அட்டைப்பட கட்டுரை | நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?
நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?
யெகோவா * தேவன் சர்வலோகத்தையும் படைத்த படைப்பாளர்; சர்வ சக்தி உள்ளவர். எனவே, இன்று உலகில் நடக்கும் நல்லது-கெட்டதுக்குப் படைப்பாளரே காரணம் என்று அநேகர் சொல்கிறார்கள். ஆனால், யெகோவாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
‘கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்.’—சங்கீதம் 145:17.
“அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.”—உபாகமம் 32:4.
“யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்.”—யாக்கோபு 5:11.
கடவுள் யாருக்கும் கஷ்டம் கொடுப்பதில்லை. ஆனால், தவறு செய்யும்படி ஜனங்களை அவர் தூண்டுகிறாரா? இல்லவே இல்லை. “சோதனை வரும்போது, ‘கடவுள் என்னைச் சோதிக்கிறார்’ என்று யாரும் சொல்லக் கூடாது.” ஏன்? “தீய காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையுமே சோதிப்பது கிடையாது.” (யாக்கோபு 1:13) அவர் யாரையுமே சோதிப்பதில்லை என்று சொல்லும்போது, தவறான காரியங்களைச் செய்யும்படி அவர் யாரையுமே தூண்டுவதில்லை என்று அர்த்தம். இப்படி, அவர் யாருக்கும் கஷ்டம் கொடுப்பதில்லை, மற்றவர்களுக்கு கஷ்டம் கொடுக்கும்படி யாரையும் தூண்டுவதுமில்லை. அப்படியென்றால் மக்கள் கஷ்டப்படுவதற்குக் காரணம் என்ன?
எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள்
‘எதிர்பாரா வேளைகளில் அசம்பாவிதங்கள் எல்லோருக்கும் நேரிடும்’ என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 9:11, NW) பிரச்சினைகள் வருவதற்கு இது ஒரு காரணம். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும்போது ஒருவர் அந்த இடத்தில் இருப்பதால் அவர் பாதிக்கப்படுகிறார். அதற்கு நாம் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. சுமார் 2,000 வருடங்களுக்கு முன் இயேசு கிறிஸ்து தம்முடைய நாளில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னார். அதில் ஒரு கோபுரம் இடிந்து விழுந்து 18 பேர் இறந்துபோனார்கள். (லூக்கா 13:1-5) அவர்கள் யாரும் பாவம் செய்ததால் இறந்துபோகவில்லை; எதிர்பாராமல் நடந்த ஒரு சம்பவத்தினால்தான் இறந்துபோனார்கள். ஜனவரி 2010-ல் ஹெய்டியில் ஒரு பயங்கரமான பூகம்பம் வந்தது. அதில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்ததாக அந்நாட்டு அரசாங்கம் அறிக்கையிட்டது. எந்தவொரு வித்தியாசமும் பார்க்காமல் அந்தப் பூகம்பம் எல்லோரையும் அழித்து போட்டது. அதுபோலவே நோய்களும் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம்.
நல்லவர்களுக்கு வரும் கஷ்டங்களைக் கடவுள் ஏன் தடுப்பதில்லை?
‘கடவுள் நினைச்சா இந்த மாதிரி அழிவெல்லாம் வராம தடுத்திருக்கலாமே? நல்லவங்களை காப்பாத்தியிருக்கலாமே? ஏன் அப்படி செய்யல?’ என்று சிலர் கேட்கிறார்கள். கடவுள் இந்தச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்றால், இவை நடக்கப்போகிறது என்று அவருக்கு முன்னதாகவே தெரிந்திருக்க வேண்டும். நடக்கப்போகிற விஷயங்களை முன்னதாகவே தெரிந்துகொள்ளும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்பது உண்மைதான்; ஆனால், அவர் எல்லா விஷயங்களையும் முன்னதாகவே தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறாரா?—ஏசாயா 42:9.
“தேவன் பரலோகத்தில் இருக்கிறார். அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 115:3, ஈஸி டு ரீட் வர்ஷன்) எது அவசியம் என்று யெகோவா நினைக்கிறாரோ அதை மட்டுமே அவர் செய்கிறார்; தம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வதில்லை. அதனால்தான் எந்த விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதை மட்டும்தான் முன்னதாகவே தெரிந்துகொள்கிறார். உதாரணத்திற்கு, சோதோம் கொமோரா நகரங்களில் அநீதியும் துன்பமும் நிறைந்திருந்ததால் ஆபிரகாமிடம் யெகோவா, “நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.” (ஆதியாகமம் 18:20, 21) அப்படியென்றால், அதற்குமுன் அந்த நகரங்கள் எந்தளவு மோசமாக இருந்ததெனத் தெரிந்துகொள்ள யெகோவா நினைக்கவில்லை. அதுபோலவே எல்லா விஷயங்களையும் முன்னதாகவே தெரிந்துகொள்ள வேண்டாம் என்று யெகோவா முடிவெடுக்கலாம். (ஆதியாகமம் 22:12) இதனால் கடவுளிடம் ஏதோ குறையிருப்பதாக நாம் நினைக்கக் கூடாது. ஏனென்றால், ‘அவருடைய செயல்கள் பரிபூரணமானவை.’ (உபாகமம் 32:4) தம்முடைய நோக்கத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே முன்னதாக தெரிந்துகொள்ள நினைக்கிறார். இப்படித்தான் வாழ வேண்டும் என்று அவர் யாரையும் கட்டாயப்படுத்துவதுமில்லை. * இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? எந்த விஷயங்களை முன்னதாகவே தெரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் விரும்புகிறாரோ அதை மட்டும்தான் தெரிந்துகொள்கிறார்.
மனிதர்கள் காரணமா?
இன்று மனிதர்கள் படும் சில கஷ்டங்களுக்கு மனிதர்களே காரணமாக இருக்கிறார்கள். “ஒவ்வொருவனுடைய கெட்ட ஆசைதான் அவனைக் கவர்ந்திழுத்து, சிக்க வைத்து, சோதிக்கிறது. பின்பு அந்த ஆசை கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கிறது; பாவம் கடைசியில் மரணத்தை விளைவிக்கிறது” என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:14, 15) ஒருவர் தனக்கிருக்கும் கெட்ட ஆசையைத் திருப்தி செய்துகொள்ளும்போது அதனால் வரும் மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. (ரோமர் 7:21-23) மனித சரித்திரமும் இதைத்தான் காட்டுகிறது. மனிதர்கள் செய்த படுமோசமான காரியங்களினால் விவரிக்க முடியாத கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல, மோசமான ஆட்கள் மற்றவர்களையும் தவறு செய்யத் தூண்டுவதால் கஷ்டங்கள் இன்னும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.—நீதிமொழிகள் 1:10-16.
மனிதர்கள் படுபயங்கரமான காரியங்களைச் செய்து விவரிக்க முடியாத கஷ்டங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்
அப்படியென்றால், கடவுள் தலையிட்டு மனிதர்கள் செய்யும் தவறுகளையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமா? மனிதர்களை, கடவுள் தம்முடைய சாயலில் படைத்திருப்பதாக பைபிள் சொல்கிறது. அதாவது, மனிதர்கள் கடவுளுடைய குணங்களை வெளிகாட்டும் விதத்தில் படைக்கப்பட்டிருப்பதாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 1:26) சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். எனவே, தம்மை நேசிக்கவும் தமக்குப் பிரியமாக வாழவும் தம்முடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவும் கடவுள் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை; அவர்கள் விரும்பினால் கடவுளுக்குக் கீழ்ப்படியலாம். (உபாகமம் 30:19, 20) ஒருவேளை, தமக்குப் பிரியமாக நடக்க வேண்டும் என்று கடவுள் மனிதர்களை வற்புறுத்தினால், சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை அவர்களுக்குக் கொடுத்திருப்பதாகச் சொல்ல முடியுமா? அப்படி அவர் வற்புறுத்தினால் நம்மை ஒரு ரோபோட் போல இயக்குகிறார் என்றுதானே சொல்ல வேண்டும். அதேசமயம், சிலர் சொல்வது போல் எல்லாம் விதிப்படி நடக்கிறதென்றால் நமக்கும் ரோபோட்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! ஆகவே, சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையைக் கடவுள் நமக்குக் கொடுத்திருப்பதை நினைத்து நாம் அவருக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்! அதேசமயம், மனிதர்கள் செய்யும் தவறினாலும் அவர்கள் எடுக்கும் தவறான தீர்மானங்களினாலும் நாம் எப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதில்லை.
முன்ஜென்மத்தில் செய்த பாவம் காரணமா?
இந்தப் பத்திரிகையின் முன்பக்கத்திலுள்ள கேள்வியை இந்து மதத்தை அல்லது புத்த மதத்தைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டால் அவர் இப்படிச் சொல்லலாம்: “நல்லவங்க கஷ்டப்படுறதுக்கு முன்ஜென்மத்துல அவங்க செஞ்ச பாவம்தான் காரணம். முன்ஜென்மத்தோட பலனதான் அவங்க இப்ப அனுபவிக்கிறாங்க.”
முன்ஜென்ம பயனைப் பற்றி பார்ப்பதற்குமுன் மரணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். ஏதேன் என்ற அழகிய தோட்டத்தில் முதல் மனிதனான ஆதாமைப் படைத்து கடவுள் அவனிடம்: “இந்த தோட்டத்திலுள்ள எந்த மரத்தின் கனியை வேண்டுமானாலும் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை பற்றிய அறிவைக் கொடுக்கக்கூடிய மரத்தின் கனியைமட்டும் உண்ணக்கூடாது. அதை உண்டால் நீ மரணமடைவாய்” என்று சொன்னார். (ஆதியாகமம் 2:16, 17) ஆதாம் ஒருவேளை கடவுளுக்குக் கீழ்ப்படிந்து தவறு செய்யாமல் இருந்திருந்தால் அவன் என்றென்றும் உயிர் வாழ்ந்திருப்பான். ஆனால் அவன் பாவம் செய்தான்; அதற்கு தண்டனையாக அவனுக்கு மரணம் வந்தது. அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தபோது “மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோமர் 5:12) எனவே, “பாவத்தின் சம்பளம் மரணம்” என்று சொல்லலாம். (ரோமர் 6:23) அதேசமயம், ‘இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்’ என்றும் பைபிள் சொல்கிறது. (ரோமர் 6:7) அதாவது, ஒருவர் இறந்த பிறகு தான் செய்த தவறுகளுக்காகக் கஷ்டப்பட வேண்டியதில்லை என்று பைபிள் சொல்கிறது.
‘முன்ஜென்மத்துல நாம செஞ்ச தப்புனாலதான் இப்போ கஷ்டப்படுறோம். அதை நினைச்சு கவலப்படுறதுல எந்த பிரயோஜனமும் இல்ல’ என்று லட்சக்கணக்கான மக்கள் நம்புகிறார்கள். இவர்களால் கவலைப்படுவதைக் குறைக்க முடியுமே தவிர கெட்ட விஷயங்கள் நடப்பதைத் தடுத்து நிறுத்த முடியாது. முன்ஜென்ம பாவத்திலிருந்து விடுபட வேண்டுமென்றால் மறுபிறவி சுழற்சியிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு, அவர்கள் சமுதாயத்திற்கு ஏற்ற குடிமக்களாக, வேதங்களை நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். ஆனால் இந்தக் கருத்து பைபிளிலிருந்து வித்தியாசப்படுகிறது. *
முக்கிய காரணம்!
கஷ்டங்களுக்கு முக்கிய காரணம் மனிதன் அல்ல, பிசாசாகிய சாத்தானே. அவன் ஆரம்பத்தில் கடவுளுக்கு உண்மையுள்ள தேவதூதனாக இருந்தான். ஆனால், ‘அவன் சத்தியத்தில் நிலைத்திருக்காததால்’ இந்த உலகத்தில் பாவம் வந்தது. (யோவான் 8:44) முதல் மனித ஜோடியைப் பாவம் செய்ய தூண்டியது அவன்தான். (ஆதியாகமம் 3:1-5) இயேசு கிறிஸ்து அவனை ‘பொல்லாதவன்’ என்றும் “இந்த உலகத்தை ஆளுகிறவன்” என்றும் சொன்னார். (மத்தேயு 6:13; யோவான் 14:30) யெகோவா சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை அசட்டை செய்யும்படி மனிதர்களை சாத்தான் தூண்டுவதால் இன்று உலகிலுள்ள மனிதர்கள் அவனுக்குத்தான் கீழ்ப்படிகிறார்கள். (1 யோவான் 2:15, 16) “இந்த உலகம் முழுவதும் பொல்லாதவனுடைய கைக்குள் கிடக்கிறது” என்று 1 யோவான் 5:19 சொல்கிறது. பரலோகத்தில் கடவுளோடு இருந்த சில தேவதூதர்களும் பொல்லாதவர்களாக மாறி சாத்தானோடு சேர்ந்துகொண்டார்கள். சாத்தானும் அவனுடைய இந்தப் பேய்களும் ‘உலகம் முழுவதையும் மோசம்போக்குகிறார்கள்,’ அதனால் ‘பூமிக்கு ஐயோ, கேடு!’ என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 12:9, 12) ஆக, நம்முடைய கஷ்டங்களுக்கெல்லாம் முக்கிய காரணம் பிசாசாகிய சாத்தானே.
அப்படியென்றால் கஷ்டங்களுக்குக் கடவுள் காரணம் இல்லை, யாரையும் கடவுள் கஷ்டப்படுத்துவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்போனால், இந்த கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு முடிவைக் கொண்டுவரப் போவதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். இதைப் பற்றி நாம் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். (w14-E 07/01)
^ பாரா. 3 பைபிளில் கடவுளுடைய பெயர் யெகோவா.
^ பாரா. 11 கடவுள் ஏன் துன்பத்தை விட்டுவைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் அதிகாரம் 11-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
^ பாரா. 18 இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதை பற்றியும் அவர்களை மறுபடியும் பார்க்க முடியுமா என்பதை பற்றியும் தெரிந்துகொள்ள பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் அதிகாரம் 6, 7-ஐ பாருங்கள். இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.