்

“நீ தயாராகிவிட்டாயா?” உன்னிடம் யாராவது அப்படிக் கேட்டிருக்கிறார்களா?— ஏன் அப்படிக் கேட்டிருப்பார்? தேவையானதையெல்லாம் எடுத்துவைத்து நீ தயார்நிலையில் இருக்கிறாயா என்பதைத் தெரிந்துகொள்ளவே அவர் அப்படிக் கேட்டிருப்பார். உதாரணமாக, ‘புத்தகங்களை எடுத்து வைத்திருக்கிறாயா? பாடங்களைப் படித்துவிட்டாயா?’ என்ற அர்த்தத்தில் அப்படிக் கேட்டிருப்பார். தீமோத்தேயு தயாராக இருந்தார். இதைத்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

தீமோத்தேயு மனமுள்ளவராயும் இருந்தார். அப்படியென்றால் என்ன அர்த்தமென்று உனக்குத் தெரியுமா?— கடவுளுக்குச் சேவைசெய்ய பவுல் அழைத்தபோது, வேறொரு ஊழியருக்கு இருந்த அதே மனப்பான்மையே தீமோத்தேயுவுக்கு இருந்தது. அந்த ஊழியர், “இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும்” என்று சொன்னார். (ஏசாயா 6:8) சேவை செய்யத் தயாராயும் மனமுள்ளவராயும் இருந்ததால், தீமோத்தேயுவின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. அதைப் பற்றித் தெரிந்துகொள்ள உனக்கு விருப்பமா?—

தீமோத்தேயு லீஸ்திராவில் பிறந்தார். அது எருசலேமிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அவருடைய அம்மாவின் பெயர் ஐனிக்கேயாள், பாட்டியின் பெயர் லோவிசாள்; இவர்கள் இரண்டு பேரும் பைபிளை ஆர்வமாகப் படிக்கிறவர்களாய் இருந்தார்கள். தீமோத்தேயு கைக்குழந்தையாய் இருந்தபோதே, பைபிள் விஷயங்களை அவருக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள்.—2 தீமோத்தேயு 1:5; 3:15.

அப்போஸ்தலன் பவுல் நிறைய இடங்களுக்குப் போய் பிரசங்கிப்பதற்காக முதல்முறை பயணம் செய்தபோது, பர்னபாவுடன் லீஸ்திராவுக்குச் சென்றார். அப்போது தீமோத்தேயு ஒருவேளை பருவ வயதினராக இருந்திருப்பார். இந்தச் சமயத்தில்தான் தீமோத்தேயுவின் அம்மாவும் பாட்டியும் கிறிஸ்தவர்களாக ஆகியிருப்பார்கள் என்று தெரிகிறது. லீஸ்திராவில் பவுலுக்கும் பர்னபாவுக்கும் என்ன தொந்தரவு வந்தது, தெரியுமா?— கிறிஸ்தவர்களைப் பிடிக்காதவர்கள் பவுல்மேல் கல்லெறிந்து, அவரைக் கீழே தள்ளிவிட்டு, பட்டணத்துக்கு வெளியே தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் போட்டார்கள். பவுல் செத்துவிட்டாரென்று அவர்கள் நினைத்தார்கள்.

பவுல் சொன்ன விஷயங்களை நம்பினவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள், பிறகு அவர் எழுந்தார். அடுத்தநாள் பவுலும் பர்னபாவும் லீஸ்திராவிலிருந்து போய்விட்டார்கள், ஆனால் பல மாதங்களுக்குப் பிறகு அங்கே திரும்பிவந்தார்கள். அப்போது சீஷர்களுக்கு முன்பு பவுல் ஒரு பேச்சு கொடுத்தார். அந்தப் பேச்சில், ‘நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும்’ என்று கூறினார். (அப்போஸ்தலர் 14:8–22) பவுல் அப்படிச் சொன்னதன் அர்த்தம் உனக்குப் புரிகிறதா?— கடவுளுக்குச் சேவை செய்பவர்களை மற்றவர்கள் கொடுமைப்படுத்துவார்கள் என்பதே அதன் அர்த்தம். “தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்று பிற்பாடு தீமோத்தேயுவுக்கு பவுல் கடிதம் எழுதினார்.—2 தீமோத்தேயு 3:12; யோவான் 15:20.

பவுலும் பர்னபாவும் லீஸ்திராவிலிருந்து வீடுதிரும்பினார்கள். சில மாதங்களுக்குப் பிறகு, பவுல் தன்னோடு சீலாவைக் கூட்டிக்கொண்டு பயணம் செய்தார். பவுல் ஏற்கெனவே போயிருந்த இடங்களில் சீஷர்களாய் ஆகியிருந்தவர்களை, அவர்கள் இருவருமாகச் சந்தித்து உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் லீஸ்திராவுக்கு வந்தபோது, பவுலை மறுபடியும் பார்த்த தீமோத்தேயுவுக்கு எவ்வளவு சந்தோஷமாய் இருந்திருக்கும்! தங்களோடுகூட வருவதற்குத் தன்னையும் அவர்கள் அழைத்தபோது, தீமோத்தேயுவுக்கு இன்னும் அதிக சந்தோஷமாய் இருந்திருக்கும். தீமோத்தேயு அவர்களோடு செல்வதற்குச் சம்மதித்தார். அதற்கு அவர் தயாராயும் மனமுள்ளவராயும் இருந்தார்.—அப்போஸ்தலர் 15:40; 16:5.

மூன்று பேரும் சேர்ந்து பயணம் செய்தார்கள். நிறைய கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்றார்கள், அதன் பிறகு கப்பல் ஏறினார்கள். அவர்கள் கிரேக்கு நாட்டில் கரை இறங்கி, தெசலோனிக்கே பட்டணத்துக்கு நடந்தார்கள். அங்கே நிறைய பேர் கிறிஸ்தவர்கள் ஆனார்கள். அதே சமயம், சிலர் கோபத்தில் கொதித்தெழுந்தார்கள், ஒரு கும்பலைத் திரட்டிக்கொண்டு கூச்சல்போட்டு ஆர்ப்பாட்டம் செய்தார்கள். பவுல், சீலா, தீமோத்தேயு ஆகிய மூன்று பேரின் உயிருக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டது. ஆகவே அவர்கள் அங்கிருந்து பெரோயா பட்டணத்துக்குச் சென்றார்கள்.—அப்போஸ்தலர் 17:1–10.

தெசலோனிக்கேயில் கிறிஸ்தவர்களாய் மாறியிருந்தவர்களை நினைத்து பவுல் கவலைப்பட்டார். ஆகவே, தீமோத்தேயுவை மறுபடியும் அங்கே அனுப்பிவைத்தார். என்ன செய்வதற்காக அனுப்பினார், தெரியுமா?— தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்களுக்குப் பிற்பாடு பவுல் அதை விளக்கினார். ‘ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவே’ என்று கூறினார். அங்கே எதிர்ப்பவர்கள் நிறைய பேர் இருப்பது தெரிந்தும் இளம் தீமோத்தேயுவை பவுல் ஏன் அனுப்பினார்?— ஏனென்றால், எதிர்த்தவர்களுக்கு தீமோத்தேயுவைச் சரியாகத் தெரியாது; அதோடு, தீமோத்தேயு அங்குப் போவதற்கு மனமுள்ளவராயும் இருந்தார். அதற்கு ரொம்பவே தைரியம் இருந்திருக்க வேண்டும்! அப்படிப் போனதால் என்ன பலன் கிடைத்தது? தெசலோனிக்கேயர்கள் விசுவாசத்தில் உறுதியாய் இருந்ததாக பவுலிடம் திரும்பிவந்த தீமோத்தேயு சொன்னார். அதனால்தான், “உங்களைக்குறித்து ஆறுதலடைந்தோம்” என்று பவுல் அவர்களுக்கு எழுதினார்.—1 தெசலோனிக்கேயர் 3:2–7.

அதன்பிறகு பத்து வருடங்கள் பவுலுடன் சேர்ந்து தீமோத்தேயு ஊழியம் செய்தார். பிற்பாடு பவுல் ரோமில் ஒரு கைதியாக இருந்தபோது, சிறையிலிருந்து அப்போதுதான் விடுதலையாகி இருந்த தீமோத்தேயு பவுலோடு இருப்பதற்காக அங்கே சென்றார். சிறையில் இருந்தபோது, பிலிப்பியர்களுக்கு பவுல் ஒரு கடிதம் எழுதினார். ஒருவேளை அவர் சொல்லச் சொல்ல தீமோத்தேயு அதை எழுதியிருக்கலாம். ‘தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று . . . நம்பியிருக்கிறேன். ஏனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு . . . அவனையன்றி வேறொருவனும் என்னிடத்தில் இல்லை.’—பிலிப்பியர் 2:19–22; எபிரெயர் 13:23.

அதைக் கேட்ட தீமோத்தேயுவுக்கு எவ்வளவு ஆனந்தமாய் இருந்திருக்கும்! அவர், சேவை செய்யத் தயாராயும் மனமுள்ளவராயும் இருந்ததால் பவுலுக்கு அவரை ரொம்பவே பிடித்துவிட்டது. நீயும் அப்படி இருப்பாய்தானே? (w08 4/1)