கடவுளைப் பற்றி இயேசு கற்பித்தவை
கடவுளைப் பற்றி இயேசு கற்பித்தவை
“தகப்பனைப் பற்றி முழுமையாக அறிந்தவர் மகன் மட்டுமே. ஆனால், மற்றவர்களும் தகப்பனை அறிந்துகொள்ள வேண்டுமென மகன் விரும்புகிறார்; அதனால் அவரைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்கிறார்.”—லூக்கா 10:22, கன்டெம்ப்ரரி இங்லிஷ் வர்ஷன்.
கடவுளுடைய முதல் மகன் பூமிக்கு வருவதற்கு முன்பு, யுகா யுகங்களாகத் தம் தகப்பனோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். (கொலோசெயர் 1:15) அதனால், தம் தகப்பனுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வழிகளையும் அறிந்திருந்தார். இந்த மகன், பிற்பாடு மனிதனாகப் பூமிக்கு வந்தபோது, தம் தகப்பனைப் பற்றிய சத்தியத்தை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆவலாய் இருந்தார். இந்த மகனாகிய இயேசு சொன்னவற்றிற்குக் கவனம் செலுத்துவதன் மூலம் நாமும் கடவுளைப் பற்றி நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
கடவுளுடைய பெயர் கடவுளுடைய பெயரான யெகோவா என்ற பெயரை இயேசு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதினார். இந்த நேச மகன் தம்முடைய தகப்பனின் பெயரை மற்றவர்கள் அறியவும் பயன்படுத்தவும் வேண்டுமென்று விரும்பினார். சொல்லப்போனால், இயேசு என்ற பெயரின் அர்த்தம் “யெகோவாவே மீட்பர்” என்பதாகும். இயேசு தாம் இறப்பதற்கு முந்தின இரவில் யெகோவாவிடம் ஜெபம் செய்தபோது, “நான் . . . உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்” என்று சொன்னார். (யோவான் 17:26) கடவுளுடைய பெயரை இயேசு பயன்படுத்தியதிலும் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தியதிலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், கடவுளுடைய பெயரையும் அதன் அர்த்தத்தையும் தெரியாமல் எப்படி அவரைப் பற்றிய உண்மையை மக்கள் புரிந்துகொள்ள முடியும்? a
கடவுளுடைய பேரன்பு ‘தகப்பனே, இந்த உலகம் உண்டாவதற்குமுன் நீங்கள் என்மீது அன்பு காட்டினீர்கள்’ என்று ஒருமுறை கடவுளிடம் இயேசு ஜெபத்தில் சொன்னார். (யோவான் 17:24) பரலோகத்தில் கடவுளுடைய அன்பை ருசித்திருந்த இயேசு, பூமிக்கு வந்தபோது அந்த அன்பை அருமையான பல வழிகளில் வெளிக்காட்ட முயன்றார்.
யெகோவாவின் அன்பு அளவற்றது என்பதை இயேசு காட்டினார். “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்” என்று இயேசு குறிப்பிட்டார். (யோவான் 3:16) ‘உலகம்’ என்பதற்கான கிரேக்க வார்த்தை மனிதகுலம் முழுவதையும் குறிக்கிறது. கடவுளுக்கு மனிதகுலத்தின் மீது அளவுகடந்த அன்பு இருப்பதால், உண்மையுள்ள மனிதர் பாவம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து விடுபட்டு முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காகத் தம்முடைய அருமை மகனையே அளித்தார். அப்படிப்பட்ட பேரன்பின் ஆழத்தை நம்மால் அளவிட முடியாது.—ரோமர் 8:38, 39.
நமக்கு மிகுந்த ஆறுதலளிக்கும் ஓர் உண்மையை இயேசு கூறினார்: யெகோவா தம்மை வழிபடுகிற ஒவ்வொருவர் மீதும் ஆழ்ந்த அன்பு காட்டுகிறார். யெகோவா ஒரு மேய்ப்பனைப் போன்றவர் என்றும் ஆடுகள் ஒவ்வொன்றும் அவருக்குத் தனித்தன்மை வாய்ந்தது, மதிப்புமிக்கது என்றும் இயேசு கற்பித்தார். (மத்தேயு 18:12-14) ஒரேவொரு சிட்டுக்குருவிகூட யெகோவாவுக்குத் தெரியாமல் கீழே விழுவதில்லை என்று இயேசு சொன்னார். “உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்றும் சொன்னார். (மத்தேயு 10:29-31) ஒரு சிட்டுக்குருவி அதன் கூட்டிலிருந்து காணாமல் போவதைக்கூட யெகோவா கவனிக்கிறார் என்றால், தம்மை வழிபடுவோர் ஒவ்வொருவரையும் அவர் இன்னும் எந்தளவு அக்கறையோடு கவனிப்பார்? நம் தலையிலுள்ள ஒவ்வொரு முடியையும் யெகோவாவால் எண்ணவும் கவனிக்கவும் முடியுமென்றால், நம்முடைய தேவைகள், கஷ்டங்கள், கவலைகள் என நம்மைப் பற்றி அவருக்குத் தெரியாத விஷயங்கள் ஏதேனும் இருக்க முடியுமா?
பரலோகத் தகப்பன் முந்தின கட்டுரையில் நாம் பார்த்தபடி இயேசு, கடவுளுடைய ஒரே மகனாக இருக்கிறார். ஆகவே, இந்த நேச மகன் ஜெபம் செய்கையிலும் மற்றவர்களிடம் பேசுகையிலும் யெகோவாவைத் தம்முடைய “தகப்பன்” என்று அடிக்கடி குறிப்பிட்டதில் ஆச்சரியமில்லை. சொல்லப்போனால், 12 வயதே நிரம்பிய இயேசு ஆலயத்தில் பேசியபோது, லூக்கா 2:49) “தகப்பன்” என்ற வார்த்தை சுவிசேஷப் புத்தகங்களில் சுமார் 190 தடவை காணப்படுகிறது. யெகோவாவை, ‘உங்கள் தகப்பன்,’ ‘எங்கள் தகப்பன்,’ ‘என் தகப்பன்’ என்றெல்லாம் இயேசு குறிப்பிட்டார். (மத்தேயு 5:16; 6:9; 7:21) அவர் இவ்வாறு அடிக்கடி குறிப்பிட்டிருப்பது, பாவமுள்ள அபூரண மனிதரால் பாசத்தோடும் நம்பிக்கையோடும் யெகோவாவிடம் நெருங்கிய பந்தம் வைத்துக்கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறது.
யெகோவாவை ‘என் தகப்பன்’ என அழைத்தார்; இயேசு பேசியதைப் பற்றி பைபிள் முதன்முதலில் குறிப்பிடுகிற பதிவு இதுதான். (இரக்கமுள்ளவரும் மன்னிக்கிறவரும் அபூரண மனிதருக்கு யெகோவாவின் இரக்கம் பெருமளவு தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார். ஊதாரி மகனைப் பற்றிய உவமையில், மனந்திருந்திய மகனை இருகரம் நீட்டி ஏற்றுக்கொள்ளும் கரிசனைமிக்க, மன்னிக்கிற ஓர் அப்பாவுக்கு யெகோவாவை இயேசு ஒப்பிட்டார். (லூக்கா 15:11-32) பாவமுள்ள மனிதன் மனம் மாற மாட்டானா, அவனுக்கு இரக்கம் காட்ட வாய்ப்பிருக்கிறதா என்றெல்லாம் யெகோவா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கையை இந்த உவமை நமக்கு அளிக்கிறது. மனந்திருந்திய ஒருவரை மன்னிக்க யெகோவா ஆவலாய் இருக்கிறார். “மனந்திரும்பத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்து உண்டாகிற சந்தோஷத்தைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியைக் குறித்துப் பரலோகத்தில் உண்டாகிற சந்தோஷம் அதிகமாக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்று இயேசு விளக்கினார். (லூக்கா 15:7) இரக்கமுள்ள இப்படிப்பட்ட கடவுளிடம் யார்தான் ஈர்க்கப்படாமல் இருப்பார்?
ஜெபங்களைக் கேட்கிறவர் இயேசு பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்தில் இருக்கையில், யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்பதை நேரில் கவனித்திருந்தார்; அதோடு, தம்மை உண்மையுடன் வழிபடுகிறவர்கள் ஜெபம் செய்கையில் அவர் அகமகிழ்கிறார் என்பதையும் கவனித்திருந்தார். (சங்கீதம் 65:2) ஆகவே, இயேசு பூமியில் ஊழியம் செய்தபோது எப்படி ஜெபிப்பது, எதற்காக ஜெபிப்பது என்றெல்லாம் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். “சொன்னதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்” என்று அறிவுறுத்தினார். கடவுளுடைய சித்தம் ‘பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படும்படி’ ஜெபிக்க மக்களை ஊக்குவித்தார். அன்றாட உணவுக்காகவும் பாவ மன்னிப்புக்காகவும் சோதனைகளை எதிர்ப்பதற்கான உதவிக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். (மத்தேயு 6:5-13) தம்முடைய ஊழியர்கள் உள்ளப்பூர்வமாகவும் விசுவாசத்தோடும் வேண்டுதல் செய்கையில் ஓர் அப்பாவைப் போல யெகோவா அதற்குப் பதிலளிப்பதாக இயேசு கற்பித்தார்.—மத்தேயு 7:7-11.
யெகோவா யார், அவர் எப்படிப்பட்ட கடவுள் என்ற சத்தியங்களை மக்களுக்குக் கற்பிக்க இயேசு முயன்றார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், யெகோவாவைப் பற்றிய இன்னொரு விஷயத்தையும் சொல்ல அவர் ஆவலாய் இருந்தார்; அது, பூமியையும் மனிதரையும் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா உலகளவில் மாற்றங்களைச் செய்யப்போவதோடு சம்பந்தப்பட்டது. சொல்லப்போனால், அதுவே இயேசு அறிவித்த செய்தியின் மையப் பொருளாய் இருந்தது. (w10-E 04/01)
[அடிக்குறிப்பு]
a பைபிளின் மூலப் பிரதியில் யெகோவா என்ற பெயர் சுமார் 7,000 தடவை காணப்படுகிறது. அப்பெயரின் அர்த்தம், “நான் என்னவாக ஆவேனோ அவ்வாறே ஆவேன்” என்பதாகும். (யாத்திராகமம் 3:14, NW) கடவுள், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற எப்படியெல்லாம் ஆக வேண்டுமென நினைக்கிறாரோ அப்படியெல்லாம் ஆக முடியும். இவ்வாறு கடவுளுடைய பெயர், அவர் எப்போதுமே வாக்கு மாறாதவர் என்பதையும் அவருடைய வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேறும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.