Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வது சலிப்புத் தட்டுமா?

பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வது சலிப்புத் தட்டுமா?

வாசகரின் கேள்வி

பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்வது சலிப்புத் தட்டுமா?

▪ பூஞ்சோலை பூமியில் நாம் என்றென்றும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை பைபிள் அளிக்கிறது. (சங்கீதம் 37:29; லூக்கா 23:43) எந்தப் பிரச்சினையுமே இல்லாத ஒரு சூழ்நிலையில் என்றென்றும் வாழ்வது சலிப்புத் தட்டுமா?

இது ஒரு நியாயமான கேள்விதான். வாழ்க்கையில் மிதமிஞ்சி சலிப்பு ஏற்படும்போது அது ஒருவரை கவலையில் ஆழ்த்தும், மனச்சோர்வடையச் செய்யும், ஆபத்தான காரியங்களில் துணிந்து இறங்கத் தூண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லாமல், ஒரே மாதிரியான வேலைகளைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது சீக்கிரம் சலிப்புத் தட்டிவிடலாம். அப்படியென்றால், பூஞ்சோலை பூமியில் வாழ்க்கை குறிக்கோள் இல்லாமல் இருக்குமா? அன்றாட வேலைகள் அலுத்துப்போகுமா?

முதலில், என்றென்றும் வாழும் நம்பிக்கையை நமக்குத் தந்திருப்பது யார் என்பதை யோசித்துப் பாருங்கள். பைபிளின் ஆசிரியரான யெகோவா தேவன்தானே. (யோவான் 3:16; 2 தீமோத்தேயு 3:16) அவருடைய தலைசிறந்த குணமே அன்புதான். (1 யோவான் 4:8) அவர் நம்மேல் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்; நாம் அனுபவிக்கிற எல்லா நல்ல காரியங்களையும் கொடுத்தவர் அவரே.—யாக்கோபு 1:17.

நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு அர்த்தமுள்ள ஒரு வேலை நமக்குத் தேவை என்பது நம் படைப்பாளருக்குத் தெரியும். (சங்கீதம் 139:14-16; பிரசங்கி 3:12, 13) பூஞ்சோலையில் வேலை செய்பவர்கள் ரோபோட்டைப் போல இயந்திரத்தனமாக வேலை செய்ய மாட்டார்கள்; மாறாக அதை அனுபவித்துச் செய்வார்கள். அந்த வேலையால் அவர்களும் அவர்களின் அன்பானவர்களும் கைமேல் பலன் பெறுவார்கள். (ஏசாயா 65:22-24) சுவாரஸ்யமான, சவாலான ஒரு வேலை உங்களுக்குக் கிடைத்தால் வாழ்க்கை சலிப்புத் தட்டுமா?

அதோடு, அந்தப் பூஞ்சோலை பூமியில் யார் வேண்டுமானாலும் வாழலாம் என யெகோவா விட்டுவிட மாட்டார். அவருடைய மகன் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு மட்டுமே முடிவில்லா வாழ்க்கை என்ற பரிசைத் தருவார். (யோவான் 17:3) இயேசு பூமியில் இருந்தபோது தம் தகப்பனின் சித்தத்தைச் சந்தோஷத்தோடு செய்தார். மேலும், பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது என்பதைச் சொல்லிலும் செயலிலும் காட்டினார். (அப்போஸ்தலர் 20:35) எனவே, பூமி மீண்டும் பூஞ்சோலையாக மாறும்போது, அங்கு வாழ்கிற மக்கள் இரண்டு தலைசிறந்த கட்டளைகளைக் கடைப்பிடிப்பார்கள். ஒன்று, கடவுள்மேல் அன்பு காட்டுவார்கள், இரண்டாவது, சக மனிதர்கள்மேல் அன்பு காட்டுவார்கள். (மத்தேயு 22:36-40) உங்களை நேசிக்கிற... தங்கள் வேலையை நேசிக்கிற... சுயநலமற்ற மக்களோடு வாழ்வது அளவில்லா ஆனந்தத்தை அளிக்கும், அல்லவா? இப்படிப்பட்ட மக்களோடு சேர்ந்து வாழ்வது சலிப்புத் தட்டும் என நினைக்கிறீர்களா?

சரி, பூஞ்சோலை பூமியில் நமக்கு இன்னும் என்னவெல்லாம் காத்திருக்கிறது? ஒவ்வொரு நாளும் நம்முடைய படைப்பாளரைப் பற்றி புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வோம். யெகோவாவின் படைப்புகளைப் பற்றி வியப்பூட்டும் பல விஷயங்களை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கெனவே கண்டுபிடித்திருக்கிறார்கள். (ரோமர் 1:20) இருந்தாலும், அது வெறும் கடுகளவுதான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உத்தம மனிதர் யோபு, கடவுளுடைய படைப்பைப் பற்றி யோசித்துப் பார்த்து இவ்வாறு சொன்னார்: “இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்?” அவர் சொன்னது முழுக்க முழுக்க உண்மை!—யோபு 26:14.

நாம் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் சரி, யெகோவாவைப் பற்றியும் அவருடைய படைப்புகளைப் பற்றியும் நம்மால் முழுமையாகத் தெரிந்துகொள்ளவே முடியாது. முடிவில்லாமல் வாழ வேண்டுமென்ற ஆசையுடன் கடவுள் நம்மைப் படைத்திருப்பதாக பைபிள் சொல்கிறது. ஆனால், ‘தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் [ஒருபோதும், NW] கண்டுபிடிக்க மாட்டான்’ என்றும் அது சொல்கிறது. (பிரசங்கி 3:10, 11) உங்கள் படைப்பாளரைப் பற்றிப் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வது சலிப்புத் தட்டுமா என்ன?

இன்றும்கூட, மற்றவர்களின் நன்மைக்காகவும், கடவுளின் மகிமைக்காகவும் மும்முரமாக உழைப்பவர்கள் சலிப்பாக உணருவதில்லை. எனவே, இதுபோன்ற வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்துகொண்டிருந்தால், முடிவில்லாமல் வாழ்ந்தாலும்கூட நிச்சயம் நமக்குச் சலிப்புத் தட்டாது. (w11-E 05/01)

[பக்கம் 22-ல் உள்ள படங்களுக்கான நன்றி]

பூமி: Image Science and Analysis Laboratory, NASA-Johnson Space Center; நட்சத்திர மண்டலம்: The Hubble Heritage Team (AURA/STScI/NASA)