அதிகாரம் 108
அவர்களுடைய வலையில் இயேசு சிக்கவில்லை
மத்தேயு 22:15-40 மாற்கு 12:13-34 லூக்கா 20:20-40
-
அரசனுடையதை அரசனுக்கு
-
உயிர்த்தெழுந்து வருகிறவர்கள் திருமணம் செய்துகொள்வார்களா?
-
மிக முக்கியமான கட்டளை
இயேசுவை எதிர்க்கிற மதத் தலைவர்கள் பயங்கர கோபத்தோடு இருக்கிறார்கள். சற்று முன்பு அவர் சொன்ன உவமைகள் அவர்கள் எந்தளவு மோசமானவர்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டின. பரிசேயர்கள் இப்போது அவரைச் சிக்க வைக்க சதித்திட்டம் போடுகிறார்கள். அவருடைய பேச்சிலேயே அவரைச் சிக்க வைத்து, ரோம ஆளுநரிடம் பிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக தங்களுடைய சீஷர்கள் சிலருக்குக் கூலி கொடுக்கிறார்கள்.—லூக்கா 6:7.
அவர்கள் இயேசுவிடம் வந்து, “‘போதகரே, நீங்கள் சரியாகப் பேசுகிறவர், சரியாகக் கற்பிக்கிறவர், பாரபட்சம் காட்டாதவர், கடவுளைப் பற்றிய சத்தியங்களைச் சொல்லிக்கொடுக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டு, ‘ரோம அரசனுக்கு வரி கட்டுவது சரியா இல்லையா?’” என்று கேட்கிறார்கள். (லூக்கா 20:21, 22) அவர்கள் புகழ்வதைக் கேட்டு இயேசு மயங்கிவிடவில்லை. தன்னைத் தந்திரமாகப் பிடிப்பதற்காகத்தான் அவர்கள் இப்படி நாடகமாடுகிறார்கள் என்று அவருக்குத் தெரியும். ஒருவேளை, ‘வரி கட்டுவது தவறு’ என்று அவர் சொன்னால், ரோமர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார் என்று அவர்மேல் குற்றம்சாட்டப்படலாம். ஒருவேளை அவர் ‘ஆமாம், வரி கட்ட வேண்டும்’ என்று சொன்னால், ரோம ஆதிக்கத்தை வெறுக்கிற மக்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு அவருக்கு எதிராகத் திரும்பிவிடலாம். சரி, இப்போது இயேசு என்ன பதில் சொல்கிறார்?
இயேசு அவர்களிடம், “வெளிவேஷக்காரர்களே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரிக் காசு ஒன்றை என்னிடம் காட்டுங்கள்” என்று சொல்கிறார். அப்போது அவர்கள் ஒரு தினாரியுவை அவரிடம் கொண்டுவருகிறார்கள். “இதில் இருக்கிற உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?” என்று அவர் கேட்கிறார். அதற்கு அவர்கள், “ரோம அரசனுடையது” என்று சொல்கிறார்கள். அப்போது இயேசு, “அப்படியானால், அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று திறமையாகப் பதில் சொல்கிறார்.—மத்தேயு 22:18-21.
இயேசு சொன்னதைக் கேட்டு அவர்கள் அசந்துபோகிறார்கள். அதற்குமேல் எதுவும் பேச முடியாமல், அங்கிருந்து கிளம்புகிறார்கள். ஆனால், இயேசுவின் எதிரிகள்
அவரை விடுவதாக இல்லை. பரிசேயர்கள் போட்ட திட்டம் தோல்வியடைந்த பிறகு, வேறொரு மதப் பிரிவின் தலைவர்கள் அவரிடம் வருகிறார்கள்.உயிர்த்தெழுதல் கிடையாது என்று சொல்கிற சதுசேயர்கள், உயிர்த்தெழுதலையும் கொழுந்தன்முறை கல்யாணத்தையும் பற்றிய ஒரு கேள்வியை அவரிடம் கேட்கிறார்கள். “போதகரே, ‘ஒருவன் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டு அவனுக்காக வாரிசு உருவாக்க வேண்டும்’ என மோசே சொன்னார். எங்களோடு ஏழு சகோதரர்கள் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம் செய்து, வாரிசு இல்லாமல் இறந்துபோனான். அதனால், அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் திருமணம் செய்துகொண்டான். இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரை அப்படியே நடந்தது. கடைசியில் அந்தப் பெண்ணும் இறந்துபோனாள். அவர்கள் உயிரோடு எழுப்பப்படும்போது, அந்த ஏழு பேரில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லாருக்கும் அவள் மனைவியாக இருந்தாளே” என்று கேட்கிறார்கள்.—மத்தேயு 22:24-28.
மோசே எழுதிய புத்தகங்களைத்தான் சதுசேயர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால், இயேசு அந்தப் புத்தகங்களிலிருந்தே அவர்களுக்குப் பதில் சொல்கிறார். அவர்களிடம், “உங்கள் எண்ணம் தவறு. ஏனென்றால் உங்களுக்கு வேதவசனங்களும் தெரியவில்லை, கடவுளுடைய வல்லமையும் தெரியவில்லை; உயிரோடு எழுப்பப்படுகிற ஆண்களும் சரி, பெண்களும் சரி, திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்; அவர்கள் பரலோகத்திலுள்ள தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் புத்தகத்தில் இருக்கிற முட்புதரைப் பற்றிய பதிவில் நீங்கள் வாசித்ததில்லையா? கடவுள் அவரிடம், ‘நான் ஆபிரகாமின் கடவுளாகவும், ஈசாக்கின் கடவுளாகவும், யாக்கோபின் கடவுளாகவும் இருக்கிறேன்’ என்று சொன்னார், இல்லையா? அவர் இறந்தவர்களின் கடவுளாக அல்ல, உயிருள்ளவர்களின் கடவுளாக இருக்கிறார். அதனால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு” என்று சொல்கிறார். (மாற்கு 12:24-27; யாத்திராகமம் 3:1-6) அவர் சொன்ன பதிலைக் கேட்டு மக்கள் மலைத்துப்போகிறார்கள்.
இயேசு பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் வாயை அடைத்துவிட்டார். இப்போது அவர்கள் ஒன்றுசேர்ந்துகொண்டு அவரைச் சோதிப்பதற்காக வருகிறார்கள். “போதகரே, திருச்சட்டத்திலேயே மிக முக்கியமான கட்டளை எது?” என்று வேத அறிஞன் ஒருவன் கேட்கிறான்.—மத்தேயு 22:36.
அதற்கு இயேசு, “‘இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள், நம் கடவுளாகிய யெகோவா ஒருவரே யெகோவா. உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அன்பு காட்ட வேண்டும்’ என்பதே முதலாவது கட்டளை. ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும்’ என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட முக்கியமான கட்டளை வேறெதுவும் இல்லை” என்று சொல்கிறார்.—மாற்கு 12:29-31.
அதற்கு அந்த வேத அறிஞன், “போதகரே, நீங்கள் அருமையாகச் சொன்னீர்கள், நீங்கள் சொன்னதுதான் உண்மை; ‘கடவுள் ஒருவரே, அவரைத் தவிர வேறு கடவுள் இல்லை’; அதுமட்டுமல்ல, தகன பலிகளையும் மற்ற பலிகளையும் கொடுப்பதைவிட முழு இதயத்தோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அவர்மேல் அன்பு காட்டுவதும், தன்மேல் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும் அன்பு காட்டுவதும்தான் சிறந்தது” என்று சொல்கிறான். அவன் புத்திசாலித்தனமாகச் சொன்னதைப் பார்த்து, “கடவுளுடைய அரசாங்கம் உனக்கு ரொம்பத் தூரத்தில் இல்லை” என்று இயேசு சொல்கிறார்.—மாற்கு 12:32-34.
மூன்று நாட்களாக (நிசான் 9, 10, 11) இயேசு ஆலயத்தில் கற்பித்துக்கொண்டிருக்கிறார். அந்த வேத அறிஞனைப் போலச் சிலர் அவர் சொல்வதை ஆசையாகக் கேட்கிறார்கள். ஆனால், மதத் தலைவர்களுக்கு இனி ‘அவரிடம் கேள்வி கேட்க தைரியமும்’ இல்லை, அவர் சொல்வதைக் கேட்க விருப்பமும் இல்லை.