Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கென்று ஓர் அமைப்பு இருக்கிறதா?

கடவுளுக்கென்று ஓர் அமைப்பு இருக்கிறதா?

கடவுளுக்கென்று ஓர் அமைப்பு இருக்கிறதா?

கடவுளுடைய படைப்புகள் எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு இருக்கிறது. நம்முடைய பிரபஞ்சத்திலுள்ள எண்ணற்ற நட்சத்திர மண்டலங்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திர மண்டலங்களும் அவற்றிலுள்ள கோளங்களும் வானவீதியில் சீரான பாதையில் துல்லியமாய்ப் பயணிக்கின்றன. உதாரணத்திற்கு நம்முடைய பூமி, ஒவ்வொரு வருடமும் சூரியனைச் சுற்றிவர 365 நாட்கள், 5 மணிநேரங்கள், 48 நிமிடங்கள், 45.51 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. இதிலுள்ள ஒழுங்கும் அமைப்பும் நம்மை வியக்க வைக்கிறது, அல்லவா?!—1 கொரிந்தியர் 14:33.

இப்படிப்பட்ட ஒழுங்கு நம்முடைய பிரபஞ்சத்தில் மட்டுமல்ல பரலோகத்திலும் உள்ளது. கடவுளுடைய தூதர்கள் அவருடைய நோக்கத்திற்கு இசைவாக செயல்பட ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் என பைபிள் சொல்கிறது. பரலோகத்திலுள்ள கடவுளுடைய நீதிமன்றத்தில் கணக்கிலடங்கா தேவதூதர்கள் இருப்பதை தானியேல் தீர்க்கதரிசி ஒரு தரிசனத்தில் கண்டார். “ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்” என்று அவர் எழுதினார். (தானியேல் 7:9, 10) அங்கே கோடிக்கணக்கான தேவதூதர்கள் இருக்கிறார்கள் என்றால் எந்தளவு ஒழுங்கு இருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! பூமியிலுள்ள கடவுளுடைய ஊழியர்களுக்கு உதவி செய்ய கடவுள் எப்போது கட்டளையிடுவார் என்று அந்தத் தூதர்கள் காத்திருப்பதை உங்கள் மனக்கண்ணில் பார்க்க முடிகிறதா?—சங்கீதம் 91:11.

தம்முடைய படைப்புகளை ஒழுங்கமைப்பதில் யெகோவாவுக்கு நிகர் யெகோவாவே; என்றாலும் அவர் உணர்ச்சியற்ற, கறாரான கடவுள் அல்ல. மாறாக, அவர் மிகவும் கனிவானவர், சந்தோஷமானவர், தம்முடைய படைப்புகளின் நலனில் அதிக அக்கறையுள்ளவர். (1 தீமோத்தேயு 1:11; 1 பேதுரு 5:7) பூர்வ காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேல் மக்களிடமும் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களிடமும் அவர் நடந்துகொண்ட விதம் அதற்கு அத்தாட்சி.

பூர்வகால இஸ்ரவேல்—ஒழுங்கமைக்கப்பட்ட தேசம்

உண்மை வழிபாட்டில் இஸ்ரவேலர்களை ஒழுங்கமைப்பதற்காக யெகோவா தேவன் மோசேயை நியமித்தார். சீனாய் வனாந்திரத்தில் இஸ்ரவேலர்கள் பயணம் செய்தபோது முகாமிடுவது சம்பந்தமாகக் கடவுள் சில விதிமுறைகளைக் கொடுத்தார். ஒவ்வொரு கோத்திரமும் எங்கே கூடாரம் போடவேண்டும் என்று யெகோவா திட்டவட்டமாகச் சொன்னார். ஒருவேளை அவரவருக்கு விருப்பமான இடத்தில் கூடாரம் போட்டுக்கொள்ளலாம் என்று அவர் சொல்லியிருந்தால் அங்கே கூச்சலும் குழப்பமும்தான் மிஞ்சியிருக்கும், அல்லவா? (எண்ணாகமம் 2:1-34) அதுமட்டுமல்ல, மோசேயின் திருச்சட்டத்தில் ஆரோக்கியம், சுத்தம் சம்பந்தப்பட்ட சட்டதிட்டங்களைக் கடவுள் கொடுத்தார்; உதாரணத்திற்கு, மனிதக் கழிவை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்குக்கூட சட்டத்தைக் கொடுத்தார்.—உபாகமம் 23:12, 13.

இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் சென்றபோது அவர்கள் பல அம்சங்களில் மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தார்கள். அந்த தேசம் 12 கோத்திரத்தாருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. மோசே மூலம் யெகோவா கொடுத்த திருச்சட்டத்தில் அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும்—வழிபாடு, திருமணம், குடும்பம், கல்வி, தொழில், உணவு, விவசாயம், கால்நடை பராமரிப்பு... என ஒவ்வொரு அம்சத்திற்கும் நுணுக்கமான சட்டங்கள் கொடுக்கப்பட்டன. a சில சட்டங்கள் குறிப்பாகவும் விலாவாரியாகவும் கொடுக்கப்பட்டாலும், அந்த ஒவ்வொரு சட்டத்திலும் இஸ்ரவேலர்கள்மீது யெகோவாவுக்கு இருந்த அன்பு பளிச்சிட்டது. அந்தச் சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்தபோது சந்தோஷத்தை அனுபவித்தார்கள், யெகோவாவுக்கு பிரியமான மக்களாகவும் ஆனார்கள்.—சங்கீதம் 147:19, 20.

மோசே ஒரு திறமையான தலைவராக இருந்தார்; என்றாலும் அவர் நல்ல தலைவராக இருந்ததற்குக் காரணம் அவருடைய திறமை மட்டுமே அல்ல. யெகோவாவுடைய ஏற்பாடுகளுக்கும் அவருடைய வழிநடத்துதலுக்கும் அவர் கீழ்ப்படிந்ததுதான். உதாரணத்திற்கு, வனாந்திரத்தில் இஸ்ரவேலர்களை எந்த வழியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று மோசே எப்படித் தெரிந்துகொண்டார்? பகலில் ஒரு மேகத் தூணைக் கொண்டும் இரவில் நெருப்புத் தூணைக் கொண்டும் யெகோவா அவர்களை வழிநடத்தினார். (யாத்திராகமம் 13:21, 22) யெகோவா மனிதர்களைப் பயன்படுத்தினாலும் உண்மையில் இஸ்ரவேலர்களை ஒழுங்கமைத்து வழிநடத்தினது அவர்தான். முதல் நூற்றாண்டிலும் இதுவே உண்மை.

நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஆரம்பகால கிறிஸ்தவர்கள்

நற்செய்தியை அறிவிப்பதில் அப்போஸ்தலர்களும் சீடர்களும் வைராக்கியமாக ஈடுபட்டதால் ஆசியா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் கிறிஸ்தவ சபைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் சபைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறியிருந்தாலும் அவை தனித்தோ சுதந்திரமாகவோ செயல்படவில்லை. மாறாக அவை நன்கு ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன; அதோடு அப்போஸ்தலர்களின் அன்பான மேற்பார்வையில் நன்மை அடைந்தன. உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் பவுல் கிரேத்தா தீவுக்குத் தீத்துவை அனுப்பியபோது “செய்ய வேண்டியவற்றை ஒழுங்கு செய்து” வரும்படிச் சொன்னார். (தீத்து 1:5, பொது மொழிபெயர்ப்பு) கொரிந்தியர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில், சில சகோதரர்கள் ‘வழிநடத்துகிற திறமையைப் பெற்றிருந்தார்கள்’ என எழுதினார். (1 கொரிந்தியர் 12:28) ஆனால், இப்படிப்பட்ட ஒழுங்கிற்கு காரணமாக இருந்தது யார்? ‘கடவுள் ஒருங்கிணைத்தார்,’ அதாவது “ஒழுங்குபடுத்தினார்,” என்று பவுலே சொன்னார்.—1 கொரிந்தியர் 12:24, ஈஸி டு ரீட் வர்ஷன்.

கிறிஸ்தவ சபையிலிருந்த கண்காணிகள் அதிகாரிகளாக நடந்துகொள்ளவில்லை; ஆனால், கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து “சக வேலையாட்களாக” நடந்துகொண்டார்கள். அதேசமயம், அவர்கள் ‘மந்தைக்கு முன்மாதிரிகளாக இருக்க’ வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டார்கள். (2 கொரிந்தியர் 1:24; 1 பேதுரு 5:2, 3) ஏனென்றால், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துதான் ‘சபைக்குத் தலைவராக’ இருக்கிறார், எந்தவொரு அபூரண மனிதனோ மனிதர்களோ அல்ல.—எபேசியர் 5:23.

கொரிந்து சபை மட்டும் மற்ற சபைகளைப் போல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாகச் செயல்பட்டபோது, பவுல் அவர்களிடம், “கடவுளுடைய வார்த்தை உங்களிடமிருந்தா வந்தது? உங்களுக்கு மட்டுமா கொடுக்கப்பட்டது?” என்று கேட்டார். (1 கொரிந்தியர் 14:36) இப்படிக் கேட்டதன் மூலம் அவர்களுடைய சிந்தையை மாற்றிக்கொள்ள உதவினார், அவர்கள் சுதந்திரமாகச் செயல்படுவது தவறெனச் சுட்டிக்காட்டினார். அப்போஸ்தலர்களின் அறிவுரையைக் கேட்டு நடந்தபோது சபைகள் விசுவாசத்தில் பலப்பட்டன, விசுவாசிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகியது.—அப்போஸ்தலர் 16:4, 5.

கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சி!

நம் நாளைப் பற்றி என்ன சொல்லலாம்? இன்று, அநேகர் ஒரு மத அமைப்பின் பாகமாக இருக்க விரும்புவதில்லை. ஆனால், கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற எப்போதுமே ஒரு அமைப்பைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதற்கு பைபிளில் பல ஆதாரங்கள் உள்ளன. பூர்வ காலத்திலும் சரி முதல் நூற்றாண்டிலும் சரி, தம்மை வழிபடுவதற்காக மக்களை யெகோவா ஒழுங்கமைத்திருந்தார்.

அப்படியென்றால், கடந்த காலத்தில் தம்முடைய மக்களை வழிநடத்தி வந்த யெகோவா தேவன் இன்றும் வழிநடத்தி வருகிறார் என்ற முடிவுக்கு வருவது நியாயம்தானே? ஆம், தம் வணக்கத்தாரை ஒன்றுபடுத்தி ஒழுங்கமைத்ததிலிருந்து அவர்கள்மீது அவர் எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் எனத் தெரிகிறது. இன்று, மனிதகுலத்திற்காக தாம் வைத்திருக்கிற நோக்கத்தை நிறைவேற்ற அவர் ஓர் அமைப்பைப் பயன்படுத்துகிறார். இந்த அமைப்பை நாம் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பின்வரும் அம்சங்களைக் கவனியுங்கள்:

ஒரு முக்கிய வேலைக்காக உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். (மத்தேயு 24:14; 1 தீமோத்தேயு 2:3, 4) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கும்படி இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார். இந்த வேலையைச் செய்ய ஓர் உலகளாவிய அமைப்பால் மட்டுமே முடியும். உதாரணமாக, ஒருவருக்கு மட்டுமே உணவு கொடுக்க வேண்டும் என்றால் அதை நீங்கள் எளிதாக செய்துவிடுவீர்கள். ஆனால், ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றால் பலரோடு சேர்ந்து ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவாகச் செயல்பட வேண்டும். இயேசு கொடுத்த கட்டளையையும் செய்து முடிப்பதில் உண்மைக் கிறிஸ்தவர்கள் ‘ஒருமனப்பட்டு கடவுளுக்கு பணிபுரிகிறார்கள்.’ (செப்பனியா 3:9, பொ.மொ) ஒன்றிணைந்து ஒரு அமைப்பாகச் செயல்படாவிட்டால் பல நாடுகளில், பல மொழிகளில், பல இனத்தாரிடம் நற்செய்தியை அறிவிக்கும் வேலையைச் செய்ய முடியுமா? பதில் உங்களுக்கே தெரியும்.

ஒருவரையொருவர் ஆதரிக்கவும் உற்சாகப்படுத்தவும் உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் தனியாக மலை ஏறச் செல்கிறார் என்றால், அவர் இஷ்டப்படுகிற இடத்திலிருந்து ஏறலாம். தன்னுடன் வருகிற அனுபவமில்லாத ஆட்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமும் அவருக்கு இருக்காது. என்றாலும், அப்படித் தனியாகச் செல்லும்போது அவர் எங்காவது ஆபத்தில் சிக்கிக்கொண்டாலோ அவருக்கு அடிபட்டுவிட்டாலோ உதவ யாரும் இருக்க மாட்டார்கள். அப்படியென்றால், ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது ஞானமான செயலாக இருக்காது. (நீதிமொழிகள் 18:1) அதேபோல், இயேசு கொடுத்த கட்டளையைக் கிறிஸ்தவர்கள் நிறைவேற்ற வேண்டுமென்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும், ஆதரிக்க வேண்டும். (மத்தேயு 28:19, 20) இந்த வேலையைத் தளராமல் தொடர்ந்து செய்வதற்குத் தேவையான பைபிள் அறிவுரையை, பயிற்சியை, ஊக்குவிப்பை கிறிஸ்தவ சபை அளிக்கிறது. இப்படி கற்றுக்கொள்வதற்கும் வழிபடுவதற்கும் ஒழுங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவ கூட்டங்கள் இல்லாவிட்டால் நாம் எங்கே போய் யெகோவாவின் வழிகளைக் கற்றுக்கொள்வோம்?—எபிரெயர் 10:24, 25.

உண்மைக் கிறிஸ்தவர்கள் ஒன்றுபட்டு கடவுளை வழிபட ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசுவின் ஆடுகள், அதாவது சீடர்கள், அவருடைய சத்தத்திற்கு செவிசாய்க்கும்போது அவர்கள் அவருடைய தலைமையின்கீழ் “ஒரே மந்தையாக” ஆகிறார்கள். (யோவான் 10:16) சுயேச்சையாகச் செயல்படும் சர்ச்சுகளிலும் சிறு சிறு குழுக்களிலும் அவர்கள் சிதறியிருப்பதில்லை. அதேசமயம் வித்தியாசப்பட்ட நம்பிக்கைகளையும் கொண்டிருப்பதில்லை. மாறாக, அவர்கள் ‘எல்லாரும் முரண்பாடில்லாமல் பேசுகிறார்கள்.’ (1 கொரிந்தியர் 1:10) எனவே, ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்றால் ஒழுங்கு இருக்க வேண்டும். ஒழுங்கு இருக்க வேண்டும் என்றால் ஓர் அமைப்பு இருக்க வேண்டும். நாம் எல்லாரும் சகோதர சகோதரிகளாக ஒற்றுமையாகச் செயல்பட்டால்தான் கடவுளுடைய ஆசீர்வாதத்தைப் பெற முடியும்.—சங்கீதம் 133:1, 3.

கடவுளையும் பைபிள் சத்தியத்தையும் உண்மையாய் நேசிக்கிறவர்கள் இந்த அம்சங்களையும் இன்னும் பல அம்சங்களையும் நிறைவேற்றி வரும் அமைப்பிடம் ஈர்க்கப்படுகிறார்கள். ஓர் அமைப்பாக, ஒன்றுபட்ட மக்களாக யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய சித்தத்தை உலகெங்கும் முழுமூச்சோடு செய்துவருகிறார்கள். அவர்களுக்குக் கடவுள் இந்த வாக்குறுதியை அளிக்கிறார்: “நான் அவர்களிடையே குடியிருந்து அவர்களிடையே உலாவுவேன்; நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய மக்களாக இருப்பார்கள்.” (2 கொரிந்தியர் 6:16) யெகோவாவுடைய அமைப்போடு சேர்ந்து அவரை வழிபட்டு வந்தால் நீங்களும் இந்த அருமையான ஆசீர்வாதத்தை அனுபவிப்பீர்கள். (w11-E 06/01)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தில் அதிகாரம் 13-ஐப் பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்டது.

[பக்கம் 13-ன் படம்]

இஸ்ரவேலர்களின் முகாம் மிக நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது

[பக்கம் 15-ன் படம்]

உலகளாவிய பிரசங்க வேலையைச் செய்ய ஓர் ஒழுங்கமைப்பு தேவை

வீட்டுக்கு வீடு ஊழியம்

நிவாரணப் பணி

மாநாடுகள்

வழிபாட்டு இடங்கள் கட்டப்படுகின்றன