வாசகரின் கேள்வி
அப்பாவிகளை அதிகாரத்திலுள்ளவர்கள் ஒடுக்குவதைக் கடவுள் ஏன் தடுப்பதில்லை?
பலம் படைத்தவர்கள் அப்பாவி மக்களை அடக்கி ஒடுக்கிய சம்பவங்கள் பைபிளில் இருக்கின்றன. நாபோத்தின் உதாரணம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. கி.மு. 10-ஆம் நூற்றாண்டில் இஸ்ரவேல் மக்களை ஆட்சி செய்த ஆகாப் அரசனுக்கு நாபோத்தின் திராட்சை தோட்டத்தின்மீது ஒரு கண் இருந்தது. ஆகாபின் மனைவி யேசபேல் சூழ்ச்சி செய்து நாபோத்தையும் அவருடைய மகன்களையும் கொன்று அந்தத் தோட்டத்தை அபகரித்தாள். அதையெல்லாம் ஆகாப் கைகட்டி வேடிக்கை பார்த்தான். (1 இராஜாக்கள் 21:1-16; 2 இராஜாக்கள் 9:26) கடவுள் ஏன் இந்த அநியாயத்தைத் தடுக்கவில்லை?
‘கடவுளால் பொய் சொல்ல முடியாது.’—தீத்து 1:3
கடவுளால் பொய் சொல்ல முடியாததே அதற்கு ஒரு முக்கியக் காரணம். (தீத்து 1:3) அப்பாவி மக்களை அடக்கி ஒடுக்குவதற்கும் கடவுளால் பொய் சொல்ல முடியாததற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். இதற்கான பதிலைத் தெரிந்துகொள்ள மனிதகுலத்தின் ஆரம்பத்தில் என்ன நடந்தது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தமக்கு எதிராகச் செயல்பட்டால் மரணத்தில்தான் முடிவடையும் என்பதைக் கடவுள் முதல் மனித தம்பதியான ஆதாம்-ஏவாளிடம் சொல்லியிருந்தார். அவர்கள் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதால் மரணம் மனிதர்களோடு ஒட்டிப் பிறந்த உடன் பிறப்பாக ஆனது. ஆதாமின் மூத்த மகனான காயின் தன் தம்பி ஆபேலை இரக்கமில்லாமல் கொன்றது மனித சரித்திரத்தில் நடந்த முதல் கொலை. அன்றிலிருந்து ஒடுக்குமுறை தலைகாட்ட ஆரம்பித்தது.—ஆதியாகமம் 2:16, 17; 4:8.
அதுமுதல் மனித சரித்திரத்தில் நடந்தேறும் நிஜத்தைப்பற்றி கடவுளுடைய வார்த்தை இப்படிச் சொல்கிறது: ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’ (பிரசங்கி 8:9) இந்த வார்த்தைகள் உண்மையா? இஸ்ரவேல் மக்களை ஆட்சி செய்த அரசர்கள் அந்த மக்களை ஒடுக்குவார்கள் என்று யெகோவா தேவன் முன்னதாகவே எச்சரித்திருந்தார். (1 சாமுவேல் 8:11-18) இஸ்ரவேலை ஆண்ட ஞானமுள்ள சாலொமோன் ராஜாவே தன் மக்களைக் கஷ்டப்படுத்தினார். (1 இராஜாக்கள் 11:43; 12: 3, 4) அப்படியென்றால், ஆகாப் போன்ற பொல்லாத ராஜாக்கள் இன்னும் எந்தளவு கொடுமைப்படுத்தியிருப்பார்கள்! ஒருவேளை கடவுள் இதுபோன்ற அநியாயங்களை எல்லாம் தடுத்திருந்தால் அவர் சொன்னதை அவரே பொய்யாக்கியதைப் போல் தானே இருக்கும்!
‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’—பிரசங்கி 8:9
அதுமட்டுமல்ல, கடவுள் நல்லது செய்வதால்தான் மக்கள் அவரைச் சேவிக்கிறார்கள் என்று சாத்தான் சொல்லியிருந்தான். (யோபு 1:9, 10; 2:4) கடவுள் தம்மைச் சேவிக்கும் மக்களை எல்லா ஒடுக்குமுறையிலிருந்தும் காப்பாற்றினால் சாத்தான் சொன்னது உண்மையாகிவிடும் இல்லையா? மேலும், மனிதர்களால் தங்களையே ஆட்சி செய்துகொள்ள முடியாது என்று கடவுளுடைய வார்த்தை தெளிவாகச் சொல்கிறது. (எரேமியா 10:23) ஒருவேளை, மனிதர்களுடைய ஒடுக்குமுறையான ஆட்சியில் நடக்கும் அநியாயங்களை எல்லாம் கடவுள் சரி செய்துவிட்டால் மனிதர்களால் தங்களையே சிறப்பாக ஆட்சி செய்துகொள்ள முடியும் என்று அவர்கள் நினைத்துக்கொள்ளலாம். அப்படியென்றால், எரேமியா 10:23-ல் கடவுள் சொன்னது பொய்யாகிவிடுமே. கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டுமே எல்லா அநியாயத்திற்கும் நிரந்தர தீர்வைக் கொண்டுவர முடியும்.
இன்று நடக்கும் அநியாயங்களைப் பார்த்துக் கடவுள் கண்டும் காணாமல் இருக்கிறாரா? இல்லவே இல்லை. அவர் இரண்டு விஷயங்களைச் செய்கிறார். ஒன்று, ஒடுக்குமுறையையும் அதில் அடங்கியிருக்கும் விஷயங்களையும் தோலுரித்துக் காட்டுகிறார். உதாரணத்திற்கு, நாபோத்திற்கு எதிராக யேசபேல் ராணி தீட்டிய திட்டங்களை பைபிள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த எல்லா தீய செயல்களுக்கும் காரண கர்த்தாவாக இருப்பவனைப் பற்றியும் சொல்கிறது. (யோவான் 14:30; 2 கொரிந்தியர் 11:14) பசுத்தோல் போர்த்திய புலிபோல் இருக்கும் இந்த நயவஞ்சகனை பைபிள் பிசாசு என்றும் சாத்தான் என்றும் அழைக்கிறது. பொல்லாத காரியங்களையும் அதற்கு ஆணிவேராக இருக்கும் சாத்தானையும் அம்பலப்படுத்துவதன் மூலம் தீமையிலிருந்து விலகியிருக்க கடவுள் நமக்கு உதவுகிறார். அப்படி விலகியிருப்பவர்களுக்கு அருமையான வாழ்க்கையையும் அளிக்கப்போகிறார்.
இரண்டாவதாக, இந்த ஒடுக்குமுறையை ஒழித்துக்கட்டுவதாகக் கடவுள் வாக்கு கொடுத்திருக்கிறார். எப்படி? ஆகாப் மற்றும் யேசபேல் போன்றவர்களின் அட்டூழியங்களை வெட்டவெளிச்சமாக்கி அவர்களைத் தண்டித்ததைப் போல இன்றிருக்கும் பொல்லாதவர்களையும் கடவுள் கண்டிப்பாக ஒருநாள் அழிப்பார் என்ற நம்பிக்கையை அளிக்கிறார். (சங்கீதம் 52:1-5) தம்மை நேசிக்கும் மக்கள் அனுபவித்திருக்கும் ஒடுக்குமுறையையும் அதன் பாதிப்புகளையும் சரி செய்வதாக கடவுள் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். * ஆம், சீக்கிரத்தில் நாபோத்தையும் அவருடைய மகன்களையும் திரும்ப உயிரோடு எழுப்புவார், அநியாயமே இல்லாத பூஞ்சோலை பூமியில் அருமையான வாழ்க்கையை அளிப்பார்!—சங்கீதம் 37:34. ▪ (w14-E 02/01)
^ பாரா. 8 யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? என்ற புத்தகத்தில் அதிகாரம் 11-ஐ பாருங்கள்.