அட்டைப்படக் கட்டுரை | பைபிள்—மீண்டு வந்த கதை
சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு உண்மைக் கதை
மதப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த புத்தகம் பைபிள்தான். ரொம்பக் காலமாகவே எத்தனையோ பேருடைய தவறான நம்பிக்கைகளை மாற்றிக்கொள்வதற்கு இந்தப் புத்தகம் உதவி செய்திருக்கிறது. அதேசமயத்தில் வேறு எந்தப் புத்தகத்தையும்விட இந்தப் புத்தகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் இருக்கிறது.
உதாரணத்துக்கு, மூலப் பதிவில் இருக்கிற விஷயங்கள்தான் இன்றுள்ள பைபிள்களிலும் இருக்கிறதா என்று அறிஞர்கள் சிலர் சந்தேகப்படுகிறார்கள். “மூலப் பதிவில் இருக்கிற விஷயங்களை அப்படியே துல்லியமாக மொழிபெயர்த்திருக்கிறோம் என்று சொல்ல முடியாது” என மத ஆய்வுத் துறை பேராசிரியர் ஒருவர் சொல்கிறார். “பிழைகள் நிறைந்த பைபிள்கள்தான் இப்போது நம் கையில் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை மூலப் பதிவுகள் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவை. அவை மூலப் பதிவுகளிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கின்றன. சொல்லப்போனால், ஆயிரத்துக்கும் அதிகமான விதங்களில் அவை வித்தியாசமாக இருக்கின்றன” என்றும் அவர் சொல்கிறார்.
பைபிள் நம்பகமான புத்தகம்தானா என்று சந்தேகப்படுவதற்கு சிலருடைய மதப் பின்னணியும் காரணமாக இருந்திருக்கிறது. பைஃஸல் என்பவருடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். பைபிள் ஒரு புனித புத்தகமாக இருந்தாலும், அதில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக கிறிஸ்தவரல்லாத அவருடைய குடும்பத்தினர் அவருக்குச் சொல்லிக்கொடுத்திருந்தார்கள். அதனால், “யாராவது என்கிட்ட பைபிள பத்தி பேசுனா அத நம்புறது எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஏன்னா அவங்ககிட்ட இருக்குற பைபிள் முதல்முதல்ல எழுதப்பட்ட பைபிள் இல்லையே. அதுலதான் நிறைய மாத்திட்டாங்களே” என்று நினைத்ததாக அவர் சொல்கிறார்.
பைபிளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா என்று பார்ப்பது முக்கியமா? இந்தக் கேள்விகளைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், எதிர்காலத்தைப் பற்றி பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கிற ஆறுதலான வாக்குறுதிகள் மூலப் பதிவில் இருந்தனவா என்று உங்களுக்குத் தெரியாது என்றாலும் அதை உங்களால் நம்ப முடியுமா? (ரோமர் 15:4) நம்முடைய காலத்தில் இருக்கிற பைபிள்களில் நிறைய பிழைகள் இருக்கிறது என்றால் வேலை, குடும்பம், வழிபாடு சம்பந்தமாக முக்கியமான தீர்மானங்களை எடுக்க அதில் இருக்கிற ஆலோசனைகளை நீங்கள் பயன்படுத்துவீர்களா?
பைபிளின் மூலப் பதிவுகள் இப்போது இல்லையென்றாலும் பழங்கால நகல்களும், ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளும் இருக்கின்றன. அவற்றை நாம் பார்க்கலாம். அந்தக் கையெழுத்துப் பிரதிகள் சிதைந்துபோகாமல், பல எதிர்ப்புகளையும், கலப்படம் செய்யப்படுவதையும் சமாளித்து எப்படி நம் கையில் வந்துசேர்ந்தது? இதைப் பற்றித் தெரிந்துகொள்வது நம் கையில் இருக்கிற பைபிளை முழுமையாக நம்புவதற்கு எப்படி உதவுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்து வரும் கட்டுரைகளில் பாருங்கள்.