Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள்—உண்மையில் கடவுளால் ஏவப்பட்டதா?

பைபிள்—உண்மையில் கடவுளால் ஏவப்பட்டதா?

அதிகாரம் 18

பைபிள்​—⁠உண்மையில் கடவுளால் ஏவப்பட்டதா?

எந்தவொரு மனிதனாலுமே எதிர்காலத்தைத் துல்லியமாக முன்னறிவிக்க முடியாது. அது மனித திறமைக்கு அப்பாற்பட்டது. ஆனால் இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர் எல்லா உண்மைகளையும் அறிந்திருப்பது மட்டுமல்ல, அவரால் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் முடியும். ஆகவேதான் அவரைப் பற்றி, “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கி”றவர் என்று சொல்ல முடியும்.​—ஏசாயா 46:10; 41:22, 23.

2பைபிளில் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் உள்ளன. அவை இன்றுவரை துல்லியமாக நிறைவேறியுள்ளனவா? அவ்வாறு நிறைவேறியுள்ளன என்றால், பைபிள் “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்பதற்கான உறுதியான அத்தாட்சியாய் அவை இருக்கும். (2 தீமோத்தேயு 3:16, 17) மேலும் அவை, வரவிருக்கிற நிகழ்ச்சிகள் பற்றிய தீர்க்கதரிசனங்களின் மேல் நம் நம்பிக்கையையும் வளர்க்கும். ஆகவே, ஏற்கெனவே நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் சிலவற்றை மீண்டும் புரட்டிப் பார்ப்பது உதவியாய் இருக்கும்.

தீருவின் வீழ்ச்சி

3தீரு, பெனிக்கே நாட்டிலுள்ள ஒரு புகழ்பெற்ற துறைமுக பட்டணமாகும். அதற்கு தெற்கே அமைந்திருந்த அண்டை நாடான, யெகோவாவை வணங்கிய பூர்வீக இஸ்ரவேலை அது துன்புறுத்தியது. எசேக்கியேல் என்ற தீர்க்கதரிசி மூலமாக 250-⁠க்கும் அதிக வருடங்களுக்கும் முன்பே அது முற்றிலுமாய் அழிந்துபோகும் என யெகோவா முன்னறிவித்தார். “நான் அநேகம் ஜாதிகளை உனக்கு விரோதமாக எழும்பி வரப்பண்ணுவேன். அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் கொத்தளங்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விலக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன். அது வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருக்கும்” என யெகோவா கூறினார். தீருவை முற்றுகையிடப்போகும் முதல் தேசத்தையும் அதன் தலைவரையும்கூட எசேக்கியேல் குறிப்பிட்டார்: “இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை . . . தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன்.”​—எசேக்கியேல் 26:3-5, 7.

4முன்னுரைக்கப்பட்டபடியே தீருவின் முக்கிய பகுதியை நேபுகாத்நேச்சார் பின்னர் கைப்பற்றினார். அதைப் பற்றி தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா, “நேபுகாத்நேச்சார் . . . 13 வருடங்கள் முற்றுகையிட்டார்”1 என அறிக்கை செய்கிறது. முற்றுகைக்கு பிறகு அவர் எந்தக் கொள்ளைப் பொருளையும் எடுத்துச் செல்லவில்லை என்றும் அது அறிவித்தது: அவருக்கு “கூலி கிடைக்கவில்லை.” (எசேக்கியேல் 29:18) ஏன் கிடைக்கவில்லை? ஏனென்றால் தீருவின் ஒரு பகுதி, குறுகலான கால்வாய்க்கு அப்பால் ஒரு தீவில் அமைந்திருந்தது.2 தீருவின் பொக்கிஷங்களில் பெரும்பாலானவை அதன் முக்கிய பகுதியிலிருந்து அந்தத் தீவு பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தது. அந்தத் தீவோ இன்னும் கைப்பற்றப்படவில்லை.

5ஆனால் நேபுகாத்நேச்சார் கைப்பற்றியபோது, “[தீருவின்] மண்ணும் அதில் இராதபடிக்கு விலக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன்” என எசேக்கியேல் முன்னுரைத்தது நிறைவேறவில்லை. அதோடு, தீருவை “சமுத்திரத்தில்” தள்ளிவிடுவதாக முன்னுரைத்த சகரியாவின் தீர்க்கதரிசனமும்கூட நிறைவேறவில்லை. (சகரியா 9:4) அப்படியென்றால் இந்தத் தீர்க்கதரிசனங்கள் பொய்யாகிப் போனதா? இல்லவே இல்லை. எசேக்கியேல் தீர்க்கதரிசனம் உரைத்து 250-⁠க்கும் அதிகமான வருடங்கள் கழித்தும் சகரியாவின் தீர்க்கதரிசனத்திற்கு சுமார் 200 வருடங்கள் கழித்தும் மகா அலெக்ஸாந்தரின் தலைமையின்கீழ் கிரேக்க படைகள் பொ.ச.மு. 332-⁠ல் தீருவை முற்றிலுமாக அழித்துப்போட்டன. என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இவ்வாறு விவரிக்கிறது: “அந்த நகரத்தின் முக்கிய பகுதியின் இடிபாடுகளை வைத்து, தீவு பகுதியை அதோடு இணைப்பதற்காக 332-⁠ல் அவர் ஒரு பெரிய [கரைப்பாலம்] அமைத்தார். ஏழு மாத முற்றுகைக்கு பிறகு . . . அவர் தீருவைக் கைப்பற்றி தரைமட்டமாக்கினார்.”3

6ஆக, எசேக்கியேலும் சகரியாவும் முன்னுரைத்தபடியே தீருவின் மண்ணும் இடிபாடுகளும் தண்ணீரிலே போய் சேர்ந்தன. அது வெட்டவெளியாய் ஆக்கப்பட்டது; அந்தப் பகுதிக்கு சென்ற ஒரு பார்வையாளர் கூறியபடி, “வலைகளை விரித்து காயப்போடுவதற்கான ஓர் இடம்”4 ஆனது. இவ்வாறு, நூற்றுக்கணக்கான வருடங்கள் முன்பு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் நுணுக்கமான விவரங்களிலும் நிறைவேற்றமடைந்தன.

கோரேசும் பாபிலோனின் வீழ்ச்சியும்

7யூதர்களையும் பாபிலோனையும் உட்படுத்தும் தீர்க்கதரிசனங்களும்கூட முக்கியமாய் குறிப்பிடத்தக்கவை. பாபிலோன், யூதர்களை சிறைபிடித்துச் சென்றது என சரித்திரம் கூறுகிறது. ஆனாலும் அது நிகழ்வதற்கு சுமார் 40 வருடங்கள் முன்பே எரேமியா அதைப் பற்றி முன்னுரைத்திருந்தார். சுமார் 150 வருடங்களுக்கு முன்பே ஏசாயாவும் இதை முன்னறிவித்தார். யூதர்கள் சிறையிருப்பிலிருந்து திரும்பி வருவார்கள் என்றும்கூட அவர் கூறினார். எரேமியாவும் அதை முன்னறிவித்து, 70 வருடங்களுக்கு பிறகு அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி வருவார்கள் என்று கூறினார்.​—ஏசாயா 39:6, 7; 44:26; எரேமியா 25:8-12; 29:⁠10.

8பொ.ச.மு. 539-⁠ல் மேதியர்களும் பெர்சியர்களும் பாபிலோனை வீழ்த்திய காரணத்தாலேயே யூதர்கள் இவ்வாறு திரும்பி வருவது சாத்தியமானது. சுமார் 200 வருடங்களுக்கு முன்பு ஏசாயாவும் ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பு எரேமியாவும் இதை முன்னறிவித்தனர். பாபிலோனிய படைவீரர்கள் எதிர்த்து சண்டையிடவே மாட்டார்கள் என்றும் எரேமியா கூறினார். பாபிலோனுக்கு பாதுகாப்பு அரணாக அமைந்த தண்ணீரான ஐபிராத்து நதி “வறண்டுபோம்” என ஏசாயாவும் எரேமியாவும் முன்னுரைத்தனர். கைப்பற்றப்போகும் பெர்சிய தளபதியான கோரேசின் பெயரைக்கூட ஏசாயா அறிவித்து, அவருக்கு முன்பாக “[பாபிலோனின்] கதவுகள் மூடப்படாமல் இருக்கும்” என்றும் கூறினார்.​—எரேமியா 50:38; 51:11, 30; ஏசாயா 13:17-19; 44:27; 45:⁠1, NW.

9கோரேசு, ஐபிராத்து நதியின் நீரோட்டத்தை திசைத் திருப்பியதால் “அதன் ஆற்றுப்படுகையில் நடந்து செல்லுமளவுக்கு நீர் மட்டம் மிகவும் குறைந்தது”5 என கிரேக்க சரித்திராசிரியர் ஹெரோடோடஸ் விவரித்தார். இவ்வாறாக, இரவுநேரத்தில் எதிரி படைவீரர்கள் ஆற்றுப்படுகையில் நடந்துசென்று, அஜாக்கிரதையாக திறந்துவிடப்பட்டிருந்த அந்நகரின் கதவுகள் வழியாக உள்ளே நுழைந்தனர். ஹெரோடோடஸ் தொடந்து சொல்கிறார்: “கோரேசு செய்யப்போவதை பாபிலோனியர்கள் முன்பே அறிந்திருந்தால் ஆற்றின் பக்கமாக உள்ள கதவுகள் அனைத்தையும் இழுத்து மூடிவைத்திருப்பார்கள் . . . ஆனால், பெர்சியர்களோ திடுதிப்பென்று உள்ளே நுழைந்ததால் நகரத்தை எளிதில் கைப்பற்றிவிட்டார்கள்.”6 பைபிள் முன்னறிவித்தபடியே பாபிலோனியர்கள் அந்தச் சமயத்தில் குடிவெறியில் மூழ்கியிருந்தனர், இதை ஹெரோடோடஸும் உறுதிசெய்கிறார்.7 (தானியேல் 5:1-4, 30) பாபிலோன் கடைசியில் பாழ் நிலமாகும் என ஏசாயாவும் எரேமியாவும் முன்னுரைத்தனர். கடைசியில் அதுதான் நிகழ்ந்தது. இன்று பாபிலோன் பாழான மண்மேடாக கிடக்கிறது.​—ஏசாயா 13:20-22; எரேமியா 51:37, 41-43.

10கோரேசு, யூதர்களைத் திரும்பவும் அவர்கள் தாய் நாட்டிற்கு அனுப்பிவைத்தார். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே யெகோவா கோரேசைப் பற்றி இவ்வாறு முன்னுரைத்திருந்தார்: அவன் “எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான்.” (ஏசாயா 44:28) தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக கோரேசு, 70 வருடங்கள் கழித்து பொ.ச.மு. 537-⁠ல் யூதர்களை அவர்கள் தாயகத்திற்கு திரும்பி அனுப்பினார். (எஸ்றா 1:1-4) சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கோரேசின் உருளை என அழைக்கப்படும் பூர்வீக பெர்சிய கல்வெட்டில், கைதிகளை அவரவர் தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் கோரேசின் கொள்கைப் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. “பாபிலோனின் (முன்னாள்) குடிமக்களை எல்லாம் ஒன்றுகூட்டி, (அவர்களை) அவர்களுடைய இருப்பிடங்களுக்கே நாம் அனுப்பி வைத்தோம்”8 என கோரேசு கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேதிய பெர்சியாவும் கிரீஸும்

11பாபிலோன் உலக வல்லரசாக இருந்த சமயத்திலேயே அது, “மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்க”ளை அடையாளமாக குறித்த இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடாவால் வீழ்த்தப்படும் என பைபிள் முன்னுரைத்தது. (தானியேல் 8:20) முன்னுரைத்தபடியே பொ.ச.மு. 539-⁠ல் பாபிலோனை வீழ்த்தியபோது மேதியாவும் பெர்சியாவும் அடுத்த உலக வல்லரசாயின. ஆனாலும் காலப்போக்கில், கிரீஸாக அடையாளம் காட்டப்பட்ட “ஒரு வெள்ளாட்டுக்கடா” “அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது.” (தானியேல் 8:1-7) இது பொ.ச.மு. 332-⁠ல் கிரீஸ், மேதியாவையும் பெர்சியாவையும் வீழ்த்தி புதிய உலக வல்லரசாக தலைதூக்கியபோது நிறைவேறியது.

12அதற்கு பிறகு என்ன நிகழும் என முன்னுரைக்கப்பட்டதைக் கவனியுங்கள்: “அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலு கொம்புகள் முளைத்தெழும்பினது.” (தானியேல் 8:8) இதன் அர்த்தம் என்ன? பைபிள் தானே விளக்குகிறது: “ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; அது முறிந்துபோன பின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது.”​—தானியேல் 8:21, 22.

13மகா அலெக்ஸாந்தரே இந்த “கிரேக்கு தேசத்தின் ராஜா” என சரித்திரம் காட்டுகிறது. ஆனால், பொ.ச.மு. 323-⁠ல் அவர் மரித்த பிறகு அவருடைய பரந்த சாம்ராஜ்யத்தை செலூக்கஸ் நிக்கேட்டார், கஸாண்டர், தாலமி லாகஸ், லைஸிமாகஸ் என்ற நான்கு தளபதிகள் பங்கு போட்டுக்கொண்டனர். பைபிள் முன்னறிவித்த விதமாகவே, ‘அதற்குப் பதிலாக நாலு ராஜ்யங்கள் எழும்பின.’ ஆனாலும், முன்னுரைத்தபடியே அவற்றில் எதுவுமே அலெக்ஸாந்தரின் வல்லமைக்கு நிகராகவில்லை. இவ்வாறாக, இந்தத் தீர்க்கதரிசனம் எழுதப்பட்டு 200-⁠க்கும் அதிகமான வருடங்கள் சென்ற பிறகு இது நிறைவேற ஆரம்பித்தது. இது, பைபிள் உண்மையில் கடவுளால் ஏவப்பட்டது என்பதை ஆணித்தரமாய் நிரூபிக்கும் மற்றொரு அத்தாட்சி அல்லவா!

மேசியா முன்னறிவிக்கப்படுகிறார்

14இவற்றில் அதிக குறிப்பிடத்தக்கவை, இயேசு கிறிஸ்துவைப் பற்றி கூறும் நூற்றுக்கணக்கான பைபிள் தீர்க்கதரிசனங்களே. பேராசிரியர் ஜே. பீ. ஃபிரி இவ்வாறு கூறினார்: “இந்த எல்லா தீர்க்கதரிசனங்களும் ஒரே மனிதனில் நிறைவேறுவதற்கான சாத்தியங்கள் அவ்வளவு குறைவாக இருப்பதால் அவை வெறும் மனிதர்களின் அறிவுத்திறம் மிக்க ஊகங்களாக மட்டுமே இருக்க முடியாது என்பதை உறுதியாக நிரூபிக்கின்றன.”9

15இந்தத் தீர்க்கதரிசனங்களில் அநேகத்தின் நிறைவேற்றம் எள்ளளவும் இயேசுவின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. உதாரணமாக, யூதா கோத்திரத்தில் அல்லது தாவீதின் சந்ததியில் பிறக்க அவரால் எதுவுமே செய்திருக்க முடியாது. (ஆதியாகமம் 49:10; ஏசாயா 9:6, 7; 11:1, 10; மத்தேயு 1:2-16) அவர் பெத்லகேமில் பிறப்பதற்கு காரணமாயிருந்த சம்பவங்களை அவர் வழிநடத்தியிருக்கவும் முடியாது. (மீகா 5:2; லூக்கா 2:1-7) அவர் 30 வெள்ளிக் காசுகளுக்கு காட்டிக்கொடுக்கப்பட்டது (சகரியா 11:12; மத்தேயு 26:15); அவருடைய எதிரிகள் அவர்மீது துப்பியது (ஏசாயா 50:6; மத்தேயு 26:67); கழுமரத்தில் தொங்கும்போது அவரைப் பரிகாசம் செய்தது (சங்கீதம் 22:7, 8; மத்தேயு 27:39-43); அவர் குத்தப்பட்டும் அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படாமல் இருந்தது (சகரியா 12:10; சங்கீதம் 34:20; யோவான் 19:33-37); அவருடைய உடைகள்மீது போர்சேவகர்கள் சீட்டுப்போட்டது (சங்கீதம் 22:18; மத்தேயு 27:35) போன்றவற்றை நிறைவேற்ற அவர் எதுவுமே செய்திருக்க முடியாது. மனிதனாகிய இயேசுவில் நிறைவேறிய அநேக தீர்க்கதரிசனங்களில் இவை சொற்பமானவையே.

எருசலேமின் அழிவு

16இயேசுவே யெகோவாவின் மிகப் பெரிய தீர்க்கதரிசி. எருசலேமிற்கு என்ன நிகழும் என அவர் கூறியதை முதலில் கவனியுங்கள்: “உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு [“கூர்மையான மரங்களால் அரண் எழுப்பி,” NW], உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும்.” (லூக்கா 19:43, 44) இயேசு மேலுமாக கூறினார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போக . . . கடவர்கள்.”​—லூக்கா 21:20, 21.

17தீர்க்கதரிசனம் முன்னுரைத்ததுப்போலவே பொ.ச. 66-⁠ல் செஸ்டியஸ் காலெஸின் தலைமையில் வந்த ரோம சேனைகள் எருசலேமை சூழ்ந்துகொண்டன. ஆனால் அவர் முற்றுகையை கடைசிவரை தொடரவில்லை என்பதுதான் ஆச்சரியம். மாறாக, முதல் நூற்றாண்டு சரித்திராசிரியர் பிளேவியஸ் ஜொசிஃபஸ் கூறியபடி, “எந்தக் காரணமுமின்றி அவர் நகரத்தைவிட்டு திரும்பினார்.”10 எதிர்பாராதவிதமாக முற்றுகை நீங்கியதால், எருசலேமைவிட்டு ஓடிவிடும்படியான இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கிருந்து ஓடியவர்கள் கிறிஸ்தவர்களே என்பதை சரித்திராசிரியர் யுஸீபியஸ் அறிவிக்கிறார்.11

18நான்கு வருடங்களுக்குள்ளாகவே, பொ.ச. 70-⁠ல் தளபதி டைட்டஸின்கீழ் ரோம சேனைகள் திரும்பிவந்து எருசலேமைச் சூழ்ந்துகொண்டன. எருசலேமைச் சுற்றி பல கிலோமீட்டருக்கு மரங்களை வெட்டி அந்நகரைச் சூழ்ந்து தடுப்பு சுவர் எழுப்பினர், “கூர்மையான மரங்களால் அரண் எழுப்பி”னர். அதன் விளைவாக ஜொசிஃபஸ் கூறினார்: “இப்போது யூதர்கள் தப்பிப்பதற்கான எந்த வாய்ப்புமே இல்லாமல் போனது.”12 சுமார் ஐந்து மாத முற்றுகைக்கு பிறகு, மூன்று கோபுரங்களும் சுவரின் ஒரு பகுதியும் தவிர மற்ற எல்லாமே “முற்றுமுழுக்க தரைமட்டமாயின . . . அங்கு விஜயம் செய்பவர்கள், அதில் மக்கள் குடியிருந்தார்களா என சந்தேகிக்கும் அளவுக்கு அங்கு ஒன்றுமே இல்லாதிருந்தது”13 என ஜொசிஃபஸ் கூறினார்.

19முற்றுகையின்போது சுமார் 11,00,000 பேர் மாண்டனர், 97,000 பேர் கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர்.14 இயேசுவின் இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியதற்கான ஓர் அத்தாட்சி இன்றும்கூட ரோமில் உள்ளது. எருசலேம் வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டதை நினைவுகூரும் வண்ணம் ரோமர்களால் பொ.ச. 81-⁠ல் நிறுவப்பட்ட டைட்டஸின் வளைவுதான் அது. அந்த வளைவு, பைபிள் தீர்க்கதரிசனத்தில் உள்ள எச்சரிப்புகளுக்கு செவிகொடுக்க தவறுவது பேரழிவிற்கே வழிநடத்தும் என்பதற்கு மௌனமாய் சாட்சி பகருகிறது.

இன்று நிறைவேறி வரும் தீர்க்கதரிசனங்கள்

20அதிசயிக்க வைக்கும் உலகளாவிய மாற்றம் வெகு சமீபத்திலுள்ளது என பைபிள் கூறுகிறது. எருசலேமின் அழிவு மிக சமீபம் என்பதை முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள் அறிந்துகொள்ள உதவும் சில சம்பவங்களை இயேசு முன்னறிவித்தார். அதைப்போலவே, உலகளாவிய ஒரு மாற்றம் வெகு சமீபத்திலிருப்பதை இன்றுள்ள மக்கள் அறிந்துகொள்ளும் சில சம்பவங்களையும் அவர் முன்னறிவித்தார். “உம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என இயேசுவின் சீஷர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிப்பவராய் அவர் இந்த ‘அடையாளத்தைக்’ கொடுத்தார்.​—மத்தேயு 24:⁠3, NW.

21கிறிஸ்துவின் இந்த ‘வந்திருத்தல்’ மனித வடிவில் அல்ல மாறாக துன்பப்படும் மனிதவர்க்கத்தை விடுவிக்கும் வல்லமையுள்ள பரலோக அரசர் வடிவில் இருக்கும் என பைபிள் காட்டுகிறது. (தானியேல் 7:13, 14) “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு” என அவர் குறிப்பிட்ட சமயத்தில்தான் அவருடைய ‘வந்திருத்தலும்’ நிகழும். அப்படியென்றால், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு சமீபித்திருப்பதையும் இயேசு காணக்கூடாத அரசராய் வந்திருப்பதையும் குறிக்க அவர் கொடுத்த அந்த அடையாளம்தான் என்ன? இந்த அடையாளத்தை ஒட்டுமொத்தமாக குறிக்கும் சம்பவங்களைப் பைபிளில் மத்தேயு 24-⁠ம் அதிகாரத்திலும் மாற்கு 13-⁠ம் அதிகாரத்திலும் லூக்கா 21-⁠ம் அதிகாரத்திலும் காணலாம். அவற்றில் முக்கியமானவை சில பின்தொடருகின்றன:

22பெரும் யுத்தங்கள்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.” (மத்தேயு 24:7) 1914 முதற்கொண்டே இது பெருமளவு நிறைவேறி வந்துள்ளது. 1914-⁠ல் ஆரம்பித்த முதல் உலக யுத்தம், இயந்திர துப்பாக்கிகள், டாங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், விஷ வாயுக்கள் போன்றவை பெருமளவில் உபயோகிக்கப்படுவதை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. 1918-⁠ல் அது முடிவடைந்தபோதோ சுமார் 1.4 கோடி போர்வீரர்களும் பொதுமக்களும் கல்லறைக்குக் குடிமாறினர். “முதல் உலக யுத்தமே, முதல் ‘முழுமையான’ யுத்தம்”15 என ஒரு சரித்திராசிரியர் குறிப்பிட்டார். 1939 முதல் 1945 வரை நடந்த இரண்டாம் உலக யுத்தம் அதைவிட மோசமான அழிவுக்குரியதாய் நிரூபித்தது. அப்போது வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மரண எண்ணிக்கை சுமார் 5.5 கோடியாக அதிகரித்தது. அணு குண்டுகள் என்ற முற்றிலும் புதிய பயங்கரம் ஒன்று களத்திற்குள் நுழைந்தது. அன்று முதல் 3 கோடிக்கும் அதிகமானோர் பெரும் யுத்தங்களிலும் சிறு சண்டைகளிலும் கொல்லப்பட்டுள்ளனர். டெர் ஸ்பீகல் என்ற ஜெர்மானிய செய்திப் பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “1945-⁠க்கு பிறகு ஒரு நாள்கூட இந்த உலகத்தில் மருந்துக்கும் உண்மையான சமாதானம் இருந்ததில்லை.”16

23உணவுக் குறைபாடுகள்: “உணவுக் குறைபாடுகள் ஏற்படும்.” (மத்தேயு 24:7, NW) முதல் உலக யுத்தத்திற்கு பிறகு பெரும் பஞ்சம் தன் கோர முகத்தைக் காட்டியது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகோ நிலைமை மோசமடைந்தது. இன்று? “முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு பட்டினி இன்று பெருகியுள்ளது. . . . ஏறக்குறைய 40 கோடி மக்கள் பட்டினியின் விளிம்பில் வாழ்கின்றனர்”17 என லண்டனின் டைம்ஸ் கூறுகிறது. டோரன்டோவின் த குளோப் அண்ட் மெயில் இவ்வாறு கூறுகிறது: “80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு அரை வயிற்று சாப்பாடே கிடைக்கிறது.”18 ஊட்டச்சத்து இல்லாத உணவின் காரணமாக, “ஒவ்வொரு வருடமும் 1.2 கோடி குழந்தைகள் ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்பாகவே இறந்துவிடுகின்றன” என்று உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது.19

24பூமியதிர்ச்சிகள்: “பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிக[ள்] . . . உண்டாகும்.” (லூக்கா 21:11) பூமியதிர்ச்சியை எதிர்க்கும் பொறியியல் துறை வல்லுநரான ஜார்ஜ் டபிள்யூ. ஹௌஸ்னர், 1976-⁠ல் சீனாவிலுள்ள டாங்-ஷானில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை “மனித வரலாற்றிலேயே மிகப் பெரிய பூமியதிர்ச்சி”20 என கூறினார். அது லட்சக்கணக்கான உயிர்களைக் காவுகொண்டது. இத்தாலிய பத்திரிகையான இல் பிக்கோலோ பின்வருமாறு அறிவித்தது: “புள்ளிவிவரங்கள் காட்டுகிறபடி, அதிகளவான நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்தான காலகட்டத்தில் நம் சந்ததி வாழ்கிறது.”21 1914-⁠க்கு முந்தைய நூற்றாண்டுகளில் பூமியதிர்ச்சியால் மரித்தவர்களைவிட இப்போது சராசரியாக பத்து மடங்குக்கும் அதிகமானோர் ஒவ்வொரு வருடமும் பூமியதிர்ச்சிக்குப் பலியாகியுள்ளனர்.

25வியாதிகள்: “பல இடங்களில் கொள்ளைநோய்க[ள்] உண்டாகும்.” (லூக்கா 21:11) “1918-⁠ல் ஏற்பட்ட ஸ்பானிஷ் காய்ச்சல் என்ற கொள்ளைநோய் பூமி முழுவதும் படுவேகமாக பரவி 2.1 கோடி உயிர்களைக் கொள்ளைக் கொண்டது” என சயன்ஸ் டைஜஸ்ட் அறிவித்தது. அது தொடர்ந்து கூறியதாவது: “மரணமானது இவ்வளவு கடுமையாகவும் படுவேகமாகவும் பரவியதாய் இதுவரை சரித்திரமே இல்லை. . . . அந்தக் கொள்ளை நோய் அதே வேகத்தில் பரவியிருந்தால் சில மாதங்களுக்குள்ளாகவே மனிதகுலம் முழுவதையும் துடைத்தழித்திருக்கும்.”22 அன்று முதல் இருதய நோய், புற்றுநோய், மேக நோய், இன்னும் மற்ற நோய்கள் பல கோடிக்கணக்கானோரை முடமாக்கியும் கொன்றும் குவித்துள்ளன.

26குற்றச்செயல்: “அக்கிரமம் மிகுதியா[கும்].” (மத்தேயு 24:12) கொலை, திருட்டு, கற்பழிப்பு, வன்முறை, ஊழல் போன்றவற்றின் நீண்டுகொண்டே போகும் பட்டியல் நாம் நன்கு அறிந்ததே. அநேக நாடுகளில் தெருவில் நடமாடவே மக்கள் பயப்படுகின்றனர். 1914-⁠க்கு பின் நிலவிய இந்த அராஜக போக்கை உறுதி செய்வதாய் வன்முறை பற்றிய ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “முதல் உலக யுத்தத்திற்கு முன்பு வரை அதிக மனிதநேயம் மிக்க நிலைமை இருந்தது.”23

27பயம்: “பயமேற்படுத்தும் காட்சிகள் தோன்றும்.” (லூக்கா 21:11, NW) ஹாம்பர்க்கின் டை வெல்ட் நமது காலத்தை “பயத்தின் சகாப்தம்”24 என அழைத்தது. முற்றிலும் புதிய ஆபத்துகள் மனிதவர்க்கத்தை என்றுமில்லாத அளவு அச்சுறுத்துகின்றன. சரித்திரத்தில் முதல் முறையாக, அணு ஆயுத பேரழிவும் தூய்மைக்கேடும் இந்தப் பூமியைக் ‘கெடுத்துப்போடுவதாக’ பயமுறுத்துகின்றன. (வெளிப்படுத்துதல் 11:18) அதிகரித்து வரும் குற்றச்செயல், பணவீக்கம், அணு ஆயுத கருவிகள், பசி, வியாதி, மற்ற துயரங்கள் ஆகியவை மக்களுக்கு தங்களுடைய பாதுகாப்பு மற்றும் வாழ்க்கை பற்றி ஏற்கெனவே உள்ள கிலியை இன்னும் அதிகரித்துள்ளன.

அதை விசேஷித்ததாக்குவது எது?

28ஆனால் சிலர் பின்வருமாறு கேட்கலாம்: இவற்றில் அநேகம், முந்தைய நூற்றாண்டுகளிலும் நடக்கவில்லையா? அப்படியிருக்க அவை இன்று நிகழ்வதில் என்ன வித்தியாசம் உள்ளது? முதலாவதாக, அந்த அடையாளத்தின் பாகமான ஒவ்வொரு சம்பவமும் 1914 முதற்கொண்டே காணப்படுகின்றன. இரண்டாவதாக, அந்த அடையாளத்தின் பாதிப்புகளை உலக முழுவதிலும், “ஓரிடம்விட்டு ஓரிடமாக” உணர முடிகிறது. (மத்தேயு 24:3, 7, 9, NW) மூன்றாவதாக, இந்தக் காலப்பகுதியின்போது நிலைமைகள் இன்னும் மோசமாகிக்கொண்டே சென்றுள்ளன: “இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்”; “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.” (மத்தேயு 24:8; 2 தீமோத்தேயு 3:13) நான்காவதாக, இவையோடுகூட “அநேகருடைய அன்பு தணிந்துபோம்” என இயேசு எச்சரித்தபடியே மக்களின் மனப்பான்மைகளிலும் செயல்களில்கூட மாற்றம் ஏற்பட்டுள்ளது.​—மத்தேயு 24:⁠12.

29முன்னுரைக்கப்பட்ட கடினமான முடிவின் காலங்களில் நாம் வாழ்கிறோம் என்பதற்கான உறுதியான அத்தாட்சிகளில் ஒன்று மக்களின் தார்மீக சீர்குலைவே. இந்த உலகில் நீங்கள் காண்பவற்றை, நம் காலம் பற்றிய பின்வரும் தீர்க்கதரிசன வார்த்தையோடு ஒப்பிட்டுப் பாருங்கள்: “இந்த உலகத்தின் கடைசி சகாப்தம் துன்பங்கள் நிறைந்ததாய் இருக்கும் என்ற உண்மையை நீ அறிந்தே ஆகவேண்டும். மனிதர்கள் பணத்தையும் தங்களையுமே நேசிப்பார்கள்; வீம்புக்காரராக, தற்புகழ்ச்சிகாரராக, தூஷிக்கிறவர்களாக இருப்பார்கள்; பெற்றோருக்கு மரியாதைக் காட்டாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, பரிசுத்தம் இல்லாதவர்களாக, இயல்பான அன்பற்றவர்களாக இருப்பார்கள்; பகைமைக் காட்டுவதில் விட்டுக்கொடுக்காதவர்களாக, அவதூறு செய்கிறவர்களாக, இச்சையடக்கமில்லாமல் கொடுமையுள்ளவர்களாக, எல்லா நன்மையையும் எதிர்க்கிறவர்களாக, துரோகிகளாக, துணிகரமுள்ளவர்களாக, இறுமாப்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள். கடவுளுடைய இடத்தில் இன்பங்களை வைக்கிறவர்களாக, மதத்தின் போர்வையை போர்த்துக்கொண்டு அதன் உண்மைத் தன்மையை வெளிப்படையாய் மறுப்பவர்களாக இருப்பார்கள்.”​—2 தீமோத்தேயு 3:1-5, த நியூ இங்லிஷ் பைபிள்.

1914​—⁠சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை

30மானிட நோக்குநிலையில் பார்த்தால், பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட உலக துயரங்களும் உலகளாவிய யுத்தங்களும் 1914-⁠க்கு முந்தைய உலகின் மக்கள் மனதில் தோன்றாத காரியங்களே. ஜெர்மானிய அரசியல் மேதையான கான்ராட் அடினேயர் இவ்வாறு கூறினார்: “எண்ணங்களும் தோற்றங்களும் என் மனதில் உதித்தன, . . . 1914-⁠க்கு முற்பட்ட வருடங்களின் எண்ணங்கள்; அப்போது இந்தப் பூமியில் உண்மையிலேயே சமாதானமும் அமைதியும் பாதுகாப்பும் நிலவின; பயம் என்றால் என்ன என்றே நாங்கள் அறியாதிருந்தோம். . . . 1914-⁠க்கு பின்பு மனிதரின் வாழ்க்கையிலிருந்து பாதுகாப்பும் அமைதியும் பறந்துவிட்டன.”25 எதிர்காலம் “மேன்மேலும் நலம் பெறும்” என 1914-⁠க்கு முன்பு வாழ்ந்த மக்கள் நினைத்ததாக பிரிட்டனின் அரசியல் மேதை ஹெரால்ட் மேக்மில்லன் அறிவித்தார்.26 1913: இரண்டு உலகங்களுக்கு இடைப்பட்ட அமெரிக்கா (1913: America Between Two Worlds) என்ற புத்தகம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “‘உலக சமாதானத்தை உறுதியளிக்கும் நிலைமைகள் இப்போது சாதகமாக இருக்குமளவுக்கு இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை’ என உள்துறை அமைச்சர் பிரையன் [1913-⁠ல்] கூறினார்.”27

31ஆகவே முதல் உலக யுத்தத்தின் ஆரம்பம் வரைக்கும்கூட சமூக முன்னேற்றமும் அறிவொளியும் நிறைந்த ஒளிமயமான எதிர்காலம் வரவிருப்பதாக உலக தலைவர்கள் அறிவித்து வந்தனர். ஆனால் அதற்கு முற்றிலும் எதிர்மாறானதையே பைபிள் முன்னறிவித்தது. அதாவது, 1914 முதல் 1918 வரையான ஈடிணையற்ற அந்த யுத்தமே ‘கடைசி நாட்களின்’ ஆரம்பத்தைக் குறிக்கும் என்று அது கூறியது. (2 தீமோத்தேயு 3:1) கடவுளுடைய பரலோக அரசாங்கம் 1914-⁠ல் பிறக்கும் என்பதற்கான காலக்கணக்கு அத்தாட்சியையும் பைபிள் கொடுத்தது; அதைத் தொடர்ந்து முன்னொருபோதும் இல்லாத அளவு உலகளாவிய துயரங்கள் ஏற்படும்.28 ஆனால் 1914-⁠ம் வருடம், சரித்திரத்தில் இப்பேர்ப்பட்ட ஒரு திருப்புமுனையாக இருக்கும் என அப்போது உயிரோடிருந்த யாராவது அறிந்திருந்தார்களா?

321914-⁠க்கு பல பத்தாண்டுகள் முன்பாகவே அந்த வருடத்தின் முக்கியத்துவத்தை ஓர் அமைப்பைச் சேர்ந்த மக்கள் அறிவித்து வந்தனர். ஆகஸ்ட் 30, 1914 தேதியிட்ட நியூ யார்க்கின் உவர்ல்ட் பத்திரிகை விளக்கியதாவது: “இந்தப் பயங்கரமான யுத்தம் ஐரோப்பாவில் தன் கோர முகத்தைக் காட்டியபோது ஒரு விசேஷித்த தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது. கடந்த சுமார் 25 வருடங்களாக ‘சர்வதேச பைபிள் மாணாக்கர்கள்’ [யெகோவாவின் சாட்சிகள்] பிரசங்கிகள் மற்றும் பிரசுரங்கள் மூலமாக . . . பைபிளில் முன்னுரைக்கப்பட்ட கோபாக்கினையின் நாள் 1914-⁠ல் வரும் என இந்த உலகிற்கு அறிவித்து வந்தனர். இந்தப் பிரசங்கிகள் . . . ‘1914-ஐக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்!’ என அறிவித்தனர்.”29

தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் மக்கள்

33“கடைசி நாட்களில்” எல்லா தேசத்து மக்களும் அடையாள அர்த்தத்தில் ‘கர்த்தருடைய பர்வதத்திற்கு’ போவார்கள், அங்கே அவர் “தமது வழிகளை [அவர்களுக்கு] போதிப்பார்” எனவும் பைபிள் முன்னறிவித்தது. அந்தப் போதகத்தின் விளைவுகளில் ஒன்றாக ‘அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; . . . இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை’ என்றும் அந்தத் தீர்க்கதரிசனம் கூறுகிறது. (ஏசாயா 2:2-4) யுத்தத்தைப் பற்றிய யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசித்தி பெற்ற பதிவு இத்தீர்க்கதரிசனத்தின் தெளிவான நிறைவேற்றமாகும்.

34இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பும் பின்பும் ஜெர்மனியில் புராட்டஸ்டன்ட் மத தலைவராக இருந்த மார்டின் நீமோலர் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இவ்வாறு கூறினார்: அவர்கள் “கருத்தார்ந்த பைபிள் மாணாக்கர்கள்; யுத்தத்தில் பங்கெடுக்க மறுத்ததாலும் சக மானிடர்களை சுட்டுக் கொல்ல மறுத்ததாலும் லட்சக்கணக்கில் சித்திரவதை முகாம்களுக்கு சென்று உயிர்நீத்தனர்.” அதற்கு எதிர்மாறான ஒன்றைப் பற்றியும் அவர் எழுதினார்: “காலங்காலமாக கிறிஸ்தவ சர்ச்சுகள், யுத்தம், இராணுவம், போர்க் கருவிகள் ஆகியவற்றை ஆசீர்வதிக்க எப்போதும் தயாராய் இருந்துள்ளன . . . தங்களுடைய எதிரி அழிய வேண்டும் என்றும் கிறிஸ்தவத் தன்மையற்ற விதத்தில் ஜெபம் செய்துள்ளனர்.”30 அப்படியென்றால், உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளம் என இயேசு கூறியதை யார் உண்மையில் நிறைவேற்றுகிறார்கள்? ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்’ என அவர் கூறினார். (யோவான் 13:35) 1 யோவான் 3:10-12 தெளிவாக கூறுகிறபடியே கடவுளுடைய ஊழியர்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்வது கிடையாது. சாத்தானுடைய பிள்ளைகளே அவ்வாறு செய்கிறார்கள்.

35கடவுளுடைய ராஜ்யத்திற்கான பற்றுறுதியும் பைபிள் தராதரங்களை உண்மையுடன் பின்பற்றுவதுமே யெகோவாவின் சாட்சிகளை ஓர் உலகளாவிய சகோதர பந்தத்தில் இணைக்கிறது. அந்த ராஜ்யம் என்பது, சட்டங்களும் அதிகாரமும் உள்ள ஓர் உண்மையான அரசாங்கம், அது சீக்கிரத்தில் முழு பூமியையும் ஆளுகை செய்யும் என பைபிள் போதிப்பதை அவர்கள் மனதார ஏற்றுக்கொள்கின்றனர். லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் அதன் திரளான பிரஜைகள் இப்போது இந்தப் பூமியில் உள்ளனர்; வரவிருக்கும் உலகின் அஸ்திவாரமாக அவர்கள் இப்பொழுதே தயார் செய்யப்படுகின்றனர். அந்த ராஜ்யத்தைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசி இவ்வாறு எழுதும்படி ஏவப்பட்டார்: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார். . . . அது [இன்று இருக்கும்] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” (தானியேல் 2:44) ‘நீங்கள் ஜெபம் பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே . . . உம்முடைய ராஜ்யம் வருவதாக’ என இயேசு போதித்தபோது அவரும் அந்த ராஜ்யத்திற்கே முதலிடம் கொடுத்தார்.​—மத்தேயு 6:9, 10.

36பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றமாக 1914 முதற்கொண்டு நடந்துவரும் நிகழ்ச்சிகள், கடவுளுடைய பரலோக அரசாங்கம் வெகு சீக்கிரத்தில் மற்ற ‘ராஜ்யங்களை எல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கும்’ என காட்டுகின்றன. அந்த அடையாளத்தின் பின்வரும் முக்கிய பாகம் காட்டுகிறபடி இந்த உண்மை அறிவிக்கப்பட வேண்டுமென கடவுள் விரும்புகிறார்: ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.’ (மத்தேயு 24:14) ஓர் உலகளாவிய சகோதர கூட்டுறவாக உள்ள லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இந்தத் தீர்க்கதரிசனத்தை இப்போது நிறைவேற்றி வருகின்றனர்.

37கடவுள் விரும்புகிற அளவிற்கு அந்த ராஜ்யம் பற்றி பிரசங்கிக்கப்பட்ட பிறகு, இயேசு சொன்னதுபோல “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம்” உண்டாவதை இந்த உலகம் காணும். இந்த உபத்திரவம் அர்மகெதோன் யுத்தத்தின்போது உச்சக்கட்டத்தை எட்டும், அப்போது சாத்தானுடைய பொல்லாத செல்வாக்கு முடிவுக்கு வரும். அது, பொல்லாத தேசங்களும் பொல்லாத மனிதர்களும் பூமியில் இல்லாதபடிக்கு துடைத்தழித்துவிடும். பிறகு, “நீதி வாசமாயிருக்கும்” பூங்காவனம் போன்ற பரதீஸைத் தன் இருகரம் நீட்டி வரவேற்கும்.​—மத்தேயு 24:21; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 16:14-16; 12:7-12; 2 கொரிந்தியர் 4:⁠4.

38நிறைவேறி முடிந்த இத்தனை அநேக தீர்க்கதரிசனங்கள் அதற்கு ஆதரவாக இருக்க, பைபிள் “கடவுளால் ஏவப்பட்ட” ஒரு புத்தகம் என்பதை எந்தச் சந்தேகத்திற்கும் இடமுமின்றி நிரூபித்துள்ளது. (2 தீமோத்தேயு 3:16) அப்படியென்றால், ‘அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், அது மெய்யாய் உள்ளபடி தேவ வசனமாகவே’ ஏற்றுக்கொள்ளுங்கள். (1 தெசலோனிக்கேயர் 2:13) மேலும் அதன் ஆசிரியரான யெகோவா தேவன் “அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டு” அறிவிக்கிறவராக இருக்கிறபடியால், எதிர்காலத்தில் நிறைவேற வேண்டிய தீர்க்கதரிசனங்கள்மீது நீங்கள் முழு நம்பிக்கை வைக்கலாம். (ஏசாயா 46:10) வரவிருக்கும் காரியங்களும் உண்மையில் அற்புதமானவை! அதைப் பற்றி அடுத்த அதிகாரத்தில் வாசிக்கும்போது நீங்கள் மெய்சிலிர்த்து போவீர்கள்!

[கேள்விகள்]

1. மனிதர்களுக்கு இல்லாத என்ன திறமை சிருஷ்டிகரிடம் உள்ளது?

2. பைபிள் கடவுளால் ஏவப்பட்டது என்பதை நிரூபிக்கும் உறுதியான அத்தாட்சி என்ன?

3. தீருவைப் பற்றி என்ன முன்னுரைக்கப்பட்டது?

4. (அ) பாபிலோன், தீருவைக் கைப்பற்றும் என்ற தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது? (ஆ) பாபிலோனியர்களால் ஏன் கொள்ளைப் பொருளை எடுத்துச் செல்ல முடியவில்லை?

5, 6. முன்னுரைக்கப்பட்ட நுணுக்கமான விவரங்களை பூர்த்தி செய்யும் வண்ணம் மகா அலெக்ஸாந்தர், தீரு நகரின் தீவு பகுதியை எவ்வாறு அழித்துப்போட்டார்?

7. யூதர்களையும் பாபிலோனையும் பற்றி பைபிள் என்ன முன்னுரைத்தது?

8, 9. (அ) பாபிலோனைக் கைப்பற்றியது யார், எப்படி? (ஆ) பாபிலோனைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை சரித்திரம் எவ்வாறு உறுதி செய்கிறது?

10. கோரேசு யூதர்களை விடுவித்தார் என்பதை எந்த அத்தாட்சி உறுதிசெய்கிறது?

11. மேதியா, பெர்சியா உலக வல்லரசாக வந்து பின்னர் கிரீஸிடம் தோற்றுப்போகும் என்பதை பைபிள் எவ்வாறு முன்னுரைத்தது?

12. கிரீஸின் ஆட்சி பற்றி பைபிள் என்ன சொன்னது?

13. கிரீஸ் பற்றிய தீர்க்கதரிசனம் எழுதப்பட்டு 200-⁠க்கும் அதிகமான வருடங்கள் கழித்து எவ்வாறு நிறைவேறியது?

14. இயேசு கிறிஸ்து நிறைவேற்றிய அநேக தீர்க்கதரிசனங்கள் பற்றி ஒரு பேராசிரியர் கூறியதென்ன?

15. இயேசுவின் கட்டுப்பாட்டில் இல்லாமல் அவரில் நிறைவேறிய சில தீர்க்கதரிசனங்கள் யாவை?

16. எருசலேம் பற்றி இயேசு என்ன முன்னறிவித்தார்?

17. சேனைகள் எருசலேமைச் சூழ்ந்துகொள்ளும் என்ற இயேசுவின் தீர்க்கதரிசனம் எவ்வாறு நிறைவேறியது, இருந்தாலும் மக்களால் எவ்வாறு நகரைவிட்டு ஓட முடிந்தது?

18. (அ) எருசலேமிலிருந்து ரோம சேனைகள் பின்வாங்கிய நான்கு வருடங்களுக்குள் பொ.ச. 70-⁠ல் என்ன நிகழ்ந்தது? (ஆ) எருசலேமின் அழிவு எந்தளவு முழுமையாயிருந்தது?

19. (அ) எருசலேம்மீது வந்த துன்பம் எவ்வளவு கடுமையாய் இருந்தது? (ஆ) இப்போது டைட்டஸின் வளைவு மௌனமாய் எதற்கு சாட்சி பகருகிறது?

20. மாபெரும் உலகளாவிய மாற்றம் வெகு சமீபத்திலிருப்பதை நாம் அறிந்துகொள்ளும்படி எந்தக் கேள்விக்கு பதிலளிப்பவராய் இயேசு அந்த ‘அடையாளத்தைக்’ கொடுத்தார்?

21. (அ) கிறிஸ்துவின் ‘வந்திருத்தல்’ மற்றும் “காரிய ஒழுங்குமுறையின் முடிவு” என்றால் என்ன? (ஆ) இயேசு கொடுத்த அந்த அடையாளத்தைப் பற்றி நாம் எங்கே வாசித்துப் பார்க்க முடியும்?

22. யுத்தங்கள் எவ்வாறு 1914 முதற்கொண்டு அந்த அடையாளத்தின் பாகமாக இருந்துள்ளன, அவை எந்தளவு அழிவுண்டாக்குபவை?

23. உணவுக் குறைபாடுகள் 1914 முதற்கொண்டு உலகை எந்தளவு ஆட்டிப்படைத்துள்ளன?

24. 1914 முதற்கொண்டு பூமியதிர்ச்சிகளில் என்ன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது?

25. அந்த அடையாளத்தின் ஒரு பகுதியை நிறைவேற்றும் விதத்தில் 1914 முதற்கொண்டு என்ன பயங்கரமான கொள்ளை நோய்கள் இருந்து வந்துள்ளன?

26. 1914 முதற்கொண்டு குற்றச்செயல் எவ்வாறு அதிகரித்துள்ளது?

27. பயத்தைப் பற்றிய எந்தத் தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி வருகிறது?

28. இன்று நிறைவேறி வரும் அந்த அடையாளத்தின் அம்சங்கள், நமது காலத்தையே இந்தக் ‘காரிய ஒழுங்குமுறையின் முடிவாக’ அடையாளம் காட்டுகின்றன என்று ஏன் சொல்லலாம்?

29. “இந்த உலகத்தின் கடைசி சகாப்தம்” பற்றிய பைபிளின் விவரிப்பு, இன்றைய மக்களின் தார்மீக நிலைமையோடு எவ்வாறு ஒத்திருக்கிறது?

30, 31. (அ) 1914-⁠க்கு முன்பு வாழ்ந்தவர்கள் உலக நிலைமைகள் பற்றி எவ்வாறு கருதினர், எதிர்காலம் எப்படி இருக்கும் என நினைத்தனர்? (ஆ) நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதை நிரூபிக்க அடையாளத்தோடுகூட பைபிள் வேறு எதையும் கொடுக்கிறது?

32. (அ) பைபிள் காலக்கணக்கை நன்கு அறிந்தோர், 1914-ஐப் பற்றி அந்த வருடத்திற்கு வெகு முன்னரே என்ன அறிவித்து வந்தனர்? (ஆ) பின் பக்கத்திலுள்ள விளக்கத்திற்கு இசைவாக மற்றவர்கள் 1914-ஐப் பற்றி என்ன கூறி வந்தனர்?

33. அடையாளத்தின் கூடுதலான எந்தப் பகுதியை யெகோவாவின் சாட்சிகள் நிறைவேற்றி வருகிறார்கள்?

34. யெகோவாவின் சாட்சிகள் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக” அடித்திருக்கிறார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?

35. (அ) யெகோவாவின் சாட்சிகளை இணைப்பது எது? (ஆ) கடவுளுடைய ராஜ்யத்திற்கான அவர்களுடைய பற்றுறுதிக்கு வேதப்பூர்வ ஆதாரம் உள்ளதா?

36. (அ) எது அறிவிக்கப்பட வேண்டுமென கடவுள் விரும்புகிறார்? (ஆ) அதைச் செய்வது யார்?

37. அர்மகெதோனில் இந்தக் காரிய ஒழுங்குமுறை முடிவுக்கு வருவது ஏன் நற்செய்தியாகும்?

38. (அ) நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் பைபிள் பதிவு சம்பந்தமாக எதை நிரூபித்துள்ளன? (ஆ) எதிர்காலத்தைப் பற்றிய இந்தத் தீர்க்கதரிசனங்கள் எதற்கு தகுதியானவை?

[பக்கம் 216-ன் சிறு குறிப்பு]

நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் நம்பிக்கையை வளர்க்கின்றன

[பக்கம் 222-ன் சிறு குறிப்பு]

எருசலேமின் அழிவை இயேசு முன்னுரைத்தார்

[பக்கம் 226-ன் சிறு குறிப்பு]

இந்த அடையாளத்தின் பாகமான ஒவ்வொரு சம்பவத்தையும் நம் நாட்களில் காண்கிறோம்

[பக்கம் 227-ன் சிறு குறிப்பு]

“1914-⁠க்கு முற்பட்ட வருடங்களி[ல்] . . . இந்தப் பூமியிலே உண்மையான சமாதானமும் அமைதியும் பாதுகாப்பும் நிலவின”

[பக்கம் 229-ன் சிறு குறிப்பு]

“இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை”

[பக்கம் 231-ன் சிறு குறிப்பு]

பைபிள், சிருஷ்டிகரால் ஏவப்பட்ட புத்தகம் என்பதை எந்தச் சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபித்துள்ளது

[பக்கம் 228-ன் பெட்டி]

1914-சரித்திரத்தில் ஒரு திருப்புமுனை

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகும்கூட அநேகர், 1914-தான் நவீன சரித்திரத்தின் மிகப் பெரிய திருப்புமுனை என்கிறார்கள்:

“நம் காலத்தின் உண்மையான திருப்புமுனை, ஹிரோஷிமா அல்ல மாறாக 1914-தான்.”​—⁠ரினே ஆல்ஃபிரெட் காரீ, த சயன்டிஃபிக் மன்திலி, ஜூலை 1951.

“உலகின் போக்கைக் கவனித்து வரும் அனைவருமே 1914 முதற்கொண்டே பேரழிவை நோக்கி நடைபோடும் முன்தீர்மானிக்கப்பட்ட உறுதியான போக்கைக் கண்டு மிகவும் கவலைக்குள்ளாகி உள்ளனர். அழிவை நோக்கி செல்லும் இந்தப் பாய்ச்சலைத் தடுக்க எதுவுமே செய்ய முடியாது என்றே கருத்தார்ந்து சிந்திக்கும் அநேகர் நினைக்கின்றனர். அவர்கள் மனித குலத்தை, விதியின் மீது கட்டுப்பாடு இல்லாத, கோபம் நிறைந்த கடவுட்களால் அலைக்கழிக்கப்படும் கிரேக்க துன்பவியல் நாடகத்தின் ஹீரோவாகவே நோக்குகின்றனர்.”​—⁠பெர்ட்ரான்ட் ரஸல், த நியூ யார்க் டைம்ஸ் மேகஸின், செப்டம்பர் 27, 1953.

“நவீன யுகம் . . . 1914-⁠ல் பிறந்தது, அது எப்போது அல்லது எப்படி முடிவடையும் என யாருக்கும் தெரியாது. . . . அது, அனைவரும் பூண்டோடு அழிவதில் போய் முடிவடையலாம்.”​—⁠த சீயாட்டில் டைம்ஸ், ஜனவரி 1, 1959.

“அன்று அறியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த உலகம் 1914-⁠ல் முடிவுக்கு வந்தது.”​—⁠ஜேம்ஸ் கேமரூன், 1914, 1959-⁠ல் பிரசுரிக்கப்பட்டது.

“முதல் உலக யுத்தத்தின் சமயத்தில் இந்த முழு உலகமுமே வெடித்துச் சிதறியது, ஏன் என இதுவரை நமக்கு தெரியாது. . . . இலட்சிய உலகம் கண்முன் நின்றது. சமாதானமும் சௌக்கியமும் நிறைந்திருந்தன. திடீரென்று எல்லாம் வெடித்து சிதறின. அப்போதிலிருந்து நாம் அரைமயக்க நிலையில் இருந்து வருகிறோம்.”​—⁠டாக்டர் வாக்கர் பெர்சி, அமெரிக்கன் மெடிக்கல் நியூஸ், நவம்பர் 21, 1977.

“1914-⁠ல் இந்த உலகம் இசைவு பொருத்தத்தை இழந்தது, அதை இன்றுவரை திரும்ப பெற முடியவில்லை. . . . இது மிதமிஞ்சிய ஒழுங்கின்மைக்கும் வன்முறைக்குமான காலமாக இருந்துள்ளது; தேசிய எல்லைக் கோடுகளுக்கு உள்ளேயும் அவற்றிற்கு அப்பாலும்கூட.”​—⁠தி எகானமிஸ்ட், லண்டன், ஆகஸ்ட் 4, 1979.

“கொடூரமான, கடைநிலையான வியாதி ஒன்று 1914-⁠ல் நாகரிகத்தைத் தாக்கியது.”​—⁠ஃபிராங்க் பீட்டர்ஸ், செ. லூயிஸ் போஸ்ட்-டெஸ்பாட்ச், ஜனவரி 27, 1980.

“எல்லாமே மேன்மேலும் நலம் பெறும். இப்படிப்பட்ட உலகத்தில்தான் நான் பிறந்தேன். . . . திடீரென்று, எதிர்பாராத விதமாக 1914-⁠ல் ஒரு நாள் பொழுது புலருகையில் அவை எல்லாம் முடிவுக்கு வந்தன.”​—⁠பிரிட்டனின் அரசியல் மேதை ஹெரால்ட் மேக்மில்லன், த நியூ யார்க் டைம்ஸ், நவம்பர் 23, 1980.

[பக்கம் 217-ன் படம்]

தீவு நகரமான தீருவை அடைவதற்கு பாலம் அமைத்தது பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியது

[பக்கம் 218-ன் படம்]

ஐபிராத்து நதியை வற்றிப்போக செய்தது பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்

[பக்கம் 219-ன் படம்]

சிறைப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் கோரேசின் பழக்கம் பற்றி கூறும் கோரேசின் களிமண் உருளை (செங்குத்தாக காட்டப்பட்டுள்ளது)

[பக்கம் 220-ன் படம்]

மகா அலெக்ஸாந்தரை சித்தரிக்கும் தங்கப்பதக்கம்; அவருடைய வீரச்செயல்கள் பற்றி முன்னுரைக்கப்பட்டிருந்தது

[பக்கம் 221-ன் படங்கள்]

இயேசுவைப் பற்றிய அநேக தீர்க்கதரிசனங்களை அவர் தாமாகவே நிறைவேற்றியிருக்க முடியாது

[பக்கம் 223-ன் படம்]

எருசலேமின் அழிவிற்கு பிறகு பொக்கிஷங்கள் கொண்டு செல்லப்படுவதை சித்தரிக்கும் டைட்டஸின் வளைவில் காணப்படும் சுவர் சித்திரம் மௌனமான சாட்சியாய் நிற்கிறது

[பக்கம் 230-ன் படம்]

இந்த ஒழுங்குமுறை முடிவுக்கு வருகையில் தப்பிப்பிழைப்பவர்கள் நீதியுள்ள ஒரு புதிய ஒழுங்குமுறைக்குள் அடியெடுத்து வைப்பர்