Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வறுமையின் கொடுமையை வர்ணிக்க முடியுமா?

வறுமையின் கொடுமையை வர்ணிக்க முடியுமா?

வறுமையின் கொடுமையை வர்ணிக்க முடியுமா?

கொடிய வறுமை உயிருக்கே உலை வைத்துவிடுகிறது. வறுமையில் வாடுகிறவர்கள் சாப்பாடு, தண்ணீர், விறகு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். வீடு, மருத்துவ வசதி, கல்வி இல்லாமல் அல்லல்படுகிறார்கள். உலகில் சுமார் 100 கோடி மக்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள். இது கிட்டத்தட்ட இந்திய மக்கள்தொகைக்குச் சமம். ஆனால், மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற இடங்களில் வாழும் அநேகருக்கு வறுமையின் வாசமே தெரியாது. சரி, வறுமையில் தவிக்கும் சிலரை இப்போது சந்திக்கலாமா?

அம்பாருஷீமா தன் மனைவியுடன் ஆப்பிரிக்காவிலுள்ள ருவாண்டாவில் வாழ்கிறார். அவர்களுக்கு ஆறு பிள்ளைகள். ஆனால், ஆறாவது பிள்ளை மலேரியாவினால் இறந்துவிட்டது. அவர் சொல்கிறார்: “எங்க அப்பா அவரோட நிலத்தை ஆறா பங்கு போட்டாரு. ஆனா எனக்குக் கிடைச்ச நிலம் எங்க குடும்பத்துக்கு பத்தல. அதனால நாங்க குடும்பமா பக்கத்தில இருக்கிற ஒரு ஊருக்குக் குடிமாறிப் போனோம். அங்க நானும் என் மனைவியும் கல்லு-மண்ணு மூட்ட தூக்கி பொழப்பை நடத்துறோம். எங்க வீட்டில ஒரு ஜன்னல்கூட இல்ல. இந்த ஊரு ‘போலீஸ் ஸ்டேஷனுல’ இருக்கிற கிணத்திலயிருந்துதான் தண்ணி எடுப்போம். ஒரு நாளைக்கு ஒரு வேளைதான் எங்களுக்குச் சாப்பாடு. வேலை இல்லன்னா அதுவும் இல்ல. அப்பெல்லாம் நான் வீட்டிலேயே இருக்கமாட்டேன். ஏன்னா என் பிள்ளைங்க பசியில அழுகிற சத்தத்த கேட்க எனக்குச் சக்தி இல்ல.”

பிக்டரும் கார்மெனும் பொலிவியாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். செருப்பு தைத்து பிழைப்பை நடத்துகிறார்கள். வெறுமனே செங்கலால் கட்டப்பட்ட பாழடைந்த ஒரு அறையில் வாடகைக்கு இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக் கூரை தகரத்தால் ஆனது, மழை வந்தால் ஒழுகும். ‘கரண்ட்டும்’ கிடையாது. அந்த ஊர் பள்ளிக்கூடத்தில் எக்கச்சக்கமான பிள்ளைகள் படிக்கிறார்கள். ஒரு ‘டெஸ்க்’ இருந்தால்தான் அங்கே பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்க முடியும்; அதனால் பிக்டர் தன்னுடைய மகளுக்கு ஒரு ‘டெஸ்க்’ செய்துகொடுக்க வேண்டியிருந்தது. சமைக்கவும், தண்ணீர் கொதிக்க வைக்கவும் அவர்கள் இருவரும் பத்து கிலோமீட்டர் நடந்து சென்று விறகு வெட்டி எடுத்து வர வேண்டியிருக்கிறது. கார்மென் சொல்கிறாள்: “எங்க வீட்டில கழிப்பறைகூட இல்லை. பக்கத்தில இருக்கிற ஆற்றங்கரைக்குத்தான் போகணும். குப்பை கொட்டுற இடமும் அதுதான். கொடுமை என்னான்னா, குளிக்கிற இடமும் அதுதான். இதனால பசங்களுக்கு அடிக்கடி உடம்பு முடியாம போயிடுது.”

பிரான்சிஸ்கோவும் இலிட்யாவும் மொசாம்பிக்கில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் இருந்தார்கள். மலேரியா தாக்கி அவதிப்பட்ட அவர்களுடைய ஒரு குழந்தை, மருத்துவமனை சிகிச்சை அளிக்க மறுத்ததால் இறந்துவிட்டது. அவர்களுக்கு இருக்கும் ஒரு சிறிய நிலத்தில் நெல்லையும் சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் பயிர் செய்கிறார்கள். அது அவர்களுக்கு மூன்று மாதத்திற்குத்தான் வரும். பிரான்சிஸ்கோ சொல்கிறார்: “சிலசமயம் மழை வராததனால பயிர் கருகிடும், இல்லன்னா திருடங்க திருடிட்டு போயிடுவாங்க. வயித்துப்பாட்டுக்கு, நான் மூங்கில்களைப் பட்டைகளா வெட்டி கட்டட வேலைக்காரங்களுக்கு விப்பேன். அப்பதான் கையில நாலுகாசு பார்க்க முடியும். ரெண்டு மணிநேரம் நடந்துபோய் காட்டுல விறகு வெட்டுவோம். நானும் என் மனைவியும் ரெண்டு பெரிய விறகு கட்டுகளைத் தூக்கிட்டுவருவோம். ஒரு கட்டை வித்துட்டு ஒரு கட்டை அந்த வாரம் முழுக்க சமைக்க வைச்சுப்போம்.”

உலகில் கிட்டத்தட்ட ஏழு பேரில் ஒருவர் இப்படி வறுமையில் வாடுகிறார்கள். எத்தனை எத்தனையோ அம்பாருஷீமாக்களும் பிக்டர்களும் பிரான்சிஸ்கோக்களும் தினம்தினம் கஷ்டப்படுகிறார்கள். இதைப் பார்க்கும் அநேகர், ‘என்ன ஆனது! ஒருபக்கம் மக்கள் செல்வச் செழிப்பில் மிதக்கிறார்கள், மறுபக்கம் வறுமையில் மூழ்கியிருக்கிறார்கள், எங்கே போய்கொண்டிருக்கிறது இந்த உலகம்?’ என்று மனதிற்குள் குமுறுகிறார்கள். அதனால் வறுமையை விரட்டியடிக்க சிலர் முன்வந்திருக்கிறார்கள். அவர்களுடைய முயற்சிகளையும் நம்பிக்கைகளையும் பற்றி அடுத்த கட்டுரையில் அலசலாமா? (w11-E 06/01)

[பக்கம் 2, 3-ன் படங்கள்]

கார்மென் தனது இரண்டு பிள்ளைகளுடன் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கிறாள்