Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உங்கள் கடவுளான யெகோவாவாகிய நான் பரிசுத்தர்”

“உங்கள் கடவுளான யெகோவாவாகிய நான் பரிசுத்தர்”

கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

“உங்கள் கடவுளான யெகோவாவாகிய நான் பரிசுத்தர்”

லேவியராகமம் 19-ஆம் அதிகாரம்

“கடவுளாகிய யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.” (வெளிப்படுத்துதல் 4:8) இந்த வார்த்தைகள் தூய்மைக்கும் சுத்தத்திற்கும் யெகோவாவுக்கு நிகர் யாருமில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. கடவுளுக்கும் பாவத்துக்கும் வெகுதூரம்; பாவக் கறை எவ்விதத்திலும் அவர்மீது படியாது. அப்படியென்றால், பரிசுத்தத்திலும் பரிசுத்தமான கடவுளிடம் அபூரண மனிதரான நம்மால் நெருங்கவே முடியாது என்று அர்த்தமா? இல்லவே இல்லை! லேவியராகமம் 19-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை நாம் இப்போது ஆராயலாம்.

“இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்” என்று மோசேயிடம் யெகோவா கூறினார். அவர் அடுத்து சொன்ன வார்த்தைகள் இஸ்ரவேலர் எல்லாருக்குமே பொருந்தியது. மோசே அவர்களிடம் என்ன சொல்ல வேண்டும்? “‘நீங்கள் பரிசுத்தராய் இருக்க வேண்டும்; ஏனெனில், உங்கள் கடவுளான யெகோவாவாகிய நான் பரிசுத்தர்’ என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்” என கடவுள் தொடர்ந்து சொன்னார். (வசனம் 2, NW) இஸ்ரவேலர் ஒவ்வொருவரும் ஒழுக்க ரீதியில் சுத்தமாய் இருக்க வேண்டியிருந்தது. அது ஒரு ஆலோசனையாக அல்லாமல் ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டிருந்தது. மக்களால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும்படி கடவுள் கேட்டாரா?

யெகோவா எதற்காகத் தம்மைப் பரிசுத்தரென குறிப்பிட்டார்? தம்முடைய அளவுக்கு அவர்களும் பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்பதற்காக அல்ல; மாறாக, ஏன் பரிசுத்தமாய் இருக்க வேண்டும் என்ற காரணத்தை அளிப்பதற்காகவே. வேறு வார்த்தைகளில் சொன்னால், தம்மை வழிபட்டு வந்த அபூரணரான இஸ்ரவேல் மக்கள் தம்மைப் போலவே பரிசுத்தராய் இருக்க வேண்டுமென யெகோவா கூறவில்லை. அது அறவே முடியாத விஷயம். ‘[“மகா,” NW] பரிசுத்தராகிய’ யெகோவா பரிசுத்தத்தில் மற்ற எல்லாரைக் காட்டிலும் உன்னதர். (நீதிமொழிகள் 30:3) என்றாலும், யெகோவா பரிசுத்தராய் இருப்பதால், தம்மை வழிபடுவோரும் பரிசுத்தராய் இருக்கும்படி அவர் எதிர்பார்க்கிறார்; அதாவது, அபூரண மனிதரால் எந்தளவு முடியுமோ அந்தளவு பரிசுத்தராய் இருக்கும்படி எதிர்பார்க்கிறார். அவர்கள் என்னென்ன வழிகளில் பரிசுத்தமாய் இருக்க முடியும்?

பரிசுத்தராய் இருக்கும்படியான கட்டளையைக் கொடுத்த பிறகு, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தோடும் சம்பந்தப்பட்ட இன்றியமையாத விஷயங்களை மோசே மூலமாய் யெகோவா குறிப்பிட்டார். இஸ்ரவேலர் ஒவ்வொருவரும் பின்வரும் காரியங்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும்படி எதிர்பார்க்கப்பட்டார்கள்: பெற்றோருக்கும் வயதானவர்களுக்கும் தகுந்த மதிப்பு கொடுக்க வேண்டும் (வசனங்கள் 3, 32); காது கேளாதோர், பார்வையற்றோர், எளியோர் போன்றோருக்கு இரக்கம் காட்ட வேண்டும் (வசனங்கள் 9, 10, 14); மற்றவர்களிடம் நேர்மையுடனும் பாரபட்சமின்றியும் நடந்துகொள்ள வேண்டும் (வசனங்கள் 11-13, 15, 35, 36); தன்னைப் போல சக வணக்கத்தாரை நேசிக்க வேண்டும். (வசனம் 18) இவற்றையும், பிற ஒழுக்க நெறிகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் இஸ்ரவேலர் ‘தங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி’ பார்த்துக்கொண்டார்கள்.எண்ணாகமம் 15:40.

பரிசுத்தராய் இருக்கும்படி இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளை, யெகோவாவின் சிந்தையையும் வழிகளையும் பற்றி நன்கு புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது. முதலாவதாக, அவரோடு நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்வதற்கு, சுத்தமான நடத்தை சம்பந்தமாக அவர் வகுத்துள்ள ஒழுக்க நெறிகளுக்கு இசைவாய் வாழ முடிந்தளவு முயற்சி செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்கிறோம். (1 பேதுரு 1:15, 16) அந்த ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிக்கும்போது, நம் வாழ்க்கை வளமாக இருக்கும்.ஏசாயா 48:17.

அடுத்ததாக, பரிசுத்தராய் இருக்கும்படியான அந்தக் கட்டளை, தம்மை வழிபடுவோர்மீது யெகோவா எந்தளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. நம் சக்திக்கு மிஞ்சிய எதையும் அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. (சங்கீதம் 103:13, 14) தமது சாயலில் படைக்கப்பட்ட மனிதராகிய நாம் ஓரளவுக்காவது பரிசுத்தமாய் நடந்துகொள்வதற்கான திறனைப் பெற்றிருக்கிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார். (ஆதியாகமம் 1:26) பரிசுத்த கடவுளாகிய யெகோவாவிடம் உங்களால் எப்படி இன்னும் நெருங்கிச் செல்ல முடியும் என்பதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இது உங்களைத் தூண்டுகிறது, அல்லவா? (w09 07/01)

[பக்கம் 30-ன் படம்]

பரிசுத்தமாய் நடந்துகொள்வதற்கான திறன் நம்மிடம் இருக்கிறது