விசுவாசம் என்றால் என்ன?
விசுவாசம் என்றால் என்ன?
விசுவாசத்தை நீங்கள் எப்படி விளக்குவீர்கள்? அது ஒரு குருட்டு நம்பிக்கை எனச் சிலர் சொல்கிறார்கள். “நடக்க முடியாதவை நடக்கும் என்ற வெற்று நம்பிக்கையே” விசுவாசம் எனப் பிரபல அமெரிக்க கட்டுரையாளரும் பத்திரிகையாளருமான எச். எல். மென்கன் ஒருமுறை குறிப்பிட்டார்.
ஆனால் பைபிள், விசுவாசத்தைக் குருட்டு நம்பிக்கை என்றோ வெற்று நம்பிக்கை என்றோ விவரிப்பதில்லை. மாறாக, அது இப்படிக் குறிப்பிடுகிறது: “விசுவாசம் என்பது எதிர்பார்க்கிற காரியங்கள் நிச்சயமாக நடக்கும் என்று உறுதியாக நம்புவதாகும்; பார்க்க முடியாத காரியங்கள் நிஜமானவை என்பதற்குத் தெளிவான அத்தாட்சியைக் காண்பதாகும்.”—எபிரெயர் 11:1.
விசுவாசத்தைப் பற்றிப் பல கருத்துகள் நிலவுவதால், பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை நாம் சிந்திக்கலாம்:
• விசுவாசத்தைப் பற்றி மக்கள் தரும் விளக்கத்துக்கும் பைபிள் தரும் விளக்கத்துக்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?
• பைபிள் விவரிக்கிற விசுவாசத்தை நாம் வளர்த்துக்கொள்வது ஏன் முக்கியம்?
• நீங்கள் எப்படி உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ளலாம்?
உரிமைப் பத்திரமும் உறுதியான அத்தாட்சியும்
பைபிளிலுள்ள எபிரெயர் என்ற புத்தகம் எழுதப்பட்ட காலத்தில், ‘உறுதியாக நம்புவது’ என்பதற்கான கிரேக்க வார்த்தையை மக்கள் அடிக்கடி பயன்படுத்தினார்கள். முக்கியமாக, வியாபாரம் சம்பந்தப்பட்ட ஆவணங்களில் அவ்வார்த்தை அடிக்கடி உபயோகிக்கப்பட்டது; ஏதோவொன்றை எதிர்காலத்தில் பெற்றுக்கொள்வதற்கான உத்தரவாதம் அளிப்பதை அது குறித்தது. ஆகவே, “விசுவாசமானது எதிர்பார்க்கிற காரியங்களின் உரிமைப் பத்திரம்” என்பதாக எபிரெயர் 11:1-ஐ மொழிபெயர்க்கலாமென ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது.
இப்படிப்பட்ட விசுவாசத்தை நீங்களும் காட்டியிருக்கலாம்; உதாரணத்திற்கு, பிரபல கம்பெனியிலிருந்து ஒரு பொருளை வாங்கிவிட்டு, அது உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும்வரை காத்திருந்திருக்கலாம். உங்கள் கையில் ரசீது இருந்ததால், அந்த கம்பெனி நிச்சயமாகப் பொருளைக் கொண்டுவந்து சேர்க்குமென நீங்கள் நம்பியிருந்திருக்கலாம். ஒரு கருத்தில், அந்த ரசீது உங்களுடைய உரிமைப் பத்திரமாக இருந்தது; அதாவது, நீங்கள் வாங்கிய பொருளைப் பெற்றுக்கொள்வீர்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருந்தது. அந்த ரசீதை நீங்கள் தொலைத்துவிட்டிருந்தால் அல்லது தூக்கிப் போட்டிருந்தால், பொருள் உங்களுக்குரியது என்பதற்கான எந்த அத்தாட்சியும் உங்களிடம் இருந்திருக்காது. அதேவிதமாக, கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதில் விசுவாசம் வைத்திருப்பவர்கள், தாங்கள் எதிர்பார்க்கிற அந்தக் காரியங்களைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறார்கள். மறுபட்சத்தில், விசுவாசம் இல்லாதவர்களுக்கு அல்லது விசுவாசத்தை இழந்தவர்களுக்கு, கடவுள் வாக்குறுதி அளித்திருக்கிற காரியங்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை இல்லை.—யாக்கோபு 1:5-8.
அடுத்ததாக, ‘தெளிவான அத்தாட்சியைக் காண்பது’ என எபிரெயர் 11:1-ல் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்றொடரை எடுத்துக்கொள்ளலாம்; உண்மைபோல் தோன்றும் ஒன்று உண்மையல்ல என்பதற்கு அத்தாட்சியைக் காண்பதை இது குறிக்கிறது. உதாரணத்திற்கு, சூரியன் கிழக்கில் உதித்து, வானில் படிப்படியாக நகர்ந்து, மேற்கில் மறைவதைப் பார்க்கும்போது அது இந்தப் பூமியைச் சுற்றி வருவதுபோல் தோன்றுகிறது. என்றாலும், வானவியலும் கணிதமும் அளிக்கிற அத்தாட்சியின்படி, அது பூமியைச் சுற்றி வருவதில்லை. அந்த அத்தாட்சியை நீங்கள் நன்கு அறிந்து, உண்மையென ஏற்றுக்கொள்ளும்போது, பூமியே சூரியனைச் சுற்றி வருகிறதென நம்புவீர்கள்; பார்ப்பதற்கு எப்படித் தெரிந்தாலும் அத்தாட்சி எதைக் காட்டுகிறதோ அதையே நம்புவீர்கள். ஆகவே, உங்கள் விசுவாசம் ஏதோ குருட்டு நம்பிக்கை கிடையாது. மாறாக, காரியங்கள் எப்படித் தெரிகின்றன என்பதை மட்டுமல்லாமல் அவை உண்மையில் எப்படி இருக்கின்றன என்பதையும் புரிந்துகொள்ளும் திறனை அது உங்களுக்கு அளிக்கிறது.
விசுவாசம் பலமாயிருப்பது எந்தளவு முக்கியம்?
உறுதியான அத்தாட்சியை அடிப்படையாகக் கொண்ட பலமான விசுவாசத்தை நாம் வளர்த்துகொள்ள வேண்டுமென்றே பைபிள் ஊக்கப்படுத்துகிறது; நம்முடைய நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றாலும் இப்படிப்பட்ட விசுவாசமே அவசியமாக இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “விசுவாசமில்லாமல் ஒருவனும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது; ஏனென்றால், கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.”—எபிரெயர் 11:6.
விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதில் பல சவால்கள் இருக்கின்றன. ஆனால், பின்வரும் பக்கங்களில் விளக்கப்பட்டுள்ள நான்கு படிகளை நீங்கள் எடுத்தால், நிச்சயம் வெற்றி காண்பீர்கள். (w09 5/1)