பைபிள் தரும் பதில்கள்
நல்ல அப்பா-அம்மாவாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
கணவன்-மனைவி ஒருவரையொருவர் நேசித்து, ஒருவர்மேல் ஒருவர் மரியாதை காட்ட வேண்டும். அப்போதுதான் பிள்ளைகள் நல்ல விதத்தில் வளருவார்கள். (கொலோசெயர் 3:14, 19) பெற்றோர் பிள்ளைகள்மேல் பாசமாக இருக்க வேண்டும், அவர்களைப் பாராட்ட வேண்டும். நம்மை படைத்த யெகோவா தேவனே அவருடைய மகனை பாராட்டினார்.—மத்தேயு 3:17-ஐ வாசியுங்கள்.
நாம் கடவுளிடம் பேசும்போது, அவர் காதுகொடுத்துக் கேட்கிறார், நம்முடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார். பெற்றோர்களும் கடவுளைப் போலவே நடந்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் பேசும்போது காதுகொடுத்துக் கேட்க வேண்டும். (யாக்கோபு 1:19) எல்லா சமயத்திலும் அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.—எண்ணாகமம் 11:11, 15-ஐ வாசியுங்கள்.
பிள்ளைகளைப் பொறுப்பானவர்களாக வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
பெற்றோர்களுக்கு பிள்ளைகள்மீது அதிகாரம் இருக்கிறது. (எபேசியர் 6:1) அதிகாரத்தை பயன்படுத்தும் விஷயத்திலும் கடவுளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அவருக்கு மனிதர்கள்மீது அதிகாரம் இருந்தாலும், அவர்களுக்கு அன்பாக சட்டங்களைக் கொடுக்கிறார்; தெளிவான ஆலோசனைகளைக் கொடுக்கிறார். அவர் சொல்லுக்கு கீழ்ப்படியாமல் போனால் என்ன பாதிப்புகள் வரும் என்பதை சொல்லித் தருகிறார். (ஆதியாகமம் 3:3) கீழ்ப்படிந்தால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் சொல்கிறார். அதேசமயத்தில், தனக்கு கீழ்ப்படியும்படி அவர் யாரையுமே கட்டாயப்படுத்துவது கிடையாது.—ஏசாயா 48:18, 19-ஐ வாசியுங்கள்.
உங்களுடைய பிள்ளை செல்வங்கள் கடவுள்மீது அன்பை வளர்த்துக்கொள்ள உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்போதுதான் அவர்கள் தனியாக இருக்கும்போதும் சரியானதையே செய்வார்கள். கடவுள் நமக்கு நிறைய விஷயங்களை சொல்லித் தருகிறார், செய்தும் காண்பிக்கிறார். ஒரு நல்ல பெற்றோராக நீங்கள் கடவுள்மேல் அன்பை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களைப் பார்த்து உங்கள் பிள்ளைகளும் அப்படியே செய்வார்கள்.—உபாகமம் 6:5-7; எபேசியர் 4:32; 5:1-ஐ வாசியுங்கள். (w15-E 06/01)