Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?

இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?

பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?

இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஒருவேளை இந்தக் கேள்விகள் உங்களுக்கும் வந்திருக்கலாம். பதில்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால், இந்தக் கட்டுரையை வாசியுங்கள். பதில்களை பைபிளிலிருந்தே தெரிந்துகொள்வீர்கள். இதைப் பற்றி இன்னும் விளக்கமாக உங்களிடம் பேச யெகோவாவின் சாட்சிகள் ஆவலாக இருக்கிறார்கள்.

1. இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?

எருசலேம் அருகே இருந்த பெத்தானியாவுக்கு இயேசு வந்தபோது அவருடைய நண்பர் லாசரு இறந்து நான்கு நாட்கள் ஆகியிருந்தன. லாசருவின் சகோதரிகளான மார்த்தாள் மற்றும் மரியாளுடன் இயேசு அவருடைய கல்லறைக்குச் சென்றார். சீக்கிரத்தில், அங்கே ஒரு பெரிய கும்பல் சேர்ந்துவிட்டது. அந்தச் சமயத்தில் இயேசு லாசருவை உயிர்த்தெழுப்பினார். அப்போது மார்த்தாளும் மரியாளும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இருந்திருக்காது, அல்லவா?யோவான் 11:20-24, 38-44-ஐ வாசியுங்கள்.

இறந்தவர்கள் மீண்டும் உயிர்பெற்று இந்தப் பூமியில் வாழ்வார்கள் என்பது மார்த்தாளுக்குத் தெரியும். யெகோவாவை உண்மையாய் வழிபட்டு வந்த அவருடைய பூர்வகால ஊழியர்கள்கூட, இறந்தவர்களை கடவுள் இந்தப் பூமியில் மீண்டும் உயிரோடு எழுப்புவார் என்று நம்பினார்கள்.யோபு 14:14, 15-ஐ வாசியுங்கள்.

2. இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?

மனிதர்கள் இறந்த பிறகு அவர்களுக்குள்ளிருந்து ஆத்துமா என்ற ஒன்று வெளியேறி எங்கோ சென்று வாழ்வது இல்லை. (எசேக்கியேல் 18:4) மனிதர்களைக் கடவுள் மண்ணிலிருந்து படைத்தார். (ஆதியாகமம் 2:7; 3:19) நம்முடைய மூளை சாகும்போது, நம் நினைவுகளும் செத்துப்போகிறது. எனவே, இறந்தவர்களுக்கு எதுவுமே தெரியாது. அதனால்தான், லாசரு உயிர்த்தெழுந்த சமயத்தில், அவர் இறந்த பிறகு என்ன நடந்தது, ஏது நடந்தது என்பதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை.—சங்கீதம் 146:4-ஐயும் பிரசங்கி 9:5, 10-ஐயும் வாசியுங்கள்.

அப்படியென்றால் இறந்தவர்கள் எந்தக் கஷ்டத்தையும் அனுபவிப்பது இல்லை. எனவே, இறந்தவர்களை கடவுள் எரிநரகத்தில் வதைக்கிறார் என்பதெல்லாம் சுத்தப் பொய். இந்தப் போதனை கடவுளை மோசமானவராக சித்தரிக்கிறது. மனிதர்களை நெருப்பில் போட்டு சித்திரவதைச் செய்யும் எண்ணமே கடவுளுக்கு அருவருப்பானது.எரேமியா 7:31-ஐ வாசியுங்கள்.

3. இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?

இறந்தவர்களால் பேச முடியாது. (சங்கீதம் 115:17) ஆனால் பொல்லாத தூதர்கள்தான், இறந்தவர்கள் பேசுவது போல் பேசி மனிதர்களை ஏமாற்றுகிறார்கள். (2 பேதுரு 2:4) இறந்தவர்களோடு பேச முயற்சி செய்வதை யெகோவா கண்டனம் செய்கிறார்.உபாகமம் 18:10, 11-ஐ வாசியுங்கள்.

4. யாரெல்லாம் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?

இறந்துபோன கோடிக்கணக்கான மக்கள், வரப்போகும் புதிய உலகில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள். யெகோவாவைப் பற்றி தெரியாததால் கெட்ட காரியங்களைச் செய்துவந்த மக்கள்கூட அப்போது உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.லூக்கா 23:43-ஐயும் அப்போஸ்தலர் 24:15-ஐயும் வாசியுங்கள்.

உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களுக்குக் கடவுளைப் பற்றிய உண்மைகள் கற்பிக்கப்படும், இயேசுவுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவர்மீது விசுவாசம் வைக்க அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும். (வெளிப்படுத்துதல் 20:11-13) இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்கிறவர்கள் இதே பூமியில் என்றென்றும் வாழ்வார்கள். என்றாலும், உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பும் சிலர் தொடர்ந்து கெட்ட காரியங்களைச் செய்துவருவார்கள். அப்படிப்பட்டவர்கள் தாங்கள் செய்யும் கெட்ட காரியங்களுக்காக நியாயந்தீர்க்கப்பட்டு, “தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள்.”யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள்.

5. உயிர்த்தெழுதல் நம்பிக்கை யெகோவாவைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது?

கடவுள் தம்முடைய மகனை நமக்காக பூமிக்கு அனுப்பி அவருடைய உயிரையே பலியாகக் கொடுத்ததால்தான் மனிதர்களுக்கு உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கை கிடைத்திருக்கிறது. எனவே, உயிர்த்தெழுதல் யெகோவாவுடைய அன்பையும் அளவற்ற கருணையையும் காட்டுகிறது.யோவான் 3:16-ஐயும் ரோமர் 6:23-ஐயும் வாசியுங்கள். (w11-E 06/01)

கூடுதல் தகவல்களுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற இந்தப் புத்தகத்தின் 6, 7 அதிகாரங்களைப் பார்க்கவும்.

[பக்கம் 20-ன் படம்]

ஆதாமை கடவுள் மண்ணிலிருந்து படைத்தார்